ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூகுள் தேடு பொறியில் உலக நாடுகள் அதிகம் தேடிய நிகழ்வுகள், பிரபலங்கள், விவகாரங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டு வருகிறது. எந்தெந்த சொற்களை அதிகமாக பயனர்கள் தேடினர் என்ற விவரங்களையும் ஆவணப்படுத்துகிறது கூகுள்.
நாம் இப்போது,
நடப்பு 2024ஆம் ஆண்டின்
இறுதிப் பகுதியில் இருக்கிறோம்.
இந்த ஆண்டில் இந்தியர்கள்
ஐபிஎல் கிரிக்கெட் முதல்
ரத்தன் டாடா வரை
கூகுள் தேடு பொறியில்
அதிகமாக தேடித்தேடி
படித்திருக்கிறார்கள் என்பது
தெரிய வந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை
கிரிக்கெட், அரசியல், பிரபலங்களைப் பற்றி
தெரிந்து கொள்வதுதான் கூகுளில்
ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன.
கூகுள் நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, ஐபிஎல் கிரிக்கெட், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை 2024ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் பேரால் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளில் அடங்கும். இது, கிரிக்கெட் மற்றும் அரசியல் செய்திகள் மீதான இந்தியர்களின் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவின் தேசிய
விளையாட்டான ஹாக்கியை விட,
கிரிக்கெட்தான் இந்தியர்களின்
வெறித்தனமான விளையாட்டாக
இருக்கிறது என்பதற்கு கூகுள்
தரவுகளே சான்று.
முந்தைய ஆண்டுகளிலும்
கிரிக்கெட் பற்றிய தேடலே
முக்கிய இடம் பிடித்திருந்தது.
கடந்த மே 12 மற்றும் 18ஆம் தேதிகளில்,
‘இந்தியன் பிரீமியர் லீக்’ என்ற
முக்கிய வார்த்தைக்கான தேடல்கள்
உச்சத்தை எட்டின. இந்தியாவில்
உள்ள பயனர்கள், ‘டி20 உலகக்கோப்பை’
என்ற சொல்லையும் கூகுள் தேடு
பொறியில் அதிகம் பயன்படுத்தி
உள்ளனர். இது, இந்தியாவில்
2024ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த
கூகுள் தேடலில் இரண்டாம்
இடம் பிடித்துள்ளது.
அரசியல் களத்தைப் பொறுத்தவரை,
‘பாரதிய ஜனதா கட்சி’ என்ற வார்த்தை
முக்கிய தேடலாக இருந்துள்ளது.
ஏழு கட்டங்களாக நடந்த
மக்களவைத் தேர்தல் 2024ன்
முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியில்
இருந்து (ஜூன் 4) ‘பாரதிய ஜனதா கட்சி’
என்ற சொற்பயன்பாடு கூகுள்
தரவு தளத்தில் அதிகம்
பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
‘தேர்தல் முடிவுகள் 2024’ என்பது இந்த ஆண்டு கூகுள் தேடலில் ஆதிக்கம் செலுத்தி, நான்காவது இடத்தைப் பிடித்த மற்றொரு தொடர்புடைய வார்த்தை ஆகும்.
‘பாரீஸ் ஒலிம்பிக் 2024’, ‘புரோ கபடி லீக்’ மற்றும் ‘இந்தியன் சூப்பர் லீக்’ ஆகியவையும் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க தேடல் தொகுதிகளைக் கொண்டிருந்தன. இதன்மூலம், கிரிக்கெட்டைத் தாண்டி மற்ற விளையாட்டுகள் மீதும் இந்தியர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவதாகக் கருதலாம்.
சுற்றுச்சூழல் மற்றும் வானிலை தொடர்பான கவலைகள் இந்தியர்களிடையே எதிரொலித்திருப்பது மற்றொரு வியப்பிற்குரிய ஒன்றாகும். 2024இல், ‘அதிகமான வெப்பம்’ பற்றிய தேடல்கள் கூகுளில் அதிகரித்துள்ளன. இது, கோடையில் அதிகரித்த வெப்பநிலையின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது.
தனிப்பட்ட ஆளுமைகளில்,
ரத்தன் டாடாவுக்கு முதலிடம்
கிடைத்திருக்கிறது. அவர்
மாபெரும் தொழில் அதிபர் மட்டுமின்றி
அறப்பணிகளுக்காக அதிக
நன்கொடை வழங்குவதிலும் அம்பானி,
அதானிகளைக் காட்டிலும் முதலிடத்தில்
இருந்தவர். பெரும் பரோபகாரர்.
அவர், கடந்த அக்டோபர் மாதம்
9ஆம் தேதி, தனது 86ஆவது
வயதில் இறந்தார். இது ஆன்லைனிலும்
ஆஃப்லைனிலும் அஞ்சலி
செலுத்துவதற்கு வழிவகுத்தது.
அவரின் இளமைக்காலம்,
டாடா நிறுவனத்தில் அவருடைய
சாதனைகள், அறப்பணிகள் குறித்து
இந்தியர்கள் அதிகளவில் கூகுளில்
தேடித்தேடி படித்து உள்ளனர்.
இவை தவிர, அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், பாடல்கள், விளையாட்டு நிகழ்வுகள், போட்டிகள் மற்றும் நபர்கள் உள்ளிட்ட பல்வேறு தனித்தரவுகளையும் கூகுள் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுக்கவே மற்றவர்களின் அந்தரங்க விவகாரங்கள், ‘கிசு கிசு’ செய்திகளைத் தெரிந்து கொள்வதில் மக்களிடம் அதிக ஆர்வம் இருக்கிறது. அதுவும், இந்திய மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அடுத்தவர் படுக்கை அறை சமாச்சாரங்கள் என்றால் அல்வா சாப்பிடுவது போல.
இந்திய பெருங்கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி – நீதா தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு பிரம்மாண்டமான திருமணம் நடந்தது. இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணச் செலவு மட்டும் 5000 கோடிக்கு மேல் இருக்கும் என்கிறார்கள்.
இப்போது அதுவல்ல விஷயம். ஆனந்த் அம்பானியை மணந்து கொண்ட ராதிகா மெர்ச்சன்ட்டை பற்றி அறிந்து கொள்வதில்தான் இந்தியர்களிடையே அதிக ஆர்வம் இருந்துள்ளதாக கூகுள் தேடு பொறி கூறுகிறது. அதிகம் தேடப்பட்ட நபர்களில் ராதிகா மெர்ச்சன்ட்டும் ஒருவர் என்கிறது கூகுள்.
2024இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 முக்கிய வார்த்தைகள்:
இந்தியன் பிரீமியர் லீக்
டி20 உலகக்கோப்பை
பாரதிய ஜனதா கட்சி
தேர்தல் முடிவுகள் 2024
ஒலிம்பிக் 2024
அதிக வெப்பம்
ரத்தன் டாடா
இந்திய தேசிய காங்கிரஸ்
புரோ கபடி லீக்
இந்தியன் சூப்பர் லீக்