Saturday, June 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

தொழிற்சங்க தேர்தல்: புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்ட கம்யூனிஸ்ட்; கரன்சி மழையை பொழிந்த திமுக!

சேலம் உருக்காலையில் நடந்த
தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில்,
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின்
சிஐடியூ தொழிற்சங்கம், அதிமுக, பா.ம.க.,
ஆதரவுடன் களமிறங்கிய விவகாரம்,
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில்
அதிமுக கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ.,
தாவப்போவதாக பரபரப்பு
பேச்சு கிளம்பியுள்ளது.

பிரசித்தி பெற்ற சேலம் உருக்காலையில்
591 நிரந்தர தொழிலாளர்களும்,
1000 ஒப்பந்த தொழிலாளர்களும்
பணியாற்றுகின்றனர்.
ஆண்டுக்கு 1600 கோடி ரூபாய்க்கு மேல்
வர்த்தகம் செய்து வருகிறது.

இந்த உருக்காலையில் உள்ள
தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல்,
கடந்த நவ. 22ம் தேதி நடந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
நடத்தப்படும் இந்தத் தேர்தலில்
வெற்றி பெறும் தொழிற்சங்கமே,
உருக்காலை நிர்வாகத்துடனான
ஊதிய ஒப்பந்தம், போனஸ்,
தொழிலாளர் நலன்கள் குறித்த
பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன்,
அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்களில்
கையெழுத்திட முடியும்.

காலை 6 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணிக்கு முடிந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டது.

தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் பிஎம்எஸ்., ஐஎன்டியூசி., எல்பிஎப்., சிஐடியூ., ஆகியவை போட்டியிட்டன. மொத்தமுள்ள 591 வாக்காளர்களில் 578 தொழிலாளர்கள் வாக்களித்தனர்.

திமுகவின் சக்தி வாய்ந்த அமைப்புகளுள் ஒன்றான எல்பிஎப்., 273 வாக்குகளைப் பெற்று, ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பதிவு செய்தது. எல்பிஎப் உடன் மல்லுக்கட்டிய மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் சார்பு அமைப்பான சிஐடியூ சங்கம், 228 வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில், தொழிற்சங்க தேர்தல் வெற்றிக்காக எல்பிஎப் தொழிற்சங்கத்தினர் தேர்தல் ஜனநாயகத்தை நசுக்கி, பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என கடும் கண்டனங்களைத் தெரிவித்து உள்ளது, சிஐடியூ.

இது தொடர்பாக சேலம் உருக்காலை சிஐடியூ தொழிற்சங்க பொதுச்செயலாளர் தோழர் சுரேஷ்குமார் நம்மிடம் பேசினார்.

”சட்டப்பேரவை, மக்களவைத்
தேர்தல்களில் திமுக எப்படி வாக்குகளை
விலைக்கு வாங்குகிறதோ,
அதே ‘திருமங்கலம் பார்முலா’வைதான்
உருக்காலை தொழிற்சங்க அங்கீகாரத்
தேர்தலிலும் எல்.பி.எப். சங்கத்தினர்
செயல்படுத்தினர்.

இந்தத் தேர்தலில் எல்பிஎப் சங்கம்,
விடுதலைச் சிறுத்தைகளின் சார்பு
இயக்கமான எல்எல்எப் தொழிற்சங்கம்,
உருக்காலை எஸ்சி., எஸ்டி.,
தொழிலாளர் நலச்சங்கம் ஆகியவற்றுடன்
கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது.
சிஐடியூ தனித்து களம் கண்டது.

கூட்டணி பலத்துடன்
எல்பிஎப் களம் இறங்கினாலும்,
வழக்கமான ‘ப’ விட்டமினையும்
தண்ணீராய்ப் பாய்ச்சியது.
மொத்தம் 400 தொழிலாளர்களுக்கு
அவர்களின் வீட்டிற்கே
நேரடியாகச் சென்று 5 ஆயிரம் முதல்
அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாய்
வரை கொடுத்துள்ளனர்.

தொழிலாளர்கள் சிலர்,
‘உங்களுக்கே வாக்களிக்கிறோம்’ என
பேச்சளவில் உறுதிமொழி அளித்தபோதும்,
விடாப்பிடியாக அவர்களின்
வீட்டு டி.வி., / இருக்கை / மேஜை மீது
பணத்தை வைத்துவிட்டு வந்துள்ளனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்
உத்தரவின்பேரில், சேலம் கோட்ட
அரசுப் போக்குவரத்துக் கழக
எல்பிஎப் தொழிற்சங்க ஊழியர்கள்
பணப்பட்டுவாடா பணியில்
ஈடுபடுத்தப்பட்டனர். அந்தந்தப்
பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள்
தொழிலாளர்களின் வீடுகளை
அடையாளம் காட்டினர்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட
அடுத்த நாளில் இருந்தே எல்பிஎப் ஆதரவு
போக்குவரத்துத் தொழிலாளர்கள்
தேர்தல் பரப்புரையில் இறக்கிவிடப்பட்டனர்.
யார் யார் பரப்புரைக்கு வந்தனர் என்பதை
அரசுப் போக்குவரத்துக்கழக கிளை மேலாளர்களே
உருக்காலை வாயில் முன்பு வந்து
அமர்ந்து கொண்டு வருகையை பதிவு செய்த
கேடுகெட்ட சம்பவமும் நடந்தது.
பரப்புரையில் ஈடுபட்டவர்களுக்கு
தினமும் 500 ரூபாய் பட்டுவாடா செய்தனர்.
இந்த தேர்தலில் திமுக 60 லட்சம்
ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளது.
எல்லா வித துஷ்பிரயோகத்திலும்
திமுக சங்கத்தினர் ஈடுபட்டனர்.

கூட்டணி, பண பலம், ஆளுங்கட்சி
அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டும் கூட
எங்களைவிட எல்பிஎப் சங்கத்தால்
45 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற முடிந்தது.
குறுக்கு வழியில் வெற்றி பெற்றதால்தான்,
அவர்களால் பட்டாசு வெடித்து
கொண்டாட முடியவில்லை. தேர்தல்
விதிமுறை மீறல் குறித்து உருக்காலை
நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளோம்,”
என கொந்தளித்தார் தோழர் சுரேஷ்குமார்.

பொதுத்தேர்தல்களில் திமுக உடன் கொள்கை அளவிலான கூட்டணி என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தொழிற்சங்க தேர்தல்களில் திமுகவை எதிர்த்தே களம் இறங்கி வருகிறது. அதேநேரம், விடுதலைச் சிறுத்தைகளின் திமுக மீதான முரட்டு விசுவாசம், தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலிலும் தொடர்ந்தது. விசிகவின் எல்எல்எப் சங்கம் இந்தமுறை எல்பிஎப் உடன் கூட்டணி அமைத்து இருந்தது.

சிஐடியூ சங்கத்தின் புகார் குறித்து எல்எல்எப் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ரவிச்சந்திரனிடம் பேசினோம்.

”உருக்காலை தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் சிஐடியூ தனித்து கறம் இறங்கியதாகச் சொல்வதே பொய்யானது. அவர்கள் வீரபாண்டி அதிமுக எம்எல்ஏ ராஜமுத்து, சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ அருள் ஆகியோரின் வீடுகளுக்கே நேரில் சென்று ஆதரவு திரட்டினர். ஆகையால் அவர்களும் கூட்டணியாகத்தான் இந்தத் தேர்தலைச் சந்தித்தனர் என்பதே உண்மை.

பாஜக உடன் கூட்டணியில் இருந்த, இருக்கின்ற கட்சிகளுடன் சிஐடியூ கூட்டணி வைத்ததே முரணானது. ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சிஐடியூ இப்படி செய்திருக்கிறது. அவர்களின் இந்த முடிவுக்கு சிஐடியூ சங்கத்திலும், திமுகவில் இருக்கும் அவர்களின் ஆதரவாளர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. எங்களின் கூட்டணி பலம் மற்றும் சிஐடியூ மீதான அதிருப்தி காரணமாக எல்பிஎப் சங்கம் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது,” என்றார் ரவிச்சந்திரன்.

அவரிடம், ”இந்த தேர்தலில், திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறதே?,” என்று கேட்டபோது, ”தேர்தல் வெற்றிக்காக ஒரு கட்சி, அனைத்து விதமான ஆயுதங்களையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்படுத்தும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் கொள்கைக்காக நேர்மையாக தேர்தல் வேலைகளைச் செய்தோம்,” என்றார்.

இது ஒருபுறம் இருக்க, ”தேர்தல் போஸ்டர், துண்டறிக்கைகளில் கூட திமுக எம்.பி., டி.எம்.செல்வகணபதியின் படத்தை அச்சிடாமல் புறக்கணித்த எல்பிஎப் சங்கத்தினர், கடைசிக் கட்டத்தில் அவரையும் அழைத்து வந்து பரப்புரையில் ஈடுபடுத்தியது எல்லாம் அப்பட்டமான விதிமீறல்,” என்கிறார்கள் மற்றொரு தரப்பினர்.

எல்பிஎப் தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிவக்குமாரிடம் கேட்டபோது, ”தலைவா… இதெல்லாம் கட்சி விவகாரம். எதுவாக இருந்தாலும் எல்பிஎப் தலைவர் அமைச்சர் ராஜேந்திரன்தான் கருத்து சொல்ல வேண்டும். சிக்கல் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதால்தான் தேர்தல் வெற்றி குறித்து ஊடகங்களுக்குக் கூட தகவல் தெரிவிக்கவில்லை,” என்று ‘லகலக’வென சிரித்தபடியே சொன்னார்.

தொழிற்சங்க தேர்தல் விதிமீறல் குறித்து சேலம் உருக்காலையின் மக்கள் தொடர்பு அலுவலர் விஸ்வநாதனிடம் கேட்டபோது, ”சார்… உறவுக்காரர் ஒருவரின் இறுதிச்சடங்கில் இருக்கிறேன். அப்புறம் பேசுகிறேன்,” என முடித்துக் கொண்டார்.

திமுகவின் பணப்பட்டுவாடாவில் ஆரம்பித்த சலசலப்பு, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் கூட்டணி தாவல் வரை திசை திரும்பி இருக்கிறது உருக்காலை தொழிற்சங்க தேர்தல் விவகாரம்.

  • – பேனாக்காரன்

Leave a Reply