Sunday, January 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

விசிகவில் இருந்து நிரந்தரமாக வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து நிரந்தரமான விலகுவதாக அக்கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

லாட்டரி சாம்ராஜ்யத்தின்
சாம்ராட்டாக விளங்கி வரும்
மார்ட்டினின் மருமகன்தான்
இந்த ஆதவ் அர்ஜூனா.
‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ என்ற
நிறுவனத்தைத் தொடங்கி,
கட்சி மாநாடுகளை ஒருங்கிணைக்கும்
பணிகளையும், தேர்தல் நேரத்தில்
அரசியல் கட்சிகளுக்கு
பிரஷாந்த் கிஷோர் போல
வியூக வகுப்பாளராகவும்
செயல்பட்டு வந்தார்.

கடந்த 2021 சட்டப்பேரவைத்
தேர்தலின்போது விடுதலைச்
சிறுத்தைகள் கட்சிக்கு வியூக
வகுப்பாளராக பணியாற்றினார்.
இதன்மூலமாக விசிக தலைவர்
திருமாவளவனுக்கு நெருக்கமான அவர்,
நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம்
விசிகவில் இணைந்தார்.

கட்சியில் சேர்ந்த 20 நாளில்,
அவரை துணைப் பொதுச்செயலாளராக்கினார்
திருமாவளவன். அப்போதே,
கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே
ஆதவ் மீது எரிச்சல் ஏற்பட்டது.

கட்சியில் பொறுப்புக்கு
வந்த நாள் முதலே ஆதவ் அர்ஜூனா
துடுக்குத்தனமாக எதையாவது பேசி வைக்க,
அது கட்சித் தலைமைக்கு சங்கடத்தை
ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில்,
நடிகர் விஜய், தவெக கொள்கை
விளக்க மாநாட்டின்போது,
தன்னுடன் கூட்டணிக்கு வரும்
கட்சிகளுக்கு ஆட்சியிலும்
அதிகாரத்திலும் பங்கு தரப்படும்
என்றார்.

இது,
ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள்
கட்சி காலம் காலமாக பேசி வரும்
முழக்கமாக இருந்த நிலையில்,
ஆதவ் அர்ஜூனா திமுக, கூட்டணி
கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்திலும்
பங்கு தர வேண்டும் என்று
வெளிப்படையாகப் பேசத்
தொடங்கினார்.

‘வட மாவட்டங்களில் விசிக இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் இருந்து வந்தவர் எல்லாம் துணை முதலமைச்சர் ஆகும்போது, பொதுவாழ்வில் 40 ஆண்டு அனுபவமிக்க திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதுதான் அரசியல் முதிர்ச்சி,’ என்று ஆளும் திமுகவுக்கு பாடம் நடத்தினார் ஆதவ் அர்ஜூனா.

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கேட்பது அவருடைய உள்ளக்கிடக்கையாக இருக்கலாம் என்றாலும், மறைமுகமாக உதயநிதி ஸ்டாலினை டார்கெட் செய்து பேசியதை திமுக தலைமை கொஞ்சமும் ரசிக்கவில்லை.

கட்சியில் புதிதாக சேர்ந்த ஒருவர் இப்படி பேசுவது என்பது, விசிக தலைமைக்குத் தெரியாமல் இருக்குமா? என்று திமுகவுக்குள்ளும் பலத்த சந்தேகம் கிளம்பியது. ஒரு கட்டத்தில், ஆ.ராஜா எம்.பி., ஆதவ் ஆர்ஜூனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கொந்தளித்தார். அப்போதும் திருமா தரப்பில் இருந்து பெரிதாக எந்த எதிர்வினையும் இல்லை.

இந்நிலையில்தான், அண்மையில் நடந்த அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மன்னராட்சி ஒழித்துக் கட்டப்படும் என நேரடியாகவே திமுகவை விமர்சித்துப் பேசினார் ஆதவ். இத்தனைக்கும் அந்த மேடையில் தவெக தலைவர் விஜய்யும் கலந்து கொண்டார். அவரும் தன் பங்கிற்கு, விசிக தலைவர் திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டாலும் அவருடைய மனம் எப்போதும் எங்களுடன்தான் இருக்கும் என்று பேசி வைத்தார்.

என்னதான் அழாத குறையாக, செல்லும் இடங்களில் எல்லாம் திமுக உடனான கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என்று திருமாவளவன் தனது ராஜ விசுவாசத்தைக் காட்டினாலும், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜூனாவும், விஜய்யும் பேசியதன் பின்னணியில் திருமாவளவன் டபுள் கேம் ஆடுகிறாரோ என்று திமுக தலைமைக்கு உள்ளூர ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டே இருந்தது.

அதன்பிறகே, ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்வதாக டிச. 9ஆம் தேதி அறிவித்தார் திருமாவளவன். அரசியல் முதிர்ச்சி காரணமாக, திருமாவளவன் சற்று மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பவர். அதனாலாயே ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக உடனுக்குடன் எதிர்வினை ஆற்றாமல் இருந்திருக்கலாம் என்றாலும், திருமா மீது ஆளுங்கட்சிக்கு பெருத்த அதிருப்தி இருந்தது என்னவோ உண்மைதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அதற்கு அடுத்த நாளே, திருமாவளவனும், அக்கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்களும், புயல் வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.

ஆதவ் அர்ஜூனாவை இடைநீக்கம் செய்த சூட்டோடு இந்த நிகழ்வு நடந்ததால், திமுக தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால்தான் திருமாவளவன், ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுத்ததாக அரசியல் களத்தில் பேச்சுகள் கிளம்பின.

இந்நிலையில், தற்காலிக இடைநீக்க உத்தரவைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா, விசிகவில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக டிச. 15ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், விசிக தலைவர் திருமாவளவனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

”விடுதலைச் சிறுத்தைகள்
கட்சியினுடைய வியூக
வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி,
கட்சியின் அடிப்படை உறுப்பினராக
இணைந்தேன். தங்களுடைய சீரிய
எண்ணத்தின்பால் எனக்குத்
துணைப்பொதுச் செயலாளர்
பதவி கொடுத்தீர்கள்.

அந்த பொறுப்புகளோடு
அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றினேன்.
சமூகத்தில் புரையோடிப்
போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள்,
அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும்
அதன் அதிகாரக் கரங்கள்,
பாதிக்கப்படும் மக்களின் துயர்கள்
ஆகியவற்றை நான் ஆற்றிய
களப்பணிகளில் உணர்ந்தேன்.
அதற்கு எதிரான செயல்
திட்டங்களைக் கொள்கை ரீதியாக
வகுத்து என்னைச் செயல்பட
வைத்த விடுதலைச் சிறுத்தைகள்
கட்சிக்கு நான் என்றும்
கடமைப்பட்டு உள்ளேன்.

எளிய மக்கள் குறிப்பாக, ‘சாதிய ஆதிக்கத்தினால் காலம் காலாமாக புறக்கணிப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்’ என்ற நோக்கில்தான் நான் என்னை கட்சியில் இணைத்துக் கொண்டேன்.

விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயல்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை.

எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடம் இருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை.

ஏற்கனவே, கட்சியில் இருந்து என்னை ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்கக் கூடாது என்று எண்ணுகிறேன்.

வருங்காலங்களில் அம்பேத்கர்
கூறியதைப் போல, ‘அதிகாரத்தை
நோக்கி கேள்வி எழுப்புங்கள்’
என்கிற அடிப்படையில்,
சாதி ஒழிப்பு, சமூக நீதி,
எளிய மக்களுக்கான அரசியல்
உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு
மதப் பெரும்பான்மைவாதம்,
பெண்ணடிமைத்தனம், மக்களை
வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை
ஒழிக்கும் அரசியல் போராட்டங்களில்
தங்களுடன் தொடர்ந்து
பயணிக்க விரும்புகிறேன்.

எனவே, தேவையற்ற விவாதங்கள்
பொதுவெளியில் தொடராமல்
இருக்க வேண்டும் என்ற நோக்கில்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில்
இருந்து முழுமையாக என்னை
விடுவித்துக் கொள்வது என்று
முடிவெடுத்து உள்ளேன்.

அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து, நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சியில் இருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலை கருதியே எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன் மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமூகநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்,” என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஆதவ் அர்ஜூனா நடிகர் விஜய்யின் தவெக அல்லது அதிமுகவில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது. தனிக்கட்சி தொடங்கி செயல்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • பேனாக்காரன்

Leave a Reply