மொழி, இனம், பண்பாடு ஆகிய மூன்றும் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக் கூறுகள் ஆகும். மொழி செழுமை அடையும்போது அங்கு இனமும், பண்பாடும், கலாச்சாரமும் மேலும் செழுமை அடைகிறது. எங்கே, ஒரு மொழி அழிந்து போகிறதோ அங்கே ஓர் இனம் அழிவுக்கு உள்ளாகிறது.
மொழி, கலாச்சார ரீதியாக
மனிதனை ஓர்மைப்படுத்துகிறது.
பழமையான மொழிகளுள்
ஒன்றான சீனம், உலகம் முழுவதும்
110 கோடிக்கும் மேற்பட்ட
மக்களால் பேசப்படுகிறது.
ஆங்கில மொழியை 150 கோடிக்கும்
மேற்பட்டோர் பேசுகின்றனர்.
தொன்மையான தமிழ் மொழியை,
உலகளவில் 10 கோடி
பேர் பேசுகிறார்கள்.
ஆக, இப்போதைக்கு
தமிழ் மொழி அழிந்து விடுமோ
என்ற கவலை தேவையற்றது.
என்றாலும், அழியக்கூடிய
மொழிகளுள் தமிழ் 8ஆவது
இடத்தில் இருப்பதாக யுனெஸ்கோ
சொல்கிறது கூர்ந்து நோக்க
வேண்டியதாகிறது.
பிற செவ்வியல் மொழிகளோடு
ஒப்பு நோக்கும்போது, தமிழைப் போல
செறிவான இலக்கண, இலக்கிய வளம்
கொண்ட வேறு மொழிகள்
உலகில் இல்லை. நம்முடைய
தமிழ் சொற்குவையில் 4.25
லட்சத்திற்கும் மேற்பட்ட
சொற்களைத் தொகுத்து
வைத்திருக்கிறோம். தொகுத்ததே
இத்தனை லட்சம் என்றால்,
காலத்தால் அழிந்த தமிழ்ச் சொற்கள்
எத்தனை லட்சங்களோ?
இந்தக் கடலில் இருந்து
நாம் 10 விழுக்காட்டிற்கும்
குறைவான சொற்களையே
பயன்படுத்துகிறோம்.
தமிழர்களுக்கே தமிழ் மொழியின்
செறிவும், ஆழமும் தெரிவதில்லை.
காலப்போக்கில், வயிற்றுப்பாட்டிற்குத்
தேவையான அளவு மொழியைக்
கையாளத் தெரிந்தால் போதும்
என்ற நிலைக்கு தமிழர்கள்
வந்துவிட்டனர் என்பதே
கசப்பான உண்மை.
இவை ஒருபுறம் இருந்தாலும்,
தமிழ்நாட்டரசியல் என்பது இப்போதும்
தமிழ் மொழியை மையப்படுத்திதான்
நடந்து வருகிறது. உண்மையில்,
ஆளுகிற அரசுகள் மொழி வளர்ச்சிக்கு
உருப்படியான காரியங்களை
ஏதேனும் செய்திருக்கிறதா என்றால்
பெரிதாக ஒன்றுமில்லை என்றுதான்
சொல்ல வேண்டும்.
பள்ளிகளில் தமிழ் கட்டாயப்
பயிற்றுமொழி ஆக்கப்படவில்லை;
வணிக நிறுவனங்களின்
பெயர்ப்பலகைகளில் ஆங்கிலமும்,
ஹிந்தியுமே ஆக்கிரமித்து இருக்கின்றன.
குறைந்தபட்சம், திரைப்படங்களுக்குக் கூட
நல்ல தமிழில் பெயர் சூட்டுவதில்லை.
படங்களுக்கு தமிழில் பெயர்
வைத்தால்தான் திரையிட
அனுமதிக்கப்படும் எனச் சொல்வதில்
அரசுக்கு ஏன் தயக்கம்?
பெயர்ப் பலகைகளில் தமிழில்
எழுத்துகள் இருந்தாலும்
அவை ஆங்கில சொற்களின்
நேரடி உச்சரிப்பாகவே இருக்கின்றன.
(சான்றுக்கு: காஃபி பார், ஜூவல்லரி,
ரியல் எஸ்டேட், ஹோட்டல்,
ரெஸ்டாரன்ட் போன்ற சொற்கள்).
உயர்நீதிமன்றத்தில் தமிழை
வழக்காடு மொழியாகக்
கொண்டு வர வேண்டும் என
போராடும் வழக்கறிஞர்கள் கூட,
தங்களை அட்வகேட் / லாயர்
என்றே சொல்லிக் கொள்கின்றனர்.
தற்போது,
தமிழகம் முழுவதும்
ஆட்சிமொழிச் சட்ட வார விழா
டிச. 18ஆம் தேதி முதல் தொடங்கி,
கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்போதும் கூட தமிழக அரசு
அலுவலகங்களில் இடமாறுதல்
உத்தரவுகள் பெரும்பாலும்
ஆங்கிலத்தில்தான் வெளியிடப்படுகின்றன
என்பது வேதனையான ஒன்று.
கேட்டால் இருமொழிக்
கொள்கை என்பார்கள்.
தவிர, அலுவல் மொழிச் சட்டம் 1963 மற்றும் 1976களில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, தமிழகத்தில் உள்ள ரயில்வே, வான் போக்குவரத்து, அஞ்சல் துறை, தொலைபேசி உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழிதான் பயன்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அலுவல் மொழிச் சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த இம்மியளவும் முயற்சிக்கவில்லை.
இதைவிட வெட்கக்கேடானது, அரசு அலுவலகப் பெயர்களையே பிழையுடன் எழுதி வருவதுதான். சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையம் என்பதை, ‘நகர்புற’, ‘நகர்ப்புர’, ‘நகர்புர’ என தினுசு தினுசாக எழுதி வைத்துள்ளனர்.
பெரமனூரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அலுவலகப் பெயர்ப்பலகையிலும், நகர்ப்புற என்ற சொல்லை, ‘நகர்ப்புர’ என்றே பிழையாக எழுதி வைத்துள்ளனர். தமிழக அரசின் இணையதளத்திலும் ‘நகர்ப்புர’ வீட்டுவசதித்துறை என்று இருந்த நிலையில், தற்போது பிழை சரி செய்யப்பட்டிருக்கிறது.
அரசு அலுவலகங்களில் தமிழின் நிலை இப்படி என்றால், ஊடகங்களில் தமிழ் மொழி படாதபாடு பட்டு வருகிறது. பாமரனுக்கும் எளிய தமிழில் செய்திகள் சொல்ல வேண்டும் என்பதைக் கொள்கையாக வைத்திருக்கக் கூடிய தினத்தந்தி, மாலைமலர் பத்திரிகைகள் மட்டுமின்றி தமிழ் பெயர் தாங்கி இருக்கக்கூடிய இந்து தமிழ் திசை, தினகரன், தமிழ் முரசு, தீக்கதிர், தினமலர் என அனைத்து அச்சு ஊடகங்களிலும் தலைப்புகளிலேயே பிழைகள் மலிந்து கிடக்கின்றன. ஆறுதலான விஷயம் என்னவெனில் தினத்தந்தி, தினமணி, தினமலர் ஆகிய ஏடுகளில் பிழைகள் குறைவாக இருக்கின்றன.
அச்சு ஊடகங்களைக் காட்டிலும் இணைய செய்தி பத்திரிகைகள், யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களோ, தமிழ் மொழியை ஈவிரக்கமின்றி கொலை செய்கின்றன.
சொன்னால் சிரிப்பீர்கள். இப்படி எல்லாம் கூடவா தலைப்பிலேயே இத்தனை தவறுகள் செய்வார்கள்? என வியக்கும் அளவுக்கு கருணையின்றி பிழைகளுடன் எழுதுகிறார்கள்.
சான்றாக, ‘முண்டாசுப்பட்டி’, ‘தெகிடி’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த நடிகர் காளிவெங்கட் பற்றிய செய்திக்கான தலைப்பை நியூஸ்18 தமிழ் சேனலின் இணையதளத்தில், ‘சிவகார்த்திகேயனுக்கு நன்றி – மேடையில் உணர்ச்சியுடன் பேசிய நடிகர் காலி வெங்கட்’ என்று எழுதி உள்ளனர். காளி வெங்கட்டை, ‘காலி’ வெங்கட் என்று அவரை காலிப்பயலாக்கி விட்டனர்.
‘அயம் சாரி ஐயப்பா…’ என்ற பாடலை பாடி சர்ச்சையில் சிக்க வைக்கப்பட்ட பாடகி இசைவாணியின் பெயரை, விசுவல்எட்ஜ் என்ற யூடியூப் சேனல், ‘இசைவானி’ என்றும், பின்னணி என்ற சொல்லை ‘பின்னனி’ என்றும் பிழையுடன் குறிப்பிட்டுள்ளது.
‘மாங்கா உருக மண்பானை குளு’ என்றால் உங்களால் விளங்கிக் கொள்ள முடிகிறதா? ஆனால், இப்படித்தான் அமர் மீடியா யூடியூப் எழுதி இருக்கிறது. பாடகி ராஜலட்சுமி – செந்தில் தம்பதியினர் பாடிய பாடலின் முதல் வரியான, ‘மாங்கா ஊறுகா மண்பானை கூழு’ என்பதைத்தான் அமர் மீடியா, ஊறுகாயை உருக உருகவும், கூழை குளுமையாகவும் எழுதி இருக்கிறது.
தி எக்கனாமிக் டைம்ஸ் இணையதளம், ‘எதிர்பார்ப்பை தாண்டி 40 சதவீதம் லாபம் தந்த பென்னி பங்குகள்’ என்ற சொற்றொடரில் வரும் ‘தாண்டி’ என்பதை, ‘தண்டி’ என எழுதி தமிழை தண்டித்து இருக்கிறது.
‘விடுப்பு டாட் காம்’ என்ற இணையதளத்திலும் பிழைகளுடன் எழுதுவதையே வழமையாகக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான தலைப்புகளில் பிழைகள் மலிந்துள்ளன. ‘பரிசளித்த’ என்பதை ‘பரிசுளித்த’ என்றும், ‘இரண்டாம் தாரம்’ என்பதை ‘இரண்டாம் தாராம்’ என்றும் குறிப்பிட்டுள்ளது.
மாலை மலர் இதழில், ‘எனது கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ பலரது கனவுகளை நினைவாக்குகிறது; முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்’ என்று தலைப்பில் குறிப்பிட்டுள்ளது. உண்மையில், பலரது கனவுகளை ‘நினைவாக்குகிறது’ என்பதற்கு பதில், ‘நனவாக்குகிறது’ என்றுதான் இருக்க வேண்டும்.
மாலை மலர், தினத்தந்தி நாளிதழ்களும், இந்து தமிழ் திசை நாளிதழும் எண்ணெய் என்ற சொல்லை, ‘எண்ணை’ என்று தொடர்ந்து பிழையாக எழுதி வருகின்றன.
‘தி சினிமாஸ்’ என்ற யூடியூப் சேனல், திரைப்பட இயக்குநர் மிஷ்கின் பேசியதன் அடிப்படையில், ‘பெரிய மயிறு மாதிரி பேசுற!’ என்று தலைப்பு வைத்திருந்தது. ‘மயிறு’ என்பது ‘மயிரு’ என்றுதான் இருக்க வேண்டும். மிஷ்கின் சொல்வதுபோல அது சின்ன மயிராக இருந்தாலும், பெரிய மயிராக இருந்தாலும் மயிரு மயிருதான். இடையின ‘ரு’ போட வேண்டிய இடத்தில், பிழையாக வல்லின ‘று’ பயன்படுத்தி இருந்தனர்.
தினமலர் இணையதளத்தில், ‘ஜெகன் மோகன் பெரிய அளவில் தோற்ப்பார்; பிரசாந்த் கிஷோர் கணிப்பு’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தனர். ‘தோற்ப்பார்’ என்பது பிழை. வல்லின ‘றகர’ ஒற்றெழுத்துக்கு அடுத்து மற்றொரு ஒற்றெழுத்து வரக்கூடாது என்பது இலக்கண விதி. ‘தோற்பார்’ என்றுதான் இருக்க வேண்டுமே தவிர, ‘தோற்ப்பார்’ என்பது முற்றிலும் தவறு.
தினகரன் நாளிதழ், ‘யூடியூபர் சங்கரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை’ என்ற தலைப்பில், ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. ‘கிடுக்குப்பிடி’ என்பது பிழை. ‘கிடுக்கிப்பிடி’ என்பதே சரி.
தந்தி டிவியின் யூடியூப் சேனலும், பின்னணி என்பதை ‘பின்னனி’ என பிழையாக ‘றன்னகர’ இனமான ‘னி’ என்ற எழுத்தைப் பயன்படுத்தி இருந்தது.
‘சினிஉலகம் டாட் காம்’ என்ற இணையதளமும், தொடர்ந்து தலைப்புகளில் பிழைகளைச் செய்து வருகிறது. இத்தனையும் சினிமா செய்திகள் வழங்குவதில் இந்த ஊடகம் முன்னணியில் இருக்கிறது.
மற்றொரு பெரிய செய்தி நிறுவனமான ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளம், ‘கால் வைக்குற இடமெல்லாம் கன்னி வெடியா இருக்கு; வடிவேலு பதிலடி’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த தலைப்பில் உள்ள, ‘கன்னிவெடி’ என்பது, கன்னிப்பெண்கள் எல்லாம் வெடிகளாக மாறி விட்டார்கள் என்று பொருள் தரும். உண்மையில், அது கன்னிவெடி அன்று; ‘கண்ணிவெடி’ என்பதே சரி. இதை, ‘மிதிவெடி’ என்றும் சொல்லலாம்.
டிஜிட்டல் ஊடகத்தில் முன்னணியில் உள்ள ‘ஒன்இண்டியா தமிழ்’ இணையதளம், நடிகை கவுதமியின் படத்துடன், ‘விற்பனைக்கு தடை செய்யப்பட்ட 64 ஏக்கம் நிலம்…’ என்று செய்தி வெளியிட்டு இருந்தது. ஏக்கர் என்பதை ஏக்கம் என்று பிழையாக குறிப்பிட்டு இருந்தது. ஒன்இண்டியாவுக்கு கவுதமி மீது ஏக்கமா? அல்லது கவுதமிக்கு 64 ஏக்கர் மீது ஏக்கமா? என்பதை தெளிவுபடுத்தாமல் வாசகர்களை ஏக்கப்பட வைத்துவிட்டனர்.
இந்து தமிழ் திசை நாளிதழ், ‘அரசுப்பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு நாதஸ்வரம், மேள தளம் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்’ என்று தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘தாளம்’ என்பதை ‘தளம்’ என்று பிழையாக குறிப்பிட்டு இருந்தனர்.
தந்தி டிவி இணையதளம், ‘ஒரே மாதிரி’ என்பதை ‘ஒரே மாறி’ என்று தலைப்பிட்டு தமிழைச் சிதைக்கிறது. சி.பா.ஆதித்தனார் இப்போது இருந்திருந்தால் ரத்தக்கண்ணீர் வடிப்பார். தினத்தந்தி நாளிதழில் ‘புரூப் ரீடிங்’ பிரிவு ஒரு காலத்தில் மிகவும் வலிமையான துறையாக இருந்தது. அவர்கள் ஏனோ டிஜிட்டல் ஊடகத்தின் மீது அதே கவனத்தைச் செலுத்துவதில்லை போலும்.
ஒன்இண்டியா தமிழ், ’41 வயதில் குறையாத அழகு… ரசிகர்களை கட்டியிலுக்கும் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்’ என்று எழுதி இருந்தனர். ‘கட்டியிழுக்கும்’ என்பதை ‘கட்டியிலுக்கும்’ என பிழையாக குறிப்பிட்டு இருந்தனர். இவர்களின் செய்திகளை தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே கற்றுணர்ந்த தமிழும் மறந்து விடும் ஆபத்து இருக்கிறது.
மாலைமலர் இதழ், ‘நடைபயிற்சி சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை’ என்று குறிப்பிட்டுள்ளது. சொற்களைப் பிரித்து எழுதும்போது ஒற்றெழுத்துகளைப் பயன்படுத்தாமல் இருப்பது ஊடகங்களே ஏற்படுத்திக் கொண்ட இலக்கணம். எனினும், ‘நடைபயிற்சி’ என்று எழுதும்போது, ‘நடை + பயிற்சி = நடைப்பயிற்சி’ என்றே குறிப்பிட வேண்டும். அதை பத்திரிகைகள் ஒருபோதும் சிதைக்கக் கூடாது.
தமிழ்முரசு மாலை நாளிதழ், ‘விநாயகர் சிலைகளுக்கு மக்காத ரசாயனம் பயன்படுத்த கூடாது’ என்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘மக்காத’ ரசாயனம் என்பது பிழை; ‘மட்காத’ ரசாயனம் என்பது சரி. மக்காத ரசாயனம், மக்காத குப்பை என்று எழுதுவோர் மக்கு பிளாஸ்திரிகளாகத்தான் இருப்பார்கள்.
சினிஉலகம் டாட் காம் இணையம், விபரீதமான பொருள் தொனிக்கும் வகையில் தலைப்பில் மாபெரும் பிழையைச் செய்திருந்தது. அதாவது, ‘கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆசை நாயகி நடிகை மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த தலைப்பின் பொருள் என்னவெனில் நடிகை மீனா, கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஆசை நாயகியாக இருந்தார் என்பதாகும். கனவுக்கன்னி என்ற சொல்வதற்குப் பதிலாக இப்படியொரு பெரும் பிழையைச் செய்திருந்தது சினிஉலகம் டாட் காம்.
தாமரை டிவி என்ற யூடியூப் சேனல், ‘இந்த அறவேக்காடு மதிவதனிக்கு என்ன தெரியும்? பாவாடை நாடாவை அவிழ்த்து பார்த்தால்தான் தெரியுமா இவங்க சமூக நீதி’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. பாவாடையும் திராவிட அரசியலும் ஒன்றோடு ஒன்று கலந்தது என்பது வேறு சங்கதி. ஆனால், மதிவதனியை அறவேக்காடு என்று சொல்வதன் மூலம் அவர், அறங்களை நன்கு கற்றவர் என்று பாராட்டுவது போல் உள்ளது. நேர்காணல் அளித்தவர், ‘அரைவேக்காடு’ என்று சொன்னதை, அந்த யூடியூப் சேனல் ‘அறவேக்காடு’ என்று பிழையாக குறிப்பிட்டு உள்ளது.
மாலைமலர் நாளிதழின் சேலம் பதிப்பில், 15.10.2024ஆம் தேதியன்று, ‘100 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டிலின மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்; அம்பேத்கரைட் மக்கள் நலசங்கத்தினர் மனு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தது. ‘பட்டியலின’ என்பதை ‘பட்டிலின’ என்றும், ‘நலச்சங்கத்தினர்’ என்பதை ‘நலசங்கத்தினர்’ என்றும் பிழையாக தலைப்பில் குறிப்பிட்டு இருந்தனர். தொடர்ந்து தமிழைச் சிதைத்து வருவது, மாலைமலர் போன்ற பாரம்பரியமான பத்திரிகைக்கு அணியன்று.
தினகரன் நாளிதழில், 15.10.2024ஆம் தேதியன்று, ‘கனமழை பெய்யும்போது பயிறுகளுக்கு உரம், பூச்சி மருந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்தி எழுதிய செய்தியாளர், உதவி ஆசிரியர், செய்தி ஆசிரியர் ஆகியோருக்கு பயிருக்கும், பயிறுக்கும் வேறுபாடு தெரியவில்லை என்றே தெரிகிறது. விளைச்சலுக்குப் பிறகு கிடைப்பது பயிறு அல்லது பயறு ஆகும். செடியாக / கொடியாக / கன்றாக இருப்பது பயிர் ஆகும். சான்றாக, தட்டைப்பயறு, பச்சைப்பயறு ஆகியவை பயறு அல்லது பயிறு வகை பயிர்களாகும்.
கடந்த 24.10.2024ஆம் தேதி தினமணி நாளிதழில், ‘திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்களே – விரிசல்ல’ என்ற தலைப்பிட்டு ஒரு செய்தி. அதில் விரிசல்ல என்பது பிழை; விரிசல் அல்ல என்று இருக்க வேண்டும்.
இங்கே குறிப்பிட்டுள்ள பத்திரிகைகள், இணையதளங்களை நாம் அடிக்கடி பார்க்க நேர்ந்ததால் இந்தப் பிழைகள் கண்ணில் தென்பட்டன. எழுத்துப் பிழைகள் மட்டுமின்றி, கருத்துப் பிழைகளும், வரலாற்றுத் தகவல் சார்ந்த பிழைகளும் எக்கச்சக்கமாக அச்சு ஊடகங்களில் மலிந்து கிடப்பது மற்றொரு வேதனையான சங்கதி.
தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் பொதுவெளியில் அவர்கள் மொழியில் தயக்கமின்றி பேசுகின்றனர். ஆனால் தமிழர்கள் மட்டும்தான், தாய் மொழியில் பேசுவதையே அவமானமாகக் கருதுகிறார்கள். ‘சோறு’ என்று பொதுவெளியில் சொல்வதற்கு தமிழர்கள் எத்தனை கூச்சப்படுகிறார்கள் என்பதை எல்லோரும் அறிவோம். லெமன் சாதம், கர்டு ரைஸ், ஃபிரைடு ரைஸ், சிக்கன் ரைஸ் என உண்ணும் உணவுப் பட்டியலில் இருந்து தமிழை அப்புறப்படுத்தி விட்டோம்.
திருமண வரவேற்பு என்பது
அரிதாகி, ‘ரிஷப்ஷன்’ என்றும்,
திறப்பு விழாக்கள் எல்லாம்
‘ஓப்பனிங் செரிமனி’ என்றும்,
அழைப்பிதழ் என்பது
‘இன்விடேஷன்’ ஆகவும் மாறிவிட்டன.
இப்படி பண்பாட்டுத் தளத்தில்
இருந்தும் தமிழை நீக்கிவிட்டோம்.
உணவு, பண்பாடு, வழிபாட்டுத்
தளங்களில் இருந்து தமிழை
மெல்ல மெல்ல வெளியேற்றுவதன்
மூலம் ஒரு கட்டத்தில் தமிழ்
மொழியே காணாமல் போய்விடும்
ஆபத்து இருக்கிறது.
அத்துடன் தமிழன் என்ற இனமும்
அழிவுக்கு உள்ளாகிறது.
அண்மையில் உயர்நீதிமன்ற
நீதிபதி ஒருவர், ‘பேசும்போது
பிற மொழி கலந்து பேசினாலும்,
எழுதும்போதாவது பிற மொழி
கலவாமல் தமிழில் எழுதுங்கள்’
என்று வேதனையுடன் தெரிவித்தார்.
‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ கொண்டாடப்படும்
இக்காலத்தில் தனித்தமிழில்
பேசும்படி நாமும் வலியுறுத்தவில்லை.
ஆனால், பொதுவெளியில் தமிழில்
பேச தயக்கம் கொள்ள வேண்டாம்;
எழுதும்போது பிழையற எழுதுங்கள்
என்றே வலியுறுத்துகிறோம்.
தமிழ் வளர்ச்சித்துறை ஊழியர்கள்
வயிற்றுப்பாட்டுக்கான பணியாகக்
கருதாமல், மொழியை நேசித்து
அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.
பிழையின்றி செய்திகள் எழுதுவது
தொடர்பாக அனைத்து ஊடக
நிறுவனங்களுக்கும் கடிதம்
வாயிலாக வலியுறுத்த வேண்டும்.
துறை சார்பில் தமிழ் ஆசிரியர்கள்,
தமிழ் அறிஞர்கள் மூலமாக
ஊடக நிறுவனங்களுக்கு பிழையற
எழுதுவது எப்படி? என்பது
குறித்த பயிற்சி அரங்குகள்
நடத்த வேண்டும்.
தமிழ் வளர்ச்சிக்கு எதுவும்
செய்ய மாட்டோம்; ஆனால்
தமிழ் வளர்ச்சித்துறை என்று
பெயரை மட்டும் சுமந்து
கொண்டிருப்பதுதான்
வேடிக்கையாக இருக்கிறது.
மொழியின் அழிவு என்பது
பிற மொழிக் கலப்பில் தொடங்கி,
பிறகு சிதைவுக்கு உள்ளாகி,
ஒரு கட்டத்தில் வழக்கொழிந்து
விடுகிறது. இதுதான் மொழி
அழிவின் படிநிலைகள்.
நம் மொழியைக் காக்க
வேண்டிய முனைப்பும்,
சிதைவுறுதலை தடுக்கும்
பொறுப்பும் நமக்கு வேண்டும்.
இந்தியாவில் பயன்பாட்டில்
இருந்த 780 மொழிகளில்,
கடந்த 50 ஆண்டுகளில்
220 மொழிகள் அழிந்து விட்டன.
இவை பத்தாயிரத்திற்கும்
குறைவான மக்களால்
பேசப்பட்ட மொழிகள்.
உலகளவில் புழக்கத்தில் உள்ள
7097 மொழிகளில் 48 விழுக்காடு
மொழிகள் அழியும் அபாயத்தில்
உள்ளதாக யுனெஸ்கோ எச்சரித்துள்ளது.
இந்த பட்டியலில் தமிழ் மொழியும்
இருப்பது அதிர்ச்சிகரமான
மற்றொரு தகவல்.
‘தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே; தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே’ என முழங்கினான் புரட்சிக்கவி பாரதிதாசன். இங்கே அரசும், ஊடகங்களும் போட்டிப்போட்டு தமிழ் மொழியைச் சிதைத்து வருகின்றன. இவர்களை நாம் என்ன செய்வது?
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், தமிழ் மொழியைச் சிதைத்தவர்களும், அதைக் கண்டும் காணாமலும் இருப்பவர்களும் ஒருநாளும் தப்பிப்பதற்கு வழியே இல்லை.
- பேனாக்காரன்