Saturday, June 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

பாலியல் துன்புறுத்தல் அச்சத்தில் 51% கைம்பெண்கள்; ஆய்வில் தகவல்

கைம்பெண்களில் 51 சதவீதம் பேர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்துடனேயே வாழ்வதாக ஆய்வில் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஆண்டுதோறும் ஜூன் 23ம் தேதி,
சர்வதேச கைம்பெண்கள் தினம்
கடைப்பிடிக்கப்படுகிறது.
2011ஆம் ஆண்டில் இருந்து
இப்படியொரு தினம்
பின்பற்றப்பட்டு வருகிறது.
கைம்பெண்கள் சந்திக்கும்
சவால்கள், பொருளாதார சுதந்திரம்,
சமூகம் பாதுகாப்பு குறித்து
இந்த நாளில் பேசப்படுகிறது.

மறைந்த தமிழக முதல்வர்
கருணாநிதியிடம் சிலர்,
‘விதவை’ என்ற சொல்லில் கூட
பொட்டில்லையே? எனக் கேட்க,
அதற்கு அவரோ சட்டென்று,
‘கைம்பெண் என்று
சொல்லிப் பாருங்கள்.
இரண்டு பொட்டு இருக்கும்,’
என்றார் சமயோசிதமாக.
அப்போது முதல்தான்
கைம்பெண் என்ற சொல்லும்
பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது.
அதனால் நாமும் இங்கே
விதவை என்ற சொல்லுக்கு
மாற்றாக கைம்பெண் என்றே
பயன்படுத்துகிறோம்.

நாகப்பட்டினத்தில் இயங்கி
வரும் ‘கலங்கரை’ என்ற
தொண்டு நிறுவனம்,
கைம்பெண்களிடம் ஓர்
ஆய்வை நடத்தியது.
சமூக செயற்பாட்டாளர்களான
ஆலோசியஸ் இருதயம்,
ராஜகுமாரி மைக்கேல்சாமி,
பால் மைக்கேல் ராஜ் மற்றும்
ஜெயஸ்ரீ பி.மங்குபாய் ஆகியோர்
ஆய்வை நடத்தினர்.

‘கண்ணியம், பாதுகாப்பு,
மனித உரிமைகள் மற்றும்
உரிமைகளைத் தேடி’ என்ற
தலைப்பில், ஓராண்டு காலம்
இந்த ஆய்வை நடத்தினர்.
பல்வேறு மதங்கள் மற்றும்
சாதிகளைச் சேர்ந்த
கைம்பெண்களிடம் கருத்து
கேட்கப்பட்டது. 16 மாவட்டங்களைச்
சேர்ந்த 21 வயதுக்கு மேற்பட்ட
495 கைம்பெண்கள் நேர்காணலில்
பங்கேற்றனர். இக்குழு, தங்களுடைய
ஆய்வு முடிவை, நடப்பு ஆண்டு
ஜூன் 23ஆம் தேதி சர்வதேச
கைம்பெண்கள் தினத்தன்று,
மதுரையில் வெளியிட்டது.

ஆய்வில் பங்கேற்ற கைம்பெண்களில்
60 சதவீதம் பேரின் ஆண்டு
வருமானம் 60 ஆயிரம் ரூபாய்க்கும்
குறைவாக இருப்பதும்,
‘இழுத்துக்கோ பிடிச்சுக்கோ’ என
மோசமான வறுமை நிலையில்
வாழ்ந்து வருவதும் தெரிய வந்துள்ளது.

இவர்களில்,
71.3 சதவீதம் பேர் முறைசாரா
துறையில் பணிபுரிபவர்கள்.
அவர்களுக்கு வேலை உத்தரவாதமோ,
வருமான உத்தரவாதமோ கிடையாது.
பணியில் கிடைக்க வேண்டிய
குறைந்தபட்ச சலுகைகள் கூட
கிடைப்பதில்லை என்று
பதில் அளித்துள்ளனர்.

”கணவனின் மறைவு என்பது
ஒரு கைம்பெண்ணின் வாழ்க்கையில்
ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, பொருளாதார பாதுகாப்பின்மை,
மன உளைச்சல், களங்கம்
மற்றும் பெரும்பாலும் அவர்களை
கடன் வலையிலும் சிக்க வைத்திருக்கிறது.
ஏறக்குறைய, 85 சதவீத கைம்பெண்கள்
கடன் வாங்கி உள்ளனர்,”
என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆய்வில் பங்கேற்ற கைம்பெண்களில் 51 சதவீதம் பேர், தாங்கள் பாதுகாப்பற்றதாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பணியிடங்கள், அரசு அலுவலகங்கள், அவர்களுடைய அண்டை வீட்டார், உறவினர்கள் மற்றும் கணவனின் குடும்ப உறுப்பினர்களால்கூட பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி உள்ளதாக தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

உலகம் டிஜிட்டல் யுகத்திற்கு மாறினாலும் கணவனை இழந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்படும் சில சடங்குகள் அவர்களை மனதளவில் காயப்படுத்துகின்றன என்பதை மறுக்க இயலாது.

மனிதநேயமற்ற, சமூக மற்றும் கலாச்சார நடைமுறைகள் மட்டுமின்றி, இறுதிச் சடங்குகளின்போது தாங்கள் பெரிதும் இழிவுபடுத்தப் படுவதாக 91.3 சதவீத கைம்பெண்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அவற்றை எதிர்க்க சக்தியற்றவர்களாக இருப்பதாகவும் சொல்கின்றனர்.

சடங்குகளில், குளிர்ந்த நீரை ஊற்றிய பின் சூரிய உதயத்திற்கு முன் கோயில் குளத்திற்கு அழைத்துச் செல்வது, பூக்கள், குங்குமம், மஞ்சள் மற்றும் தாலி ஆகியவற்றை வலுக்கட்டாயமாக அகற்றுதல் மற்றும் வளையல்களை உடைத்தல் உள்ளிட்ட காலத்திற்கு ஒவ்வாத சடங்குகளைச் செய்கின்றனர்.

சடங்குகள், ஒவ்வொரு
சாதிக்கும் ஒவ்வொரு விதமாக
மேற்கொள்ளப்படுகின்றன.
நேர்காணலில் கலந்து கொண்ட
கைம்பெண்களில் கிட்டத்தட்ட
84.2 சதவீதம் பேர், இத்தகைய
அர்த்தமற்ற சடங்குகளை
தடை செய்ய வேண்டும் என்று
மன வலியோடு கூறுகின்றனர்.

”இந்த சடங்குகள், கைம்பெண்களை அமங்கலமானவர்கள் என்று முத்திரை குத்தவும், அவர்களின் கண்ணியத்தை பறிக்கவும் மட்டுமே உள்ளன. இந்த நடைமுறைகளை ஒழிக்க புதிய சட்டங்கள் தேவை,” என தமிழ்நாடு விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கத்தின் உறுப்பினர் பி.கஸ்தூரி கூறுகிறார்.

”பலர் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை போன்ற ஆவணங்களைப் பெற்றிருந்தாலும் பதில் அளித்தவர்களில் 38.6 சதவீதம் பேர் மட்டுமே விதவை ஓய்வூதியம் பெற தேவையான ஆவணங்களை வைத்துள்ளனர்.

சிறு குழந்தைகளுடன் தனியாக வாழ்வதும், குடும்பத்தில் ஆதரவு அமைப்பு இல்லாததும் அவர்களின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளது,” என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கைம்பெண்களை பாகுபாடு
மற்றும் அட்டூழியங்களில்
இருந்து பாதுகாக்கவும்,
அவர்களின் நல்வாழ்வை
உறுதிப்படுத்தவும் சட்டம்
கொண்டு வர வேண்டும்
என்றும் ஆய்வுக் குழுவினர்
அரசை வலியுறுத்துகின்றனர்.

64.8 சதவீத கைம்பெண்கள்
மற்றும் ஏறக்குறைய 15 சதவீத
குழந்தைகள் தங்கள்
தந்தையின் மரணத்திற்குப் பிறகு
கல்வியை நிறுத்தியதால்,
குழந்தைகளின் எதிர்காலம்
குறித்த கவலையுடன் கிட்டத்தட்ட
அனைத்து கைம்பெண்களுக்கும்
கடுமையான மனநல பாதிப்புகள்
ஏற்படுவதையும் இந்த ஆய்வு
வெளிப்படுத்துகிறது.

”எல்லாவற்றையும் விட மோசமான ஒரு தகவலும் ஆய்வில் தெரிய வந்தது. கைம்பெண்கள் உருவாக வழிவகுப்பதில் மதுபானத்திற்கு முக்கியப் பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆகையால், தமிழக அரசு தனது மதுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.

  • பேனாக்காரன்

Leave a Reply