Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்தது!; பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்!!

சேலம் அருகே, துணை மின் நிலையத்தில் உயர்மின்னழுத்தம் காரணமாக டிரான்ஸ்பார்மர் வெடித்தது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே, கே.ஆர். தோப்பூரில் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இது, 400 மெகாவாட் திறன் கொண்டது. மேட்டூர் அனல்மின் நிலையம், நெய்வேலி ஆகிய இடங்களில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை நேரடியாகப் பெற்று, இங்குள்ள டிரான்ஸ்பார்கள் மூலம் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் இன்று (ஜூன் 8, 2018) காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறியது. தீ, கொளுந்து விட்டு எரிந்தது. கரும்புகை வானுயர பறந்தது. கரும்புகை, பல கிலோமீட்டர் தொலைவில் இருப்போருக்கும் தெரிந்ததால், பலரும் நிகழ்விடம் நோக்கி விரைந்தனர்.

இதுகுறித்து ஓமலூர், சூரமங்கலம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர்கள் ராஜன், கோவிந்தன், தீயணைப்பு வீரர்கள் சரவணன், சாரங்கபாணி, வெங்கடேசன், சங்கர், முருகேசன், சின்னக்கருப்பன், உதயகுமார், அழகேசன், மாதேஸ்வரன் ஆகியோர் விபத்து நிகழ்விடம் விரைந்தனர்.

எண்ணெய் வகை தீ விபத்து என்பதால், வழக்கம்போல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டதோடு, ரசாயன நுரை கலவை மூலமும் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் சில மணி நேரம் மின் விநியோகம் தடைப்பட்டது. இந்த விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள டிரான்ஸ்பர், மின்சாதன பொருள்கள் சேதமாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து துணை மின் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ”கடந்த மாதம் 25ம் தேதிதான் இந்த மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்தது. குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொரு டிரான்ஸ்பார்மரிலும் மின் விநியோகப் பணிகளை சில மணி நேரத்திற்கு நிறுத்தி வைப்பது நடைமுறை. தீயில் எரிந்து நாசமான அந்த டிரான்ஸ்பார்மரை நேற்று இரவு ‘ஐசோலேட்’ செய்திருந்தோம்.

இன்று காலையில் அதை இயக்கும்போது உயர் மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் 28 ஆயிரம் லிட்டர் டிரான்ஸ்பார்மர் எண்ணெய் இருந்ததால் தீ மளமளவென பற்றிவிட்டது,” என்றனர்.