Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எங்கள் பிணங்களின் மீது எட்டுவழிச்சாலை போடுங்கள்!; கொதிக்கும் விவசாயிகள்; தகிக்கும் சேலம்!!

எட்டு வழிச்சாலை விவகாரத்தில், அக்னி நட்சத்திரம் அடங்கிய பின்னும் கடும் கொதிநிலையில் இருக்கிறது மாங்கனி மாவட்டம். ‘ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, இழப்பீடு தருகிறோம் என்பதை எப்படி ஏற்க முடியும்? எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோடி தருகிறோம். உயிரைக் கொடுப்பாரா?,’ என வெடித்துக் கிளம்பியுள்ளனர் விவசாயிகள்.

எட்டு வழிச்சாலை அமைய உள்ள வழித்தடம்

சேலத்தில் இருந்து சென்னைக்குச் செல்ல மூன்று வழித்தடங்கள் உள்ளன. இதனூடாக 334 கி.மீ., தொலைவு பயணிக்க வேண்டும். இதற்கான பயண நேரம் 5.24 மணி. ஆனால், புதிதாக அமையவிருக்கும் எட்டு வழிச்சாலை / பசுமைவழிச்சாலைத் திட்டத்தால், இந்தப் பயண தூரம் 57 கி.மீ., வரை குறைகிறது. அதாவது, 277.3 கி.மீ. தூரமாக பயணத்தொலைவு குறைகிறது. இதனால், வெறும் 3 மணி நேரத்தில், சேலத்தில் இருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக பயணித்துவிட முடியும்.

 

எட்டு வழிச்சாலைத் திட்டத்தின் நோக்கம் குறித்து அரசுத்தரப்பில் கேட்டால், இப்படித்தான் சொல்லப்படுகிறது. உண்மையில், இத்திட்டத்தின் நோக்கம் மக்கள் நலனுக்கானது அல்ல; கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது என உள்ளர்த்தத்துடன் பேசுகின்றனர் விவசாயிகள்.

அவர்களின் கொந்தளிப்புக்கு கார்ப்பரேட்டுகளின் ஆதாயம் மட்டுமே காரணம் அன்று. இத்திட்டத்தின் பெயரால் 2343 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதும் முக்கிய காரணம். இதில், 100 ஹெக்டேர் நிலம் வனப்பகுதியில் கபளீகரம் செய்யப்படுகிறது.

 

இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இருந்தும் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. பசுமைவழிச்சாலைக்காக யார் யாரிடம் இருந்து நிலம் பறிக்கப்படுகிறது என்பதற்கான அறிவிக்கை எல்லாம் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளன.

ராமலிங்கபுரம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்

பசுமைவழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்திய ஒன்றிய அரசு, இதுகுறித்த வரைவுத் திட்டத்தை தயாரித்து வழங்கும் பணிகளை, ‘மெசர்ஸ் ஃபீட்பேக் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தது. அந்த நிறுவனம், மொத்தம் 286 பக்கங்களுக்கு வரைவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், இத்திட்டத்தால் நான்கு முக்கிய இடர்பாடுகள் ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

முதலாவது, சிறு நகரங்கள், கிராமங்களுக்குச் செல்லும் பாதைகளை முற்றிலும் அடைத்து விடும். இரண்டாவது, அதிகளவிலான நிலப்பரப்பை கையகப்படுத்த வேண்டியுள்ளது. மூன்றாவது, மலைகளைக் குடைந்து 2.50 கி.மீ. தூரத்திற்கு மூன்று இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண்டும். அடுத்து, 10.68 கி.மீ. தூரத்திற்கு வனப்பகுதி நிலம் அழிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

எட்டு வழிச்சாலையால் அழியும் அபாயத்தில் உள்ள குள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்து என்பவரின் பாக்குத் தோப்பு.

இந்தத் திட்டத்திற்காக காஞ்சிபுரத்தில் 42 கிராமங்களிலும், திருவண்ணாமலையில் 74 கிராமங்களிலும், கிருஷ்ணகிரியில் ஒரு கிராமத்திலும், தர்மபுரியில் 24 கிராமங்களிலும், சேலம் மாவட்டத்தில் 18 கிராமங்களிலும் மொத்தம் 159 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இவை பெரும்பாலும் விளை நிலங்கள். சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமானவை.

 

ஏற்கனவே சேலம் – உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலைக்காக நிலம், வீடுகளை இழந்த விவசாயிகளுக்கு அடிமாட்டு ரேட்டை இழப்பீடாகக் கொடுத்த அரசாங்கம், இன்னும் முழுமையாக பலருக்கு செட்டில்மென்ட் வழங்காமல் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடைசி நம்பிக்கையாக சொற்ப அளவில் வைத்திருக்கும் விளைநிலத்தையும் பறித்துக்கொள்ள பார்ப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளிடம் அரசாங்கம் நடத்தும் வழிப்பறி என்கின்றனர்.

 

சேலம் மாவட்டத்தில், பசுமைவழிச் சாலை திட்டத்தில் 38 கி.மீ. தூரம் சாலை அமைகிறது. இந்த திட்டத்தால் நிலங்களை இழக்க உள்ள சின்னகவுண்டாபுரம், ஏரிக்காடு, ராமலிங்கபுரம், மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி, குப்பனூர், நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, சித்தனேரி ஆகிய கிராம விவசாயிகளை அவர்களின் ஊர்களுக்கே சென்று நேரில் சந்தித்துப் பேசினோம்.

ஏரிக்காடு விவசாயிகள்

ராமலிங்கபுரம் சிவகாமி, கவிதா, குப்புசாமி, அய்யம்பெருமாள், ஜமுனாராணி, மலர்க்கொடி ஆகியோர் கூறுகையில், ”ராமலிங்கபுரம் பகுதியில் 300 வீடுகள், தென்னந்தோப்புகள், விவசாய நிலங்கள் இருக்கின்றன. எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுத்தப்ப டும்போது எங்கள் கிராமத்தில் உள்ள மொத்த வீடுகளும், விளை நிலங்களுமே பறிபோகும் நிலையில் இருக்கிறது. ‘சிட்டிசன்’ படத்தில் அத்திப்பட்டி ஊர் காணாமல் போனதுபோல், ராமலிங்கபுரம் என்ற ஊரே இனி சேலம் வரைபடத்தில் இருந்து மாயமாகி விடும்.

 

பத்தாண்டுகளுக்கு முன், சேலம் – உளுந்தூர்பேட்டை சாலை விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. சதுர அடிக்கு 51 ரூபாய் கொடுத்தனர். அப்போது வீடுகளை பறிகொடுத்தவர்கள், அந்த துயரத்தில் இருந்து மீண்டு கடன் வாங்கி புதிதாக வீடு கட்டினர். அந்தக் கடனை அடைப்பதற்குள் மறுபடியும் பசுமை வழிச்சாலை என்ற பெயரில் நிலத்தைப் பிடுங்குவது என்ன நியாயம்?

சிவத்தராஜன்

ஏற்கனவே சேலம் – சென்னைக்கு மூன்று வழித்தடத்தில் செல்ல முடியும் எனும்போது, இப்போது  எட்டுவழிச்சாலை யாருக்காக போடுகின்றனர்? இதற்காக எங்களுடைய வீட்டையும், விளை நிலத்தையும் பிடுங்கிக் கொண்டால், நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தெருவில்தான் நிற்க வேண்டும். அரசாங்கமே எங்களை தற்கொலைக்கு தள்ளுகிறது,” என்றனர்.

 

ஏரிக்காடு கிராமத்தில் நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான 2.50 ஏக்கர் தென்னந்தோப்பும், மாதேஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான 2.50 ஏக்கர் தென்னந்தோப்பும் பசுமை வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் பட்டியலில் உள்ளன.

 

”கடந்த ஆண்டு கடும் வறட்சியால், கிணறுகளிலும் தண்ணீர் வறண்டது. அதற்காக, 30 ஆண்டுகளாக பெற்ற பிள்ளைபோல வளர்த்து வந்த தென்னை மரங்களைக் கருக விட்டுவிட முடியுமா? அதனால், தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து ஊற்றி அவற்றைக் காப்பாற்றினேன். கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு தண்ணீரை வாங்கித்தான் மரங்களின் உயிர்களைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன். இப்போது, இந்த மரங்களை அழித்துவிட்டு அதற்கு பசுமை வழிச்சாலைத் திட்டம் என்று பெயர் வைத்தால் எப்படி ஏற்க முடியும்?.

நாகராஜ்

எத்தனை கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தாலும் ஏற்க முடியாது. எங்களுக்கு எங்களின் பூர்வீக விவசாய நிலம்தான் வேண்டும். ஜிண்டால் கம்பெனிக்காரன், கல்வராயன் மலையில் இருந்து கனிமங்களை வெட்டி எடுத்து அதை சென்னை துறைமுகத்துக்குக் கொண்டு செல்லத்தான் இந்த திட்டமே தவிர, மக்களுக்கான திட்டம் இது அல்ல. எங்கள் நிலத்தை எடுத்துக் கொண்டால் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டுமல்ல. மரமேறும் தொழிலாளிகள், மட்டை பொறுக்குபவர்கள் என பல தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பும் ஏற்படும்,” என்கிறார் ஏரிக்காடு நாகராஜ்.

 

அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்ற விவசாயிக்குச் சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலம், அரிசி ஆலை, விவசாய கிணறு, வீடு என அனைத்துமே இந்த சாலைத் திட்டத்திற்கு இரையாகப் போகிறது. இதை அறிந்ததில் இருந்து அவருக்கு கடுமையான ரத்தக்கொதிப்பு வந்து  விட்டதாக கூறுகின்றனர்.

நாராயணன்

குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி கிராமங்களைச் சேர்ந்த கவிதா, பன்னீர்செல்வம், அமுதா, மூக்காயி, முத்து, கண்ணன், லோகநாதன், ராயப்பன் ஆகியோர் கூறுகையில், ”என்றைக்கு நிலம் எடுப்பு குறித்து பேச்சு வந்ததோ அன்றுமுதல் இரவு படுத்தால் எங்களுக்கு தூக்கமே வருவதில்லை. எதையாவது சொல்லி இந்த அரசாங்கம் ஏழைபாழைகளின் வயித்துல அடிக்கிறதுலயே குறியாக இருக்கு.

 

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்னு சொல்றாங்க. எட்டு வழிச்சாலைக்காக விவசாய நிலத்தை பறித்துக்கொண்டால் முதுகெலும்பு உடைந்து விடாதா? இந்த சாலை வேண்டும் என்று யாருமே கேட்காதபோது யாருக்காக இந்த திட்டம்?

கவிதா

எட்டு வழிச்சாலைக்காக எங்களின் நிலத்தை எடுத்தால், நிச்சயமாக தூத்துக்குடியில் நடந்ததுபோன்ற சம்பவம் இங்கும் நடக்கும். நிச்சயமாக இந்த ஆட்சி கலைக்கப்படும் நிலைமை வரத்தான் போகிறது.

 

ஆரம்பத்தில் எட்டு வழிச்சாலைக்காக தரிசு நிலத்தைத்தான் எடுப்போம் என்றார்கள். இந்த மாவட்டத்தில் இருந்து முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஒருமுறையாவது இங்கு வ ந்து பார்க்க வேண்டும். இங்கிருப்பது எல்லாம் தரிசு நிலமா? நஞ்சை நிலமா? என்று அவர் பார்க்க வேண்டும். விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததாக எடப்பாடி பழனிசாமி சொல்றாரே  தவிர, விவசாயிகளுக்கு எதிராகத்தான் செயல்படுகிறார். விவசாயிகளுக்குதான் முதலிடம் என்று நரேந்திர மோடி சொல்கிறார். ஆனால், விவசாயிகளை அழிக்கத்தான் அவர் திட்டம் போடுகிறார்.

 

கனிம வளங்களை தனியார் சுரண்டுவதற்கும், அரசியல்வாதிகளின் ஆதாயத்திற்காகவும்தான் பத்தாயிரம் கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த துடிக்கின்றனர். சேலத்தில் இருந்து சென்னைக்கு எந்த சாமானியன் மூன்று மணி நேரத்தில் போகத் துடிக்கிறான்? மக்களுக்கு பயன்படாத இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

 

தென்னை, பாக்கு, வாழைத் தோப்புகள், நெல் சாகுபடி பரப்பை அழித்து, ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்து ஒரு திட்டத்தை எடப்பாடி அரசு கொண்டு வருவது தேவையா? நிலத்தை அளக்க யார் வந்தாலும் அவர்களை கண்டிப்பாக செருப்பாலும், விளக்குமாறாலும் அடித்து விரட்டுவோம். இல்லாவிட்டால், அரசு அதிகாரிகளே எங்களுக்கு ஆளுக்கு ஒரு பாட்டில் விஷத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு நிலத்தில் இறங்கட்டும்,” என்று கொந்தளித்தனர்.

குப்பனூரைச் சேர்ந்த நாராயணன், எம்.காம் பட்டதாரி. சகோதரர்களுடன் இணைந்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பசுமை வழிச்சாலை திட்டத்தில் இவருக்குச் சொந்தமான 4.50 ஏக்கர் தென்னந்தோப்பு முற்றிலும் பறிபோகும் அபாயத்தில் இருக்கிறது.

 

நிலத்தை இழந்த பின்னர் அதை நம்பி வளர்த்து வரும் கறவை மாடுகள், ஆடுகள் கோழிகளும் சேர்த்தே அழிந்து விடும். பிழைப்பதற்கு வழியில்லாமல் போய்விடும் என்று கவலையுடன் சொல்லும்போதே தேம்பித்தேம்பி அழத்தொடங்கினார்.

 

நாராயணன், அவருடைய தந்தை சிவத்தராஜன் ஆகியோர் கூறுகையில், ”ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனுஷன கடிச்ச கதையாக, இந்த எடப்பாடி பழனிசாமி கடைசியாக சொந்த ஊருக்கே ஆப்பு வெச்சிட்டாரு.

ரவி

எங்கள் உயிரே போனாலும், எங்களை சுட்டுப் பொசுக்கினாலும் பரவாயில்லை, எட்டுவழிச்சாலை எங்களுக்கு வேணாம். விவசாய நிலங்களை எடுக்கலாம்னு சொல்லும் மோடி, இந்த திட்டத்தால் யாருக்கு லாபம் என்று சொல்ல வேண்டும்.

 

எங்களுக்கு தெரிந்த ஒரே தொழில் விவசாயம் மட்டும்தான். நாங்கள் பண்ணும் தொழில் தப்பு என்றால், முதலில் விவசாயிகளைக் கொன்று விடுங்கள். தொழில் வளர்ச்சி என்று பேசுபவர்கள் சோத்துக்கு பதிலாக பணத்தையா தின்கிறார்கள்? நாங்கள் குடும்பத்தோடு விஷம் குடித்து சாவோம்.

 

கலெக்டர் ரோகிணி அம்மாகிட்ட மனு கொடுக்கப் போனோம். அவங்க கேட்டாங்க… ரோடு வேணாங்கறியே நீங்க எப்படி வந்தீங்கனு கேட்கறாங்க. கலெக்டரம்மாவுக்கு ஒரு கேள்விய வைக்கிறேன். எனக்கு காத்து வேணும், தண்ணீ வேணும், மண்ணு வேணும். அதுக்காக நீங்கள் நிர்வாணமாக போகச்சொன்னால் என்னால் போக முடியுமா?

எட்டு வழிச்சாலைக்கு இரையாகும் நிலையில் உள்ள எரிக்காடு மாதேஸ்வரன் என்பவரின் தென்னந்தோப்பு.

ஏற்கனவே சேலம் – சென்னைக்கு மூன்று வழிகள் இருக்கு. ரயில் மார்க்கம் இருக்கு. அதையெல்லாம் விரிவு படுத்துங்க. இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை. கிராமச்சாலைகள் போடவில்லை. 830 பள்ளிகளை மூடிவிட்டு, 900 டாஸ்மாக் கடைகளை திறக்கின்றனர். இப்படி மக்கள் நலனை விட்டுவிட்டு, மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிரான திட்டங்களையே செயல்படுத்துகின்றனர்.

 

அன்னிய நாட்டுக்காரனும், கார்ப்பரேட்டுக்காரனும் லாபம் அடைவதற்காகத்தான் இந்த திட்டத்தை  செயல்படுத்துகின்றனர். ஆயிரத்து ஐந்நூறு விவசாயிகள் அதிகாரிகளுக்காக காத்திருக்கும்போது எங்களிடம் பேச எந்த அதிகாரியும் வரவில்லை. அப்படி இருக்கும்போது அவர்கள் கேட்ட உடனே நாங்கள் எப்படி நிலத்தைக் கொடுப்போம்?

 

இந்த திட்டத்தை தடுப்பதற்காக நாங்கள் சாகவும் தயாராக இருக்கிறோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்காக 13 பேர் செத்தனர். எட்டு வழிச்சாலைக்காக 100 விவசாயிகள் சாகத் தயாராக இருக்கிறோம். பின்னால் வரும் சந்ததிகள் பிழைத்தால் போதும். நாங்கள் படுத்துக் கொள்கிறோம். எங்கள் மீது ரோடு போடச்சொல்லுங்கள்.

கலெக்டர் ரோகிணி

எடப்பாடி பழனிசாமி தன்னோட நிலத்தைக் கொடுக்கச் சொல்லுங்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் செத்துப் போனவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்குறோம்னு சொல்றாரு. எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோடி தர்றோம். அவரு உயிர கொடுத்துடுவாரா?,” என்றனர்.

 

சித்தனேரி ரவி கூறுகையில், ”எனக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் தென்னந்தோப்பும், மாட்டுக் கொட்டகை, விளை நிலம் என எல்லாமே பறிபோகப் போகிறது. பசுமைவழிச்சாலை திட்டம், தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்று முதல்வர் சொல்கிறார். ஆனால், விவசாயிகளான எங்களுக்கு இந்த திட்டத்தால் என்ன பயன்? உள்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து என்ன பயன்? கடந்த மே 28ம் தேதி எங்கள்  பிரச்னை குறித்த கோரிக்கை மனுவை கலெக்டர், டிஆர்ஓவிடம் கொடுக்கச் சென்றோம்.

 

அப்போது அவர்கள் இருவரும், உங்களுக்கு நல்ல ரேட்டு கொடுக்கிறோம்னு ஒரே வார்த்தையில முடிச்சிட்டாங்க. ஒரு சென்ட் நிலத்துக்கு ஒரு கோடி கொடுத்தாலும் நாங்கள் நிலத்தைக் கொடுக்கத் தயாராக இல்லை. அதையும் மீறி எட்டுவழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்தினால் எங்கள் சமாதி மீதுதான் போட வேண்டும். தற்கொலை போராட்டம் நடத்துவோம்.

எங்கள் உழைப்பில்தான் கலெக்டர், மந்திரி, முதலமைச்சர், பிரதமர் என யாராக இருந்தாலும் சோறு தின்கின்றனர். வெளிநாட்டில் இதுபோன்ற திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்று போ டுவதில்லை. அப்படி இருக்கும்போது இந்த திட்டத்தை ஏன் இங்கு செயல்படுத்த வேண்டும்?,” என கேள்வி எழுப்புகிறார்.

 

பசுமை வழிச்சாலைத் திட்டமே தொழில் வளர்ச்சிக்காகத்தான் அதாவது ‘இண்டஸ்ட்ரியல் காரிடார்’ என்றுதான் இதற்கான வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஃபீட்பேக் இன்ஃப்ரா பிரைவேட் நிறுவனம் கூறுகிறது. கஞ்சமலை (சேலம்), கவுத்திமலை, வேடியப்பன் மலை (திருவண்ணாமலை) ஆகிய மலைகளில் குவிந்து கிடக்கும் இரும்புத்தாதுக்களை வெட்டி எடுத்து, சென்னை துறைமுகம் வரை கொண்டு செல்ல இந்த வழித்தடம்தான் ஏதுவாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சேலம் மாவட்டம் பொட்டனேரியில் சிஸ்கால் ஆலையை இயக்கி வரும் ஜிண்டால் நிறுவனம், ஏற்கனவே கஞ்சமலையில் இரும்புத்தாதுக்களை வெட்டி எடுக்க அனுமதி கேட்டிருந்தது. அதை மனதில் வைத்துதான், இப்போது பலருக்கும் பசுமை வழிச்சாலைத் திட்டத்தால் பயனடையப் போவது தனியார் கார்ப்பரேட் முதலாளிகள்தான் என்ற எண்ணமும் ஆழமாக வேரூன்றியுள்ளது.

 

மலைகளைக் குடைந்து சுரங்கப்பாதை அமைப்பதாலும், குட்டூர், மஞ்சவாடி காப்புக்காடுகளில் வனவளங்களை அழித்து சாலைகள் போடுவதாலும் உயிர்ப்பன்மை அழியும் அபாயம் உள்ளது. இந்தத் திட்டத்தால் 6500 மரங்கள் மட்டுமே வெட்டப்படும் என்று அரசு பொய்யான தகவலை பரப்பி வருகிறது. இயற்கை ஆர்வலர்களோ, எட்டு வழிச்சாலையால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் அழிக்கப்படும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கின்றனர்.

 

சேலம் மாவட்ட வருவாய் அலுவலரும், பசுமை வழிச்சாலைத் திட்ட அதிகாரம் பெற்ற அலுவலருமான சுகுமாரிடம் மக்களின் உணர்வுகளை முன்வைத்தோம்.

சுகுமார்

”பொதுவாகவே தமிழ்நாடு, அதிகளவு நகரமயமாக்கம் உள்ள மாநிலம். அறிவியல்பூர்வ தரவுகளின் அடிப்படையிலும், வாகன பெருக்கத்தைக் கருத்தில் கொண்டும்தான் பசுமை வழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்திற்காக வனப்பகுதியில் கையகப்படுத்தப்படும் நிலத்தின் மதிப்பை விட இரண்டு மடங்கு வருவாய்த்துறை நிலம் கொடுக்கப்படும். மற்ற பகுதிகளில், நிலத்தின் வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும். பலன்தரும் மரமாக இருந்தால் அதற்கும் இழப்பீடு கிடைக்கும். அரசின் உத்தரவை செயல்ப டுத்துவதுதான் எங்களின் கடமை,” என்றார் சுகுமார்.

 

இங்கே நிலமும் மனிதர்களும் வேறு வேறு கூறுகள் அல்ல. மனித மனத்தை அவன் வாழும்  நிலம் ரொம்பவே பாதிக்கிறது. வாழும் நிலம் எப்படி இருக்கிறதோ, மனித மனமும் அப்படியே இருக்கிறது. மண்ணின் வளம், நீர் ஆதாரம், விளை பொருள் இப்படி எல்லாமே மனித மனங்களை வெகுவாக பாதிக்கிறது. உண்மையில், நிலத்தை மதிப்பது என்பது மனிதர்களை மதிப்பதாகும்.

 

மக்கள் நலன்களை மையப்படுத்திய திட்டங்கள்தான் ஒரு தேசத்தின் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியுமே தவிர, அவர்களை புறந்தள்ளிவிட்டு அல்ல. பாதிக்கப்படும் மக்களின் குரலுக்கு அரசும் செவிமடுக்க வேண்டும்.

 

– பேனாக்காரன்.