Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘லஞ்ச’ துணைவேந்தர் கணபதிக்கு நள்ளிரவில் ஊர் சுற்றிக்காட்டிய போலீசார்!

லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கராஜை, நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கு முன்பாக நள்ளிரவு நேரத்தில், அவரை ஜீப்பில் அழைத்துச்சென்று போலீசார் ஊர் சுற்றிக்காட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி (67). இப்பல்கலையில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ். இவர், கடந்த 2016ம் ஆண்டிலேயே இந்தப்பணியில் சேர்ந்துள்ளார். சில விதிகளை மீறி, சுரேஷை உதவிப்பேராசிரியராக நியமிக்க வேண்டுமெனில் ரூ.30 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று துணைவேந்தர் கணபதி கேட்டுள்ளார்.

அதை தருவதாக ஒப்புக்கொண்ட சுரேஷ், கொஞ்சம் தொகையை முன்பணமாகக் கொடுத்துள்ளார். மீதப்பணத்தை சில மாதங்களில் கொடுத்து விடுவதாக அவகாசம் கேட்டுள்ளார். அந்த நம்பிக்கையின்பேரில் அவர் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

ஆனாலும், பணியில் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒப்புக்கொண்டபடி சுரேஷ் பணத்தைக் கொடுக்காமல் தொடர்ந்து சாக்குப்போக்கு சொல்லி வந்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த துணைவேந்தர் கணபதி, அவரிடம் பணத்தைக் கேட்டு தொடர்ந்து நச்சரித்து வந்ததாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

தர்மராஜ்

பணத்தைக் கொடுக்க விரும்பாத சுரேஷ், இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். அதையடுத்து, போலீசார் வகுத்துக் கொடுத்த வியூகத்தின்படியே நேற்று (பிப்ரவரி 3, 2018) ஒரு லட்சம் ரூபாயை ரொக்கமாகவும், மீதப்பணத்தை பின்தேதியிட்ட காசோலைகளாகவும் கொடுப்பதற்காக துணைவேந்தரை சந்திக்க அவருடைய வீட்டுக்குச் சென்றுள்ளார் சுரேஷ்.

பணத்தை அவர் பெற்றுக்கொண்டபோது, இந்த தருணத்திற்காகவே காந்திருந்த போலீசார் கணபதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

நேற்று காலை 9 மணியளவில் துணைவேந்தரின் வீட்டுக்குள் சென்றதுமே கதவுகளை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டனர். போலீசார், ஒருபக்கம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போதே கணபதியின் மனைவி சொர்ணலதா, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கிழித்து கழிவுநீர்த் தொட்டிக்குள் போட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனால் தடயத்தை மறைத்ததாக சொர்ணலதா மீதும் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அவர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் அவசரகதியில் செய்திகள் பரவின.

கணபதி கைது விவகாரத்தில், ஊடகங்கள் இன்னொரு தவறான தகவலையும் பரப்புகின்றன. அல்லது அது, தவறான புரிந்து கொள்ளுதலாகவும் இருக்கலாம்.

இந்த நிகழ்வில் புகார்தாரரான சுரேஷ், உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்காகத்தான் அவரிடம் துணைவேந்தர் கணபதி ரூ.30 லட்சம் கேட்டார். அதை கொடுப்பதற்கு காலம் தாழ்த்தியதால்தான் கணபதியிடம் இருந்து தொடர்ந்து குடைச்சல் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், ஊடகங்களோ உதவி பேராசிரியர் சுரேஷூக்கு இணை பேராசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட லஞ்சம் என்ற தொனியில் செய்திகள் வெளியிட்டுள்ளன. உதவி பேராசிரியர்களுக்கு, அவர்களின் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு தானாகவே கிடைத்துவிடும் என்பதே உண்மை.

துணை வேந்தர் கணபதிக்கும், உதவி பேராசிரியர் சுரேஷூக்கும் இடையில் தரகு வேலை பார்த்த மற்றொரு பேராசிரியர் தர்மராஜ் என்பவரையும் போலீசார் நேற்றே கைது செய்துள்ளனர். மேலும், இந்த குற்றத்தில் உடந்தையாக இருந்ததாக பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மைய பொறுப்பாளர் பேராசிரியர் மதிவாணன் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நேற்று காலையில் தொடங்கிய விசாரணை மற்றும் சோதனைகளை முடித்துவிட்டு, இரவு 10.30 மணியளவில்தான் லஞ்ச ஒழிப்புப் போலீசார் துணைவேந்தரின் வீட்டைவிட்டு வெளியே வந்தனர். இதில் பல்கலையில் நடந்த முறைகேடான பணி நியமனங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில முக்கிய தஸ்தாவேஜூகள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகிய இருவரையும் போலீசார் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு கோவை மாவட்ட விஜிலன்ஸ் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மீனுவின் வீட்டுக்கு ஆஜர் படுத்துவதற்காகச் சென்றனர். அப்போதே நள்ளிரவை நெருங்கிவிட்டதாம்.

கைது தொடர்பான ஆவணங்களை படித்துப் பார்க்க கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்றும், அதன்பின் ஆஜர்படுத்த அழைத்து வாருங்கள் என்றும் நீதிபதி சொல்லவே, அந்த நேரத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசாரும் கொஞ்சம் ‘அப்செட்’ ஆனார்களாம்.

நீதிபதி கூப்பிடும் வரை கொட்டும் பனியில் ஏன் காத்துக்கிடக்க வேண்டும் என்று எண்ணிய போலீசார், துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோருக்கு கொஞ்சம் ஊரைச்சுற்றிக் காட்டிட்டு வாங்க என்று கிண்டலாகச் சொன்னார்களாம் போலீஸ் அதிகாரிகள்.

அதன்பிறகு, இருவரையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு நள்ளிரவு நேரத்தில் பல இடங்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக சுற்றிவிட்டு, நீதிபதி முன்பு ஆஜர் படுத்தியுள்ளனர். இருவரையும் பிப்ரவரி 16ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஜான் மீனு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, துணைவேந்தர் கணபதி தரப்பு வழக்கறிஞர்கள் அவரை ஜாமினில் விடுவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு, வரும் 6ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

கணபதி, பாரதியார் பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, திருச்சி பாரதிதாசன் பல்கலையில் உயிர் வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவருடைய பணிக்காலத்தில் 32 பிஹெச்.டி., 42 எம்ஃபில்., ஆய்வாளர்களை உருவாக்கியுள்ளார்.

சிங்கப்பூர், தென்கொரியா, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஆய்வுப்பயணமும் மேற்கொண்டுள்ளார். அவருடைய பணியைப் பாராட்டி, அவருக்கு தகைசால் பேராசிரியர் பட்டம் வழங்கி யுஜிசி கவுரவித்திருக்கிறது.

அவர், பாரதியார் பல்கலை துணைவேந்தராக கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி பொறுப்பேற்றார். அப்போது நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, ”பாரதியார் பல்கலையில் பணி நியமனங்களில் ஊழல், முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தால் அதுபற்றி உயர்கல்வித்துறைக்கு கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

இப்போது, முறைகேடான பணி நியமனத்திற்காக அவரே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது ஆகியிருப்பதுதான் காலம் போட்டு வைத்திருந்த கணக்கு. அதேநேரம், புகார்தாரரான உதவிப்பேராசிரியர் சுரேஷ், விதிகளை மீறி பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்தால் உடனடியாக அவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும்.