Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

துணைவேந்தர் கணபதி மட்டும்தான் குற்றவாளியா?

கோவை பாரதியார் பல்கலை துணை வேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ள விவகாரத்தில் அவரும் ஓர் அம்புதானே தவிர, தகுதியில்லாத நியமனங்களின் பின்னால் உள்ள நியமனக்குழு, ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் பரவலாக ஒலிக்கத் தொடங்கி உள்ளன.

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவது என்பது துணை வேந்தர் மற்றும் பதிவாளர் ஆகிய இருவரின் செயல்முறைகளுக்கு மட்டுமே உட்பட்டது அல்ல. ஓர் உதவி பேராசிரியரை நியமிக்க வேண்டுமெனில் அதில் பல்வேறு படிநிலைகள் உள்ளன.

உதாரணமாக, உதவி பேராசிரியர் நியமனத்தை எடுத்துக்கொள்ளலாம். எந்தெந்த துறையில் காலிப்பணியிடங்கள் உள்ளன?, அதற்கான கல்வித்தகுதிகள் என்னென்ன? என்பது போன்ற விவரங்கள் பத்திரிகைகள், பல்கலைக்கழக இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்படும். இதற்காக விண்ணப்பித்தவர்களில் உரிய தகுதி வாய்ந்தவர்கள் மட்டும் தெரிவு செய்யப்படுவர்.

இதற்கடுத்து, உரிய நபர்களைத் தேர்வு செய்வதற்காக குறைந்தபட்சம் 7 பேர் கொண்ட ஒரு நியமனக்குழு (Appointment Committee) அமைக்கப்படும்.

இந்தக்குழுவில், துணை வேந்தர் சார்பில் ஒருவரும், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரும், அரசுத்தரப்பில் ஒருவரும், ஆளுநர் தரப்பில் ஒருவரும், பட்டியல் சாதியினர் பிரிவில் இருந்து ஒருவரும் என ஒவ்வொரு தரப்பில் இருந்தும் பிரதிநிதிகள் அடங்கியிருப்பர்.

முறைகேடான நியமனத்தின் முதல்நிலை ஊற்றுக்கண் என்றால் அது, நியமனக்குழு என்றும் சொல்லலாம். இந்தக்குழுவில் இருந்து தொடங்கும் தவறான வழிகாட்டுதல்தான், ஒட்டுமொத்த படிநிலைகளிலும் ஊழலை தொடரச் செய்கிறது.

நியமனக்குழு பரிந்துரைக்கும் விண்ணப்பதாரர்களின் பட்டியலுடன், அதிகார மையம் அல்லது பணம் கொடுத்த நபர்களுடன் செய்து கொண்ட சங்கல்பத்திற்காக துணை வேந்தரும் தான் விரும்பும் சிலரின் பெயர்களையும் உள்ளே நுழைத்து விடுவார்.

பிறகு இந்த பட்டியல், அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறது. அதுதான் ஆட்சிமன்றக்குழு எனப்படும் சிண்டிகேட் கமிட்டி (syndicate committee). 21 பேர் கொண்ட ஆட்சிமன்றக் குழுவில், 7 பேர் அரசு பதவி வழியே (Ex-Officio) பிரநிதிகளாக நேரடியாக நியமிக்கப்படுபவர்கள்.

அதாவது, உயர்கல்வித்துறை செயலர், நிதித்துறை செயலர், சட்டத்துறை செயலர், தொழில்நுட்பக்கல்வித்துறை இயக்குநர், மருத்துவக்கல்வி இயக்குநர் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 7 பிரதிநிதிகள்.

பல்கலையுடன் இணைவு பெற்ற கல்லூரி முதல்வர்கள் 2 பேர், ஆசிரியர்கள் சார்பில் 2 பேர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர், பொது பிரிவு, பட்டியலின பிரிவில் இருந்து ஒருவர் என மொத்தம் 7 பிரதிநிதிகளும், துணை வேந்தர் தரப்பில் இருந்து 3 பேர், சம்பந்தப்பட்ட பல்கலை பேராசிரியர்கள் தரப்பில் இருந்து 2 பேர், ரீடர் மற்றும் விரிவுரையாளர் தரப்பில் இருந்து தலா ஒருவர் என 7 பிரதிநிதிகளும் ஆக சிண்டிகேட் குழுவில் குறைந்தபட்சம் 21 பேர் இடம் பெறுவர்.

உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு முதுநிலை படிப்புடன் ‘ஸ்லெட்’ / ‘நெட்’  (SLET/NET) தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. அல்லது முதுநிலை படிப்புடன் முனைவர் (Ph.D) பட்டம் பெற்றிருந்தாலும் தகுதி உடையவர் ஆவர்.

இந்த இரண்டுமே முழுமையான தகுதிதான் என்றாலும், ‘மெரிட்’ என்று வரும்போது முனைவர் பட்டம் பெற்றவருக்குதான் முன்னுரிமை தரப்பட வேண்டும். பணி அனுபவமும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இடத்தில்தான் சிண்டிகேட் குழுவும், நியமனக்குழுவும் முறைகேடுகளில் ஈடுபடுகின்றன.

எலிஜிபிலிட்டி அடிப்படையிலா? மெரிட் அடிப்படையிலா? என்று வரும்போது மெரிட் பட்டியலை விட்டுவிட்டு, கையூட்டு பெற்றுக்கொண்டு வெறுமனே கல்வித்தகுதி மட்டுமே உள்ளவர்களை உதவி பேராசிரியர் பணியில் நியமித்து விடுகின்றனர்.

கையூட்டு மட்டுமின்றி ஆட்சியாளர்களின் அழுத்தமும் இருப்பதால் வேறு வழியின்றி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களும், ‘மெரிட்’ பட்டியலில் இல்லாத உப்புமா பேர்வழிகளை தேர்வு செய்ய இசைவு தெரிவிக்கின்றனர்.

உண்மையில், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் நினைத்தால், முறைகேடான பணி நியமனத்திற்கு முட்டுக்கட்டை போட முடியும். ஆட்சேபம் தெரிவித்து ‘பாயின்ட் ஆப் ஆர்டர்’ (Point of Order) என்ற பெயரில் விவாதத்திற்கு அழைப்பு விடுக்கவும் முடியும்.

ஆனாலும், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டதன் பேரில் ஒருவர் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டுவிட்டார் எனில், அதற்கு ஆட்சேபம் தெரிவித்தவர் அன்றைய ஆட்சிமன்றக்குழு பதிவேட்டில் தன் கருத்தை எழுத்துப்பூர்வமாக பதிவிடவும் செய்யலாம். எப்படி சட்டப்பேரவை அவைக்குறிப்பு கருதப்படுகிறதோ அதேபோலதான், இந்த நடவடிக்கையும் முக்கியத்துவம் வாய்ந்தது.

சோழியும் குடுமியும் சும்மா ஆடுமா என்ன? ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் பிரச்னை கிளப்பாமல் இருக்க, பல்கலை துணை வேந்தர் தரப்பில் அவர்களுக்கு இரண்டு வழிகளில் சகாயங்கள் செய்யப்படுகின்றன.

முதலாவது, பணி நியமனத்திற்காகப் பெறப்பட்ட கையூட்டில் கணிசமான லகரங்களை ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களுக்கு கொடுத்து பகிர்ந்து கொள்ளச் செய்கின்றனர். இது, அவ்வளவு நாகரீகமாக இருக்காது என்போருக்கு வேறு விதமாக சம்பாதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றனர். அதுதான், இரண்டாவது உத்தி.

பல்கலையுடன் இணைவு பெற்றுள்ள கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகள், தொலைதூர கல்வி மையங்கள் சார்பில் நடக்கும் தேர்வுகளை கண்காணிக்கும் அதிகாரம், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களுக்கு உண்டு.

பல சுயநிதி கலைக்கல்லூரிகளில் காப்பியடித்து தேர்வு எழுத தாராளமாகவே அனுமதி வழங்கப்படுவது ஊர் அறிந்ததுதான். அப்படி அனுமதித்தால்தான் தேர்ச்சி அதிகரிக்கும்; தேர்ச்சி அதிகரித்தால்தான் அட்மிஷனை அள்ள முடியும்.

சுயநிதி கல்லூரிகளுக்கு தேர்வுப்பணிகளை கண்காணிக்கச் செல்லும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களுக்கு, அங்கு நடப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க கணிசமான எடையில் ‘கவர்’ வழங்கப்படுகிறது.

வெளிமாநிலங்களில் தேர்வுக்கூட ஆய்வுக்குச் செல்லும்போது ஓசியிலேயே ரயில் அல்லது விமானப்பயணம், தங்கும் விடுதி செலவுகளை எடுத்துக்கொள்வதோடு, அங்கிருந்தும் கணிசமான கவனிப்புகளோடு ஊர் திரும்புகின்றனர்.

அரசுப்பதவி வழியே பிரதிநிதிகளாக உள்ள 7 பேரும், எத்தனை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டுள்ளனர் என்பதே கேள்விக்குறிதான். கூட்ட விவாதங்களில் கலந்து கொள்ளாமல் அவர்களால் எப்படி ஒருவர், உதவி பேராசிரியருக்கு முழு தகுதி உடையவர் என்ற முடிவுக்கு வந்து, கோப்புகளில் கையெழுத்திட முடிகிறது?

அரசுப்பணி காரணமாக பல்கலை ஆட்சிமன்றக் குழு கூட்டத்திற்கு வர முடியாதபோது அவர்களை ஏன் அதன் அங்கத்தினர்களாகச் சேர்க்க வேண்டும்?

பணி நியமனங்களில் என்னதான் ஆட்சியாளர்களின் அழுத்தமும், கையூட்டும் வலுவான காரணங்களாக இருந்தாலும், அதைத் தடுக்கும் வாய்ப்புகளும் அல்லது அதை பொதுவெளியில் கவனப்படுத்தும் வாய்ப்புகளும் நியமனக்குழுவுக்கும், ஆட்சிமன்றக் குழுவுக்கும் நிறையவே இருக்கின்றன.

ஆனால், வாய்மூடி மவுனிகளாக இருப்பதன் மூலம், ஊழலின் ஊற்றுக்கண்களாகவும் இருந்துள்ளனர். கடந்த 2011க்குப் பிறகான அனைத்து பல்கலை பணி நியமனங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தும்போது, முறைகேடுகளுக்கு துணையாக இருந்த ஆட்சிமன்றக்குழு, தேர்வுக்குழு பிரதிநிதிகள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

– பேனாக்காரன்.