Monday, November 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நீ தெய்வம் தந்த அதிசயம்…!

(பனை ஓலை)

 

சில பாடல்கள்,
சில நிகழ்வுகள் நம்மையும்
அத்துடன் ஒன்றச் செய்துவிடும்.
இளையராஜா, கண்ணதாசன்,
ஜென்சி ஆகியோரின் கூட்டணி
அவர்களின் படைப்புகளுடன்
நம்மை அடிக்கடி ஒன்றிப்
போகச் செய்யும் மாயாஜாலங்களை
அடிக்கடி நிகழ்த்தி இருக்கின்றன.
அந்தக் கூட்டணி எப்போதும்
வெற்றிக் கூட்டணியாக மட்டுமே
அமைந்திருக்கின்றன. அவர்களின்
ராஜாங்கத்தை யாரும் சதி செய்து
கவிழ்த்து விட முடியாது.
எப்போதும் பெரும்பான்மையை
நிரூபித்திருக்கிறார்கள்.

இவர்களின் கைவண்ணத்தில் உருவானதுதான், ‘இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன…’ என்ற பாடல். படம், நிறம் மாறாத பூக்கள். 1979 ஆகஸ்ட் 31ல் வெளியானது.

 

பாரதிராஜாவின் நாயகிகள் எப்போதும் வெள்ளை உடை அணிந்த தேவதைகள். இந்தப் பாடலிலும் ராதிகா, வெள்ளுடை தேவதையாக பனிச்சிற்பம்போல் (பனிச்சிற்பம் என வேறு ஒருவரை வர்ணித்து விட்டேன். அவர் கோபம் கொள்ள மாட்டார் என்பதால் ராதிகாவுக்கும் பொருத்திப் பார்க்கிறேன்) காற்றில் துள்ளித்துள்ளி ஓடும் மான்போல ஆடி வரும் ராதிகாவின் அழகில் வீழாத ரசிகர்கள் இருக்க முடியாது. நிவாஸின் கேமரா, அவரை மேலும் தேவதையாக காட்டியிருக்கும்.

 

முகில்கள் சாரல் தூவும்போது மலர்களால் சந்தம் பாடாமல் இருக்க முடியாதுதானே? கவிஞர் கண்ணதாசனின் வரிகள் பாடலை மேலும் ஆழமாக ரசிக்க வைத்திருக்கும்.

 

”எங்கெங்கும் அவர்போல
நான் காண்கிறேன்
அங்கங்கே எனைபோல
அவர் காண்கிறார்
நீ என்றும்
இனி நானென்றும்
அழிக்கவும் பிரிக்கவும்
முடியாதம்மா…”

 

என நல்லதொரு கவிதையை திரைப்பாடலாக்கி இருப்பார் கண்ணதாசன். ஈருடல் ஓருயிர் என்றானால், நீ என்றும் நானென்றும் எப்படிச் சொல்ல முடியும்? நீயும் நானும் புணர்ந்து நாம் என்றே திரிந்து விடும். ‘இது கண்கள் சொல்லும் ரகசியம்… நீ தெய்வம் தந்த அதிசயம்…’ என நாயகனைப் பார்த்து நாயகியின் நம்பிக்கையாக வெளிப்படுகிறது.

நாயகன் சுதாகரின்
கண்களில் எப்போதும்
பெண்மை கலந்த மென்மையும்
குடியிருக்கும். சுதாகரை
நாம் ராஜ்கிரண் அளவுக்கு
வன்மையாக எல்லாம் கற்பனை
செய்து பார்ப்பது கூட
கொடுமையானது. தேவதைக்கு
ஏற்ற நாயகனாக அப்போது
அவர் பொருந்திப் போனார்.
ஜென்சியின் சாரீரம்,
ராதிகாவின் சரீரத்துக்கு ஏற்ப
உருகியிருக்கும். அத்தனை
கனகச்சிதம்.

 

இந்தப் பாடலிலும்,
நாயகிக்கு குளோஸ்அப் காட்சிகள்,
ஸ்லோ மோஷனில் வானத்தை
நோக்கி எம்பி குதித்தல்,
அருவியில் வெள்ளை உடை
முற்றாக நனையும்படி நாயகியின்
குளியல் காட்சிகள், மரத்திற்குப்
பின்னால் இருந்து அரை வட்ட
நிலாவை நகல் எடுத்ததுபோல
நாயகியின் முகத்தை கொஞ்சமாக
குளோஸ் அப்பில் காட்டுதல்,
அப்புறம் அந்த மஞ்சள் நிற பூக்கள்…
என பாரதிராஜாவின் வழக்கமான
‘கிளீஷே’ காட்சிகளும்
இல்லாமல் இல்லை. ரசிக்கக்
கூடியதாக இருப்பதால் கிளீஷே
காட்சிகள் என்றாலும்
வரவேற்கக் கூடியதாகவே
இருக்கின்றன.

 

பாடல் முழுவதும் கிட்டார்,
வயலின், புல்லாங்குழல் என
எளிமையான இசைக்கருவிகளை
ஒலிக்க விட்டு, ராஜாங்கமே
நடத்திக் காட்டியிருப்பார்
இளையராஜா.
பாரதிராஜா – இளையராஜா
கூட்டணியில் தொடர்ந்து
வெற்றிப் படங்கள் வெளியான
காலக்கட்டம் அது.
வழக்கமான நாட்டுப்புற
இசைக்கருவிகளுக்கு அவ்வளவாக
இந்தப்பாடலில் இடம்
கொடுத்திருக்க மாட்டார் ராஜா.

 

நான் பள்ளிக்குச்சென்ற
காலத்தில், ‘இரு பறவைகள்
மலை முழுவதும் இங்கே
இங்கே பறந்தன’ பாடல்
வானொலியில் ஒலிக்காத
நாளில்லை. பின்னணி பாடியவர்
ஜென்சி என ஒலிக்கும்போது
எனக்கு அப்போது அந்தப்
பெயரே புதுமையாகத்தான்
இருந்தது.

 

யூடியூபில் இப்போதும் இந்தப் பாடல் ஹிட் அடிக்கின்றன. ஏனோ, காட்சிகளில் அத்தனை தெளிவின்மை. பாடலை மட்டும் ரசிப்போர் ரசிக்கலாம்.

 

என் பள்ளி நாள்களில் உர மூட்டை சாக்கில் தைத்த பைக்குள் புத்தகங்கள் அடைபட்டுக் கிடக்கும். பாதசாரியாக பள்ளியை நோக்கி தொடரும்ப பயணத்தின் ஊடாக மனதிற்குள், இரு பறவைகள் மலை முழுவதும் பறந்தபடி இருக்கும். இனிமையானவை அந்த நாள்கள்.

 

– பேனாக்காரன்