Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கையடக்க கணினி… ‘கியூஆர் கோடு’ புத்தகம்!; நவீனமாகிறது அரசுப்பள்ளிகள்!!

-சி-ற-ப்-பு-க்- க-ட்-டு-ரை-

குழந்தைநேய கற்றல் குறித்து மாநில கருத்தாளர் மாங்கனி, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கினார்.

அரசுப்பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கல்வி வந்த பிறகுதான் கணினியை தொட்டுப் பயன்படுத்தவே முடியும் என்றிருந்தது ஒரு காலம்; இன்றைக்கு, அரசுப்பள்ளியில் பயிலும் 5 வயது குழந்தைகூட கையடக்கக் கணினியில் (டேப்லெட்) பாடம் கற்கும் உன்னத நிலையை நிதர்சனமாக்கியிருக்கிறது அனைவருக்கும் கல்வித்திட்டம். அரசுத் தொடக்கப்பள்ளிகளில் நடைமுறையில் இருந்து வரும் செயல்வழிக்கற்றலின் அடுத்தக்கட்ட நகர்வாகவே இந்தத் தொழில்நுட்பப் பயன்பாட்டை நான் கருதுகிறேன்.

அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் மாவட்டத் திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளரான தேவிகா, குழந்தைகள் கற்றல், கற்பித்தல் முறைகளில் இயல்பாகவே ஆர்வம் காட்டுபவர். புதிதாக குழந்தைநேய கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகச் சொன்னவர், அதுகுறித்து ஆசிரியர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தகவல் சொன்னார்.

மாநில கருத்தாளர் மாங்கனி, குழந்தைநேய கற்றல் முறை, டேப்லெட் (Tablet) பயன்பாடு குறித்து விளக்கம் அளித்தார். பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் சிலர் தங்கள் படைப்புகளையும்கூட அந்த முகாமில் காட்சிப்படுத்தினர்.

இப்போதைக்கு, சேலம் மாவட்டத்தில் 21 வட்டாரங்களில் 42 பள்ளிகளில் குழந்தைநேய கற்றல் முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக 5 மாணவர்களுக்கு ஒரு டேப்லெட், ஒரு ஆசிரியருக்கு ஒரு டேப்லெட் வீதம் வழங்கப்பட்டு உள்ளன.

புதிய கற்பித்தல் முறை (New Pedagogy) எந்தளவுக்கு பள்ளியில் செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிவதற்காக, வேடுகாத்தாம்பட்டி அரசு துவக்கப்பள்ளிக்குச் சென்றிருந்தேன். நான் சென்றது, அரை மணி நேரத்தில் பள்ளி முடியும் வேளையில்.

குழந்தைகளுடன் வேடுகாத்தாம்பட்டி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷீரூன்.

ஆனாலும் எவ்வித தயக்கமும் சுணக்கமுமின்றி பள்ளியின் பெண் தலைமை ஆசிரியர் ஷீரூன், டேப்லெட் மூலம் பயிற்சி பெறும் குழந்தைகளை தயார் படுத்தினார்.

குழந்தைநேய கற்றலைப் பற்றிச் சொல்வதற்குமுன், அந்தப் பள்ளியில் கண்ட இன்னொரு நிகழ்வையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். கேதரின் என்ற பெண் ஆசிரியர், வகுப்பறையை தானே துடைப்பத்தால் பெருக்கிச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.

”என்னங்க… இதெல்லாம் நீங்களே செய்யறீங்க?” என்று ஆச்சர்யமாகக் கேட்டேன். ”இதுவும் எங்க வீடு போலதான் சார். என் வீட்டை நான்தானே சுத்தம் செய்ய வேண்டும்…,” என்றவர், குழந்தைகள் அமர்வதற்காக பாய்களை விரித்துப்போட்டார்.

குழந்தைகளுடன் வேடுகாத்தாம்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியர் கேதரின்.

அந்தப் பள்ளியின் சார்பில் கேதரின்தான் குழந்தைநேய கற்றல் பயிற்சியை பெற்றவர் என்பதால், அவரே நம்மிடம் பேசினார்.

”அனைவருக்கும் கல்வித்திட்டம், புதிதாக டேப்லெட் உதவியுடன் புதிய கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது முற்றிலும் குழந்தைநேய கற்றல் அடிப்படையிலானது.

ஒரு நாளைக்கு மூன்று பாடவேளைகள் வீதம் வாரத்திற்கு மொத்தம் 15 பாடவேளைகள் என பிரித்து குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு பாடவேளைக்கும் 90 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சூழ்நிலையியல் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படும். இதில், முதல் 30 நிமிடங்கள் என்பது ஒரு பாடத்தை குழந்தைகளை ஈர்க்கும் வகையில் எந்தெந்த வழிமுறைகளில் கற்பிக்கலாம் என்பதை உள்ளடக்கியதாகும். ஆடல், பாடல், கதை சொல்லல், டேப்லெட் பயன்பாடு இப்படி கற்பித்தல் முறை வேறுபடும்.

அடுத்த அரை மணி நேரம் என்பது குழந்தைகளே சுயமாக விவாதித்து பாடங்களை கற்க வேண்டும். தமிழ்நாடு முழுக்க இந்த ஒரே முறைதான் பின்பற்றப்படும்,” என 90 நிமிட பயன்பாட்டைச் சொன்னார்.

இப்போது கற்பித்தல் முறை முற்றாகவே வேறுபட்டிருக்கிறது. உதாரணமாக, ‘காட்டுக்குள்ளே கொண்டாட்டம்’ என்ற பாடத்தை எப்படி கற்பிப்போம் என்பதை கேதரின் சொல்வதை கேட்கவே அலாதியாகத்தான் இருந்தது.

காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள், உறவுக்காரர்களுக்கு முக்கியத்துவம், வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கும்போது டி.வி. அல்லது செல்பேசிகளில் கவனம் செலுத்தும் தவறான போக்குகளையும் அந்தப் பாடத்தினூடாக குழந்தைகளுக்கு எளிதில் கடத்தி விடுகிறார் கேதரின். ஒவ்வொரு ஆசிரியரும் பாடத்தின் மைய இழையில் இருந்து பிறழாமல், கற்பனையை வார்த்துக் கொள்கின்றனர்.

கியூஆர் கோடு அச்சிட்ட பாடப்புத்தகம்.

‘காட்டுக்குள்ளே கொண்டாட்டம்’ என்ற பாடம் புத்தகத்தில் உள்ளது. அந்தப் பாடத்தின் மேற்பகுதியில் ‘கியூஆர் கோடு’ (QR Code) குறியீடும் அச்சிடப்பட்டு உள்ளது. அதை டேப்லெட் மூலம் ஸ்கேன் செய்தால், காட்டில் உள்ள கொடிய விலங்குகள், சாதுவான பிராணிகள் அனைத்தும் டேப்லெட் திரையில் கண்களைக் கவரும் வண்ணங்களில் உலா வருகின்றன. அதில் குழந்தைகள் லயித்துப் போனது என்னவோ உண்மைதான். அந்தத் திரையைவிட்டு குழந்தைகள் கண்களை அகற்றவே இல்லை பாருங்களேன்!.

இரண்டு ஆசிரியர்களைக் கொண்ட பள்ளியாக இருந்தால் 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரும், 3, 4ம் வகுப்பு குழந்தைகளுக்கு தலைமை ஆசிரியரும் டேப்லெட் வழி கற்றலை பயிற்றுவிக்க வேண்டும்.

குழந்தைநேய கற்றலில் இன்னொரு சிறப்பு அம்சமும் இருக்கிறது.

மெதுவாக கற்கும் குழந்தைகள், வேகமாக கற்கும் திறனுள்ள குழந்தைகள் என குழந்தைகளின் திறன்களுக்கு ஏற்பவும் கற்பிக்கப்படுகிறது. கற்பித்தலில் இது ஒரு ரொம்பவே முக்கியமான கூறு. ஆசிரியரின் உதவியுடன் செய்யப்படும் பயிற்சிகளை குழந்தைகளுக்கு அருகிருந்து சொல்லிக் கொடுக்கின்றனர்.

இரு குழந்தைகள் சேர்ந்து செய்யும் பயிற்சிகளை சேர்ந்தும், தனித்து இயங்கும் பயிற்சிகளை தனித்தும் செய்யப் பயிற்சி அளிக்கவும் குழந்தைநேய கற்றலில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு உள்ளது.

வேகமாக கற்கும் திறனுள்ள குழந்தைகளுக்கு ராக்கெட் இலச்சினை அச்சிட்ட அட்டைகளின் அடிப்படையிலும் பயிற்சியும், மெதுவாக கற்கும் குழந்தைகளுக்கு உதவும் கரங்கள் இலச்சினை கொண்ட அட்டையின் அடிப்படையிலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

சிபிஎஸ்இ பாடத்திட்டம்போலவே, பாடத்தில் இருந்து வினாக்களை மாணவர்களே உருவாக்கும் வகையிலும் பயிற்சிகள் உண்டு. பிளஸ்-2 தேர்வர்கள், பாடத்திற்கு உள்ளே இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால் இந்த முறை தேர்வு கொஞ்சம் கடினமாக இருந்தது என பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

கையடக்கக் கணினியில் (டேப்லெட்) ஆர்வத்துடன் பயிலும் குழந்தைகள்.

ஆனால், குழந்தைநேய கற்றலில் படித்து வளரும் மாணவர்களிடம் இருந்து எதிர்காலத்தில் இப்படிப்பட்ட அபத்தமான, நம்பிக்கையற்ற வார்த்தைகள் வர வாய்ப்பு இல்லை எனலாம்.

டேப்லெட் மூலமாகவே குழந்தைகள் இனி தேர்வையும் எழுதிக் கொள்ளலாம். எந்தெந்த குழந்தைகள் என்னென்ன பயிற்சியை முடித்தார்கள் என்பதை தலைமை அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்க முடியும்.

அதில் முக்கியமானது, இன்றைக்கு டேப்லெட் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பதையும் கண்காணிக்க வாய்ப்பு இருப்பதால், ஆசிரியர்கள் டேப்லெட்டை வாங்கி வெறுமனே பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கவும் இயலாது.

தலைமை ஆசிரியர் ஷீருன், ஆசிரியர் கேதரின் ஆகிய இருவரும் டேப்லெட் பயன்பாடு குறித்து குழந்தைகளுக்கு அவர்கள் அளவுக்கு இறங்கிச்சென்று கற்றுக்கொடுத்தனர். டேப்லெட்டில் ஏ, பி, சி, டி என ஒவ்வொன்றாக ‘கேப்பிடல் ஏ, ஸ்மால் ஏ’ என எழுத்துக்களுடன் ஒலிக்க ஒலிக்க, கூடவே குழந்தைகளும் சொல்லிப் பழகினர். அதை முடித்த பின்னர், அடுத்த பயிற்சிக்குச் சென்றனர்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்…பள்ளி முடிந்து அரை மணி நேரம் ஆகியும்கூட குழந்தைகள் டேப்லெட்டை பள்ளியில் திரும்ப ஒப்படைக்க மனம் வராமல் படித்துக் கொண்டிருந்தனர்.

பள்ளிக்கூடம் என்றாலே எட்டிக்காயாக எட்டி நின்ற காலம் போய், டேப்லெட்டுக்காகவே பள்ளியை நோக்கி குழந்தைகள் வரும் காலமாக மாறியிருக்கிறது.

பயிற்சி ஏடுகள்.

குழந்தைநேய கற்றல் என்பது தொழில்நுட்பத்தை புகுத்துவதோடு நின்று விடாமல், குழந்தைகளுடன் குழந்தையாக இறங்கிச்சென்று பழகும் ஆசிரியர்களால் மட்டுமே முழுமையான குழந்தைநேய கற்றல் என்பது சாத்தியப்படும். வேடுகாத்தாம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் அதை உணர முடிந்தது.

பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும்கூட ஏராளமான குழந்தைகள் காத்திருந்து ஷீருனிடமும், கேதரினிடமும் வாஞ்சையுடன் கைகளை ஆட்டியபடி இப்படிச் சொல்லிவிட்டுப் போனார்கள்:

டாடா மிஸ்… பை பை மிஸ்…!

இணைப்பு: வீடியோ-1      வீடியோ-2

 

– பேனாக்காரன்.