நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை இன்று (பிப்ரவரி 21, 2018) துவங்கினார். மதுரையில் நடந்த முதல் மாநாட்டில் கட்சியின் பெயரை அவர் அறிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகச் சொல்லி வந்தார். கடந்த சில மாதங்களாகவே கட்சியின் பெயர், கொள்கை குறிப்புகள் வகுக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இல்லத்தில் இருந்து கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கினார்.
இன்று இரவு மதுரை ஒத்தக்கடையில் நடந்த மாநாட்டில், தனது புதிய கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் அவர் கட்சி தொடங்கியுள்ளார். மாநாட்டு மேடையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் சிறப்பு விருந்தினராக மேடையேறினார். அவர், கமலின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துச் சொல்லி, சிறப்புரையாற்றினார்.
கமல்ஹாசன் முன்னதாக, தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். வெள்ளை, கருப்பு, சிவப்பு நிறங்களில் ஆறு கைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்த நிலையில் நடுவில் நட்சத்திரம் பொறிக்கப்பட்டு உள்ளது. ஆறு கைகளும் தென்னிந்திய மாநிலங்களையும், நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களையும் குறிக்கும் என்று கமல் விளக்கம் அளித்துள்ளார்.