Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: எப்படி நடந்தது முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்?

சேலம் மாவட்டத்தில்,
டிசம்பர் 27ம் தேதி நடந்த
முதல்கட்ட ஊரக உள்ளாட்சித்
தேர்தலில் 81.68 சதவீதம்
வாக்குப்பதிவு நடந்துள்ளது.
இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன்
வாக்குச்சாவடிகளுக்கு
படையெடுத்து வந்தது,
வாக்குப்பதிவு அதிகரிக்க
முக்கிய காரணமாகப்
பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டுடன் முடிந்த நிலையிலும், இட ஒதுக்கீடு, வார்டுகள் மறு வரையறை உள்ளிட்ட நீதிமன்ற வழக்குகளால், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது காலதாமதம் ஆனது. மூன்று ஆண்டுகள் பல்வேறு வழக்குகளைக் கடந்து, தற்போது இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது.

 

முதல்கட்டமாக மாநிலம் மு-ழுவதும் 156 ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 2019ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (டிச. 30) நடக்கிறது.

 

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் முதல்கட்டமாக இடைப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

இந்த 12 ஊராட்சி
ஒன்றியங்களிலும் 17 மாவட்ட
ஊராட்சிக்குழு உறுப்பினர்,
169 ஒன்றியக்குழு உறுப்பினர்,
194 ஊராட்சி மன்றத்தலைவர்,
1914 கிராம ஊராட்சி வார்டு
உறுப்பினர் என மொத்தம்
2294 பதவிகளுக்கு தேர்தல்
நடத்தப்பட வேண்டும்.

 

இவற்றில் ஒன்றியக்குழு
உறுப்பினர் 1, ஊராட்சி
மன்றத் தலைவர் 3,
ஊராட்சி மன்ற வார்டு
உறுப்பினர் 148 என
மொத்தம் 152 பேர்
போட்டியின்றி
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையடுத்து, எஞ்சியுள்ள
2142 பதவிகளுக்கு கடந்த
வெள்ளிக்கிழமை
தேர்தல் நடந்தது.

 

தேர்தல் களத்தில் 8 ஆயிரம் வேட்பாளர்கள் வாக்குப்பதிவைச் சந்தித்தனர். முதல்கட்ட தேர்தலுக்கு உண்டான பகுதிகளில் மட்டும் 484634 ஆண் வாக்காளர்கள், 457451 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 35 பேர் என மொத்தம் 942120 வாக்காளர்கள் உள்ளனர்.

 

காலை 7 மணிக்கு
வாக்குப்பதிவு தொடங்கி
மாலை 5 மணிக்கு முடிந்தது.
சேலம் மாவட்டத்தில்,
பெரிய அளவில் பிரச்னைகள்
ஏதுமின்றி வாக்குப்பதிவு
சுமூகமாகவே நடந்து முடிந்தது.

எம்.செட்டிப்பட்டியில் உள்ள
ஒரு வாக்குச்சாவடி மையத்தில்
5 வாக்குச்சாவடிகள் இருந்தன.
மாற்றுத்திறனாளி, நடக்க முடியாத
முதியோர்களை சக்கர நாற்காலி
வண்டிகளில் அழைத்து
வருவதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன.

 

கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வாக்குப்பதிவின்போது முன்னுரிமை அளிக்கப்பட்டது. பதினெட்டு வயது நிரம்பிய, புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் கணிசமாக வாக்குப்பதிவு விகிதம் அதிகமாகியது.

 

முதல்கட்ட தேர்தலில், ஆண்கள் 396445 பேரும், பெண்கள் 373032 பேரும் வாக்களித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 13 பேரும் ஓட்டுப் போட்டுள்ளனர். ஆக மொத்தம், சேலம் மாவட்டத்தில் 81.68 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

 

மதியம் 3 மணி நிலவரப்படி, 62 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு நிலவரம், அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மேலும் 20 சதவீதம் அதிகரித்தது. வாக்குச்சாவடிக்கு வராத பெண்கள், முதியவர்களை வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து வந்தனர். அதனால் வாக்குப்பதிவும் கணிசமாக உயர் ந்தது.

 

செல்பி யுவதிகள்!

வீரபாண்டி கிராம ஊராட்சிக்கு
உட்பட்ட 81வது வாக்குச்சாவடியில்,
வாக்களிக்க ஏராளமான
இளம்பெண்களும், கல்லூரி
மாணவிகளும் வரிசையில்
காத்திருந்தனர். அவர்களில் பலர்
இப்போதுதான் முதல் முதலாக
வாக்களிக்கும் அனுபவம்
பெற்றிருக்கிறார்கள்.
இதை நினைவூட்டிக் கொள்ளும்
வகையில் வரிசையில் நின்றபடியே
கல்லூரி மாணவிகள் தங்களை
செல்போனால் தற்படம்
(செல்பி) எடுத்து மகிழ்ந்தனர்.

 

டோக்கன் விநியோகம்!

 

வீரபாண்டி கிராம ஊராட்சி
5, 6 ஆகிய இரு வார்டுகளிலும்
மொத்தம் 932 வாக்காளர்கள்
உள்ளனர். அவர்களுக்கு 81வது
வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட
மையம் அமைக்கப்பட்டு இருந்தது.
இரண்டு வார்டு வாக்காளர்களும்
வாக்களிக்க வசதியாக தனித்தனியாக
இரண்டு கம்பார்ட்மெண்டுகள்
வைக்கப்பட்டு இருந்தன.
மாலை 4 மணி வரை
613 பேர் வாக்களித்து இருந்தனர்.

அதன்பிறகும் பெரிய அளவில்
வரிசையில் வாக்காளர்கள்
காத்திருந்தனர். மாலை 5 மணிக்குள்
வாக்குச்சாவடி மையத்திற்கு
வந்திருந்த வாக்காளர்களுக்கு,
ஓட்டுப்போட வசதியாக
டோக்கன் விநியோகம்
செய்யப்பட்டது. அதன்படி
160 வாக்காளர்களுக்கு
டோக்கன் விநியோகம்
செய்யப்பட்டு, மாலை
7 மணி வரை வாக்குப்பதிவு
நடத்தப்பட்டது.

 

4 வாக்குகளால் தாமதம்:

ஊரக உள்ளாட்சித் தேர்தலில்
ஒரு வாக்காளர், கிராம ஊராட்சி
வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத்
தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்,
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்
ஆகிய நான்கு பதவிகளுக்கு
வாக்களிக்க வேண்டும். அதனால்
வாக்குப்பதிவு சற்று
மந்தமாகவே இருந்தது.
வயதானவர்களைக் காட்டிலும்,
இளைஞர்கள் பலர்
வாக்குச்சீட்டில் சீல்
வைக்கக்கூட தடுமாறினர்.
வாக்குச்சாவடி முகவர்களாக
இருந்த பலர், வாக்காளர்களுக்கு
ஓட்டுப்போடும் கம்பார்ட்மெண்டுக்கே
சென்று வாக்களிக்கும் முறை
குறித்து விளக்கம் அளித்தனர்.
முகவர்கள் அவ்வாறு செய்வது
விதிகளுக்கு எதிரானது என்றாலும்,
வாக்குச்சாவடி அலுவலர்கள்
அதைப்பற்றி கண்டுகொள்ளாமல்
இருந்தனர்.

 

பணப்பட்டுவாடா செய்த போலீசார்!

 

பல வாக்குச்சாவடிகளில்
வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர்
மட்டுமின்றி அவர்களுக்கு உதவியாக
உளவுப்பிரிவு காவல்துறையினரும்
பண பட்டுவாடா பணிகளைச் செய்தது
உச்சக்கட்ட முரண். அரசு அதிகாரிகள்
ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக
நடந்து கொள்வது வாடிக்கையானது
என்றாலும்கூட, பண விநியோகம்
வரை செயல்பட்டது இந்த தேர்தல்
நடைமுறை மீதே பல்வேறு
அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது.

 

– பேனாக்காரன்