Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழ்நாட்டில் ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது! பழ.கருப்பையா சொல்கிறார்!!

கடந்த 2011 முதல் 2016 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் பழ.கருப்பையா (76). அவருடைய மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அக்கட்சியில் இருந்தும் வெளியேறி இருக்கிறார் பழ.கருப்பையா.

பழ.கருப்பையா,
ஒரு கட்சியில் இருந்து
கொண்டே எப்போது
அந்தக் கட்சியையே
எதிர்மறையாக விமர்சிக்கிறாரோ
அதையடுத்து அவர்
அக்கட்சியைவிட்டு விலகி
வேறு கட்சியில் சேரப்போகிறார்
என்பது அவருடைய கடந்த
கால அரசியல் செயல்பாடுகளை
உற்றுக் காண்பவர்களுக்கு
நன்றாகவே தெரியும்.

 

இந்திய தேசிய காங்கிரஸ்,
சிண்டிகேட் காங்கிரஸ்,
ஜனதா கட்சி, திமுக,
மதிமுக மீண்டும் காங்கிரஸ்,
பின்னர் அதிமுக, திமுக
என கடந்த 50 ஆண்டுகளில்
அவர் போகாத அரசியல்
கட்சிகள் இல்லை. நாளையே
அவர் மீண்டும் திமுகவில்
இணைந்தாலும், சேர்த்துக்
கொள்ள அக்கட்சியும் மறுக்காது.
ஆனாலும், தரமான இலக்கியவாதி.
நல்ல சிந்தனையாளர். நடிகர்,
படத்தயாரிப்பாளர் எனப்
பன்முகம் கொண்டவர்.

 

அண்மையில் திமுகவில்
இருந்து வெளியேறிய பிறகு,
அவர் அக்கட்சியை விமர்சித்து
கடுமையான குற்றச்சாட்டுகளை
முன்வைத்தார். ஒட்டுமொத்த
அரசியல் கட்டமைப்பிலும்
ஏற்பட்டுள்ள அவலங்களையும்
பேசினார். ஒரு தனியார்
தொலைக்காட்சிக்கு அவர்
அளித்த பேட்டியிலிருந்து…

 

திமுக தலைவர் கலைஞரிடம்
நாம் எதையும் பேசலாம்.
கருத்தில் உடன்பாடு இருந்தால்
அவர் அதை ஏற்றுக்கொள்வார்.
அல்லது, அவர் கருத்துக்கு
நம்மை மாற்றி விடுவார்.
கருணாநிதி என்ன கடவுளா?
என்று அவரை விமர்சித்து
கட்டுரை எழுதியிருக்கிறேன்.
ஆனாலும் அவர் அதையெல்லாம்
பார்த்த பிறகும்கூட, என்னை
திமுகவில் இணையும்படி
அழைப்பு விடுத்தார். யார்
என்னை ஏற்க மாட்டார் என்று
எண்ணினேனோ அவரே
அழைத்ததால் நானும்
திமுகவில் இணைந்தேன்.

 

இந்தியாவின் அடிப்படை, மாநிலங்கள்தான். திராவிட மொழிவழி இன உணர்வுகள் நியாயமானது. மொழிவழி மாநிலங்களை உண்டாக்கியது திராவிடக் கட்சிகள் அல்ல. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், மொழிவழி மாநிலங்களுக்கு காந்திதான் வித்திட்டார். அதுதான் அதிசயம். அதற்குப் பெயர் வார்தா திட்டம். காந்தியின் வார்தா கொள்கையை ஏற்று, நடைமுறைப்படுத்தியவர் மூதறிஞர் ராஜாஜி. ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தை புகுத்தி இருந்த நிலையில், தமிழ் பயிற்று மொழி ஆக்கியவர் ராஜாஜிதான்.

 

ஒரு காலத்தில் நான்
கலைஞரை கடுமையாக
விமர்சித்துப் பேசியிருக்கிறேன்.
அவர் மீது கோபம் இருந்தது.
ஈழத்தில் உள்நாட்டுப் போர்
நடந்த சமயம். இங்கே
ஆட்சியில் இருந்த காங்கிரஸ்
அமைச்சரவையில் திமுக அங்கம்
வகித்த காரணத்தால், ஈழச்சிக்கலில்
காங்கிரஸ் இழுத்த இழுப்பிற்கெல்லாம்
கலைஞரும் சென்றுவிட்டார்.
எனக்குத் தெரிந்து கலைஞர்
மிகச்சிறந்த சிந்தனையாளர்.
அறிவாளி. ஆனால்
ஈழச்சிக்கலில் அவர்
சரியான முடிவெடுக்கவில்லை.

 

காங்கிரஸ் கட்சியும் எவ்வளவோ நன்மைகளை இந்த தேசத்திற்கு செய்திருக்கிறது. அது ஒரு சுதந்திர கட்சி. 60 சதவீதம் நன்மையும், 40 சதவீதம் குறைகளும் கொண்ட கட்சி. ஈழப்பிரச்னையில் காங்கிரஸும் தவறு செய்தது. திமுகவும் தவறு செய்தது. அப்போது அந்தச் சிக்கலில் ஜெயலலிதா சரியாக இருந்தார். வழக்கமாக, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு நிலையில் இருக்கும் கலைஞர், அப்போது எதிர் நிலைக்குச் சென்று விட்டார்.

 

கலைஞர் காலத்திற்குப் பிறகு
ஒரு உணர்வும் திமுகவில் இல்லை.
கலைஞர் மறைந்தபிறகு நானும்
திமுகவில் இருந்து வெளியேறிவிட
வேண்டும் என்று நினைத்தேன்.
உண்மைக்கு மாறாக, நாம்
நம்புவதற்கு மாறாக என்னால்
நடந்து கொள்ள முடியாது.
பல பேர், என்னை
கட்சி மாறினான் கட்சி மாறினான்
என்று சொல்கிறார்கள்.
கட்சி என்ன கற்புக்குரிய இடமா?
கட்சி ஒரு கருவி. நாம்
எந்தக் கொள்கையை வரித்துக்
கொண்டு இருக்கிறோமோ அதை
நிறைவேற்றுவதற்கான ஒரு கருவி.

 

அந்தக் கருவியை விசுவாசமாக
பார்ப்பது என்று சொல்வதைக்
காட்டிலும் பைத்தியக்காரத்தனம்
எதுவும் இல்லை. நாம் கூட்டமாக
சேர்ந்து ஒரு கருத்தை
நிறைவேற்றுவதற்காகத்தான்
ஒரு கட்சியை தொடங்குகிறோம்.
கட்சிக்குள் தவறான கருத்தை
விமர்சிக்க முடியாது என்றால்
அப்படி ஒரு கட்சியே
தேவையில்லை. தலைவன்
சொல்வதை எல்லாம்
ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்று அவசியம் இல்லை.

 

ராஜாஜி, தன்னை
எதிர்த்தவனை வீட்டிற்கே
நேரில் சென்று பாராட்டினார்.
ராஜாஜி ஒரு பேரறிஞன்.
நீ என்ன சொன்னாய் என்று
முக்கியமில்லை. தலைவனை
விமர்சித்து பேசினால்தான்
விவாதம் நடைபெறும்.
உண்மை வெளிவரும் என்றார்.

 

திமுகவில் உட்கட்சி ஜனநாயகம்
அண்ணா காலத்தில் இருந்தது.
அவரை எதிர்த்து பேசும்
துணிச்சல்மிக்க தலைவராக
ஈ.வெ.கி.சம்பத் இருந்தார்.
அவர் கேட்ட கேள்விக்கு
பதில் சொல்லும்படி கேட்டபோது,
‘என் காது புண்ணாகிவிட்டது.
வைரக் கடுக்கனை கழற்றி
வைத்திருக்கிறேன். புண் சரியான
பிறகு கடுக்கனை மாட்டிக்
கொள்கிறேன்’ என்று அண்ணா
சொன்னார். அவருக்குப் பிறகு
திமுகவில் ஜனநாயகம் இல்லை.
கலைஞர் காலத்தில் கொஞ்சம்
கொஞ்சம் உட்கட்சி ஜனநாயகம்
இருந்தது. ஸ்டாலினுக்கு
உட்கட்சி ஜனநாயகம் பற்றி
எல்லாம் தெரியாது. அண்ணா,
கலைஞர் ஆகியோரிடம்
யாரையும் எதிர்கொள்ளும்
ஆற்றல் இருந்தது. அது,
ஸ்டாலினிடம் இல்லை.

 

வேட்பாளர்களிடம் தேர்தலில் எவ்வளவு செலவழிப்பீர்கள்? என்று கேட்டுவிட்டுதான் சீட் கொடுக்கிறார். பணம் வைத்திருப்பவன்தான் வேட்பாளர் ஆகிறான். பணம் செலவழித்து தேர்தலில் வெற்றி பெறுபவன் அதை முதலீடாகத்தானே பார்ப்பான். அந்த பணத்தை திரும்பவும் எடுக்கத்தானே செய்வான்? செந்தில்பாலாஜி போன்றவர்கள் அதிமுகவிலும் செல்வாக்குடன் இருந்தார்கள். பின்னர் அங்கிருந்து திமுகவுக்கு வந்த பிறகு இங்கேயும் அதே செல்வாக்குடன் இருக்கிறார்கள் என்றால் என்ன பொருள்? ஒரு கட்சியில் வலிமையாக இருந்து கொண்டு கொள்ளை அடிப்பது, மீண்டும் வேறு கட்சியில் சேர்ந்து கொண்டு அங்கேயும் வலிமையாக இருப்பது என்ன நடைமுறை?

 

அது, நாட்டின் நேர்மை
போக்கை பாதிக்காதா?
100 ரூபாய் வரி கட்டினால்
40 ரூபாய் ஆள்பவர்களே
சாப்பிடுவோம் என்றால்,
60 ரூபாய் பணியை அரசிடம்
இருந்து பெறுவதற்கு
நான் 100 ரூபாய் செலுத்த
வேண்டியதிருக்கிறது.

 

அண்ணா எப்போதும்
தன்னைச் சுற்றிலும்
அறிவாளிகளை வைத்துக்கொண்டார்.
நேர்மையாக இருந்தார்.
திமுகவை அறிவு இயக்கமாக
வைத்திருந்தார். அண்ணா மீது
ஒரு குற்றச்சாட்டுகூட
இருந்ததில்லை. நேர்மையான
அரசியலின் கடைசி
தலைமுறைதான் அண்ணா.
கலைஞரும்கூட பழைய
தலைமுறை தலைவர்தான்.
அண்ணாவிடம் இருந்த
ஜனநாயகத்தில் கலைஞரிடம்
60 சதவீதம் இருந்தது.

 

இப்போது பணம்தான்
எல்லாம் என்றாகிவிட்டது.
கம்யூனிஸ்டுகள் மட்டும்
அப்படி அல்ல. ஆனால்
அவர்களும் திமுகவிடம்
பணம் வாங்கிவிட்டார்கள்
என்பது அசிங்கமாக
போய்விட்டது. அவர்களையும்
பண கலாச்சாரம் தின்றுவிட்டது.
பெரும்பணம் செலவு
செய்துதான் எம்பி ஆக
வேண்டும் என்பதைக்
காட்டிலும் கம்யூனிஸ்டுகள்
வெளியே இருந்து
இந்தியாவின் அரசியலை
நெறிப்படுத்தி இருக்கலாம்.

 

தற்போதைய அரசியல்
பணநாயகமாகி விட்டதால்,
நாமும் அதே பாணியில்
தடுப்பாட்டம் ஆட வேண்டுமா?
தடுப்பாட்டத்தை நேர்மையான
கொள்கைகளால் ஆட வேண்டும்.
இன்றைக்கு நேர்மை போய்விட்டது.
சமூக மதிப்பீடுகள் தாழ்ந்துவிட்டன.
வஞ்சகம், சூது இவைதான்
இன்று பொதுவாழ்வின்
அங்கங்களாகி விட்டன.
இந்திய சமூகத்தை மாற்றியவர்
காந்திதான். 1970 வரை
நேர்மையான, நேரிய வழியில்
ஆட்சி நடக்க, காந்தி
உருவாக்கிய தலைவர்கள்தான்
காரணம். அவர் சுதந்திரத்திற்காகப்
போராடினார் என்பது இரண்டாம்பட்சம்.
கபடம், சூது, வஞ்சகம்
ஆகியவற்றை அகற்றினார்.
உண்மைக்கு முதலிடம் தந்தார்.
கடந்த 50 ஆண்டுகளில்
காந்திய செல்வாக்கு
தேய தொடங்கிவிட்டது.

 

இன்றைக்கு நாம் எடப்பாடி, ஸ்டாலின் காலத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். எடப்பாடி போன்றவர்கள் ஆளும் நிலை வந்துவிட்டது. பாம்பு தின்னும் ஊருக்கு போய் விட்டால் நடுத்துண்டம் எனக்கு என்கிற கதை ஆகிவிட்டது. முதலில் நமக்கு, பாம்பு தின்னலாமா வேண்டாமா என்ற கருத்து வேண்டும். பிறகு பாம்பை தின்பதை விமர்சிக்க வேண்டும். அதன்பிறகு பாம்பு தின்பதை அடியோடு நிறுத்த வேண்டும். அந்த நிலை இல்லாமல், அவர்கள் பணத்தை வைத்து ஆடுகிறார்கள் என்பதற்காக நாமும் பணத்தை வைத்து ஆடுகிறோம். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நாட்டைக் கெடுத்து விட்டார்கள்.

 

ஊராட்சி மன்றத் தேர்தலில்கூட 30 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. ஊருக்கு தொண்டு செய்ய எதற்காக பணம் செலவழிக்க வேண்டும்? இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் கொள்கை அடிப்படையில் எந்தெந்த வகையில் வேறுபடுகிறார்கள்? என்று பார்க்க வேண்டுமே தவிர எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று பார்க்கக் கூடாது. இவர்கள் கொள்கைகளை எல்லாம் வெறும் சடங்குகளுக்காக வைத்திருக்கிறார்கள்.

 

இவர்களின் நோக்கமெல்லாம், அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டும்தான். முதலில் பணத்தை வீசுவது; அதிகாரத்தைப் பெறுவது; அதை வைத்து பன்மடங்காக பணத்தைப் பெருக்குவது. இது ஒரு நச்சுச்சுழற்சி. இப்படியான நிலை 50 ஆண்டுகளாக இருக்கு. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய, மாற்றக்கூடிய ஆற்றல்மிக்க ஒரு தலைவன் வர வேண்டும். பெருந்தலைவன் வேண்டும். இதற்கு முதலில் சமூகத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

 

நான் காந்தி காலத்திலேயே தேங்கி விடவில்லை. எதிராளி என்ன ஆயுதம் எடுக்கிறானோ அதை தாங்களும் எடுக்க வேண்டிய நிலை இருப்பதாகச் சொல்கிறீர்கள். எல்லாரும் தாசிகளாக போய்விட்டார்கள் என்பதற்காக நாமும் அப்படி ஆக வேணடுமா? நீங்கள் ஆட்சிக்கு வர 20 ஆண்டுகள்கூட ஆகட்டுமே? என்ன குடிமுழுகிப் போய்விடப்போகிறது? நீங்கள் ஒரு கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.

 

நான் சொல்கிறேன், எடப்பாடி ஆட்சி நிலைப்பெற்று விட்டதற்கு காரணமே, திமுக தலைவர் ஸ்டாலின்தான் காரணம். ஏனென்றால் அண்ணா, காமராஜர் மாதிரியான தலைவர்கள் எதிராக இருந்திருந்தால், இந்நேரம் நான்கே நாள்களில் எடப்பாடி பழனிசாமி போன்றவர்களின் ஆட்சி கவிழ்ந்து இருக்கும்.

 

ஏன் இருக்கிறது என்றால், இவர்கள் எல்லோருமே ஒரே ரகம். இல்லாவிடடால், பாராளுமன்றத் தேர்தலில் 38 இடங்களில் வெற்றி பெற்ற இவர்களால், டில்லியிலும் ஆட்சி மாறும்; இடைத்தேர்தல் மூலம் தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் நடக்கும் விந்தையும் இருந்தது. அந்த நம்பிக்கையை ஆரம்பத்தில் திமுகவினர் உருவாக்கினார்கள். ஆனால் அதற்குப் பிறகு மக்கள் தேவையான அளவு வாக்களித்து, எடப்பாடியை நிலைநிறுத்தி விட்டார்கள்.

 

அதற்காக எடப்பாடி சிறந்தவர் என்பது கருத்தல்ல. ஸ்டாலின் வேண்டும் என்று மக்கள் கருதியிருந்தால் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்திருககும். இதுவும் அப்படித்தான்; அதுவும் அப்படித்தான். அவன் காசை வாங்கிக் கொண்டு எளிமையாக இருப்பான். இவன் காசையும் வாங்கிக் கொண்டு கடுமையாக இருப்பான் என்ற எண்ணம் மக்களிடம் இருந்திருக்கலாம்.

 

ஒரு நாட்டை எப்படி நடத்த வேண்டும் என்பது பிரசாந்த் கிஷோருக்கு தெரியுமா? திராவிட இயக்கத்தின் கொள்கைகள் எல்லாம் அவருக்குத் தெரியாது. எப்படி உங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவெல்லாம் அவருக்கு 380 கோடி ரூபாய் கொடுக்க வேண்டுமா? நீங்கள் பேன்ட் அணிந்து கொள்ளுங்கள்; நீங்கள் ஷெர்வாணி அணிந்து கொள்ளுங்கள்; தேநீர் குடியுங்கள், மக்கள் ரசிப்பார்கள் என்று ஸ்டாலினை வழிநடத்த, பிரசாந்த் கிஷோரின் ஏஜன்சி சொல்கிறது என்றால் எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? இது அரசியலின் வீழ்ச்சி.

 

கடந்த காலத்தில், காங்கிரஸ் ஆட்சி, ஊழலற்ற மன்மோகன்சிங் தலைமையிலான ஊழலான ஆட்சியாக நடந்தது. இந்த ஊழலை மட்டும் அம்பலப்படுத்துங்கள். வெற்றி பெறுவீர்கள் என்று யாரும் சொல்லாமலேயே பாஜக ஆட்சிக்கு வந்தது.

 

பிரசாந்த் கிஷோர் போன்றோரின் முட்டாள்தனமான யோசனைகள் எல்லாம் தெரிந்து கொள்ளாமலேயே எம்ஜிஆர் திமுகவின் ஊழலை சொல்லி, ஆட்சிக்கு வந்துவிட்டார். துண்டு பீடி குடித்துக்கொண்டிருந்தவன் எல்லாம் மூன்று மாடி வீடு எப்படி கட்டினான்? என்று கேட்டார் எம்ஜிஆர். ஆட்சிக்கு வந்துவிட்டார். 14 ஆண்டுகள் ஆட்சிக்கு வெளியே இருந்தார் கலைஞர். ஏஜன்சி துணை இல்லாமல் மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தார்.

 

ஏஜன்சிக்காரன் ரொம்ப கேவலமான யோசனை சொல்கிறான். சைக்கிளில் செல்லுங்கள்; பேன்ட் போடுங்கள் என்பதெல்லாம் யோசனையா? மக்கள் தலைவனாவதற்கு இதெல்லாம் ஆலோசனைகளா?

 

வெறும் கோவணத்தோடும், வெறும் உடம்போடும் சுற்றினாரே காந்தி. அவர்தானே மாபெரும் தலைவர். சிந்தனையாளர். தன்னலமற்ற தன்மை, எளிய மக்களுக்காக பரிந்து நிற்கின்ற போக்கு, அவர்களின் குறைபாடு என்ன என்று அறிந்தவன் காந்தி. தென்னாப்பிரிக்காவில், வெள்ளைக்காரனோடு சரிசமமாக அமர்ந்து பயணம் செய்யக்கூடாது என்று காந்தியை, நள்ளிரவிலே ரயிலில் இருந்து தூக்கி எரிந்து விட்டார்கள். வக்கீல் தொழிலைச் செய்து பணம் சம்பாதிப்பதா? மக்களின உரிமைக்காக போராடுவதா என்று இரவு முழுவதும் சிந்தித்தார்.

 

தென்னாப்பிரிக்காவில் எல்லா மக்களையும் திரட்டினார். போராடினார். இந்தியாவின் முகம் மாறியது. அவர்தான் தலைவர். அவர்களை படித்துவிட்டு நான் அரசியலுக்கு வந்தேன். அதற்கு பிறகு காமராஜர் போன்ற தலைவர்களுடன் எட்டாண்டுகள் பழகினேன். இவர்களை எலலாம் பார்த்தால் தலைவராக தெரியவில்லை. ‘தனியாக நட; தனியாக நட’ என்று விவேகானந்தர் சொன்னார். ஒருவரும் என்னுடன் வராவிட்டாலும் நான் தனியாக நடப்பேன்.

 

இந்த ஜனநாயகத்தில் மிகப்பெரிய பலவீனம் இருக்கு. 50 ஆண்டுகளாக ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது. இவனுடைய ஊழல் சொல்லப்பட்டு, அவன் வருகிறான். அவனுடய ஊழலைச் சொல்லி இவன் வருகிறான். இரு கட்சிகளுக்கும் ஊழல்தான் அடிப்படை கொள்கை. இலவசம் கொடுப்பதுதான் இவர்களுக்குத் தெரிந்த பொருளாதார கொள்கை. இருவருக்கும் ஒரே கொள்கைதான்.

 

ஏன் இவர்களை அகற்ற முடியவில்லை என்றால், வலுவான நிறுவன அமைப்பு ஏற்கனவே இவர்களுக்கு உருவாகி விட்டது. ஏன் என்றால், எம்ஜிஆர் என்பவர் ஊழலை எதிர்த்து இயக்கம் கண்டார். அவர், காங்கிரஸ் கட்சியை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார். காமராஜர் இறந்த பிறகு, காங்கிரஸ் மேலும் பலமிழந்து விட்டது. இங்கே திமுக வலிமையான அமைப்பாகவும் இருக்கு. வலிமையான அமைப்பை அகற்றுவது கடினம்.

 

கம்யூனிஸ்டுகள் இவ்விரு கட்சிகள் மீதும் எவ்வளவோ ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்லி வந்தனர். ஆனால் காலப்போக்கில் அவர்களுடனேயே கூட்டணி சேர்ந்து கொண்டு, கூட்டணி விசுவாசத்தின்பேரால் அவர்களின் ஊழல்களைப் பற்றி பேசுவதை தவிர்த்தனர். நல்லதோ கெட்டதோ கிராமம் வரை கிளை வைத்திருக்கிற, அந்த கட்டமைப்பு வைத்திருக்கிற கட்சியால்தான் மாற்றத்தை நிகழ்த்த முடியும். எம்ஜிஆர் அந்த கட்டமைப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது, பெரிய கட்சிதான் இவ்விரு கட்சிகளையும் அகற்ற முடியுமே தவிர வேறு யாராலும் முடியாது. அதற்கு ஒருங்கிணைந்த பெரிய கட்சி தேவை.

 

இங்கே யாருக்கு மெஜாரிட்டி என்பதுதான் ஜனநாயகத்தின் உள்ளடக்கமே தவிர, அது நீதியா? அநீதீயா? என்பது அல்ல. பெருவாரியான பேர் அயோக்கியத்தனத்தை முன்வைத்தால் எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. பெரிய கட்சிகள்தான் ஆட்சியில் உட்கார முடியும் என்ற நிலை வந்தால் அவர்கள் பணத்தைக் கொண்டு அடிப்பார்கள். சிறிய கட்சிகளால் ஆட்சிக்கு வர முடியாது. இதுதான் நச்சுச்சுழற்சி.

 

விகிதாச்சார முறை இருந்தால் கம்யூனிஸ்டுகள் 40 கோடி ரூபாய் வாங்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அப்போதுதான் கட்சிகள், தங்கள் கருத்துகளைச் சொல்லி வாக்குகளைப் பெற முடியும். ஆனால் தற்போதுள்ள நிலையில், முதலிலேயே கூட்டணியை முடிவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.

 

கூட்டணி தர்மம் காரணமாக கூட்டணி தலைவரை மிகப்பெரிய தலைவராக வர்ணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் உள்ள கேடுகெட்ட போக்கு இது. 35 சதவீதம் யார் ஓட்டு வாங்குகிறார்களோ அவர்கள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள். விகிதாச்சார முறை கொண்டு வாருங்கள். இந்தக் கட்சிகள் பெரிய பணக்காரர்களிடம் நன்கொடை பெறுவதை தடை செய்ய வேண்டும். பாஜக, முகம் தெரியாத நபர்களிடம் நன்கொடை பெறுவதற்கான வழிகளைச் செய்திருக்கிறது.

 

இத்தனை நாள்களாக என் மடியில் திமுக எனும் அழுக்கு மூட்டை இருந்தது. அதை இறக்கி வைத்துவிட்டேன். எந்த ஒரு பெரிய அமைப்பிலும் தன்னலமான கொஞ்சம் பேர் வந்துவிடுவார்கள். திமுகவில், தவறுகளே மையப்படுத்தப்பட்டு இருக்கிறது. தவறுகள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

 

திராவிட கொள்கை என்றைக்கும் இருக்கும். தமிழ் இனக்கொள்கை, இந்தி எதிர்ப்பு என்றைக்கும் இருக்கும். நீ இல்லாவிட்டால் இன்னொருத்தன் வருவான். திமுக அதை தாங்கிக் கொண்டிருக்கவில்லை.

 

திமுகவில் இந்துக்கள் இருக்கிறார்கள் என்று பேசலாமா? ஒன்று மட்டும் இவர்களுக்கு புரியவில்லை. இந்து என்ற நிலைப்பாடு இப்போதுதான் கட்சிக்குள் அதிகரித்திருக்கிறது. இந்திய நாடு ஒரு நாடு அல்ல. ஒரு நாகரிகம் இல்லை. ஒரு மொழி இல்லை. ஒரு கூறு உள்ள நாடாக வரலாற்றில் இருந்ததில்லை. ஆனால் எல்லா இனங்களும் சமமாக வாழ வேண்டும் என்ற நிலையில் இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் ஏற்றுக் கொள்கிறோம்.

 

திராவிட சமயத்தவன், சைவ, வைணவ சமயத்தவன் தன்னை திராவிட தமிழனாக நினைக்கிறானா? இந்து என்ற அடையாளத்தை ஏற்றுக்கொண்டால், திராவிட அடையாளத்தை, தமிழர் அடையாளத்தை இழந்து விடுவார்கள்.

 

வெறுப்பு அரசியலை வெறுத்து இன்னொரு சிறுபான்மையினராக செதுக்க வேண்டிய நிலை ஏற்படும். மொழிவழி இனங்கள் உண்டு. இந்து என்ற சொல்லையே தோற்கடிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை என்பதையே அகற்ற வேண்டும். திராவிட சமயங்கள் என்று சொல்ல வேண்டும். இந்து என்ற சொல், வள்ளலாருக்கு தெரியாது. 100 ஆண்டுகளுக்கு முன்னால் இந்து என்பது இல்லை. திராவிட சமயம் என்று சொல்ல வேண்டும். நம்மை இந்துக்களாக ஆக்கிவிட்டார்கள்.

 

இந்து என்றால் வேதாந்தத்தின் மேலாண்மை. ஆரியத்தின் மேலாண்மை. இந்த பாகுபாட்டை மக்களிடம் புரிய வைக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் பேசினேன். அதை அவர் உள்வாங்கிக் கொள்ளவில்லை. அதேநேரம், அவர் அதை மறுக்கவுமில்லை. கலைஞராக இருந்தால், அவர் நம் கருத்தை ஏற்றுக்கொள்வார்; அல்லது அவர் கருத்துக்கு நம்மை உடன்படச் செய்துவிடுவார்.

 

ஒவ்வொரு மனிதனின் சிந்தனைதான் கட்சியின் கொள்கையாக உருவெடுத்தது. என்னை திமுகவில் ஒரு ஆளாகவே கருதவில்லை. அதன்பிறகும், அங்கிருந்து கொண்டு மண்ணைக் கொட்டுவதற்கு என்ன இருக்கிறது?

 

இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்ற அஸ்திரத்தை ஏவுகிறபோது, நாங்கள் பகுத்தறிவுவாதிகள். இங்கிருப்பது திராவிட சமயங்கள். அவர்கள் தனித்தன்மையானவர்கள். வடநாட்டில் இருந்து வந்தது வேதாந்த மதம். அது, திராவிட சமயத்திற்கு மாறானது. அது ஆரிய சமயம். உபநிடத சமயம்.

 

அழுக்கு மூட்டை என்று கமல் சொன்னார். இன்று கருப்பையா சொல்கிறார் என்று கேட்கிறீர்கள். திமுக மீது எனக்கு வெறுப்பு இல்லை. கொள்கை சார்ந்துதான் என் வெறுப்பு தவிர வேறு இல்லை.

 

ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்; அல்லது என்னை மாற்று. இங்குள்ளவர்களும் இந்து என்றால் தமிழ் இனம் அழியும். நீங்கள் கொஞ்சம் காலம் பணம் சம்பாதிப்பதை விட இந்த நாட்டுக்கு பலன் ஒன்றுமில்லை. திமுகவின் எதிர்காலம் சிறப்பாக இல்லை. கொள்கை முனைப்பும் இல்லை. கார்ப்பரேட் நிறுவனமாகி விட்டது. எல்லாவற்றுக்கும் ஏஜன்சிகளை நாடுகிறார்கள். அவர்கள் அறிவாளிகள் இல்லை.

 

– பேனாக்காரன்