Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் மாநகராட்சி ஊழியர் ரூ.88 லட்சம் சுருட்டல்! பரபரப்பு தகவல்கள் அம்பலம்!!

சேலம் மாநகராட்சி துப்புரவு ஊழியர் ஒருவர், போலி காசோலைகள் மூலம் 88 லட்சம் ரூபாய் சுருட்டியிருக்கும் பகீர் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

 

சேலம் கருங்கல்பட்டி கலைஞர் நகர் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவருடைய மகன் வெங்கடேஷ் (38). சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில், கடந்த 2000ம் ஆண்டு முதல் துப்புரவு ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

கொண்டலாம்பட்டி மண்டலத்தில் முதல்நிலை அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், குப்பை வண்டி ஓட்டுநர்கள் என 1500 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்காக மாதம் 3 கோடி ரூபாய் வரை சம்பள செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மண்டல ஊழியர்களுக்கு இந்தியன் வங்கி மூலம் சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகிறது. மாதந்தோறும் சம்பள ‘பில்’ பட்டியல் மற்றும் ஊதிய காசோலைகளை இந்தியன் வங்கிக்கு கொண்டு செல்லும் பணிகளையும் வெங்கடேஷ் செய்து வந்தார்.

 

இந்நிலையில், நடப்பு 2018&2019ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை ஆவணங்கள் மற்றும் சம்பள பட்டியல் கோப்புகள் சிலவற்றில் முன்னுக்குப்பின் முரணாக திருத்தம் செய்யப்பட்டு இருப்பதை, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலக கணக்காளர் வெங்கடேசன் என்பவர் கண்டுபிடித்தார். அலுவலகத்தின் மற்ற ஊழியர்கள், சம்பள ‘பில்’ பட்டியல், காசோலைகளை இந்தியன் வங்கியில் ஒப்படைத்துவிட்டு விரைவிலேயே திரும்பி விடும் நிலையில், வெங்கடேஷ் சென்றால் மட்டும் பல மணி நேரம் கழித்தே அலுவலகம் திரும்பி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதுவும், அவர் மீது சந்தேகத்தை வலுவாக்கியது. இதனால், ஆண்டறிக்கை தொடர்பான குறிப்பிட்ட சில கோப்புகள், முந்தைய சில மாதங்களின் சம்பள ‘பில்’ பட்டியல் ஆவணங்களை உடனடியாக தன் மேசைக்குக் கொண்டு வருமாறு வெங்கடேஷிடம் கேட்டிருந்தார்.

ஆனால், கோப்புகளை தேடி எடுத்துத் தருவதாகச் சொன்ன வெங்கடேஷ், கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென்று தகவல் ஏதும் சொல்லாமல் விடுப்பில் சென்றுவிட்டார். சில ஆவணங்களை அவர் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அலுவலக கோப்புகளை ஆய்வு செய்ததில், போலி சம்பள பட்டியல் தயாரித்தும், போலி காசோலைகள் மூலமும் நூதன முறையில் வெங்கடேஷ் 88 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

 

வெங்கடேஷ்
அவருடைய தம்பி மோகன்,
தாயார் விஜயா மற்றும்
பிரபாவதி ஆகியோர்
கொண்டலாம்பட்டி
மண்டலத்தில் பணியாற்றும்
ஊழியர்கள் போல சம்பள
பட்டியல் தயாரித்தும்,
அவர்களின் பெயர்களில்
காசோலைகளை தயார்
செய்தும், வங்கியில்
இருந்து மாதந்தோறும்
பணத்தை எடுத்து மோசடி
செய்துள்ளார். இதற்காக
அவர்களின் பெயர்களில்
இந்தியன் வங்கியில்
கணக்கு தொடங்கி,
ஏடிஎம் கார்டுகளையும்
பெற்றுள்ளார் வெங்கடேஷ்.

 

இந்த நூதன மோசடி குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையர் ரமேஷ்பாபு, மாநகராட்சி ஆணையர் சதீஸூக்கு தெரியப்படுத்தினார். மோசடிப்பேர்வழி வெங்கடேஷிடம் மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்தபோது, அவரும் தான் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தவணை முறையில் பணத்தை திருப்பிச் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், இந்த மோசடி விவகாரம் ஊடகங்களில் கசியாமல் கமுக்கமாகவே கையாண்டு வருகிறது மாநகராட்சி நிர்வாகம். என்றாலும் முன்னெச்சரிக்கையாக கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் தரப்பிலிருந்து, மாநகர காவல்துறை ஆணையரிடமும் வெங்கடேஷ் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வெங்கடேஷிடம் நேரில் நாம் விசாரித்தோம்.

 

”நான் எந்த மோசடியும் செய்யவில்லை. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் பேசிய பிறகுதான் எதையும் பேச முடியும். இப்போது நான் விடுப்பில் இருக்கிறேன். நீங்கள் இதுபற்றி ஏதாவது எழுதினால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை,” என்ற வெங்கடேஷிடம், ”மாநகராட்சி தரப்பில் உங்கள் மீது போலீசிடமும் புகார் தரப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்,” என்றோம்.

 

பிறகு என்ன நினைத்தாரோ அவராகவே பேசினார்.

 

”குடும்பத் தேவைகளுக்காக
தனியார் நிதிநிறுவனத்தில்
25 லட்சம் ரூபாய்க்கு மேல்
கடன் வாங்கியிருந்தேன்.
அதற்கு வட்டி கட்ட
முடியாமல் போனதால்
கடன் சுமை மேலும்
அதிகரித்தது. அதை
சமாளிப்பதற்காக போலி
சம்பள பட்டியல் தயாரித்து
பணத்தை எடுக்க
வேண்டியதாகி விட்டது.
இது சம்பந்தமாக மாநகராட்சி
அதிகாரிகள் விசாரித்தபோது
அவர்களிடம் தவணை
முறையில் எப்படியாவது
பணத்தை திருப்பிக்
கட்டிவிடுகிறேன் என்று
சொல்லி விட்டேன்.

 

இப்போதுகூட
கடந்த 7ம் தேதி
ஒரு தவணையும்,
அதன்பிறகு ஒரு
தவணையும் என
4 லட்சம் ரூபாய்
கட்டி விட்டேன்.
எங்கள் அம்மா பெயரில்
உள்ள வீட்டை விற்றால்
40 லட்சம் ரூபாய்
கிடைக்கும். அந்த
வீட்டை விற்றாவது
பணத்தை கட்டிவிடுவேன்.
வீட்டில் குழந்தைகள்
எல்லாம் இருக்கிறார்கள்.
அதற்குள் எதற்காக
போலீசுக்கு போகிறார்கள்?
போலீஸ் நடவடிக்கை
எடுக்காமல் இருக்க
நீங்க ஏதாவது
உதவி பண்ணுங்க,”
என்றார்.

 

இந்த மோசடி குறித்து கருத்து கேட்பதற்காக மாநகராட்சி ஆணையர் சதீஸ், கொண்டலாம்பட்டி உதவி ஆணையர் ரமேஷ்பாபு ஆகியோருக்கு பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும், செல்போன் தேய்ந்து போனதுதான் மிச்சம்.

சேலம் மாநகராட்சியில்
துப்புரவு தொழிலாளர்களாக
பெரும்பாலும் பட்டியல்
சமூகத்தினரே வேலை
செய்கின்றனர்.
மோசடிப் பேர்வழியான
வெங்கடேஷின் தந்தை
குணசேகரன், சேலம்
மாநகராட்சியில் சுகாதார
ஆய்வாளராக
பணியாற்றியபோதே
வெங்கடேஷை துப்புரவு
தொழிலாளியாக
குறுக்கு வழியில்
உள்ளே கொண்டு வந்தார்.
இவர் கன்னட செட்டியார்
சமூகத்தைச் சேர்ந்தவர்.
அவர் இதுவரை
ஒருநாள் கூட தெருவில்
இறங்கி துப்புரவு
பணிகளைச் செய்தது
இல்லை என்கிறார்கள்
மாநகராட்சி ஊழியர்கள்.
அவர் செய்ய வேண்டிய
வேலைக்கு தினக்கூலி
அடிப்படையில்
அதிகாரப்பூர்வமற்ற
முறையில் ஒருவரை
நியமித்துள்ள வெங்கடேஷ்,
அதற்காக அந்த ஊழியருக்கு
மாதந்தோறும் 10 ஆயிரம்
ரூபாய் வழங்கி வந்துள்ளார்.
இவரோ, கொண்டலாம்பட்டி
மண்டல அலுவலகத்தில்
உதவியாளராக ‘ஒயிட் காலர்’
வேலையில் இருந்து
வந்துள்ளார்.

 

காலையில் அலுவலகத்திற்கு 10.30 மணிக்குதான் பணிக்கு வருவாராம். மதியம் 1.30 மணிக்கு உணவுக்காக வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் செல்பவர் அதன்பின் மாலை 4.30 மணிக்குதான் அலுவலகம் திரும்புவார் என்கிறார்கள். மாலை 6.30 மணிக்கு வீட்டுக்குக் கிளம்பி விடுவார் என்கின்றனர். சம்பள பட்டியல் ஆவணங்களை வங்கிக்குக் கொண்டு செல்லும் அவர், பாதி வழியிலேயே வீட்டுக்குச் சென்று போலி பட்டியல் மற்றும் போலி காசோலைகளை தயாரித்து அத்துடன் இணைத்து வங்கியில் சமர்ப்பித்து வந்துள்ளதையும் இப்போது கண்டுபிடித்துள்ளனர். அதனால்தான் அவர் எப்போது வங்கிக்குச் சென்றாலும் திரும்பிவர பல மணி நேரம் ஆகிறது என்பதையும் இந்த மோசடி மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்.

 

துப்புரவு ஊழியர் வெங்கடேஷ் மட்டுமே இந்த மோசடியைச் செய்தாரா? அல்லது இதன் பின்னணியில் உயரதிகாரிகள், சக அலுவலக ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் ஊழியர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.

 

– பேனாக்காரன்