ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.68 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
கடந்த 2016ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி, உடல்நலக் குறைவால் அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஆர்கே நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதமே அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. பணப்பட்டுவாடா புக £ர் காரணமாக அப்போது திடீரென்று இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அந்த தொகுதிக்கு இன்று (டிசம்பர் 21, 2017) வாக்குப்பதிவு நடந்தது.
இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முறைகேடுகளை தடுக்க, ஒவ்வொரு வாக்குச்சாவடியும் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
வாக்காளர்களுக்கு, அவர்கள் ஓட்டுப் போட்டதற்கான ஒப்புகைச் சீட்டும் வழங்கப்பட்டது. வாக்குப்பதிவுக்காக மொத்தம் 295 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 320 ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மதியம் வரை விறுவிறுப்பாக நடந்தது. அன்பின் சற்று மந்தமாக நடந்தது. புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விகிதம் அறிவிக்கப்பட்டது.
மாலை 4 மணியளவில் 65 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. அப்போதுவரை வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது. எவ்வளவு நேரம் ஆனாலும் அவர்கள் அனைவரும் வாக்களிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
மாலை 5 மணி நிலவரப்படி 74.5 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியிருந்தது. டோக்கன் பெற்றவர்கள் இரவு 7.40 மணி வரை வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு முழுமையாக முடிவடைந்த நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.68 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையடுத்து, அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரிக்கு காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் அலுவலர் கார்த்திகேயன், காவல்துறை இணை ஆணையர் சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு உறுதி செய்தனர்.
வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதிமுக ஆர்கே நகர் மண்ணின் மைந்தரான மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ள இந்த தொகுதியை கைப்பற்றுவது யார் என வரும் 24ம் தேதி தெரியும்.