Thursday, July 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மக்களே போல்வர் கயவர்…! ஊடகங்களும் அத்தகையவர்களே!!

மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் பத்து நாள்களில் வர உள்ள நிலையில், செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், தேர்தல் கள ஆய்வு நிறுவனங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி நிறுவனம், பெடரல் இணைய ஊடகம் மற்றும் ஏபிடி நிறுவனமும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது.

மக்களவைத் தேர்தல்-2024ல்
தமிழகத்தில், திமுக 38.35 சதவீத
வாக்குகளைப் பெறும் என்றும்,
அதிமுக 17.26 சதவீத வாக்குகளைப் பெறும்
என்றும் தெரிவிக்கிறது,
புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு.
நாம் தமிழர் கட்சி 7.26 சதவீத வாக்குகளைப்
பெற்று நான்காம் இடத்தைப் பிடிக்கும்
என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால்,
தொண்டர்கள் மற்றும் கட்டமைப்பு
ரீதியாக வலிமையாக உள்ள
அதிமுகவைக் காட்டிலும்,
இன்று வரை நோட்டாவுடன் மட்டுமே
மல்லுக்கட்டி வரும் பாஜக 18.48 சதவீத
வாக்குகளைப் பெற்று, இரண்டாம் இடம்
பிடிக்கும் என்றும் புதிய தலைமுறை
தெரிவித்துள்ளது.

இப்படியொரு முடிவை வெளியிட்டதைப் பார்த்ததும் அந்த நிறுவனத்தின் ‘நேர்படப்பேசு’ நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் விமர்சகர்கள் எல்லோருமே குபீர் என்று சிரித்து விட்டனர். குறிப்பாக, பத்திரிகையாளர் ஷபீர் அஹமது, விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் சிரிக்காமலேயே பு.த. சேனலை நேரலையிலேயே பங்கம் செய்தனர்.

பத்திரிகையாளர் ஷபீர் அஹமது கூறுகையில், ”திமுக கூட்டணிக்குக் கிடைக்கும் வாக்குகள் குறித்த கருத்துக் கணிப்பை வேண்டுமானால் தமிழ்நாட்டில் எடுத்திருக்கலாம் என்று கருத முடிகிறது. ஆனால் பாஜகவுக்கு 18.48 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்ற முடிவைப் பார்க்கையில், இந்த கருத்துக்கணிப்பு அனேகமாக மத்தியபிரதேசத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

கடந்த 2019இல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெறும் 3 சதவீத வாக்குகள்தான் கிடைத்தது. அங்கிருந்து தடாலடியாக 18 சதவீதம் வரை வாக்கு சதவீதம் உயர்ந்துவிட்டதாக கூறுவது எப்படி சாத்தியம் ஆகும்? அப்படி எனில் ஏதாவது ஒரு அலை இருக்க வேண்டுமே?,” என்று ‘டார்க் காமெடி’ பாணியில் பகடி செய்தார்.

நெறியாளர் கார்த்திகேயனோ, ”மத்திய அரசின் திட்டங்கள், நரேந்திர மோடியின் ஆளுமை ஆகியவற்றின் மூலம் இந்த வளர்ச்சி சாத்தியம் ஆகாதா?,” என முட்டுக் கொடுத்தார். (பாவம்… ‘டாக்பேக்’கில் சொல்வதைத்தானே அவர் கேட்க முடியும். அவ்வ்வ்வ்வ்….).

மீண்டும் தொடர்ந்தார் பத்திரிகையாளர் ஷபீர் அஹமது…

”சரி. பத்து ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கிறார்கள் எனும்போது அதற்கான தாக்கம் இருக்கும்தான். மத்திய அரசின் திட்டங்களால் செல்வாக்கு உயர்ந்து விட்டதாக ஒரு பேச்சுக்கு ஒப்புக்கொண்டாலும், ஓரளவுதான் வாக்கு சதவீதம் உயருமே தவிர, போன தேர்தலுடன் ஒப்பிடுகையில் வரும் தேர்தலில் 15 சதவீதம் உயர்ந்துவிட்டதாகக் கூறுவது நம்பும்படியாக இல்லை,” என, ‘அதுக்குனு ஒரு நியாயம் வேணாமாடா,’ என நடிகர் வடிவேல் பாணியில் இறங்கி (இ)அடித்தார் ஷபீர் அஹமது.

மீண்டும் முட்டுக் கொடுக்க வந்த நெறி(பிறழ்ந்த)யாளர் கார்த்திகேயன், ”சரி. ரீசனபுள் உயர்வு என்றால் எந்தளவு இருக்கும் என்கிறீர்கள்?,” எனக் கேட்டார்.

அதற்கு ஷபீர் அஹமது,
”6 முதல் 8 சதவீதம் வரை
வாக்குகள் உயரும் என்றால் ஓகே.
ஆனால் ஒரேயடியாக 15 சதவீத
வளர்ச்சி என்பதை, அதுவும்
அதிமுகவை பின்னாடி தள்ளிவிட்டு
பாஜக முன்னுக்கு வந்துவிட்டதாகக்
கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
இது யாருடைய கருத்து?
தமிழ்நாட்டில் பாஜக வளர்கிறது என்ற
செயற்கையான தோற்றத்தை உருவாக்க
முயல்கிறார்கள். களத்தில் இறங்கி
வேலை செய்யும் அரசியல்வாதிகளுக்கு
இந்த உண்மை நன்றாகவே தெரியும்,”
என பொட்டில் அடித்தாற்போல் சொன்னார்.

மேலும் அவர்,
”18 சதவீத வாக்குவங்கி இருந்தால்,
இந்நேரம் பாஜக களத்தில் இறங்கி
இருக்க வேண்டுமே. கூட்டணிக்கு
வாங்க… வாங்க… என்று ஏன்
பிற கட்சிகளுக்காக காத்துக்
கொண்டிருக்க வேண்டும்?
இதுவரை ஒரு கட்சியுடனும் கூட்டணி
முடிவாகவில்லையே,” என
பிளந்து கட்டினார் ஷபீர்.

அதற்கு நெறியாளர் (?) கார்த்திகேயன், ”அதான், ஜி.கே.வாசன் போயிருக்கிறாரே…,” என கூச்சமே இல்லாமல் பாஜகவுக்கு முரட்டு முட்டுக் கொடுத்தார்.

இதற்கும் அசராத ஷபீர் அஹமது, இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியை துள்ளத் துவள வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் போல புதிய தலைமுறையை அடித்துத் துவைத்துக் காயப் போட்டார்.

ஜி.கே.வாசன் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்து விட்டாரே என்ற கேள்விக்கு ஷபீர், ”நீங்க கூப்பிடலைனாலும் அவர் போயிருப்பாரு. ஜி.கே.வாசனின் நிலைமை அப்படிதான் இருக்கு. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ள பகுதி என்றால் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சொல்லலாம்.

அதிமுகவுக்கு 17 சதவீதம்தான் வாக்குகள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் சொல்கிறீர்கள். இதை வைத்துக்கொண்டு 4 முதல் 6 தொகுதிகளில் எப்படி அந்தக் கட்சி ஜெயிக்கும் என்று சொல்கிறீர்கள்?

பாஜகவுக்கும் 4 முதல் 6 சீட் கிடைக்கும் என்றால், எந்தெந்த தொகுதிகளில் வெற்று பெறுவார்கள் என்று ஏன் கருத்துக்கணிப்பில் சொல்லவில்லை? அவர்களுக்கு கன்னியாகுமரியில்தான் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. அதைக்கடந்து எப்படி இத்தனை தொகுதிகளில் வெற்றி பெற முடியும்? அந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது எனில், மத்திய அமைச்சர் முருகன் தமிழ்நாட்டிலேயே போட்டியிட்டிருப்பாரே? இன்னும் பல தலைவர்கள் போட்டியிட முன்வந்திருப்பார்கள்.

அதிமுக வாக்குகள் சிறிதளவு பாஜகவுக்கு போயிருக்கலாம். இந்துத்துவா ஆதரவாளர்களில் கொஞ்சம் போயிருக்கலாம். அதிமுகவை ஒதுக்கிவிட்டு, பாஜக பேரெழுச்சியாக வளர்ந்த கட்சி என்று இந்த கருத்துக்கணிப்பு சித்தரிக்கிறது. 18 சதவீத வாக்குகள் பெறும் எனில், இந்நேரம் கமலாலயத்திற்கு சீட் கேட்டு பலர் வந்து நின்றிருக்க வேண்டும் அல்லவா?,” என்று புதிய தலைமுறையின் போலி கருத்துக்கணிப்பையும், பாஜகவையும் ஒருசேர கழுவி ஊற்றினார்.

அதே நேரலையில் பங்கேற்ற விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநாவாஸ், ”பாஜகவுக்கு 1.8 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்பதற்குப் பதிலாக 18 சதவீதம் என்று சொல்லி விட்டீர்கள் என நினைக்கிறேன்,” என அவரும் தன் பங்கிற்கு பங்கம் செய்தார்.

தமிழகத்தில், பாஜகவுக்கு செல்வாக்கு இருப்பதாக போலி சித்திரத்தை கட்டமைப்பதன் மூலம் பிற கட்சிகள் தங்களுடன் கூட்டணிக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பாகக் கூட இருக்கலாம். வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளதால் பாரிவேந்தர் நிறுவனம் இவ்வாறான போலி கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கலாம் என்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, எக்ஸ் தளத்தில் அதிமுக ஐ.டி. பிரிவு நிர்வாகிகள், ”#புறக்கணிப்போம்_புதியதலைமுறை” மற்றும் ”#பாலியல்தொழில்_புதியதலைமுறை” என ஹேஷ்டேக்குகளை பதிவிட்டிருந்தனர். இந்த ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்தன.

இலைக்கட்சியின் சில குசும்பான தொண்டர்கள், புதிய தலைமுறை சேனல் உரிமையாளரும், எம்.பி.,யுமான பாரி வேந்தர், உள்ளாடையுடன் ஒரு அறையில் பெண்ணுடன் இருப்பது போன்ற காணொலி காட்சிகளையும், ‘#வெண்ஜட்டி_வேந்தர்’ என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டிருந்தனர்.

பாரிவேந்தர், புதிய தலைமுறை சேனல் ஆகியவற்றை கிண்டலடித்து திமுகவினரும் மீம்ஸ்களை தட்டி விட்டிருந்தனர்.

அந்தரங்கமாக நடக்கும் ஒருவரின் தனிப்பட்ட விவகாரங்களை அம்பலப்படுத்துவது தேவையற்றது என்பதே நமது கருத்து. ஆனால், போலி கருத்துக்கணிப்பை கண்டிக்கும் சாக்கில் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து உடையாரின் அரை நிர்வாண காணொலி காட்சிகளையும் பதிவு செய்திருந்தது அருவருப்பானதும் மட்டுமின்றி மலிவான அரசியலும் கூட.

தேர்தல் நெருக்கத்தில், முன்னணி காட்சி ஊடகங்கள் இத்தகைய கருத்துக் கணிப்புகளை வெளியிடுவது இயல்பான நடைமுறைதான். ஆனால், ஊடக முதலாளிகள் நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவராக இருக்கும்பட்சத்தில் அவர்களின் ஊடகங்களில் இருந்து நேர்மையான என்பதை விட ஓரளவுகூட நியாயமான முடிவுகளை எதிர்பார்க்கவே முடியாது.

எது செய்தி? எது செய்தி அல்ல? என்று பகுத்து, நுணுகி ஆராய்ந்து வெளியிடும் நிலை அடியோடு அருகி, சந்தையை பேசுபொருளாக மட்டுமே வைத்திருக்கச் செய்வது என்ற முடிவுக்கு காட்சி ஊடகங்கள் எப்போதோ வந்துவிட்டன. அதனால் ஊடகங்கள் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்துத்திணிப்பை வெளியிடுகின்றன.

ஊடகங்களின் நாடி நரம்பெல்லாம் டிஆர்பி ரேட்டிங் வெறி ஊறிப்போன இன்றைய நிலையிலும்கூட, வணிக நோக்கமின்றி, கொள்கையில் சமரசமின்றி (தொலைக்காட்சிக்கு மட்டும்) செயல்படும் ஒரே செய்தி நிறுவனம் மக்கள் தொலைக்காட்சி மட்டும்தான் என்பது சற்று ஆறுதலான சங்கதி.

அண்மையில், சேலத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஏ.வீ.ராஜூ, 2017ஆம் ஆண்டு அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தபோது, அப்போதைய ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர், குறிப்பிட்ட ஒரு நடிகையை ‘வேண்டும்’ என்று கேட்டதாக பரபரப்புக்காக கொளுத்திப் போட்டார்.

காட்சி ஊடகங்கள் படம் பிடிக்கின்றன என்பதை மறந்து, துடுக்காகப் பேசி வம்பில் சிக்கிக் கொண்டார். அவர்தான் சொன்னார் என்றாலும்கூட, அதை வெளியிடும் முன்பாக ஊடகத்தினர் ஏ.வீ.ராஜூவிடம் மீண்டும் ஒருமுறை வெளியிடலாமா என்று கேட்டிருக்கலாம்.

அவருக்கும், மாஜி அதிமுக எம்எல்ஏவுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருக்கிறது. அதற்காகத்தான் ஊடகத்தினரை அழைத்திருந்தார். ஆனால், ஊடகங்கள் அந்த கருத்தை விட்டுவிட்டு நடிகை விவகாரத்தை துண்டாக எடிட் செய்து வெளியிட்டு பரபரப்பாக்கி விட்டனர். இந்த விவகாரத்தில் ஊடகங்கள் கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து. மாற்றுக் கருத்துகளும் எழலாம்.

காட்சி ஊடகங்களைப் பொருத்தவரை, எல்லாமே பேட்டி அளிப்பவரின் பாடுதான். மொத்த ரிஸ்க்கும் அவருடையதுதான். குறைந்தபட்சம் அவர்கள் எதிர் தரப்பின் கருத்தைக்கூட அறிய முற்படுவது இல்லை அல்லது மெனக்கெடுவது இல்லை.

ஆனால் அச்சு ஊடகத்தினர், எழுதுவதற்கு முன்பாக யோசிக்கின்றனர். எதிர்தரப்பு கருத்தையும் அறிய குறைந்தபட்ச முயற்சிகளையாவது மேற்கொள்கின்றனர். இன்றைக்கும் அச்சு ஊடகங்கள் மிகச்சிறு அளவேனும் அறத்தைத் தக்க வைத்திருக்கின்றன எனலாம்.

எனினும், அச்சு ஊடக முதலாளிகளோ, காட்சி ஊடக முதலாளிகளோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் இயக்க சார்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலையில், அவர்களின் ஊடகங்கள் வாயிலாக நாம் ஒருபோதும் சார்புத்தன்மையற்ற செய்திகளை எதிர்பார்க்கவே முடியாது என்பதே உண்மை.

கடந்த பதினைந்து ஆண்டுக்கு முன்பாகவே ஊடகங்கள், ‘பெய்டு நியூஸ்’ எனும் மோசமான பாதைக்குத் திரும்பிவிட்டன. தேர்தல் காலங்களில், அரசியல் கட்சிகள் வேட்பாளருக்காக விளம்பரங்கள் வெளியிட்டால் அதற்கான செலவுகளை, அவர்களின் தேர்தல் செலவுக்கணக்கில் தேர்தல் ஆணையம் சேர்த்து விடும் அபாயம் இருக்கிறது.

அதனால் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து, யதார்த்தமான பரப்புரை போல தங்களை புரமோட் செய்யும் உத்தியைப் பின்பற்றி வருகின்றன.

எல்லா பத்திரிகைகளிலும்
இந்த நடைமுறை உண்டு.
அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை
செய்திகளை ஒரு மாதத்திற்கு வெளியிட,
முன்னணி பத்திரிகை நிறுவனங்கள்
ஒவ்வொரு வேட்பாளரிடமும்
5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய்
வரை வசூலிக்கின்றன.
காட்சி ஊடகங்களோ,
பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு
அரை மணி நேர ஸ்லாட்டுகளை
சிறப்புப் பார்வையாக ஒதுக்கி
கல்லா கட்டுகின்றன.

பெய்டு நியூஸ் உத்தியில்,
ஊடக நிறுவனங்களுக்கு இன்னொரு
சிறப்பான ஆதாயமும் இருக்கிறது.
அதாவது, பெய்டு நியூஸ் மூலம்
பெறப்படும் வருமானம்
அனைத்துமே கள்ளக்கணக்குதான்.
இதற்கெல்லாம் எந்த நிறுவனமும்
கட்சிகளுக்கு ரசீதும் கொடுப்பதில்லை;
அவர்களும் கேட்பதில்லை.

ஆனால், பெய்டு நியூஸ்களை
ஆய்வு செய்வதற்காக மாவட்டந்தோறும்
செய்தி மக்கள்தொடர்பு அலுவலகங்களில்
ஊழியர்களை நியமித்து,
பத்திரிகைகளில் வரும் பெய்டு நியூஸ்களை
ஸ்கேல் வைத்து அளந்து,
அதற்கேற்ப விளம்பர கட்டணத்தைக்
கணக்கிடும் பணியும் நடைபெறுகிறது.
எனினும், இவை வெறும்
கண்துடைப்புதான்.

அரசியல் கட்சிகள் மற்றும் ஊடக வியாபாரிகள் கூட்டணி வைத்துக்கொண்டு செய்து வரும் இந்த கோல்மால் எல்லாம் தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும். ஆனாலும் ஆணையம் கண்டுகொள்வதே இல்லை. அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம், ஊடக முதலாளிகளின் ஒரே இலக்கு, ஜனநாயகத்தின் போர்வையில் மக்களைச் சுரண்டுவது மட்டுமே.

தேர்தல் காலங்கள் மட்டுமின்றி, தினத்தந்தி, தினகரன், மாலைமலர், தமிழ்முரசு ஆகிய நாளிதழ்கள் 300 முதல் 500 பிரதிகள் வாங்கினால் படத்துடன் செய்தி வெளியிடுவதை அன்றாட நடைமுறையாகவே வைத்திருக்கின்றன. வாசகர்களால் இது ஒரு ‘பெய்டு நியூஸ்’ என்று சர்வ நிச்சயமாக கண்டுபிடிக்கவே முடியாது.

இந்த நடைமுறையால்
ஒரு மிகப்பெரும் ஆபத்து இருப்பதை
ஊடகங்கள் வசதியாக மறந்து விடுகின்றன.
பெய்டு புரமோஷன் மூலம்,
சட்ட விரோதச் செயல்களைச்
செய்வோரும் கூட தங்களை
நாயகர்களாக காட்டிக்கொள்ள முடியும்.

இப்படித்தான் ஐஎப்எஸ் என்ற
முதலீட்டு நிறுவனம் வழங்கும்
ஆலோசனைகளை நாணயம் விகடன்
தொடர்ந்து பெய்டு நியூஸ் என்று வெளியே
தெரியாத வகையில் பிரசுரித்து வந்தது.
கடந்த ஓராண்டுக்கு முன்பு அந்த நிறுவனம்
பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக்
கொண்டு ஓட்டம் பிடித்து விட்டது.

அதேபோல, கோவையில் குறிப்பிட்ட ஒரு சர்வோதய சங்கத்தின் மீதான பல கோடி ரூபாய் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அந்த சங்கத்தின் செயலாளர் பெய்டு நியூஸ் உத்தி மூலம் மாலைமலர் இதழில் தன்னை நாயகராக சித்தரிக்கும் விதமாக செய்தியாக வெளியிட்டு வருகிறார். நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது? என்பதுபோல் அந்தப் பத்திரிகையும் குற்ற உணர்வே இல்லாமல் பணத்துக்காக புரமோஷன் செய்கிறது.

எத்தனை லாபம் கிடைப்பதாக இருப்பினும், பெய்டு புரமோஷன் நடைமுறையை உடனடியாக ஊடகங்கள் கைவிட்டாக வேண்டும். அதுவே, நல்லதொரு சமூகத்தை கட்டமைப்பதற்கான வழியாக அமையும்.

ஆக, ‘கண்களால் பார்ப்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரித்து அறிவதே மெய்’ என்ற நிலைக்கு வாசகர்களும், திருவாளர் பொதுஜனங்களும் தங்களை தெளிவுபடுத்திக் கொள்வது கட்டாயம் ஆகிறது.

மக்களே போல்வர் கயவர். ஊடகங்களும் அத்தகையவர்களே.

 

– பேனாக்காரன்

%d bloggers like this: