எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு ஜவுளிக்கடை, பால் நிறுவனத்தில் சொற்ப ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக அதிகாரிகள் மூலம் ஆசை வார்த்தை கூறி வருகிறது சேலம் மாவட்ட நிர்வாகம். கொத்தடிமை வேலையில் சேர்வதற்காகவா எங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்பு படிக்க வைத்தோம்? என்று விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சென்னை – சேலம் இடையிலான பசுமைவழி விரைவுச்சாலை திட்டம் குறித்த அறிவிப்பு வந்த நாள் முதலே முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பாரத்மாலா பரியோஜனா என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள பசுமைவழி விரைவுச்சாலைக்காக, சேலம் மாவட்டத்தில் 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 36.3 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைகிறது.
இந்த சாலை 70 மீட்டர் அகலத்தில் 8 வழிச்சாலையாக விரிகிறது. இதில், இரண்டு புறமும் அமைய உள்ள சர்வீஸ் ரோடும் அடங்கும். சாலையின் 95 விழுக்காடு சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள் வழியாகச் செல்கிறது. அதுதான் விவசாயிகளின் கொந்தளிப்புக்கு முக்கிய காரணம்.
விவசாயிகளின் குமுறல்களுக்கு சற்றும் செவி மடுக்காத சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, காவல்துறையினரின் துணையோடு விவசாயிகளிடம் இருந்து நிலத்தை அடித்துப் பிடுங்காத குறையாக ஆர்ஜிதம் செய்து முடித்தார். விளை நிலத்தில் ஒவ்வொரு 25 மீட்டர் தூரத்திற்கும் 70 மீட்டர் அகலத்திற்கு அளந்து முட்டுக்கற்கள் நடப்பட்டு விட்டன.
நிலம் அளவீடுக்காகச் செல்லும் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் காவல்துறையினர் உடன் செல்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய்கூசாமல் சொல்கிறார்.
விளை நிலத்தில் திபுதிபுவென 500 காவல்துறையினர் பூட்ஸ் கால்களுடன் குதித்து ஓடுவது என்பது, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக யாரும் பேசிவிடக்கூடாது என்பதை உளவியல் ரீதியில் முறியடிக்கத்தானே தவிர, வேறு ஒன்றும் இல்லை.
நிலம் அளவீடு முடிந்த பின்னர் கடந்த சில நாள்களாக ட்ரோன் கேமரா மூலம், ஒவ்வொரு சர்வே எண்ணிற்கு உள்பட்ட நிலத்திலும் என்னென்ன பயிர்கள் விளைந்துள்ளன? என்னென்ன வகையான மரங்கள்? எத்தனை மரங்கள்? முட்டுக்கற்கள் பாதுகாப்பாக உள்ளனவா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 21 லட்சம் முதல் அதிகபட்சமாக 9.04 கோடி ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும் என்றார். முதிர்ந்த தென்னை மரங்களுக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்தார்.
இந்த இழப்பீடு குறித்த அறிவிப்பு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாறுபடுவது விவசாயிகளிடையே மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்னை மரத்திற்கு 80 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். ஒரே தென்னைக்கு இடத்திற்கு இடம் இழப்பீடு எப்படி மாறுபடும் என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது இப்படி என்றால், பசுமைவழி விரைவுச்சாலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லும் சில தகவல்களில் நமக்கும் ஆழமாக சில சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஜூன் 30ம் தேதி, விமானத்தில் சேலம் வந்திறங்கிய எடப்பாடி பழனிசாமி, எட்டு வழிச்சாலை எதற்காக போடப்படுகிறது என்பதற்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர், தற்போது தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2.50 கோடியாக அதிகரித்துள்ளது. அதற்கேற்ப புதிய சாலையை போட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்.
ஒருவேளை, அதுதான் உண்மையோ என்று கருதி நாம் தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஆணையத்தின் தரவுகளை ஆய்வு செய்தோம். அதில், 1.4.2017ம் தேதி நிலவரப்படி, 11963437 மோட்டார் சைக்கிள்கள், 2871938 ஸ்கூட்டர்கள், 5151927 மொபட்டுகள் என மொத்தம் 19987302 வாகனங்கள் பதிவு பெற்றுள்ளன.
இவற்றுடன் 2162106 கார்கள், 45983 ஜீப்புகள், 276017 டிராக்டர்கள் மற்றும் இதர வாகனங்களையும் சேர்த்தால் மொத்தம் 2 கோடியே 26 லட்சத்து 10 ஆயிரத்து 704 வாகனங்கள் உள்ளன. இவை அனைத்துமே சரக்கு போக்குவரத்தற்ற வாகனங்கள் பட்டியலில் உள்ளன.
டிரான்ஸ்போர்ட் பட்டியலில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் 30507, சிற்றுந்துகள் 4218, ஒப்பந்த போக்குவரத்து வாகனங்களான ஆட்டோ ரிக்ஷாக்கள் 251056, டாக்ஸிகள் 4403, மோட்டார் கேப்கள் 114082, கல்வி நிலைய பேருந்துகள் 36580 மற்றும் சரக்கேற்றும் வாகனங்களான லாரிகள் 255706, நேஷனல் பர்மிட் லாரிகள் 88971, இலகு ரக வணிக வாகனங்கள் 236124 உள்பட மொத்தம் 12 லட்சத்து 34 ஆயிரத்து 360 வாகனங்கள் பதிவு பெற்றுள்ளன. (பார்க்க: www.tn.gov.in/sta)
இதில் சரக்கு ஏற்றும் வாகனங்கள் எண்ணிக்கை மொத்தமே 670530 என்றுள்ள நிலையில், இதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமைவழி விரைவுச்சாலை தேவையா? என்ற சந்தேகமே எழுகிறது.
பதிவு பெற்ற அனைத்து வகை வாகனங்களின் எண்ணிக்கையைச் சொல்லி முதல்வர் தனது செயல்பாட்டை நியாயப்படுத்த முயற்சிக்கிறார் என்றே தோன்றுகிறது.
அடுத்த சந்தேகம், பசுமைவழி விரைவுச்சாலையால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றார் எடப்பாடி பழனிசாமி.
இதே காரணங்களைச் சொல்லித்தான் 1999 – 2004 பாஜக ஆட்சியின்போது தங்க நாற்கர சாலைத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதனால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது என்று பார்த்தோமானால் அதிலும் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
கடைசியாக தமிழ்நாட்டின் நிகர உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது 2010-11 கால க்கட்டத்தில்தான். அப்போது நம் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 13.6%.
கடந்த 2011-12ல் 7.4%, 2012-13ல் 2.8%, 2013-14ல் 7.5%, 2014-15ம் ஆண்டில் 7.4%, 2015-16ம் ஆண்டில் 4.3%, 2016-17ம் ஆண்டில் 7.7% ஆக வளர்ச்சி விகிதம் உள்ளது. ஆக, தங்க நாற்கர சாலையால் அப்படி ஒன்றும் மாநிலம் பெரிதாக வளர்ச்சியைக் கண்டிடவில்லை.
திமுக, அதிமுக ஆகிய இரண்டு ஆட்சியிலுமே வளர்ச்சியின் சராசரி விகிதம் 8.5% என்ற அளவில்தான் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
அப்படியெனில், பசுமைவழி விரைவுச்சாலையால் மட்டுமே எப்படி உள்நாட்டு நிகர உற்பத்தி விகிதம் அதிகரித்து விடும்? தரமான சாலை அமைந்தும், ஸ்திரமற்ற ஆட்சி நிர்வாகம் இருந்தால் முதலீடுகள் குவிந்து விடுமா? என்பதை எடப்பாடியாரின் சுயசிந்தனைக்கே விட்டுவிடுவோம்.
மூன்றாவது சந்தேகம், சென்னை – சேலம் பசுமைவழி விரைவுச்சாலையால் பயண தூரம் 277.3 கி.மீ. ஆகவும், பயண நேரம் 2 மணி 15 நிமிடங்களாகவும் குறைகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி கரடி விடுகிறார்.
இப்போதுள்ள சேலம் – உளுந்தூர்பேட்டை – சென்னை இடையிலான பயண தூரம் 334 கி.மீ. அதேநேரம், புதிதாக அமையவுள்ள பசுமைவழி விரைவுச்சாலை என்பது சேலத்தில் இருந்து சென்னையை தொடுவதற்கு முன்பே படப்பையில் முடிந்து விடுகிறது.
படப்பையில் இருந்து சென்னைக்குச் செல்ல 37 கி.மீ. தூரம் கடக்க வேண்டும். ஆக பசுமைவழி விரைவுச்சாலையில் சேலம் – சென்னை இடையிலான மொத்த பயண தூரம் 314.3 கி.மீ. (277.3+37) ஆகிறது. எனில், பசுமைவழி விரைவுச்சாலையால் மிச்சமாவது வெறும் 19 சொச்சம் கி.மீ. மட்டுமே. இந்த தொலைவைக் குறைப்பதற்குத்தானா மக்களின் வரிப்பணம் 10 ஆயிரம் கோடியை விரையமாக்குகிறார் எடப்பாடி?
பசுமைவழி விரைவுச்சாலை தேவைக்கான இன்னொரு முக்கிய காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னது, பயண தூரம் குறைவதால் வாகனங்களின் தேய்மானம் மற்றும் எரிபொருள் செலவு ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் வரை மிச்சமாகும் என்பதுதான்.
பெட்ரோல், டீசல் மீது நடுவண் அரசு விதிக்கும் 23% சுங்க வரியையும், மாநில அரசு விதிக்கும் 34% வாட் வரியையும் கணிசமாக குறைத்தாலே எரிபொருள்கள் விலை பாதியாகக் குறைந்து விடும்.
அல்லது, குறைந்தபட்சம் அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தாலாவது அதிகபட்சம் 28% வரி வரம்புக்குள்ளேயே சுருங்கி விடுமே!. இருக்கின்ற சாலைகளை தரப்படுத்தினாலே வாகனங்களையும் தேய்மானத்தில் இருந்து மீட்க முடியும்.
இப்படி முதல்வர் எடப்பாடி சொன்ன ஒவ்வொரு காரணத்திலும் ஏகப்பட்ட முரண்களும், பொய்களும் ஒளிந்து கிடக்கையில், அப்படியொரு பசுமைவழி விரைவுச்சாலை தேவைதானா?
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்ட நிர்வாகம், நிலம் கையகப்படுத்திய விவசாயிகளின் வீடுகளுக்கு வருவாய்த்துறை ஊழியர்களை நேரடியாக அனுப்பி, குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் எத்தனை பேர்? ஆண், பெண் எத்தனை பேர்? படிப்பு விவரங்கள், வேலை விவரங்களை கேட்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் 29ம் தேதி வருவாய்த்துறை பெண் ஊழியர் ஒருவர் இந்த தகவல்களைச் சேகரிப்பதற்காக குள்ளம்பட்டி பகுதிக்குச் சென்றபோது அங்குள்ள விவசாயிகள் அவரை கேள்விமேல் கேள்வி கேட்டு விரட்டி அடித்தனர்.
சில நாள்களுக்கு முன்பு, சேலத்தை அடுத்த உடையாப்பட்டியில் தனியார் வேலைவாய்ப்புக் கூட்டம் நடந்தது. அந்த முகாமில் ஹட்சன் டெய்ரி, போத்தீஸ், சென்னை சில்க்ஸ், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கம்ப்யூட்டர் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆள்களை நேரடியாக நியமனம் செய்தன.
நிலம் கொடுக்கும் விவசாயிகளின் வீடுகளில் படித்த பிள்ளைகள் இருந்தால் அவர்களை இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும்படியும் விஏஓ உதவியாளர்கள் மூலம் சொல்லி அனுப்பியுள்ளனர். இதன்மூலம் எங்களை எடப்பாடி அரசாங்கம் கொத்தடிமையாக்கப் பார்க்கிறது என்று மேலும் கொந்தளிப்பில் உள்ளனர்.
மின்னாம்பள்ளியைச் சேர்ந்த வீரமணி, விஜயா ஆகியோர் கூறுகையில், ”எட்டு வழிச்சாலையால் எங்களுக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் பறிபோகுதுங்க. பாக்கு, தென்னை, மா என பழமரங்களும் போகுது. இந்த ரோடு மக்களுக்காகத்தான்னு ஆரம்பத்துல நம்பினோம். இப்போதான் தெரியுது… இது ஏதோ ஜிண்டால் கம்பெனிகாரங்க கஞ்சமலையில் இருந்து கனிம வளங்களை கொள்ளை அடிக்கறதுக்காகவே போடுறாங்கனு.
எட்டு வழிச்சாலைதான் வேணுங்கிறவங்க நிலத்துல வௌஞ்ச எதையும் தின்னக்கூடாது. ரோடுல என்ன வருமோ அதையே திங்க சொல்லுங்க. இது போதாதுனு விஏஓ உதவியாளர் ஒருத்தர் வந்து, உடையாப்பட்டியில் தனியார் வேலைவாய்ப்புக் கூட்டம் நடக்குது. அதுல உங்க புள்ளைங்கள கலந்துக்கச் சொல்லுங்கனு சொல்லிட்டுப் போனாரு.
அங்கே போயி பார்த்தால் சின்னச்சின்ன ஜவுளிக்கடைகள்தான் ஆளெடுக்க வந்திருந்தாங்க. இந்த அரசாங்கம் எங்களோட நிலத்தையும் புடுங்கிக்கிட்டு, அய்யாயிரம்… ஆறாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு அடிமையாக விற்கவும் பார்க்குதுங்க. எங்க உசுரே போனாலும் எங்களுக்கு எங்க நிலம்தாங்க முக்கியம்,” என ஆவேசமாக கூறினர்.
குள்ளம்பட்டியைச் சேர்ந்த சித்ரா கூறுகையில், ”விஏஓ ஆபீசிலேர்ந்து வருவதாகச் சொல்லிக்கிட்டு ஒருத்தரு வந்தாருங்க. அவர் ஏதோ தனியார் நிறுவனங்கள் ஆளெடுக்கிறதா சொல்லி, விருப்பம் இருந்தால் உங்க பசங்களும் அதில கலந்துக்கலாம்னு சொன்னாங்க. எங்களோட விவசாய நிலத்தை நம்பித்தான் நாங்க எங்க பையனை பி.இ. படிக்க வெச்சோம். மகளை கல்லூரிக்கு அனுப்பியிருக்கோம்.
எங்க புள்ளைங்களுக்கு நல்ல வேலை வாங்கித்தர எங்களுக்குத் தெரியும். இந்த அரசாங்கம் எது சொன்னாலும் அதை கேள்வி கேட்காமல் ஒத்துக்கணும்னு அடிமை மாதிரி நடத்தப் பாக்குதுங்க. நிலத்தை எடுக்க யார் வந்தாலும் தீக்குளித்து செத்தாலும் சாவோமே தவிர, நிலத்தை தொட விடமாட்டோம்,” என்றார்.
அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவரிடமும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பற்றி வருவாய்த்துறை ஊழியர்கள் தகவல் சொல்லி இருக்கிறார்கள்.
”நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு குடும்பத்துல ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். வெறும் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு தனியாரிடம் எப்படி வேலை செய்வது? தினமும் பஸ் செலவுக்குக்கூட அந்த சம்பளம் பத்தாது. அதனால் வேலைவாய்ப்பு முகாமிற்கு எங்கள் பிள்ளைகளை அனுப்பவில்லை,” என்றார் செல்வி.
குள்ளம்பட்டி பகுதி விவசாயிகள் எட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு நூதன வழிகளில் போராடி வருகின்றனர். அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் கடந்த 27ம் தேதி, பொங்கலிட்டு அம்மனிடம் கோரிக்கை மனு வழங்கி போராட்டம் நடத்தினர். ஜூலை 1ம் தேதியன்று, அதே கோயில் திடலில் கறவை மாடுகளின் கொம்புகளில் கருப்புக் கொடி கட்டி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்தகைய போராட்டத்திற்கும் அனுமதி கிடையாது என்று காரிப்பட்டி காவல்துறையினரும் மிரட்டிவிட்டுச் சென்றனர்.
நில எடுப்புக்கான அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரிடம் கேட்டபோது, ”நிலம் எடுப்புச்சட்டம் பிரிவு 3 (ஏ)-ன் படி, நில எடுப்பின் மீது ஆட்சேபனை இருந்தால் 21 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என ஏற்கனவே பகிரங்கமாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டுவிட்டது. பிரிவு 3 (சி)-ன் படி, ஆட்சேபனை மனுக்கள் மீது சட்டப்பூர்வ விசாரணை ஜூலை 6ம் தேதியும், அடுத்தக்கட்டமாக 10ம் தேதியும், சில பகுதிகளுக்கு 13ம் தேதியும் நடத்தப்பட உள்ளது.
இதன் விசாரணை முடிவுகள் பிரிவு 3 (டி)&ன் படி, கெசட்டில் வெளியிடப்படும். இறுதிக்கட்டமாக யார் யாருக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்ற விவரங்கள் பிரிவு 3 (ஜி)-ன் படி அறிவிக்கப்படும். நிலம் கொடுத்தவர்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்பது சட்டத்தில் இடமில்லை. ஆனால் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது,” என்றார்.
– பேனாக்காரன்.