இன்று நடந்த பிளஸ்2 கணித பொதுத்தேர்வில் பழைய வினாத்தாளில் இருந்து ஏராளமான வினாக்கள் கேட்கப்பட்டு இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், இந்த தேர்வில் வெகுவாக சென்டம் பெறுவது குறையும் என்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 1ம் தேதி முதல் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. 9 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். ஏப்ரல் 6ம் தேதி பிளஸ்2 தேர்வுகள் நிறைவு பெறுகின்றன.
பிளஸ்2 மாணவர்களுக்கு இன்று (மார்ச் 12, 2018) கணித பாடத்தேர்வு நடந்தது. இந்த வினாத்தாள் கடினமும் அல்ல; அதேநேரத்தில் மிக எளிமை என்றும் சொல்ல முடியாது என்று கலவையான கருத்துகளை கணித ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த மூத்த கணித ஆசிரியர் ஒருவர் கூறியது:
பத்து மதிப்பெண் வினாக்கள் மிக எளிமையாக இருந்தது. 6 மதிப்பெண் பிரிவில் கடைசியாக ஒரு வினா கேட்கப்பட்டது. அது கட்டாயம் விடை அளிக்க வேண்டிய பகுதி. மிகத்திறமையான மாணவர்கள்கூட நுட்பமாக கவனித்துப் படித்திருந்தால் மட்டுமே சென்டம் பெற முடியும். அல்லது ஆசிரியர்கள் குறிப்பிட்டு அந்த பகுதியை நடத்தியிருக்க வேண்டும்.
கணித பாடத்தில் இரண்டாவது சேப்டரில் மட்டும் மொத்தம் 11 பயிற்சிகள் இருக்கின்றன. அதிலிருந்து 2.8வது அலகில் இருந்து வழக்கமாக ஒரு பத்து மதிப்பெண் வினா அல்லது ஒரு ஆறு மதிப்பெண் வினா மட்டுமே கேட்கப்படும். இந்தமுறை ஒரு பத்து மதிப்பெண் வினா ‘ஓப்பன் சாய்ஸ்’-ல் வந்து விட்டது.
அதே அலகில் இருந்து ஆறு மதிப்பெண் வினா ஒன்றும் கட்டாயம் விடையளிக்க வேண்டிய பகுதியில் கேட்டுவிட்டனர். இத்தனைக்கும் அந்த 6 மதிப்பெண் வினா, இதற்கு முந்தைய தேர்வுகளில் ஒருபோதும் கேட்டதே இல்லை. அதனால் பத்து மதிப்பெண் வினாக்களை மட்டுமே எதிர்பார்த்து படித்த தேர்வர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கும்.
மேலும், ஒரு மதிப்பெண் பிரிவில் நான்கு விடை வாய்ப்புகளும் மாற்றி மாற்றி கொடுக்கப்பட்டு இருந்ததும், தேர்வர்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அதனால் இந்தமுறை வெகுவாக சென்டம் குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சேலத்தைச் சேர்ந்த 27 ஆண்டுகள் அனுபவமுள்ள மற்றொரு கணித ஆசிரியர் கூறுகையில், ”பிளஸ்2வில் இப்போதுள்ள கணித பாடத்திட்டம், கடந்த 2006ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதுமுதல் கடந்த 11 ஆண்டுகளில் மார்ச் பொதுத்தேர்வு மற்றும் ஜூன், அக்டோபர் தேர்வுகளின்போது வெளியான 33 பழைய வினாத்தாள்களில் உள்ள வினாக்களை முழுமையாக பயிற்சி செய்திருந்தாலே போதும் இன்று நடந்த தேர்வில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற முடியும்.
இந்த உத்தியைக் கையாண்டிருந்தால் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று விட முடியும். கட்டாயம் விடையளிக்க வேண்டிய பிரிவில் 55வது வினாவாக மிக அரிதாக ஒரு வினா கேட்கப்பட்டு உள்ளது உண்மைதான். ஆனாலும், அந்த வினாவுக்கு ‘சாய்ஸ்’ தரப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்.
வெறும் ‘புளூ பிரிண்ட்’ அடிப்படையில் மட்டும் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு இந்த வினாத்தாள் சற்று கடினம்போலத்தான் தோன்றும். தேர்ச்சி மட்டுமே குறிவைத்து பாடம் நடத்தப்பட்டிருந்தால் நிச்சயமாக சென்டம் குறையும்,” என்றார்.
கடந்த 2017ம் ஆண்டு நடந்த பிளஸ்2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் 3656 மாணவ, மாணவிகள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.