குமாரபாளையம் நகர திமுக செயலாளருக்கு சொந்தக் கட்சியினரே ‘நாகரிகமாக’ கொலை மிரட்டல் விடுத்து, அறிவாலயத்திற்கு அனுப்பியுள்ள மர்ம கடிதம், நாமக்கல் மாவட்ட அரசியல் களத்தில் உஷ்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்
வடக்கு நகர திமுக செயலாளராகவும்,
நகர மன்றத் தலைவராகவும்
இருப்பவர் விஜய்கண்ணன்.
இவர் மீது திமுக மேலிடத்திற்கு
அண்மையில் ஒரு பரபரப்பு புகார்
கடிதத்தை கழக உடன்பிறப்புகள்,
பெயர் குறிப்பிடாமல்
அனுப்பி வைத்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில், ”விஜய்கண்ணன்,
திருச்சியில் அமைச்சர்
கே.என்.நேருவை சந்தித்து
ஏற்கனவே இருந்த நகர பொறுப்பாளர்
செல்வத்தை தூக்கச் செய்துவிட்டு,
அந்தப் பதவியைக் கைப்பற்றிக் கொண்டார்.
பதவிக்கு வந்த பிறகு மூத்த நிர்வாகிகளை
மதிக்காமல் தான்தோன்றித்தனமாக
செயல்பட்டு வருகிறார். தன்னை மட்டும்
ஃபோகஸ் செய்து கொள்கிறார்.
கட்சியினரின் தனிப்பட்ட
விவகாரங்களில் அடிக்கடி தலையிடுகிறார்.
ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட
கடன் சுமையால், பதவியை
வைத்துக் கொண்டு பலரை மிரட்டி வருகிறார்.
எப்போது வேண்டுமானாலும்
இவர் கொலை செய்யப்படலாம்.
அந்தளவுக்கு இவருக்கு
தனிப்பட்ட எதிரிகள் அதிகம்.
கள்ளச்சாராயம்,
லாட்டரி சீட்டு வியாபாரம்
எல்லா ஊர்களிலும் நடப்பதுபோல்
குமாரபாளையத்திலும் நடக்கிறது.
இதில் எல்லாம் அவர் தலையிடுகிறார்.
இதனால் கட்சிக்குள் வன்மத்தை
அதிகரிக்கச் செய்கிறது.
அவர் கட்சியில் இருந்தால்
வரும் தேர்தலில் திமுகவுக்கு
கெட்டப்பெயர் ஏற்படும்,”
என்று கடிதத்தில் மர்ம நபர்கள்
பகிரங்கமாக எச்சரிக்கை
விடுத்து இருந்தனர்.
இந்த மிரட்டல் கடிதத்தை, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர், காவல்துறைக்கும் மர்ம நபர்கள் அனுப்பி உள்ளனர். இந்த கடிதம், சமூக ஊடகங்களில் தற்போது வைரல் ஆக பரவி வருகிறது.
இதன் பின்னணி குறித்து குமாரபாளையம் திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
”குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உருவானதில் இருந்து இங்கு தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிதான் வெற்றி பெற்று வருகிறார். இங்கு திமுகவில் யார் பொறுப்பாளராக இருந்தாலும் அவர்கள் திரைமறைவில் தங்கமணியுடன் ‘டீல்’ போட்டுக் கொள்கின்றனர்.
இந்த நிலையில்தான் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக தங்கமணிக்கும், விஜய்கண்ணனுக்கும் நேரடி உரசல் ஏற்பட, அவர் மீது வழக்குப்பதிவு வரை சென்றது. இதையடுத்துதான் தங்கமணியை எப்படியாவது தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று விஜய்கண்ணன் கங்கணம் கட்டிக்கொண்டு தீயாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது விஜய்கண்ணன் குமாரபாளையம் நகராட்சியில் போட்டியிட திமுகவில் சீட் கேட்டார். உள்கட்சி மோதலால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதன் பின்னணியில் தங்கமணியின் அழுத்தமும் இருந்தது. ஏமாற்றம் அடைந்த விஜய்கண்ணன், சுயேச்சையாக களம் இறங்கினார். அத்துடன், தனது ஆதரவாளர்களையும் சொந்த செலவில் சுயேச்சையாக களத்தில் இறக்கி விட்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய்கண்ணன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் உள்பட 9 பேர் வெற்றி பெற்றனர்.
அதேநேரம், தனிப்பெரும் கட்சியாக திமுகவில் 14 பேரும், அதிமுக தரப்பில் 10 பேரும் வெற்றி பெற்றிருந்தனர். இன்னும் 3 கவுன்சிலர்கள் ஆதரவு இருந்தால் குமாரபாளையம் நகரமன்றத் தலைவர் பதவியைக் கைப்பற்றி விடலாம் கணக்குப் போட்ட திமுக மேலிடம் தலைவர் பதவிக்கு வேட்பாளரை அறிவித்தது. தங்கமணிக்கு இது மானப்பிரச்னை என்பதால் அவரும் தலைவர் பதவிக்கு ஆளை இறக்கினார்.
ஆனால் குமாரபாளையம் நகரமன்றத் தலைவர் தேர்தலில் நடந்ததே வேறு. இருபெரும் கட்சிகளில் இருந்தும் கவுன்சிலர்களை தூக்கிய விஜய்கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் தலைவர் பதவியைக் கைப்பற்றினார். அதன்பிறகு அவர் மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். திமுக, அதிமுக என இரு பெரும் யானைகளின் காதில் புகுந்த எறும்பாக கதறவிட்ட விஜய்கண்ணன் பற்றிதான் அப்போது பரபரப்பு பேச்சாக இருந்தது. இந்த சம்பவத்தில் இருந்தே அவர் மீது குமாரபாளையம் மூத்த திமுக நிர்வாகிகள் செம காண்டில் இருக்கிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கும் இந்த சம்பவம் செம ‘நோஸ்கட்’ ஆனது.
லாட்டரி, சந்துக்கடை மதுபான
வியாபாரத்தில் முன்னாள்,
இந்நாள் நிர்வாகிகள் சிலரின்
பெயரைக் குறிப்பிட்டு திமுகவின்
நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்
மதுரா செந்திலிடம் புகார்
அனுப்பினார் விஜய்கண்ணன்.
இந்த பின்னணியில்தான்
விஜய்கண்ணன் கொலை செய்யப்படலாம்
என ‘நாசூக்காக’ எச்சரிக்கை விடுத்து,
கட்சித் தலைமைக்கு உடன்பிறப்புகள்
மொட்டை பெட்டிஷன் போட்டுள்ளனர்,”
என்கிறார்கள் கழக கண்மணிகள்.
விஜய்கண்ணனின்
ஆதரவாளர்களிடம் விசாரித்தோம்.
”நாற்பது வயதிலேயே குமாரபாளையம்
நகரசபைத் தலைவர் ஆனது,
ரியல் எஸ்டேட் தொழிலில்
அபார வளர்ச்சி, தங்கமணியுடன் மோதல்,
குமாரபாளையம் வடக்கு நகர
திமுக செயலாளர் என விஜய்கண்ணன்
தொடர்ந்து ‘லைம்லைட்’டில் இருக்கிறார்.
இவற்றை எல்லாம் உள்ளூர்
மூத்த கட்சிக்காரர்கள் முதல்
மாவட்ட செயலாளர் வரை
யாருமே ரசிக்கவில்லை.
தீபாவளியையொட்டி குமாரபாளையத்தில்
உள்ள மூத்த திமுக பிரமுகர்கள்,
நகராட்சி ஊழியர்கள் 2000 பேருக்கு சேலை,
இனிப்புகள், பட்டாசு அடங்கிய
பரிசுத்தொகுப்பை மாவட்ட செயலாளர்
மூலமாக வழங்க அவரிடம்
அனுமதி கேட்டார் விஜய்.
அதற்கு அவரோ, உப்புச்சப்பில்லாத
காரணத்தைச் சொல்லி நிகழ்ச்சிக்கு
வர மறுத்துவிட்டார்.
நிகழ்ச்சியை யார் ஏற்பாடு செய்தால் என்ன?
அதன் நற்பெயர் கட்சிக்குதானே செல்கிறது?
என்ற எண்ணம் யாருக்குமே இல்லை.
நிர்வாகிகளிடையே நிலவும்
‘ஈகோ’ மோதல், வரும் சட்டமன்றத்
தேர்தல் நேரத்தில் நிச்சயம் திமுகவுக்கு
நல்ல பலனைக் கொடுக்காது,” என்கிறார்கள்
விஜய்கண்ணனின் ஆதரவாளர்கள்.
இதுகுறித்து விஜய்கண்ணனிடம் கேட்டபோது, ”குமாரபாளையம் நகர செயலாளராக முன்பு பொறுப்பில் இருந்த செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் நெருக்கமாக இருக்கிறார். அவர் ‘ஹார்ட் அட்டாக்’ வந்து மருத்துவமனையில் இருந்தபோது, தங்கமணி அவரை நேரில் சென்று நலம் விசாரித்தார். அவர் சிகிச்சை செலவுக்காக 2 லட்சம் ரூபாய் கொடுத்ததையும் செல்வம் வாங்கிக் கொண்டார். இந்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் செல்வத்தின் பதவி பறிபோனது.
இந்த ஊரில் சந்துக்கடை மதுபான வியாபாரமும், லாட்டரி சீட்டு விற்பனையும் பகிரங்கமாக நடந்து வருகிறது. இந்த வியாபாரத்தில் செல்வம் மற்றும் சொத்து பாதுகாப்புக் குழுவில் உள்ள ஒருவர், நகர பொறுப்பில் உள்ள மற்றொருவர் ஆகிய மூவருக்கும் தொடர்பு உள்ளது. இதையெல்லாம் நான் மேலிடத்திற்கு புகார் அளித்ததால் அவர்கள்தான் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து மொட்டை பெட்டிஷன் அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். மா.செ.வின் கவனத்திற்கும் கொண்டு சென்றேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சிக்குள் எனது வளர்ச்சியை பொறுக்க முடியாமல் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் சேர்ந்து கொண்டு எனக்கு எதிரான வேலைகளில் இறங்கி உள்ளனர். இதனால் எனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது,” என்றார்.
இந்த விவகாரம் குறித்து குமாரபாளையம் நகர முன்னாள் செயலாளர் செல்வத்திடம் பேசினோம்.
”நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது விஜய்கண்ணன் சீட் கேட்டார். அவர் திமுகவில் இருந்து இடையில் பாஜகவுக்கு தாவிச்சென்று மீண்டும் கட்சிக்குள் வந்ததால் சீட் தரவில்லை. ஆனால் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாக போட்டியிட்டார். கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வரை கவுன்சிலர்களுக்கு கொட்டிக் கொடுத்து, சேர்மன் பதவியை பிடித்துவிட்டார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி என்னை நலம் விசாரித்தது உண்மை. ஆனால் நான் அவரிடம் பணம் எதுவும் வாங்கவில்லை. என்னைப் பற்றி விஜய்கண்ணன் கட்சி மேலிடத்தில் தவறாக போட்டுக்கொடுத்து பதவியைத் தட்டிப்பறித்துக் கொண்டார்.
குமாரபாளையம் வடக்கு நகர பொறுப்பாளரான பிறகு அவர் கட்சி அலுவலகத்திற்கு வருவதே இல்லை. மூத்த நிர்வாகிகளைக்கூட அவன் இவன் என பேசுகிறார். கட்சி அலுவலகம் கட்டுவதற்குக் காரணமாக இருந்த மறைந்த முன்னாள் துணை செயலாளர் சேகரின் படத்தை மாட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
கட்சி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் ரீதியாகவும் விஜய்கண்ணனுக்கு எதிரிகள் உள்ளனர். நிச்சயமாக அவர் கொல்லப்படுவார். அவர் நீண்ட காலம் கட்சியில் இருக்க மாட்டார்.
மாவட்ட செயலாளருக்கு புதிதாக கார் வாங்கிக் கொடுத்ததால் அவர் இவரை சப்போர்ட் செய்கிறார். அமைச்சர் கே.என்.நேருவுக்கு என்னென்ன செய்து பதவியை பெற்றார் என்பது எங்களுக்கும் தெரியும். தறிப்பட்டறை, வாடகை மூலம் மாதம் 80 ஆயிரம் ரூபாய் எனக்கு வருமானம் வருகிறது. நான் சட்ட விரோதமான தொழில்களைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை,” என சரவெடியாய் வெடித்தார் செல்வம்.
நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்திலிடம் கேட்டபோது, ”விஜய்கண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக என் கவனத்திற்கு வந்தது. அவர் மீதும் பலர் புகார் சொல்லி இருக்கின்றனர். அவருக்கு சின்ன வயது. அனுபவம் இல்லாததால் அணுகுமுறை தெரியாமல் இருக்கலாம்,” என பட்டும்படாமலும் சொன்னார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கிறது திமுக மேலிடம். குமாரபாளையத்தில் நடக்கும் குஸ்திகளைப் பார்த்தால், மீண்டும் இலைக்கட்சிக்கே இந்த தொகுதி தாரை வார்க்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
– பேனாக்காரன்
Courtesy: Nakkheeran