Friday, February 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சேலம் மாநகராட்சியில் பல கோடி ரூபாய் கையாடல்; தணிக்கை அறிக்கையில் ‘ஷாக்’

சேலம் மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி வருவாயில் பல கோடி ரூபாய், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கொண்டு போலி ரசீது மூலம் கையாடல் செய்துள்ள அதிர்ச்சி தகவல் தணிக்கை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை என நான்கு மண்டலங்களும், 60 கோட்டங்களும் உள்ளன. இம்மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான கணக்கு வழக்குகள், அண்மையில் உள்ளாட்சித் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில், சூரமங்கலம் மண்டல கணக்கு வழக்கு விவரங்களை தணிக்கை செய்ததில், பல கோடி ரூபாய் கையாடல் நடந்திருப்பதும், மாநகராட்சிக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.

தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விவரங்கள்:

தணிக்கை அறிக்கையின் ஒரு பகுதி

சேலம் மாநகராட்சி மைய
அலுவலகத்தில் இருந்து
சொத்துவரி, தொழில் வரி,
பிறப்பு – இறப்பு படிவம்,
சொத்து பெயர் மாற்றம்,
கட்டட உரிம படிவம்
உள்ளிட்ட பண மதிப்பு
படிவங்கள், ஒவ்வொரு
மண்டல அலுவலகத்திற்கும்
அனுப்பி வைக்கப்படும்.

சூரமங்கலம் மண்டல
அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட
பண மதிப்பு படிவங்களில்
1.30 லட்சம் படிவங்கள் மூலமும்,
கணினி ரசீதுகள் மூலமும்
வசூலிக்கப்பட்ட கோடிக்கணக்கான
ரூபாய் தொழில் வரி,
சொத்து வரி ஆகியவை
கணக்கில் வரவு
வைக்கப்படவில்லை.

வணிகர்கள், வியாபாரிகள், குடியிருப்புவாசிகளிடம் இருந்து காசோலையாக வசூலிக்கப்படும் தொகையை உடனடியாக சேலம் மாநகராட்சி வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

வரி செலுத்துவோரிடம் இருந்து
வரித்தொகையை காசோலையாக
வசூலிக்கப்பட்ட உடனே அதற்கான
கணினி ரசீதை, பில் கலெக்டர்கள்
கொடுத்து விடுகின்றனர்.
பின்னர் அந்த காசோலைகள்
வங்கியில் செலுத்தப்படும்போது,
அவை பணம் இல்லாமல்
திரும்பி விடுகின்றன.
இவ்வாறு காசோலைகள் ‘பவுன்ஸ்’
ஆகிவிட்டால், உடனடியாக
சம்பந்தப்பட்ட நபர்களிடம்
இருந்து வரித்தொகையை
அபராதத்துடன் ரொக்கமாக
வசூலித்து மாநகராட்சி கணக்கில்
செலுத்த வேண்டும்.

சேலம் மாநகராட்சி ஆணையர் ரஞ்ஜீத் சிங்

இந்த இடத்தில்தான் பெருத்த மோசடி நடந்துள்ளது. ஏற்கனவே கணினி ரசீது கொடுக்கப்பட்டு விட்டதால், வரி வருவாய் மாநகராட்சி கணக்கிற்கு வந்துவிட்டதாக கணினியில் காண்பிக்கும். இது பெயரளவுக்கு மட்டுமே. பில் கலெக்டர்கள், ஆர்.ஐ.,கள், முதல் மண்டல உதவி ஆணையர்கள் வரை வரிதாரர்களிடம் சொற்பத் தொகையை ரொக்கமாக வசூலித்துக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, தணிக்கைக்கு உட்படுத்தப்படாத 1.30 லட்சம் பணமதிப்புப் படிவங்கள், போலி ரசீதுகள் மூலமாக சூரமங்கலம் மண்டலத்தில் மட்டும் 16.11 கோடி ரூபாய் மாயமாகி உள்ளது. இந்தப் பணத்தை, மாநகராட்சி ஊழியர்களே கையாடல் செய்துள்ளனர்.

சூரமங்கலம் மண்டலத்தில் 3837 இனங்களுக்கு தணிக்கை ஆண்டிலும், நடப்பு நிதியாண்டிலும் 1.91 கோடி ரூபாய் தொழில் உரிமக் கட்டணம் வசூலித்திருக்க வேண்டும். இத்தொகை வசூலிக்கப்படாததால் சூரமங்கலம் மண்டலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வீரக்குமார் – முருகேசன்

சொத்து வரி, தொழில் வரி, உரிமக் கட்டணம் போன்ற வருவாய் இனங்களுக்காக வசூலிக்கப்பட்ட காசோலைகள், திட்டமிட்டே ‘பவுன்ஸ்’ ஆக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் சூரமங்கலம் மண்டல மாநகராட்சி ஊழியர்கள் 2.27 கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளனர். இந்த நூதன மோசடியை மாநகராட்சி ஆணையர் முதல் மண்டல உதவி ஆணையர் வரை கண்காணிக்கத் தவறி விட்டனர்.

சேலம் புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துக்கு, ஒரு முறைக்கு 15 ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தப் பேருந்து நிலையத்திற்குள் தினமும் 2188 பேருந்துகள் மொத்தம் 4500 முறை வந்து செல்கின்றன.

பேருந்து நுழைவுக் கட்டண வசூல் பணிகளை முன்பு, சத்தியமூர்த்தி என்பவருக்கு, வாரத்திற்கு 148350 ரூபாய் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் குத்தகை ஒப்பந்தம் வழங்கி இருந்தது. குத்தகை காலம் முடிவடைந்ததை அடுத்து 24.4.2023 முதல் சூரமங்கலம் மண்டல நிர்வாகமே பேருந்து நுழைவுக் கட்டணத்தை வசூலித்து வருகிறது.

குத்தகை விடப்பட்டிருந்த காலக்கட்டத்தில் தினசரி வசூல் 32820 ரூபாயாக இருந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகமே வசூல் செய்யத் தொடங்கியதில் இருந்து தினசரி வசூல் தடாலடியாக, அதாவது கற்பனைக்கு எட்டாத வகையில் 3000 ரூபாயாக குறைந்தது.

குத்தகை மதிப்பீட்டின்படி வாரத்திற்கு 148350 ரூபாய் எனக் கணக்கிட்டாலும் 24.4.2023 முதல் 17.10.2024 வரையிலான 79 வாரத்திற்கு 1.17 கோடி ரூபாய் வரை சேலம் மாநகராட்சிக்கு திட்டமிட்டு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

சேலம் மாநகராட்சி
பணியாளர்களுக்கென கூட்டுறவு
சிக்கன மற்றும் நாணய சங்கம்
இயங்கி வருகிறது. இந்த
சங்கத்தின் மூலம், மாநகராட்சிப்
பணியாளர்கள் அவசரத் தேவைக்கு
கடன் பெற்று வருகின்றனர்.
கடன் தவணை, வட்டி ஆகியவற்றை
பணியாளர்களின் சம்பளத்தில்
பிடித்தம் செய்து, மாநகராட்சி
நிர்வாகம் நேரடியாக இந்தக்
கூட்டுறவு சங்கத்திற்கு
செலுத்தி விடும்.

சேலம் மாநகராட்சி
மைய அலுவலகம்,
நான்கு மண்டல ஊழியர்கள்
உள்ளிட்ட அனைத்துப்
பணியாளர்களின் சம்பளத்தில்
இருந்தும் கடந்த 2018ம் ஆண்டு
முதல் தணிக்கை காலம் வரை
மொத்தம் 10.35 கோடி ரூபாய்
பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் இத்தொகை, இதுவரை
கூட்டுறவு சிக்கன மற்றும்
நாணய சங்கத்திற்குச்
செலுத்தப்படவில்லை. இதில்,
சூரமங்கலம் மண்டல ஊழியர்களிடம்
பிடித்தம் செய்யப்பட்ட
2.16 கோடி ரூபாயும் அடங்கும்.

பிடித்தம் செய்யப்பட்ட பணம் எங்கே சென்றது? என்ற விவரமும் மாநகராட்சி நிர்வாகத்தால் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. உரிய காலத்தில் கடன் தவணை செலுத்தப்படாததால் வட்டி, அபராத வட்டி என 4.11 கோடி ரூபாய் பணியாளர்கள் தலையில் சுமையை ஏற்றி வைத்துள்ளது மாநகராட்சி நிர்வாகம். இது, சேலம் மாநகராட்சியின் பொறுப்பற்றத் தன்மைக்கு ஒரு சான்று.

சூரமங்கலம் மண்டலத்தில் 2022&2023ம் ஆண்டில், வருவாய் நிதி, குடிநீர் நிதி இனங்களில் 6.05 கோடி ரூபாய் இதுவரை வசூலிக்கப்படவில்லை. அதேநேரம், இத்தொகை வசூலிக்கப்பட்டதாக போலி ரசீதுகள் போடப்பட்டு உள்ளன.

சூரமங்கலம் மண்டலத்தில், வணிக நிறுவனங்களிடம் இருந்து தணிக்கை ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டுக்கான தொழில் வரி என 92.30 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படவில்லை.

கையாடல் மற்றும் வருவாய் இழப்பு ஏற்படுத்திய குற்றங்களில் சூரமங்கலம் மண்டலத்தில் பணியாற்றி வரும் உதவி ஆணையர் சுரேஷ்குமார், உதவி வருவாய் அலுவலர் (ஏஆர்ஓ) முருகேசன், வருவாய் ஆய்வாளர் வீரக்குமார், காசாளர்கள் சிராஜ், சங்கர் ஆகியோருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து விசாரணை நடத்த வேண்டும்.

இவர்களில் ஏஆர்ஓ முருகேசன்,
ஏற்கனவே அஸ்தம்பட்டி
மண்டலத்தில் பணியாற்றியபோது,
சேலம் மாநகராட்சிக்கு 21 லட்சம்
ரூபாய் வருவாய் இழப்பு
ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புப்
பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர். இவர் மீது,
வருமானத்திற்கு அதிகமாக
சொத்து சேர்த்த வழக்கும்
விசாரணையில் உள்ளது.

அதேபோல், வருவாய் ஆய்வாளர் வீரக்குமார்தான், புதிய பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு, பேருந்து நுழைவுக் கட்டணம், வரி வசூலிப்பில் தாறுமாறாக கோல்மால் செய்ததாகவும் சொல்கிறார்கள்.

உள்ளாட்சித் தணிக்கைத் துறை
அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,
”காசோலைகள் மூலம் வசூலிக்கப்பட்ட
தொகையில்தான் பெருமளவு
முறைகேடு நடந்துள்ளது.
பில் கலெக்டர்கள், ஆர்ஐ., ஏஆர்ஓ.,க்கள்
ஆகியோர் வரிதாரர்களுடன் கூட்டு
சேர்ந்து கொண்டு, பவுன்ஸ்
ஆகக்கூடிய காசோலைகளை
தெரிந்தே வாங்கி வந்திருப்பது
தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு
உள்ளது.

மாநகராட்சி ஆணையர்,
துணை ஆணையர் உள்ளிட்டோர்
ஆண்டுக்கு ஒருமுறையாவது
மண்டல அலுவலகங்களில்
பதிவேடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
அவர்களும் தங்கள் கடமையில்
இருந்து தவறி இருக்கிறார்கள்.

மாநகராட்சி எல்லைக்குள்
பணியாற்றி வரும் அரசு மற்றும்
சார்பு நிறுவன தொழிலாளர்களிடம்
இருந்து இபிஎப்ஓ அமைப்பிற்குச்
செலுத்த வேண்டிய 31.69 கோடி
ரூபாய் தொழில் வரியும்,
இஎஸ்ஐ அமைப்பிற்குச் செலுத்த
வேண்டிய 21.20 கோடி ரூபாய்
தொழில் வரியும் வசூலிக்கப்படாமல்
உள்ளது. இதன் மூலமும்
மாநகராட்சிக்கு பெரிய அளவில்
வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,”
என்றார்.

தணிக்கை அறிக்கை குறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் ரஞ்சித் சிங்கிடம் கேட்டோம்.

”இஎஸ்ஐ., இபிஎப்ஓ அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டிய தொகை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. எனினும், தணிக்கைத் தடையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ள குறைபாடுகளை சரி செய்வதும் அத்தனை சுலபம் அல்ல.

சேலம் மாநகராட்சிக்கு வருவாயும், அரசு நிதி உதவியும் போதுமானதாக இல்லை. இதனால் ஊழியர்களுக்கு உரிய காலத்தில் சம்பளம் வழங்குவதிலும், ஓய்வுக்கால பலன்கள் கொடுப்பதிலும் சிக்கல் உள்ளது.

கூட்டுறவு நாணய சங்கத்திற்காக ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, ஊதியம் உள்ளிட்ட முக்கிய செலவினங்களுக்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது. தணிக்கைத் தடைகள் குறித்து ஆய்வு செய்யப்படும்,” என்றார்.

சேலம் மாநகராட்சியின் நான்கு மண்டல தணிக்கை அறிக்கையும் வெளியாகும்பட்சத்தில் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கலாம் என்கிறார்கள்.

”ஒரே மண்டலத்தில் குத்தகை
எடுத்தது போல நீண்ட காலமாக
பணியாற்றி வரும் பில் கலெக்டர்கள்,
ஆர்ஐ., ஏஆர்ஓக்கள் ஆகியோர்
கூட்டு சேர்ந்து கையூட்டுப்
பெற்றுக் கொண்டு, சொத்து வரியை
குறைத்து நிர்ணயம் செய்வது,
தொழில் உரிமக் கட்டணத்தை
கணக்கில் காட்டாமல் ஸ்வாகா
செய்வது போன்ற முறைகேடுகளில்
ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை,
வெவ்வேறு இடங்களுக்கு
உடனடியாக இடமாற்றம்
செய்ய வேண்டும் என்கிறார்கள்,”
நேர்மையான ஊழியர்கள்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதால், தமிழக அரசு உடனடியாக உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்கிறார்கள் தணிக்கை அலுவலர்கள்.

  • பேனாக்காரன்

Leave a Reply