Friday, February 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

மகாநதி! நல்லவனுக்கு கிடைக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கும் கிடைக்குதே எப்படி?

மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் கிராமத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வரும் நடுத்தர வயது இளைஞன் ஒருவன், பட்டணத்தைச் சேர்ந்த மோசடிப் பேர்வழியை நம்பி தன் சொத்துக்களை எல்லாம் இழக்கிறான். பிள்ளைகளும் தொலைந்து போகிறார்கள். சிதிலம் அடைந்த தன் வாழ்க்கையை அவன் மீட்டெடுத்தானா? குழந்தைகளைக் கண்டுபிடித்தானா? என்பதுதான் மகாநதி படத்தின் மையக்கதை.

கொரியன், ஈரானிய படங்கள்தான்
உலகப்படங்கள் என அலட்டிக்
கொள்வோர், சந்தேகமே இல்லாமல்
மகாநதியைக் கொண்டாடலாம்.
இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும்
உலகப்படங்களின் வரிசையில்
கமல்ஹாசனின், மகாநதி
நின்று விளையாடும்.

கமலின் உற்ற நண்பர்களுள்
ஒருவரான சந்தானபாரதி இயக்கத்தில்
1994, ஜனவரி 14ஆம் தேதி பொங்கல்
விருந்தாக வெளியானது.
இன்றுடன் (14.1.2025)
மகாநதிக்கு 31 வயது.

மோசடி குற்றத்திற்காக
தண்டனை பெற்று, சென்னை
மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்
கிருஷ்ணா என்கிற கிருஷ்ணசாமி (கமல்).
அதே அறையில் மற்றொரு
தண்டனை கைதியாக
அடைக்கப்பட்டு உள்ளார் பஞ்சாபி
என்கிற பஞ்சாபகேசன் (பூர்ணம் விஸ்வநாதன்).

பேச்சுத் துணைக்கு
ஆள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில்
கிருஷ்ணசாமியிடம், நீ யார்?
என்ன பண்ணிட்டு உள்ளே வந்திருக்க?
ஓ… மோசடி குற்றமா?
பணத்தை என்ன பண்ணின?
என வினவுகிறார்.
அவருடைய ‘தொண தொண…’
பேச்சால் எரிச்சல் அடையும்
கிருஷ்ணா, ‘நான் ஏமாத்துக்காரன்
இல்ல. முட்டாள். எல்லாரையும்
போல நானும் வசதியா வாழணும்னு
ஆசைப்பட்டேன். அவ்வளவுதான்,’
என உரக்கச் சொல்லும்
கமலின் முகத்தை நோக்கி
கேமரா நெருக்கமாகச் செல்கிறது.

பின்னணியில் ஒலிக்கும்
ரயிலின் தடக்… தடக்… ஓசையுடன்
கிருஷ்ணாவின் கடந்த கால
வாழ்க்கை விரிகிறது.

கும்பகோணம் அருகே, காவிரி ஆறு பாயும் திருநாகேஸ்வரத்தில் சீவல் பாக்கு தொழிற்சாலை நடத்துகிறார் கிருஷ்ணசாமி. அவருடைய தந்தை காலத்தில் இருந்தே செல்வாக்கான குடும்பம். புத்திசாலியான பெண் குழந்தை, குறும்பான ஆண் குழந்தை, வீட்டுக்குப் பெரியவராக மாமியார் (எஸ்.என்.லட்சுமி). இதுதான் அவரின் குடும்பம். தாய், தந்தை மற்றும் மனைவியை இழந்த கிருஷ்ணாவுக்கும், குழந்தைகளுக்கும் மாமியார்தான் பெரும் ஆதரவு.

ஒருநாள், தன்னுடைய பள்ளிக் கால நண்பன் சுந்தரை எதேச்சையாக சந்திக்கிறார் கிருஷ்ணசாமி. லண்டனில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்ட நண்பன், பென்ஸ் கார், குழந்தைகளின் நுனி நாக்கு ஆங்கிலம் எல்லாவற்றையும் பார்த்த கிருஷ்ணசாமிக்கு, தன் குழந்தைகளையும் கான்வென்டில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று உள்ளூர ஆசை ஊற்றெடுக்கிறது.

சில நாள்கள் கழித்து,
சாலையில் அதே பென்ஸ் காரை
பார்க்கும் குழந்தைகள், அதை
முந்திச் செல்லும்படி கூறுகின்றனர்.
துரத்திச் செல்லும்போது அந்த
பென்ஸ் கார், சாலையோர பள்ளத்தில்
இறங்கி விபத்தில் சிக்கி விடுகிறது.
இப்போது காருக்குள் இருந்து
கமலின் நண்பர்
அல்லாமல் வேறு ஒருவர்
இறங்கவும் செய்வதறியாது
கையைப் பிசைந்து நிற்கிறார்.

அந்த காரில் வந்தவர்கள்
தனுஷ் (வி.எம்.சி. ஹனீபா) என்பதும்,
அவருடைய தோழி மஞ்சு (துளசி)
என்பதும் தெரிய வருகிறது.
லண்டன் நண்பன் காரை
விற்றுவிட்டதால், இப்போது
வாடகைக்கு இயக்கப்பட்டு
வருவதாக கார் ஓட்டுநர் சொல்கிறார்.
அவர்களுடன் மோதலில்
ஆரம்பித்த அறிமுகம் நட்பில்
முடிகிறது. தனுஷ் வந்த கார்
ரிப்பேர் ஆனதால் அன்று
இரவு தனது வீட்டிலேயே
தங்கிவிட்டுச் செல்லும்படி
இருவரையும் விருந்தினராக
அழைத்துச் செல்கிறார்
கிருஷ்ணசாமி.

சீவல் பாக்கு தொழிற்சாலை, உள்ளூர் செல்வாக்கு எல்லாவற்றையும் பார்த்த தனுஷ், ‘பட்டணத்திற்கு வந்து சிட்பண்ட் தொழில் தொடங்கினால் சீக்கிரம் கோடீஸ்வரனாகி விடலாம். ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் கான்வென்டில் குழந்தைகளைச் சேர்த்து படிக்க வைக்கலாம்,’ என ஆசை வலை விரிக்கிறார்.

மகுடிக்கு மயங்கிய பாம்பாக,
சொந்த கிராமத்தில் உள்ள
வீட்டை விற்று விட்டு சென்னைக்கு
குடும்பத்துடன் இடம்
பெயர்கிறார் கிருஷ்ணா.
சென்னையில் ஒதுக்குப்புறமான
இடத்தில் ஒரு வீட்டில்
குடியமர்த்தும் தனுஷ்,
சிட்பண்ட் தொழிலில் முதலீடு
செய்ய வைக்கிறார். சீவல்
தொழிற்சாலையின் பேரில்
கடன் வாங்கி தொழிலில்
முதலீடு செய்கிறார், கிருஷ்ணசாமி.
நயவஞ்சமாகப் பேசி,
‘பவர் ஆப் அட்டார்னி’
உரிமையைப் பெறும் தனுஷ்,
நேரம் பார்த்து மொத்த பணத்தையும்
சுருட்டிக்கொண்டு கம்பி
நீட்டி விடுகிறார்.

முதலீட்டாளர்கள் பணத்தைக் கேட்டு நிதி நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். மோசடி குற்றத்திற்காக நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சிறைக்குச் செல்கிறார் கிருஷ்ணா.

இதற்கிடையே, தனக்கு இரண்டாவது திருமணத்திற்காக அளித்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அவரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து புகைப்படத்தை அனுப்பி வைக்கிறார் செவிலியர் யமுனா (சுகன்யா). அந்த யமுனா, தன்னுடன் சிறையில் உள்ள சக கைதி பஞ்சாபி அய்யரின் மகள் என்பது பின்னர் தெரிய வருகிறது. மாமியாரையும், குழந்தைகளையும் யமுனா அனுசரணையாக பார்த்துக் கொள்வது கிருஷ்ணாவுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது.

தனுஷ் மூலமாக தொழில்
அதிபர் போர்வையில் அறிமுகம்
ஆகும் வெங்கடாஜலம் என்ற
பாலியல் புரோக்கர், கிருஷ்ணசாமியின்
12 வயது மகள் காவேரியை
கடத்திச் சென்று கொல்கத்தாவில்
சிவப்பு விளக்கு பகுதியான
சோனாகாச்சியில் விற்று விடுகிறார்.

தான் பிரியமாக வளர்த்து
வரும் நாய்க்குட்டியைச்
துரத்திச் செல்லும் சிறுவன்
பரணியும் திக்கு தெரியாமல்
போய்விடுகிறான். உடல்நலமின்றி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
இருந்த மாமியார் சரஸ்வதி அம்மாள்
(எஸ்.என்.லட்சுமி) இறந்து விடுகிறார்.
சிறையில் இருந்த காலக்கட்டத்தில்
கமலின் மொத்த குடும்பமும்
சிதிலமாகி விடுகிறது.

சிறையில் இருந்து விடுதலை ஆகி
வெளியே வரும் கிருஷ்ணசாமி,
கழைக்கூத்தாடியாக பிழைப்பு
நடத்தி வரும் தன் மகன்
பரணியைக் கண்டுபிடிக்கிறார்.
மகனிடம் விசாரித்தபோது,
அக்காவை, தனுஷ் வீட்டில்
விட்டுவிட்டு வந்ததாகச் சொல்ல,
அங்கு சென்று விசாரிக்கிறார்.
அப்போதுதான் அவள் பாலியல்
கும்பலிடம் விற்கப்பட்டு
விட்டது தெரிய வருகிறது.

தன் வருங்கால மாமனார் பஞ்சாபியுடன் கொல்கத்தாவின் சோனாகாச்சிக்குச் செல்லும் கிருஷ்ணசாமி, பாலியல் தொழிலாளியாக இருக்கும் மகளை மீட்டு வருகிறார்.

தன்னை சிறைக்கு அனுப்பியதோடு,
தன் குடும்பம் சிதைந்து போகவும்
காரணமாக இருந்த தனுஷையும்,
வெங்கடாஜலத்தையும் பழிவாங்குகிறான்
கிருஷ்ணா. மீண்டும் சிறைவாசம்.
தண்டனைக் காலம் முடிந்து
விடுதலை ஆகும் கிருஷ்ணா,
குடும்பத்துடன் சென்னையில் இருந்து
சொந்த கிராமத்திற்கே சென்று பேரன்,
பேத்திகளுடன் வாழ்கிறான்.
இதுதான் மகாநதி படத்தின்
மொத்தக் கதை.

பழிவாங்கல் கதைதான் என்றாலும், இதன் திரைக்கதை ஆக்கமும், வசனங்களும், காட்சி அமைப்புகளும் மிகவும் கூர்மையானவை. மிகைப்படுத்தப்படாத சம்பவங்களால் பின்னப்பட்டவை. ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை கலை நேர்த்தி.

திரைக்கதையை படு நேர்த்தியாக எழுதி இருக்கிறார் கமல். வசனத்தை அவரும், ரா.கி.ரங்கராஜனும் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள். ஓரிரு நிமிடங்கள் வந்து போகும் கதாபாத்திரங்களையும் அழுத்தமாகவே எழுதி இருக்கிறார் கமல்.

இந்தப் படத்தின் திரைமொழி, இப்போதும் புதுப்பொலிவோடு இருக்கிறது.

படத்தின் தலைப்பு நதியின் பெயரில் அமைந்ததாலோ என்னவோ, முக்கிய பாத்திரங்களின் பெயர்களுக்கும் ஆறுகளின் பெயர்களையே சூட்டியிருக்கிறார்கள்.

அதன்படி, கிருஷ்ணா (கமல்), மறைந்த அவருடைய மனைவி நர்மதா (ஜெயசுதா), மகள் காவேரி (ஷோபனா), மகன் (பரணி), கிருஷ்ணாவின் மாமியார் சரஸ்வதி அம்மாள் (எஸ்.என்.லட்சுமி), கிருஷ்ணாவின் இரண்டாவது மனைவியாக வரும் யமுனா (சுகன்யா), அவருடைய தந்தை பஞ்சாபி (பூர்ணம் விஸ்வநாதன்) என மையப்பாத்திரங்களுக்கு நதிகளின் பெயர்களைச் சூட்டியிருப்பார்கள். டைட்டில் கூட நீரின் நிறத்தைச் சுட்டும் வகையில் நீல நிறத்தில் காண்பிக்கப்படுகிறது.

சிந்து நதியின் கிளை ஆறுகளான ஜீலம், செனாப், ராவி, சட்லஜ், பியாஸ் ஆகிய ஐந்து ஆறுகளும் சங்கமிக்கும் இடம்தான் பஞ்சாப். அதைக் குறிக்கும் வகையில் பூர்ணம் விஸ்வநாதன் கதாபாத்திரத்திற்கு பஞ்சாபி என பெயர் சூட்டப்பட்டு இருக்கும்.

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளைக் கடத்தி விற்பனை செய்யும் பாத்திரத்தில் மோகன் நடராஜன் அலட்டல் இல்லாத நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார். அவருக்குக் காட்சிகள் குறைவுதான் என்றாலும், அந்தப் பாத்திரத்திற்கும் வெங்கடாஜலம் (ஜலம் என்றால் தண்ணீர்) என்று பெயர் சூட்டியிருப்பார். அவனுடைய கையாளாக வரும் வி.எம்.சி.ஹனீபா பாத்திரத்திற்கு தனுஷ்(கோடி) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும்.

தனுஷ் என்றால் வில் என்ற பொருளும் உண்டு. வில், தனித்து இயங்காது. வில்லில் யாராவது நாணை வைத்து தொடுக்க வேண்டும். அதாவது தனுஷ் என்ற பாத்திரம் தனித்து இயங்காமல், யாருக்கோ ஏவலாளியாக இருக்கிறார் என்பதற்காகக் கூட அந்தப் பெயரைச் சூட்டியிருக்கலாம் என கருதுகிறேன். வில்லால், அழிவை மட்டுமே ஏற்படுத்த முடியும். தனுஷ் பாத்திரமும் அதையே செய்கிறது.

சோனாகாச்சியில் பாலியல் தொழிலாளியாக இருக்கும் தன் மகளை மீட்கப்போகும் காட்சியில், அங்கே பாலியல் தொழிலாளர்களின் தலைவியாக இருக்கும் ஒரு பெண்ணின் மகளுக்குக் கூட நீரைக் குறிக்கும் வகையில் ‘ஜலஜா’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும். பாத்திரப் பெயர்களில் மட்டுமின்றி கமலின் அதிபுத்திசாலித்தனம், படம் நெடுக காட்சிக்குக் காட்சி விரவிக் கிடக்கிறது.

படத்தின் இன்னொரு முக்கிய அம்சம், ஒளிப்பதிவு. வக்கிரம், நயவஞ்சகம், ஏமாற்றம், மென்மை, காதல் ஆகிய உணர்வுகளை பார்வையாளனுக்கு எளிதில் கடத்திச் செல்லும் வகையில் நுணுக்கமாக லைட்டிங் கையாளப்பட்டு உள்ளது. எம்.எஸ்.பிரபுவின் கேமரா, சிவப்பு விளக்கு கட்டடத்தின் சந்து பொந்துகளையும், சிறைச்சாலையையும், சின்னச்சின்ன குறியீடுகளையும் தவறாமல் நுணுக்கமாக படம் பிடித்து இருக்கிறது. எம்.எஸ்.பிரபுவுக்கு இதுதான் முதல் படம் என்றால் நம்ப முடியாது. அந்தளவுக்கு பி.சி.ஸ்ரீராமின் பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்டு இருக்கிறார்.

கமலின் முதல் மனைவி நர்மதாவுக்கென படத்தில் ஒரு ‘கேமியோ’ காட்சி கூட இல்லாவிட்டாலும், சுவர் படமாகவே நம் மனதில் நிறைகிறார்.

ரயிலின் தடக்… தடக்… ஓசையும்,
அதன் பயணத்தின் வாயிலாகவும்
கதையின் போக்கு முன், பின்னாக
நகர்த்தப்பட்டு இருப்பதும்
படத்தின் மீது ஈர்ப்பைக் கூட்டுகிறது.
படத்தில் காட்டப்படும் சிறைச்சாலை,
செட் போடப்பட்டு எடுக்கப்பட்டது
என்று சொன்னால் ஒருவரும்
நம்ப மாட்டார்கள். மழையால்
பாசி படிந்த சுவர்கள்,
அழுக்குப் படிந்த கட்டடம்,
சிறை சமையல் கூடத்தின்
வாயில் முன்பு வைக்கப்பட்ட
மெனு விவரம் அடங்கிய தகவல்
பலகை என நுணுக்கமாக
இருக்கிறது சிறைச்சாலை செட்.
ஒரு வீடு என்றால், அதன்
செட் பிராப்பர்டிகள் என்னென்ன,
எதெது எங்கெங்கு இருக்க வேண்டும்
என்பதிலும் கூட மெனக்கெடல்
இருப்பதை படம் நெடுக காணலாம்.

கடந்த 2004 ஜன. 14 பொங்கலன்று வெளியான விருமாண்டி படத்தில், ”ஜெயில்ங்கிறது குத்தம் பண்ணினவங்க திருந்துற இடம்னு ரொம்ப பேரு நினைக்கிறாய்ங்கய்யா. ஆனா அங்க அப்படிலாம் ஒண்ணும் இல்லைங்கய்யா,” என்று கமல் ஒரு வசனம் வைத்திருப்பார்.

இந்த வசனத்தின் ஆரம்பக்கால வெர்ஷன், மகாநதியில் இடம் பெற்றுள்ளது. ஜெயிலர், காவலர்கள், வார்டன்கள் கூட்டு சேர்ந்து கொண்டு சிறைக்குள்ளேயே கஞ்சா, சிகரெட், மது உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வது, தட்டிக் கேட்கும் கைதிகள், காவலர்களை தாக்குவது போன்ற குற்றங்கள் நடப்பதை அப்பட்டமாக காட்டியிருப்பார்கள். சிறைச்சாலை என்பது ஒரு வதைக்கூடமாகவும், குற்றங்கள் நிகழும் இடமாகவும் இருக்கிறது என்பதை மகாநதிக்கு முன்பாக எந்த படத்திலும் சொல்லப்படவில்லை. அந்த வகையில் மகாநதிதான் முன்னோடி.

அந்தச் சிறையில்,
கிருஷ்ணாவை அதிகார வர்க்கம்
தங்கள் குற்றச் செயல்களுக்குத்
துணை போகச்சொல்லி மிரட்டும்.
அப்போது ஆவேசப்படும் கிருஷ்ணா,
‘நீ காக்கிச்சட்ட போட்ட குத்தவாளி.
எனக்கு அது இல்லை.
மத்தபடி உனக்கும் எனக்கும்
பெரிய வித்தியாசமில்ல,’
எனக் கூறுவான். இதன்
மேம்பட்ட வெர்ஷனாக
விருமாண்டியில் ஜெயிலர்
பேய்க்காமனிடம், கைதி
விருமாண்டி பேசும்
வசனமும் உள்ளது.

இன்றைக்கு, காவல்துறையில் பிடிபடும் கைதிகள் கழிப்பறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக வரும் செய்திகளுக்கு எல்லாம் கூட மகாநதி படம்தான் தொடக்கப்புள்ளி. அந்தப் படத்தில், சிறைச்சாலை சமையல் கூடத்தில் நடக்கும் மூன்று அடிதடி காட்சிகளில் வழுக்கி விழுந்த வசனம் இடம் பெற்றிருக்கும்.

முக்கிய கதாப்பாத்திரங்களின் குணநலனை பிரதிபலிக்கும் வகையில் பறவைகள், விலங்குகளோடு தொடர்பு படுத்தி இருக்கும் பாங்கும் ரசிக்க வைக்கிறது. கிருஷ்ணாவை கருடனோடும், அவனை பாலியல் இச்சை வாயிலாக கவிழ்க்கத் துடிக்கும் மஞ்சுவை குதிரையோடும், தனுஷை பூனையோடும், சிறுவன் பரணியை நாய்க்குட்டியோடும் தொடர்புபடுத்தி இருப்பார்கள்.

நேர்த்தியான திரைமொழியும், கூர்மையான வசனங்களும் ஒருபுறம் ரசிக்க வைக்கும் அதேவேளையில், சில கதாபாத்திரங்கள் பார்வையாளனின் நெஞ்சை விட்டு என்றைக்கும் அகலாவண்ணம் சிம்மாசனமிட்டுக் கொள்ளவும் செய்கின்றன.

எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்தே படங்களில் நடித்து வந்தாலும் சரஸ்வதி அம்மாளாக வரும் எஸ்.என்.லட்சுமிக்கு இந்தப்படம், மைல் கல் என்று சொல்லலாம்.

தனுஷ், மஞ்சு விரிக்கும்
வலையில் மருமகன் சிக்கி
விடக்கூடாது என்பதற்காக
தன் முக பாவனைகளாலும்,
காட்டமான சின்னச்சின்ன
வசனங்களாலும் மருமகன்
கிருஷ்ணாவை எச்சரித்துக்
கொண்டே இருப்பார்.
கிருஷ்ணாவின் பள்ளிக்கால
நண்பன் சுந்தர் குடும்பத்தை
சகஜமாக வரவேற்று
உபசரிக்கும் சரஸ்வதி அம்மாள்,
ஒரே நாள் இரவு தங்கிவிட்டுப்
போகும் தனுஷ், மஞ்சுவின்
வருகையை தவறான சமிக்ஞையாகவே
உடல்மொழியால் வெளிப்படுத்துவார்.

கமல் தொடர்ந்து தன்
படங்களில் எஸ்.என்.லட்சுமிக்கு
வாய்ப்பு அளித்து வந்தார்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தில்
அவருக்காக ஒரு சண்டைக் காட்சியும்
வைத்திருந்தார். விருமாண்டி மீது
பாசமழை பொழியும் அப்பத்தாவாக
விருமாண்டியிலும் முக்கிய வேடம்
அவருக்கு வழங்கியிருப்பார்.
எனினும், எஸ்.என்.லட்சுமிக்கு
மகாநதி, வாழ்நாள் ஸ்பெஷல்தான்.

தனுஷ் பாத்திரத்தில் நடித்த
வி.எம்.சி. ஹனீபா இந்தப்
படத்திற்குப் பிறகு தவிர்க்க
முடியாத நடிகர் ஆனார்.
‘இங்க காக்கிச் சட்ட இல்லடா…
வெள்ள சட்ட வச்சதுதான் சட்டம். தெர்தா…’
என சிறையில் தனி ராஜாங்கம்
நடத்தும் துலுக்கானமாக வருகிறார்
சிவசங்கர். அவர் கமலை
புரட்டி எடுக்கும் காட்சியில்
ஒட்டுமொத்த ரசிகர்களின்
கோபத்தையும் சம்பாதித்திருப்பார்.
பின்னர் அவரை கமல் ரிவெஞ்ச்
எடுக்கும் காட்சியில் ரசிகர்களின்
கைத்தட்டல் திரை அரங்கை
அதிரச் செய்தது. இந்தப்
படத்திற்குப் பிறகு ‘மகாநதி’ சங்கர்
என்ற முன்னொட்டுடன்
பிரபலம் ஆனார் சிவசங்கர்.

இரண்டு நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் மண்ணாங்கட்டி (தலைவாசல் விஜய்), ரசிகர்கள் மனதை ஒட்டுமொத்தமாக கொள்ளை கொண்டு விடுகிறார். ”எங்களுக்கெல்லாம் ஒண்யும் இல்ல. மேல ஆகாசம். கீழே பூமி. கஷ்டம்லாம் உங்களுக்குதான் சாமீ…” என சென்னை வட்டார வழக்கில் அனாயசமாகப் பொளந்து கட்டுகிறார்.

‘துண்ட்டுதும் பையன் தூங்கிடுவான். அப்பால தூக்கிட்டுப் போய்ட்டீங்கனா இந்த அழுவுற சீன் கட் ஆகிடும். இல்லேனா பையன் அழுவ… அப்புறம் நம்ம சம்சாரம் அழுவும்… அதப்பாத்து நமக்கு குபுக்குனு…,” எனச் சொல்லும் காட்சியில் ரசிகர்களை நெக்குருகச் செய்கிறார் மண்ணாங்கட்டி.

படம் முழுக்க கமலுடன் பயணிக்கும் முக்கிய பாத்திரமாக வருகிறார் பூர்ணம் விஸ்வநாதன். ஏற்கனவே சில படங்களில் கமலுக்கு தந்தை வேடத்தில் நடித்திருப்பார் பூர்ணம். இந்தப் படத்தில் அவருக்கு மாமனார் வேடம்.

வக்கீல் குமாஸ்தாவான
அவர் பணம் கையாடல் குற்றத்திற்காக
தண்டனை பெற்றவர். சிறையில்
தனது அறைக்குள் சாமி படங்கள்
வைத்து பூஜை செய்து கொள்ளவும்,
அவரே சமைத்து சாப்பிட்டுக்
கொள்ளவும் சிறை நிர்வாகம்
அனுமதித்து இருக்கிறது.

ஒரு காட்சியில் பஞ்சாபி அய்யர்
சுவாமி படத்திற்கு முன் ஸ்தோத்திரம்
சொல்லிக் கொண்டு இருப்பார்.
அவருடைய மந்திரங்கள் தொந்தரவு
செய்யவே தூக்கத்தில் இருந்து
விழித்தெழும் கமலிடம்,
‘இது கனகதாரா ஸ்தோத்திரம்.
பொன் மழ. டெய்லி சொன்னா
கூரையைப் பிச்சுண்டு தங்கமா
கொட்டும்,’ என்பார்.

அதற்கு கமல் உடனே, சிறையின் மேற்கூரையைப் பார்ப்பார். அவன் தன்னை பகடி செய்வதை புரிந்து கொண்ட பஞ்சாபி, நம்பிக்கையோட சொன்னா பணம் கொட்டும் எனக்கூறுவார். அதற்கு நமட்டுச் சிரிப்பு சிரிக்கும் கமலிடம், ‘என்ன நமட்டுச் சிரிப்பு… நீ நாஸ்திகன் இல்லியே? ஏதாவது பதில் சொல்லு. உண்டு, இல்லேனு ஏதாவது சொல்லு,’ என்பார்.

அதற்கு கமல், ‘உண்டு… இல்ல… நான் எதுவா இருந்தா சவுரியப்படும்னு சொல்லுங்க. அதுவாக இருந்துட்டுப் போறேன்,’ என்பார்.

‘ஹா… ரெண்டுங்கெட்டான் கேஸா… தினம் சிரத்தையா சுவாமி கும்பிட்டுண்டு இருந்தேனா இங்க வந்திருக்க மாட்டே நீ,’ எனக்கூறுவார் பஞ்சாபி.

அப்போது கமல், அவரை மேலிருந்து கீழ் வரை நக்கலாக பார்ப்பார். அதை புரிந்து கொள்ளும் பூர்ணம் விஸ்வநாதன், ‘இல்ல… அது வந்து… பகவான் வந்து… போடா… நாஸ்திகம் பேசறான் நாஸ்திகம்…,’ என பதில் சொல்ல முடியாமல் திணறுவார்.

நாள்தோறும் மூன்று வேளையும் கடவுளுக்கு பூஜை புனஸ்காரங்களைச் செய்து வரும் பஞ்சாபியின் மனைவி, இளம் வயதிலேயே இறந்து போகிறாள்; மணமேடை வரை வந்த மகளின் திருமணம் நின்று போகிறது; செய்யாத குற்றத்திற்காக பஞ்சாபி சிறைக்குச் செல்ல நேர்கிறது. இவை எல்லாமே கடவுள் சித்தப்படிதான் நடக்கின்றனவா? இதில் பஞ்சாபியின் பிழை என்ன? அவன் தினம் தொழும் கடவுளின் குற்றம் என்ன? என்பதை திரைமொழியால் சிந்திக்க வைக்கிறார் எழுத்தாளர் கமல்.

சிறைக்குள் நடக்கும் சட்ட விரோதச் செயல்களைத் தட்டிக்கேட்க முனையும் போதெல்லாம் கிருஷ்ணாவை, ‘எதையும் கண்டுக்காத. நாம நல்லபடியா இங்கிருந்து விடுதலை ஆகணும். அதை மட்டும் யோசி கிருஷ்ணா,’ என அவரை தடுத்து ஆற்றுப்படுத்த முயற்சிப்பார் பஞ்சாபி.

கடந்த 2003 ஜன. 15ம் தேதி வெளியான அன்பே சிவம் படத்தில், கார்ப்பரேட்டுகளுக்கு குடை பிடித்துக்கொண்டு, சமூக அவலங்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாத பாத்திரத்தில் மாதவனும், இடதுசாரி சிந்தாந்தவாதியாக கமலும் நடித்திருப்பார்கள். உண்மையில், அன்பே சிவம் படத்தில் வரும் நல்லசிவம் (கமல்), அர்ஸ் (மாதவன்) கதாபாத்திரங்கள், மகாநதியின் கிருஷ்ணா, பஞ்சாபி அய்யரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆக பார்க்கிறேன். இவ்விரு படங்களிலுமே எதிரெதிர் சிந்தனைகள் கொண்ட இரண்டு மையப் பாத்திரங்கள்; ஆனாலும், கடைசி வரை ஒன்றாக பயணிக்கும் விந்தையும் உண்டு.

தன் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை, சிறைக்குச் சென்றவனின் மகளை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று ஓட்டம் பிடித்து விட்டதாகச் சொல்வார், பஞ்சாபி. ஆனால், சிறை சென்று திரும்பிய கிருஷ்ணாவுக்கே மகள் யமுனாவை இரண்டாம் திருமணம் செய்து வைப்பார். கிருஷ்ணா உடனான நட்பிற்குப் பிறகு பஞ்சாபி அய்யருக்குள் ஏற்பட்ட தத்துவார்த்த மாற்றமாகவே கருதுகிறேன். பூர்ணம் விஸ்வநாதனுக்கும் இந்தப்படம் வாழ்நாள் ‘பெஞ்ச் மார்க்’ என்று சொல்லலாம்.

கமல்? அவரைப் பற்றி என்ன சொல்வது? கிருஷ்ணாவாகவே வாழ்ந்திருக்கிறார். அவர் மட்டுமின்றி, அனைவருமே அந்தந்த கதாபாத்திரங்களாகத்தான் தெரிகிறார்கள்.

குத்தீட்டி வசனங்கள், குறியீடுகள், இடக்கரடக்கல் வசனம் மற்றும் படிமங்களான காட்சியமைப்புகள் என தன் ரசிகர்கள்¢யார்? எப்படிப்பட்டவர்கள்? என்பதை உள்வாங்கி கனகச்சிதமாக பிசிறின்றி மகாநதியை படைத்திருக்கிறார். கமல் மட்டுமே ரசிகனின் ரசனையை காலந்தோறும் செழுமைப் படுத்திக்கொண்டே வருகிறார் எனலாம்.

ஒவ்வொரு பாத்திரமும் வசனங்களால் மட்டுமின்றி, பாவனைகளால் அதிநுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனித்த குணாதிசயமும் இருக்கிறது. உதாரணமாக சிறைக் காவலராக வரும் முத்துசாமி (ராஜேஷ்) நேர்மையானவர். ஆனால், சட்டத்திற்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யக்கூடியவர்.

அவருடைய வீட்டில் சில நாள்கள் கிருஷ்ணா தங்க நேரிடுகிறது. அவனிடம் தனியாக பேசுவதற்காக வரும் காவலர் முத்துசாமி, பக்கத்து அறையில் படித்துக் கொண்டிருக்கும் தன் மகன் முருகேஷூக்குக் கூட இந்த விஷயங்கள் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, அவனை அழைத்து, செட்டியார் கடையில போயி சிகரெட் வாங்கிட்டு வா என்பார். அந்த இளைஞனோ, ‘ஏற்கனவே வாங்கி வெச்சிட்டேன் பா’ என்பான். ‘சரி… அப்படினா போயி வாழைப்பழம் வாங்கிட்டு வா,’ என்று வெளியே அனுப்பி விடுவார். அதற்கு அந்த இளைஞனோ, ‘ச்சே!’ என படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை படுக்கையில் பொத்தென்று போட்டுவிட்டுச் செல்வார்.

தந்தை கட்டளையிட்ட மாத்திரத்தில் முருகேஷ், வாழைப்பழம் வாங்க ஓடிச்சென்று இருக்கலாம். ஆனால், தந்தை அடுத்தடுத்து வேலை வைத்ததை ரசிக்காத மகன் ஒருவித சலிப்புடன், ச்சே… என்றவாறே புத்தகத்தை தொப்பென்று போட்டுவிட்டுச் செல்லும் வரை மிக நுட்பமாக அந்தக் காட்சி கையாளப்பட்டு இருக்கும். அதுதான் படைப்பாளனின் கூர்மை.

காவலர் முத்துசாமி வீட்டில் இடம்பெறும் மற்றொரு காட்சியில் அவருடைய மனைவி முத்துசாமி, கிருஷ்ணா, பஞ்சாபி ஆகிய மூவருக்கும் காபி கொண்டு வந்து தருவார். அடுத்த கணமே, ‘உள்ளே போ’ என்று தலையசைவின் மூலம் மனைவிக்குச் சொல்லுவார் முத்துசாமி. அந்தளவுக்கு அவர் எதிலும் ஒழுக்கம், கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பவராக இருக்கிறாராம்.

தன் பள்ளிக்கால
தோழன் குடும்பத்துடன் வீட்டுக்கு
வந்திருந்தபோது அவர்களுடைய
குழந்தைகள் டைனிங் டேபிள்
மீது வைத்திருந்த சாக்லெட்டுகளை
கமலின் மகன் திருட்டுத்தனமாக
எடுக்க முயலும்போது, சிறுவனை
பார்வையாலேயே அதட்டுவார்.

இப்படி ஒவ்வொரு பாத்திரத்தின்
இயல்பான குணங்களையும்,
உணர்வுகளையும் அதிநுட்பமாக
பதிவு செய்திருப்பார்.

சிறைக்காவலர் முத்துசாமி,
கிருஷ்ணா, பஞ்சாபி ஆகிய மூவரும்
பேசிக்கொள்ளும் மற்றொரு காட்சியில்,
தனக்கு நேர்ந்த கொடுமைகள்,
அவமானங்கள் குறித்து
கமல் புலம்புவார்.

”நின்னு கொல்ற தெய்வமும்
சும்மா இருக்கு. அன்று கொல்ற
சட்டமும் சும்மா இருக்கு.
ஆனா ஏனக்கு மட்டும் தண்டனை?
நான் நேர்மையா இருந்ததுக்காகவா? ஏன்?,”
எனக் கேள்வி எழுப்புவார், கிருஷ்ணா.

அந்த ஏன்? என்ற கேள்வியை சாமானியர்களின் பிரதிநிதியாகவே ஒலிக்கச் செய்கிறார்.

அதற்கு காவலர் முத்துசாமி, ”நம்மள மாதிரி நேர்மையா இருக்கறவனுக்கு மரியாதையே இல்ல. ஆனா தேவடியா தொழிலுக்கு துணை போறவனுக்கு மாலை போட்டு மரியாதை தர்றாங்க. யோசிச்சுப் பார்த்தா நேர்மையானவன்னு ஒருத்தனும் கிடையாது. என்னைவிட அயோக்கியன்னு வேணும்னா சொல்லலாம்.

ஆக மொத்தம் எல்லோருமே திருடனுக்கு துணை போறவங்கதான். ஆனா அரசியல்வாதிகளையும், போலீஸ்காரர்களையும் மட்டும் இந்தியா பூராவும் திட்டறாங்க. வேட்டியும், சேலையும் வாங்கிட்டு ஓட்டுப போடற உனக்கு ஏதுடா வக்குனு திருப்பிக் கேட்டா எப்படி இருக்கும்?,” எனக்கூறுவார். முத்துசாமி பாத்திரத்தின் வழியாக, இங்கே யாருமே புனிதம் கிடையாது என்பதை பதிவு செய்கிறார் வசனகர்த்தா கமல்.

இதே காட்சியில், ”அவன் பழைய தனுஷ் இல்ல. முந்தி வெறும் மாமா. இப்போ அவன் அரசியல்வாதிகளுக்கு மாமா. யூனிபார்ம் போடறவங்கள விட இந்த மாதிரி மாமா பசங்களுக்குதான் மரியாதை அதிகம்,” என சமகால அரசியல் போக்கையும் பகடி செய்திருப்பார் கமல்.

கூவம் ஆற்றின் மேலே நேப்பியர் பாலத்தில் கிருஷ்ணாவும், பஞ்சாபியும் சென்று கொண்டிருக்கும்போது, ”சாந்தமா கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா? நல்லவங்க எல்லாம் கோபப்படாம இருக்கறதாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது,” என வேடிக்கை மனிதர்களாக மட்டும் வாழ்வை கடந்து செல்வோர்க்கு மண்டையில் ‘ணங்’ என்று குட்டு வைத்திருப்பார்.

கொல்கத்தா சோனாகாச்சிக்கு மகளைத் தேடிப்போகிறார்கள் கிருஷ்ணாவும், பஞ்சாபியும். ஓர் அறையில் மகள் இருப்பதைப் பார்த்து விடுகிறார் கிருஷ்ணா. அவளும் தந்தையைப் பார்த்ததும், ‘அப்பா…’ என கண்ணீரும் கம்பலையுமாக ஓடிச்சென்று தந்தையை அணைத்துக் கொள்கிறாள். கண்ணீருடன் மகளை வாரி அணைத்துக் கொள்ளும் அந்தக் காட்சியில் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் அழ வைத்து விடுகிறார் கமல். நீங்கள் எத்தனை முறை, எப்போது இந்தக் காட்சியைப் பார்த்தாலும் உங்களை மீறி அனிச்சையாக கண்ணீர் குபுக்கென்று வந்துவிடும். அதுதான் படைப்பின் வெற்றி.

அரைகுறை ஆடையுடன் இருக்கும் மகள் மீது போர்வையைச் சுற்றி, கையால் ஏந்திக்கொண்டு பாலியல் விடுதியை விட்டு வெளியே ஓட்டமாக ஓடி வரும்போது, அய்யோ… கிருஷ்ணா எப்படியாவது இந்த இடத்தில் இருந்து மகளை அழைத்துக்கொண்டு தப்பித்து விட வேண்டுமே என ரசிகர்களை பதைபதைக்கச் செய்து விடுகிறார்.

கிருஷ்ணாவை புரோக்கர்கள் சூழ்ந்து கொண்டு, காலால் மிதி மிதியென்று மிதிக்கின்றனர். மொழி புரியாத மண்ணில் தன் மகளை மீட்க வந்திருப்பதாக உணர்வுகளால் கடத்துகிறார். அவர்களின் கால்களில் விழுந்து கதறுகிறார் கமல்.

பாலியல் விடுதியின் தலைவியாக இருக்கும் ஒரு பெண்மணி தமிழில் பேசுவதை அறிந்து, அவரின் காலில் விழுந்து மகளை காப்பாற்றும்படி கண்ணீர் மல்கக் கையெடுத்துக் கும்பிடும்போதும் பார்வையாளர்களை கண்ணீர் மழையில் நனைய வைத்து விடுகிறார்.

”காவேரி… சிரிடி சிரி…
உன் தெய்வம் வந்திருக்குடி
உன்னை கூட்டிட்டுப் போக…,”
எனக்கூறும் பாலியல் விடுதியின்
தலைவி நம்மை நெகிழ
வைத்து விடுகிறார்.
அவரின் மகளாக வரும் ஜலஜா
என்ற சிறுமியும் ஓடி வந்து,
அப்பா என பாசத்துடன் அழைக்கிறாள்.
அவளை வாஞ்சையுடன் அணைத்து,
கையெடுத்துக் கும்பிடுகிறார் கிருஷ்ணா.
பெட்டிக்கடைக்கு ஓடிச்சென்று
குங்குமம் எடுத்து வந்து காவேரியின்
நெற்றியில் வைத்து விடும்
அந்தச் சிறுமி, கிருஷ்ணாவுக்கு
மட்டுமின்றி நமக்கும்
தேவதையாகத் தெரிகிறாள்.

பாலியல் விடுதியில் இருந்து மகளை கங்கை நதியில் படகில் அழைத்துச் செல்லும்போது கேமரா அந்த நதியின் மீது அழுத்தமாக பார்வையைப் பதிக்கிறது. காவிரியில் தொடங்கிய வாழ்வு, கூவத்தின் சாக்கடையில் உழன்று, கங்கையில் புனிதம் அடைந்து விடுவதாகச் சொல்லாமல் சொல்கிறது.

ஒரு காட்சியில் காவலர் முத்துசாமி, உன் மீது கொலை வழக்கு பதிவு ஆகியிருப்பதால் இனிமேல் என் பாதுகாப்பில் நீ இருக்கக் கூடாது. நீ சரண்டர் ஆகி விடு. அப்பதான் சட்டப்படி ஆக்ஷன் எடுக்க வசதியா இருக்கும் என்பார்.

சட்டென்று எதிர்வினையாற்றும் கமல், ”யார் சட்டப்படி? வசதி இல்லாத என்னால நிஜத்த மட்டுமில்லைங்க… என்னைக்கூட காப்பாத்திக்க முடியாதுங்க…” என பதற்றத்துடன் சொல்லுவார். சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்ற கருத்தியலை கேள்விக்கு உட்படுத்தி இருப்பார் கமல்.

”விடுங்கடா… ஒருநாளைக்கு எத்தனை கஸ்டமர்… நான் என்ன மெஷினா…?,” என தூக்கத்தில் காவேரி உளறுவாள்.

அதைக் கண்டு சீரழிந்து போன தன் மகளின் நிலையை எண்ணி வெடித்து அழும் காட்சியில், கையறு நிலையில் இருக்கும் தந்தையை கண் முன் நிறுத்துகிறார், கமல்.

மகளுக்கு தூக்கத்தில் உளறும் பழக்கம் இருப்பதாக முன்பே ஒருமுறை காட்சியில் காட்டப்பட்டு இருக்கும். அதை இந்த இடத்தில் மீண்டும் சரியாக பொருத்திய வகையில் நுணுக்கமான படைப்புத் திறமையை இயக்குநர் வெளிப்படுத்துகிறார்.

”காவேரியோட இந்த கனவை கலைக்க முடியாதே யமுனா. மறுபடி மறுபடி வருமே… என் குழந்தைய என்ன பண்ணி வெச்சிருக்கானுங்க பாத்தியா யமுனா… அய்யோ… அங்க காவேரி மாதிரி நிறைய புள்ளைங்க இருக்கு யமுனா. தாங்க முடியாது… தாங்க முடியாது… நல்லவேள நீ அங்க வரல. நல்லவேள எங்க மாமியாரும் உயிரோட இல்ல… நான் மட்டும் என்ன பாவம் பண்ணினேன்…,” என துயரம் தாளாமல் பீறிட்டு அழும்போது பார்வையாளர்களை மீண்டும் அழ வைத்து விடுகிறார்.

அதைக்கேட்டு யமுனா, ”நீங்க ஒரு பாவமும் பண்ணல. உம்… என்ன வந்தது இந்தக் கடவுளுக்கு?,” என கேள்வி எழுப்புகிறாள். ”தப்பே பண்ணாதவாள்லாம் தண்டனை அனுபவிச்சிண்டு இருக்கா. தப்பு பண்றவாளுக்கு எந்த தண்டனையும் கிடைக்காம போயிண்டுருக்கு,” எனக் கதறுவாள் யமுனா. யமுனாவின் இந்த புலம்பல், நேர்மையான சாமானியர்களின் குரலாக மீண்டும் ஒலிக்கிறது.

”அப்போ ஏன்… அப்போ ஏன்… பொய் சொல்லாதடா. நிஜத்த சொல்றானு அடிச்சி அடிச்சி வளர்த்தாங்க. ராமனையும் காந்தியையும் காட்டி காட்டி வளர்த்தாங்க. கடைசில இந்த மாதிரி கூட்டிக் குடுக்குற மாமா பசங்ககிட்ட தோத்துப் போறதுக்கா…?

ஒரு நல்லவனுககு கிடைக்க வேண்டிய அத்தனை மரியாதையும் ஒரு கெட்டவனுக்கும் கிடைக்குதே… அது எப்படி? பொறுக்கி பயலுக்கு மரியாதைய தட்டுல வெச்சி கொடுக்குது இந்த ஊர்… இந்த ஒலகம்…,” என புலம்பும் கிருஷ்ணாவின் பாத்திரம், நம்முடைய அடிமனதில் இருக்கும் புலம்பலையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறது. அந்தக் காட்சியில் பார்வையாளர்களின் சட்டையும் நனைந்து விடுகிறது.

தனுஷையும், வெங்கடாஜலத்தையும் கிருஷ்ணா பழிவாங்கப் புறப்படுவதை அறிந்த யமுனா, அவனைத் தடுக்க முயற்சிக்கிறாள். தன் முடிவில் இருந்து மாறாத அவன், யமுனாவுக்கு குங்கும திலகமிட்டு, அவள் இதழோடு இதழ் பதித்து வாயை அடைக்கிறான். கிருஷ்ணாவின் ஸ்பரிசத்தால் கண்களை மூடிக்கொள்ளும் யமுனா, மயக்கம் தெளிந்து கண்களைத் திறப்பதற்குள் இருட்டுக்குள் மறைந்து விடுகிறான். இந்தக் காட்சி உலகப்படத்திற்கு இணையானது என்றால் மிகையில்லை.

1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் ஐஎன்ஏ படையில் சேர்வதற்காக சேனாபதி கிளம்பிச் செல்லும் ஒரு காட்சி இடம்பெறும். சேனாபதி கிளம்புவதற்கு முன்பாக அவருடைய மனைவி அமிர்தவள்ளிக்கு (சுகன்யா) நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டுக் கிளம்புவார். அந்தக் காட்சிக்கான முந்தைய வெர்ஷன்தான், ‘மகாநதி’ யமுனாவுக்கு, கிருஷ்ணா திலகமிடுவதும். இவ்விரு படங்களிலுமே சுகன்யாவுக்கு, கணவனுக்காக காத்திருக்கும் வேடம்தான்.

ஒரு காட்சியில் பள்ளிக்கால நண்பன் சுந்தர் தன் மனைவியிடம், கிருஷ்ணாவைப் பற்றி விவரிக்கும் காட்சி வருகிறது. அந்தக் காட்சியில், கிருஷ்ணாவின் அப்பா உள்ளூரில் பெரிய வஸ்தாத். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்றும், கிருஷ்ணாவுக்கு அப்போதே தமிழ்ப்பற்று ஜாஸ்தி என்றும், அவன் தமிழ் மீடியத்தில் படித்தான் என்றும் கூறுவான்.

இந்த வசனத்திற்கு
வலு சேர்க்கும் விதமாக கிருஷ்ணா
வசிக்கும் திருநாகேஸ்வரம் ரயில்
நிலைய பெயர்ப்பலகையில்
ஹிந்தியில் எழுதப்பட்டு இருந்த
ஊரின் பெயரை தார் பூசி
அழிக்கப்பட்டதாகக் காட்டப்பட்டு இருக்கும்.
கிளைமேக்ஸ் காட்சியில்
பாலியல் புரோக்கர் வெங்கடாஜலம்,
ஆங்கிலத்தில் ஏதோ சொல்ல,
அதற்கு கிருஷ்ணா, எனக்குப் புரியல.
தமிழ்ல சொல்லு. நான் தமிழ்
மீடியத்துல படிச்சவன் என்று
கூறுவார். இப்படி பல காட்சிகளுக்கும்,
வசனங்களுக்கும் முன், பின்னாக
ரெபரன்ஸ் வைத்திருப்பார் கமல்.

சென்சாருக்குப் பிறகான
இந்தப் படத்தில் ஒரு ஃபிரேம் கூட
தேவையற்றது என்று சொல்லி விட
முடியாது. அந்தளவுக்கு
ஷார்ப்பான கட்ஸ்.

வில்லன் வெங்கடாஜலம், ”பொண்ணுங்கள எல்லாம் அனுப்பி வெச்சவன் தனுஷ்தான். நீ அவனை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ. உனக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லு. தர்றேன். என்ன விட்டுடு,” எனக்கூறுவார்.

அதற்கு கமல், ”அவன் சப்ளை; நீதான், டிமாண்டு. பிள்ளைக்கறி கேட்கறவன் நீதான்,” என டிமாண்டு என்ற சந்தையை ஒழித்துவிட்டால், சப்ளையர்கள் எல்லாம் வெறும் ஸ்லீப்பர் செல்கள்தான் என்பதை நச்சென்று விளக்கி இருப்பார்.

நேர்த்தியான திரைமொழியாலும், நறுக்குத் தெறிக்கும் வசனங்களாலும் பின்னி பெடலெடுத்திருக்கும் கமல், ‘தைப்பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…’ பாடல் மூலமும், ‘தேடிச்சோறு நிதம் தின்று’ என்ற பாரதியின் கவிதை வரிகளாலும் மகாநதியை மொத்தமாக தன் தோளில் சுமந்து இருக்கிறார்.

இந்தப் படத்தில் கமலுக்கு நிகரான இன்னொரு நாயகனும் இருக்கிறார். நீங்கள் நினைத்தது சரிதான். இளையராஜாதான் அந்த நாயகன்.

சித்ராவின் குரலில் ஒலிக்கும் ‘தைப்பொங்கலும் வந்தது பாலும் பொங்குது வாழ்த்துச் சொல்லடியோ…’ என்ற பாடல்தான் இன்றைக்கும் தமிழர் திருநாளில் தவறாமல் ஒலிக்கிறது. எஸ்பிபி., உமா ரமணன் மற்றும் இப்படத்தில் காவேரியாக நடித்த சிறுமி ஷோபனாவின் குரலில் ஒலிக்கும் ‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ பாடல் பலருடைய பிளே லிஸ்டில் இப்போதும் உண்டு.

பாடல்களைக் கடந்து, பின்னணி இசையில், தான் எப்போதும் ராஜாதி ராஜா என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் ராஜா.

படத்தில், நாயகனுக்கும் நாயகிக்கும் டூயட்டோ, காதல் காட்சிகளோ இல்லை. ஆனால், சிறையில் சுகன்யாவும் கமலும் சந்திக்கும் காட்சிகளில் இளையராஜா இசை மொழியாலேயே இருவரிடையே படரும் மெல்லிய காதலை ரசிகர்களுக்குக் கடத்தி விடுகிறார்.

1.22.15 மணி முதல் 1.22.58 வரையிலான 43 நொடிகளில் சிறையில் கமலும், சுகன்யாவும் சந்திக்கும் காட்சியில் கீபோர்டு, பேஸ் கிடார், வயலின் கலவை மூலம் ரசிகர்களை லயித்துப் போகச் செய்து விடுகிறார்.

இதன் தொடர்ச்சியாக, தன் வருங்கால கணவனை சந்திக்க வேண்டும் என்று சிறப்பு மனு எழுதிப்போட்டு சிறைக்கு வந்து கமலை சந்திக்கிறார் சுகன்யா. 1.23.00 முதல் 1.24.28 வரையிலான அந்தக் காட்சி, மெல்லிசான வயலின் பின்னணியுடன் தொடங்குகிறது. நாயகனும், நாயகியும் கண் சிமிட்டலால் மனம் ஒத்துப்போய் விடுகிறார்கள் என்பதை உணர்த்த, மெலிதாக தொடங்கிய வயலின் இசை மெதுமெதுவாக வேகம் எடுக்கிறது. இருவருக்கும் இடையே இடையூறாக இருந்த சிறைக் கம்பிகள் மாயமாகி விடுகிறது.

முதலில் இருவரும் கைகள்
கோத்தபடி வட்டமடிக்கிறார்கள்.
பின்னர் அவர்களுடன் கமலின்
குழந்தைகளும், மாமியாரும்,
சுகன்யாவின் தந்தையும்
கை கோத்துக் கொண்டு
வட்டமடித்துக் கொண்டாடுகிறார்கள்.
கிருஷ்ணா மனைவி, பிள்ளைகள்
சகிதமாக குடும்பஸ்தனாக ஆகிவிட்ட
மகிழ்ச்சியை வயலினுடன் பேஸ் கிடார்,
கீ போர்டு கருவிகளின் இசையையும்
குழைத்து கொண்டாட்ட உணர்வை
நமக்குக் கடத்தி விடுகிறார் ராஜா.

தைப்பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாடல் வாயிலாக வாலியின் வரிகளில் தமிழரின் தற்சார்பு வாழ்வியலை இசையால் தொடுத்திருக்கும் ராசய்யா, இதே பாடலை ‘பேத்தா’ வெர்ஷனிலும் வேறு வேறு காட்சிகளில் பயன்படுத்தி இருக்கிறார். இது அவருக்கு கைவந்த கலை.

சோனாகாச்சியில் இருந்து மகளை மீட்டுக் கொண்டு கங்கை நதியில் படகில் கிருஷ்ணா வரும்போது, ”இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது… இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது…” என தைப்பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாடலை பேத்தா வெர்ஷனில் கொடுத்து, ராஜாவும் தன் பங்கிற்கு ரசிகர்களின் மனதை கனக்கச் செய்து விடுகிறார்.

2.28.43 முதல் 2.29.50ஆவது மணித்துளியில் கிருஷ்ணாவுக்கும் யமுனாவுக்கும் இடையிலான உரையாடல் காட்சி. எதிரிகளை பழிவாங்க புறப்படுவதற்கு முன்பான காட்சி இது. கிருஷ்ணா, தன் திட்டத்தைச் சொல்லும்போது வரும் பின்னணி இசை, அடுத்து என்ன நடக்குமோ என்று ரசிகர்களை இயல்பாகவே பதைபதைப்புக்கு உள்ளாக்குகிறது.

கிருஷ்ணாவின் திட்டம் அறிந்து
பதற்றம் கொள்ளும் யமுனாவை
இழுத்து அணைத்து இதழோடு இதழ்
பதிப்பார் கிருஷ்ணா. அவள் சற்றே
ஆசுவாசம் அடைந்தாள் என்ற
உணர்வைக் கடத்த குழைவான
பின்னணி இசை என ஒரே
நிமிடத்தில் ரசிகர்களின் மனநிலையை
வெவ்வேறு பரிமாணத்திற்குக் கொண்டு
சென்று விடுகிறார் ராகதேவன்.

கழைக்கூத்தாடி குடும்பத்திடம்
அடைக்கலமாக இருக்கும் தன்
மகனை மீட்டுக்கொண்டு செல்லும்
காட்சியில், ‘தேடியது கிடைத்தாலே
சந்தோஷப்படும் மனசு… வந்து கூடியது
விட்டுப்போனால் வருத்தப்படுவதென்ன…,’
என தன் குரலால் ஒரு சிறு
பாடலைப் பாடியிருப்பார்.
தேடியது கிடைத்துவிட்ட மகிழ்ச்சியை
ரசிகர்களின் மூளைக்கும் கடத்தி
விடுவதோடு, ஆனந்தக் கண்ணீரையும்
வரவழைத்து விடுகிறார் இசைஞானி.
ராஜாவின் குரல், அந்தக் காட்சிக்கு
மேலும் கனம் கூட்டியிருக்கிறது.

சிறந்த படம், சிறந்த ஒலிக்கலைவை ஆகிய இரண்டு தேசிய விருதுகளை இப்படம் தட்டிச்சென்றது. இப்படியொரு வரலாற்றுச்சிறப்பு மிக்க படத்தை தயாரித்த அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு வாழ்நாளெல்லாம் இந்தப் படம் பெயர் சொல்லும். சிறந்த நடிகர், இசை, திரைக்கதை, ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளிலும் தேசிய விருது வழங்கியிருக்க வேண்டும். எப்படி கண்டுகொள்ளாமல் விட்டார்கள் எனத் தெரியவில்லை.

இந்தப் படத்தில் முன்வைக்கப்பட்ட
அரசியலும், ஒருதலைப்பட்சமான
சட்ட நடைமுறைகளும் திரையில்
அதற்குமுன் பேசப்படாதவை.
மகாநதி வெளியாகி 31 ஆண்டுகள்
கடந்த நிலையில், முன்பை விட
இப்போது அதிகார வர்க்கத்தின்
சுரண்டலும், கயமைத்தனங்களும்
மிகவும் வலிமை பெற்றிருப்பதுதான்
ஆகப்பெரும் கேடு.

சகலகலா வல்லவரான கமலால் மீண்டும் ஒருமுறை புராஸ்தடிக் ஒப்பனையுடன் தசாவதாரம் கூட எடுக்க இயலும். ஆனால், ஒருபோதும் மீண்டும் ஒரு மகாநதியை படைக்க முடியாது. அது, இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற காவியம்.

  • இளையராஜா சுப்ரமணியம்

Leave a Reply