
மாதச் சம்பளதாரர்கள், மத்திய தர வர்க்கத்தினரை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாக, ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய அரசின் 2025-2026ஆம்
ஆண்டுக்கான நிதிநிலை
அறிக்கையை பிப். 1ஆம் தேதி
(சனிக்கிழமை) நிதித்துறை
அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்றத்தில்
தாக்கல் செய்தார்.
நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு:
புதிய வருமான வரி முறையில்,
வருமான வரி விலக்கிற்கான
உச்ச வரம்பு 7 லட்சம் ரூபாயில்
இருந்து 12 லட்சம் ரூபாயாக
உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி,
ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை
வருமானம் பெறுவோர், வருமான வரி
செலுத்துவதில் இருந்து விலக்கு
அளிக்கப்படுவதாக அமைச்சர்
நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கடந்த 2019ல் 5 லட்சமாகவும்,
2023ல் 7 லட்சமாகவும் உயர்த்தப்பட்ட
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு,
தற்போது 12 லட்சமாக உயர்த்தப்பட்டு
உள்ளது. இது நடப்பு நிதியாண்டில்
இருந்து நடைமுறைக்கு வருகிறது.
அதேவேளையில் இந்த நிதிநிலை
அறிக்கையில் கவனித்தக்க
அம்சம் என்னவெனில்,
வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றுக்கு
வரி விலக்கு பெறக்கூடிய
பழைய வருமான வரி முறையை
தேர்ந்தெடுப்பவர்களுக்கு இந்த
புதிய வரி முறை பொருந்தாது.
இந்தியாவில் தனி நபர்
வருமான வரி அதிகமாக உள்ளதாக
விமர்சனங்கள் கிளம்பிய நிலையில்,
கடந்த 2020ஆம் ஆண்டு பாஜக அரசு
புதிய வருமான வரி தாக்கல்
முறையைக் கொண்டு வந்தது.
தற்போது இந்தியர்கள்
இரு விதமான வருமான வரி தாக்கல்
முறைகளில் எதை வேண்டுமானாலும்,
எந்த ஆண்டில் இருந்து வேண்டுமானாலும்
வரி கணக்கைத் தாக்கல் செய்யலாம்.
பழைய வருமான வரி முறையின்படி, ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. 2.50 லட்சம் முதல் 5 லட்சத்துக்கு 5 சதவீதம் வரி. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதம் வரி. அதாவது, 5 லட்சத்திற்கு மேல் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு லட்சத்திற்கும் அரசுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும்.
10 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வரி. ஒருவர் ஆண்டுக்கு 10 லட்சத்திற்கு மேல் சம்பாதித்தால் ஒவ்வொரு லட்சத்திற்கும் 30 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும்.
ஆனால், 2020ல் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்திய புதிய வருமான வரி முறை வேறு விதமாக இருந்தது. வரி விலக்கு பெறும் பல அம்சங்கள் ஒழிக்கப்பட்டன. அதேநேரம், வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, பழைய வருமான வரியை ஒப்பிடும்போது ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் பெறுபவர்களுக்கு குறைவான வரி செலுத்தும் வகையில் புதிய வருமான வரி முறை அமைக்கப்பட்டது. மேலும், இது மக்கள் புரிந்து கொள்வதற்கும், வரித் தாக்கல் செய்வதை ஊக்கப்படுத்துவதற்கும் எளிமையாக இருக்கும் என மத்திய அரசு கூறியது.
நிர்மலா சீதாராமனின் தற்போதைய நிதிநிலை அறிக்கையில் பழைய வருமான வரி தாக்கல் முறையை பயன்படுத்துபவர்களுக்கு எந்த வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை. எனவே பழைய வரி முறையை பயன்படுத்துபவர்கள் புதிதாக மிகப்பெரிய அளவில் வரியை சேமிக்க முடியுமா? என நீங்கள் ஆராய்ந்தால் உங்களுக்கு ஏமாற்றம்தான். ஆனால் உங்களை சிந்திக்கத் தூண்டும் வகையில் புதிய வருமான வரி முறையில் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
புதிய வருமான வரி முறையில் வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்தியது மட்டுமின்றி, கணிசமான அளவுக்கு வரி குறைப்பையும் செய்திருக்கிறது மத்திய அரசு.
ஆண்டுக்கு, முதல் 4 லட்சம் ரூபாய்க்கு வருமான வரி கிடையாது.
ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை – 5 சதவீதம் வரி.
ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை – 10 சதவீதம் வரி.
ரூ. 12 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை – 15 சதவீதம் வரி.
ரூ. 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை – 20 சதவீதம் வரி.
ரூ. 20 லட்சம் முதல் ரூ. 24 லட்சம் வரை – 25 சதவீதம் வரி.
ரூ. 24 லட்சத்திற்கு மேல் – 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
புதிய வருமான வரி முறையில் சேமிக்கத் தூண்டும் அம்சங்கள் இல்லை என ஒரு தரப்பினர் கூறினாலும், வரி குறைப்பு காரணமாக மத்திய தர வர்க்கத்தினர் கையில் அதிக பணப்புழக்கம் வர இந்த வரி முறை உதவும். இது, அவர்களை சேமிக்கவும், முதலீடு செய்யவும் உதவும் என்கிறார் நிர்மலா சீதாராமன்.
கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல், இந்த புதிய வரி முறையை தேர்ந்தெடுத்தால், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் சுமார் 80 ஆயிரம் ரூபாய் வரையிலும், 18 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்கள் 70 ஆயிரம் ரூபாய் வரையிலும் சேமிக்க முடியும் என்கிறார்.
எனினும், புதிய வருமான வரி முறை காரணமாக ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு நேரடி வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
டிடிஎஸ் வரம்பு உயர்வு:
மூத்த குடிமக்களுக்கான டிடிஎஸ்
(Tax Deducted at Source)
வரம்பு 50 ஆயிரம் ரூபாயில்
இருந்து ஒரு லட்சம் ரூபாயாக
உயர்த்தப்பட்டு உள்ளது.
வாடகைக்கு விடுவதன் மூலம்
வருமானம் ஈட்டுபவர்களுக்கான
வரம்பும் 2.40 லட்சம் ரூபாயில்
இருந்து 6 லட்சம் ரூபாயாக
உயர்த்தப்பட்டு உள்ளது.
கல்விக்கடனுக்கு டிசிஎஸ் வரி விலக்கு:
எல்ஆர்எஸ் (Liberalised Remittance Scheme)
திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு
அனுப்பும் பணத்திற்கான டிசிஎஸ்
(Tax Collected at Source)
வரி விலக்கு வரம்பு 7 லட்சம்
ரூபாயில் இருந்து 10 லட்சம்
ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கியால் கொண்டு
வரப்பட்ட எல்ஆர்எஸ் திட்டத்தின்
கீழ் இந்தியர்கள், வெளிநாடுகளில்
வசிப்பவர்களின் கல்வி,
மருத்துவ சிகிச்சை, முதலீடு
ஆகியவற்றுக்காக பணம் அனுப்பலாம்.
இந்தியாவுக்கு வெளியே
நிதி அனுப்பும் செயல்முறையை
எளிமைப்படுத்துவதையும்,
நெறிப்படுத்துவதையும் நோக்கமாகக்
கொண்டு இந்த திட்டம்
கொண்டு வரப்பட்டது.
‘கிக்’ தொழிலாளர்களுக்கு புதிய திட்டம்:
ஓலா, ஊபர், ஸ்விக்கி,
ஸொமேட்டோ போன்ற
செயலி சார்ந்து பணியாற்றி வரும்
‘கிக்’ தொழிலாளர்கள் தங்களை
இ-ஷ்ரம் என்ற இணையதளத்தின்
மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இதன்மூலம் அவர்களுக்கு
அடையாள அட்டைகள்,
பிரதமர் மந்திரி ஜன் ஆரோக்கியா
யோஜனா திட்டத்தின் கீழ்
சுகாதார காப்பீடு போன்றவை
வழங்கப்படும். இத்திட்டத்தின்
மூலம் சுமார் ஒரு கோடி ‘கிக்’
தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள்
என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஸ்டார்ட்-அப்களுக்கு கூடுதல் நிதி உதவி:
ஏற்கனவே ஸ்டார்ட்-அப்
நிறுவனங்களுக்கு நிதியுதவி
அளிக்கும் திட்டத்தின் கீழ்
அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய்
நிதியுதவி வழங்கி வருவதைக் கடந்து,
இன்னும் கூடுதலாக 10 ஆயிரம்
கோடி ரூபாய் வழங்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதன்முதலாக ஸ்டார்ட்அப்
நிறுவனங்களைத் தொடங்கும்
5 லட்சம் பெண்கள், பட்டியலினத்தவர்,
பழங்குடியினரை ஊக்குவிக்கும் வகையில்
புதிய திட்டம் தொடங்கப்படும் என்றும்
நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு கடன் அதிகரிப்பு:
பிரதம மந்திரி தன் தான்யா கிரிஷி யோஜனா என்னும் திட்டத்தின் கீழ் மாநில அரசுடன் இணைந்து, குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட 100 மாவட்டங்கள் ஊக்குவிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
மேலும், கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகள் கடன் பெறும் தொகையின் அளவு உயர்த்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் கூறினார். அதன்படி, ஏற்கனவே உள்ள 3 லட்சம் ரூபாய் என்ற வரம்பிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
பெண்கள் ஊட்டச்சத்து திட்டம்:
அங்கன்வாடி 2.0 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வசதிகளின் மூலம் நாடு முழுவதும் 8 கோடி குழந்தைகளும், ஒரு கோடி கர்ப்பிணி பெண்களும் மற்றும் பாலூட்டும் தாய்மார்களும், மேலும் வளர்ச்சி அடையாத இந்திய மாவட்டங்கள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள சுமார் 20 லட்சம் வளரிளம் பெண்களும் ஊட்டச்சத்து பெறுகின்றனர்.
இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதி தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உயிர் காக்கும் மருந்துகள் விலை குறைப்பு:
சில உயிர் காக்கும் மருந்துகளின்
விலை குறைக்கப்படும் என்று
நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான
நோய்களுக்கான மருந்துகளுக்கு
சுங்க வரி குறைக்கப்படும் என்றும்,
ஆறு உயிர் காக்கும் மருந்துகள்
மற்றும் புற்றுநோய் தொடர்பான
36 மருந்துகளுக்கும் வரி விலக்கு
அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த மூன்றாண்டுகளில்
அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும்
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை
பராமரிக்கும் மையங்களை
(டே கேர் சென்டர்) அரசு
அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் நடப்பு ஆண்டுக்குள்
200 மையங்கள் அமைக்கப்படும்
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்விக்கான சிறப்பு ஏஐ மையங்கள்:
மாணவர்களிடையே ஆர்வத்தையும் புதுமையையும் வளர்க்கும் விதமாக அரசுப்பள்ளிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் அடல் டிங்கெரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகள், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் பாரத்நெட் மூலம் பிராட்பேண்ட் இணைய வசதியை ஏற்படுத்துதல், 500 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத்தை ஏற்படுத்துதல் போன்ற அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடியில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களை 2 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக தொடங்கப்பட்ட 5 ஐஐடிகளில் கூடுதலாக 6500 மாணவர்கள் கல்வி பயிலும் விதமாக கட்டமைப்புகள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், பீஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஐஐடியில் தங்கும் விடுதி மற்றும் பிற கட்டமைப்புகள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்:
நாட்டின் முதன்மையான 50 சுற்றுலா தலங்கள் மாநில அரசுடன் இணைந்து மேம்படுத்தப்படும். முக்கிய உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான இடத்தை மாநில அரசு வழங்க வேண்டும். அந்த இடங்களில் ஹோட்டல்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
அங்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வளர்ச்சியை அடைய பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அ) தங்கும் விடுதிகளுக்கு முத்ரா கடன்கள் வழங்குதல்
ஆ) சுற்றுலா பயணத்தை எளிதாக்குதல் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயண இணைப்பை மேம்படுத்துதல்
இ) சில சுற்றுலா ஏற்பாடு செய்யும் குழுக்களுக்கு விசா கட்டண தள்ளுபடியுடன் நெறிப்படுத்தப்பட்ட இ&விசா வசதிகளை அறிமுகப்படுத்துதல்.
கடன் உத்தரவாதம் உயர்வு:
குறு நிறுவனங்களுக்கான எம்எஸ்எம்இ கடன் உத்தரவாதக் காப்பீட்டுத் தொகை 5 கோடி ரூபாயில் இருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 1.50 லட்சம் கோடி ரூபாய் கடன் கிடைக்கும்.
சொல்போன், மின்சார வாகன விலை குறையும்:
தோல் பொருட்களுக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்படுகிறது. ஆகையால் இனி தோல் பொருட்கள், தோலால் ஆன ஆடைகளின் விலை குறையும்.
அதேபோல் லித்தியம் பேட்டரிகள் மீதான சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. செல்போன் பேட்டரிகளுக்கான உற்பத்தி வரி குறைக்கப்படுகிறது. அதனால் செல்போன், மின்சார வாகனங்களின் விலை குறையும்.
சாலையோர வியாபாரிகளுக்கு சலுகை:
பிரதம மந்திரி ஸ்வானிதி யோஜனா திட்டம் மறுவடிவமைப்பு செய்யப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்தார். அதன் கீழ், வங்கிகள் மற்றும் யுபிஐ இணைக்கப்பட்ட கடன் அட்டைகளில் இருந்து கடன் வரம்பு 30 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும். இந்த திட்டம் முறைசாரா துறைக்கு அதிக வட்டி கடன்களில் இருந்து நிவாரணம் வழங்கி, அதன்மூல் 68 லட்சத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு பயனளித்துள்ளது.
இவ்வாறு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.