Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கிருஷ்ணகிரி: லஞ்சம் வாங்கிய திட்ட அலுவலர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலராக பணியாற்றி வருபவர் நரசிம்மன் (49). அரூரைச் சேர்ந்தவர். இதே அலுவலகத்தில், பதிவுரு எழுத்தராக சத்தியமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.

 

ரூ.15 ஆயிரம் லஞ்சம்:

 

ஊரக வளர்ச்சி முகமைத் திட்டத்தின் கீழ், மாவட்ட நூலகம் அருகில் வணிக கடைகள் கட்டி வா-டகைக்கு விடப்படுகிறது. அதில் ஒரு கடையை தனக்கு ஒதுக்கித் தருமாறு, கிருஷ்ணகிரி டி.பி. சாலையில் வெல்ல மண்டி நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் விண்ணப்பித்து இருந்தார்.

 

கடை ஒதுக்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சமாக திட்ட அலுவலருக்குக் கொடுக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பதிவுரு எழுத்தர் சத்தியமூர்த்தி கூறியுள்ளார். அப்போது ஜெயக்குமாரும் பணம் கொடுக்க ஒப்புக்கொண்டாலும், லஞ்சம் கொடுத்து கடையை வாடகைக்கு எடுக்க அவர் விரும்பவில்லை.

 

இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயக்குமாரிடம் கொடுத்து, அந்தப்பணத்தை எழுத்தரிடம் கொடுக்குமாறு திட்டம் வகுத்துக் கொடுத்தனர்.

 

அதிரடி கைது:
நரசிம்மன் 

இதையடுத்து, ஜெயக்குமார் இன்று மாலை (செப்டம்பர் 7, 2018) மணியளவில் பணத்துடன் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு சத்தியமூர்த்தியிடம் பணத்தைக் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர் திட்ட அலுவலரிடம் கொடுத்தார்.

 

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் கையும் களவுமாகப் பிடித்து நரசிம்மனை கைது செய்தனர். உடந்தையாக இருந்த சத்தியமூர்த்தியையும் கைது செய்தனர்.

 

தொடர்ந்து இரவு 10 மணியைக் கடந்தும் அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சப் பணத்தில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது? வேறு எந்தெந்த வழிகளிலும் எல்லாம் லஞ்ச வேட்டையாடினர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்சியர் அலுவலக கட்டடத்திற்குள்ளேயே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.