Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: பள்ளி சீருடை கூலியில் பல கோடி ரூபாய் சுருட்டல்! #Scam #SocialWelfare

சி-ற-ப்-பு-  க-ட்-டு-ரை-

 

பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை தைத்துக் கொடுத்த ஏழை பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல கோடி ரூபாய் கூலித்தொகையை சத்தமே இல்லாமல் ஏப்பம் விட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி அரசு.

தமிழ்நாடு முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1445 அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு நான்கு செட் விலையில்லா சீருடைகளை தமிழக அரசு வழங்குகிறது.

 

தொழில் கூட்டுறவு சங்கம்:

 

ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் டிரவுசரும் சட்டையும் சீருடையாக வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்குசட்டையும் ஸ்கர்ட்டும் வழங்கப்படுகிறது. 6ம் வகுப்பு மேல் பயிலும் மாணவர்களுக்கு பேன்ட், சட்டையும், மாணவிகளுக்கு சுடிதார், டாப்ஸ், பேன்ட் ஆகியவையும் சீருடையாக வழங்கப்படுகிறது.

 

மாநிலம் முழுவதும் 98 இடங்களில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் தையல் தொழிலாளர் மகளிர் மேம்பாட்டு தொழில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள உறுப்பினர்களிடம் சீருடைகளுக்கான கட்டிங் துணிகள் வழங்கப்பட்டு, அவை சீருடையாக தைத்து தரச்சொல்லி பெற்றுக்கொள்கின்றனர். கூட்டுறவு சங்கத்தின் பெயரில் அதிதிராவிடர் என்ற ‘முன்னொட்டு’ இருந்தாலும் நடைமுறையில் பல சமூகங்களைச் சேர்ந்த பெண்களும் உறுப்பினர்களாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தொழில் கூட்டுறவு சங்கம்

பெரும்பாலும் வெகுசன பார்வைக்கு வராத இந்த சங்கங்களில்தான் இப்போது ஓசையே இல்லாமல் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறுகின்றனர் சங்க உறுப்பினர்கள்.

 

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ராசிபுரம் சாலையில், ஆத்தூர் ஆதிதிராவிடர் தையல் தொழிலாளர் மகளிர் மேம்பாட்டு தொழில் கூட்டுறவு சங்கத்தில், உறுப்பினர்களுக்கு கட்டிங் துணிகள் மற்றும் போனஸ் வழங்குவதிலும் பாரபட்சம், தையல் கூலி பட்டுவாடா நிறுத்தம் என பல்வேறு முறைகேடுகள் நடந்துவருவதாக அதன் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

 

5 ஆண்டுகளாக நிலுவை:

 

இது தொடர்பாக, பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஆத்தூர் ஆதிதிராவிடர் தொழிலாளர் மகளிர் மேம்பாட்டு தொழிற்கூட்டுறவு தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திரா, செயலாளர் சுமதி ஆகியோர் நம்மிடம் விரிவாக பேசினர்.

 

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா சீருடைக்கான துணிகளை கட்டிங் செய்து கொடுப்பார்கள். அதை முழு சீருடையாக தையல் மெஷினில் மூட்டிக்கொடுப்பதுதான் எங்கள் வேலை.

ஒரு பேன்ட் தைத்துக் கொடுத்தால் 46.15 ரூபாயும், அரைக்கால் டிரவுசருக்கு 18.45 ரூபாயும், சிறிய அளவிலான சட்டைக்கு 18.45 ரூபாயும், சுடிதார் டாப்ஸ் தைக்க 20.50 ரூபாயும், மாணவிகளுக்கான பேன்ட் தைக்க 20.50 ரூபாயும், துப்பாட்டாவுக்கு 5.15 ரூபாயும் கூலி கிடைக்கும்.

 

ஆண்டுக்கு நான்கு முறை எங்களுக்கு சீருடைகள் தைப்பதற்கான கட்டிங் துணிகளை கொடுக்கின்றனர். தைத்து முடித்து மீண்டும் சங்கத்திற்கு கொண்டு போய் சேர்க்க ஒருநாள் தாமதம் ஆனாலும் பதிவேட்டில் ‘லேட்’ என்று பதிவு செய்துவிட்டு, அவர்களுக்கு சீருடை தைக்க கட்டிங் துணிகள் வழங்க மறுக்கின்றனர். அல்லது, மற்றவர்களுக்குக் கொடுப்பதைவிட குறைவான துணிகளைக் கொடுக்கின்றனர்.

 

கடந்த 2017ம் ஆண்டில் மூன்று செட் சீருடைக்கான கூலி பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. 4வது செட் சீருடைக்கான கூலி ஜனவரி மாதம் பட்டுவாடா செய்திருக்கவேண்டும். ஆனால், இன்னும் நிலுவையில் இருக்கிறது.

 

இதுமட்டுமின்றி, கடந்த 2012-2013ம் ஆண்டில் எங்கள் சங்கத்தின் மூலம் மட்டுமே ஹாஸ்டல் மாணவ, மாணவிகளுக்காக 57251 சீருடைகள் தைத்துக் கொடுத்திருக்கிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அதற்கான கூலி இன்னும் வழங்கப்படவில்லை. இதே நிலைதான் அனைத்து கூட்டுறவு சங்கத்திலும் நிலவுகிறது.

சந்திரா

மிஞ்சிப்போனால் சீருடை தைப்பதன் மூலம் உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கூலி கிடைக்கும். இந்த சொற்ப கூலியில் சீருடையின் மீது ஒட்டப்படும் லேபிள், நூல்கண்டு, பட்டன், பேன்ட் ஜிப், காஜா எடுப்பதற்கான கூலி, பஸ்சில் கொண்டு செல்ல சரக்குக் கட்டணம் ஆகியவற்றுக்கான செலவும் எங்கள் மீதுதான் சுமத்துகின்றனர்.

 

இதைப்பற்றி எல்லாம் கேள்விகள் கேட்டால் அந்த வருமானமும் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் யாரும் வாய் திறப்பதில்லை. அதனால் அதிகாரிகளும் எங்கள் பிரச்னைகள் மீது கவனம் செலுத்துவதில்லை.

சுமதி

போனஸ் கொடுப்பதிலும் பாரபட்சம் காட்டுகின்றனர். 20 ஆண்டுகளாக இந்த சங்கத்தில் துணி தைத்து வந்தாலும் ஓரிரு முறை மட்டுமே போனஸ் பெற்றவர்கள் இருக்கிறார்கள். அதிலும் சிலருக்கு வெறும் 1500 ரூபாயும், சிலருக்கு 9000க்கு மேலும் போனஸ் கிடைப்பது எப்படி? இப்படி அடுக்கடுக்கான சந்தேகங்கள் இருந்தாலும் எதற்கும் சங்கத்திடம் பதில் இல்லை,”  என்கிறார்கள் சந்திராவும், சுமதியும்.

 

இதுகுறித்த விசாரணைக்காக ஆத்தூர் ஆதிதிராவிடர் தையல் தொழிலாளர் மகளிர் மேம்பாட்டு தொழில் கூட்டுறவு சங்கத்திற்குச் சென்றோம். தைத்து முடிக்கப்பட்டசீருடை துணிகளை கொடுப்பதற்காக ஏராளமான பெண்கள் கூடியிருந்தனர். பலர், புதிதாக கட்டிங் துணிகளை வாங்கிச் செல்லவும் வந்திருந்தனர்.

கட்டிங் துணிகளை வாங்கிய பெண்கள் சாலையோரத்தில் அமர்ந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

 

21 லட்சம் ரூபாய் நிலுவை:

 

அந்த அலுவலகத்தில் இரண்டே இரண்டு நிரந்தர ஊழியர்கள். நாம் சென்றிருந்த சமயத்தில் கூட்டுறவு தேர்தல் முடிவடையாததால் அப்போது இயக்குநர்கள் குழு என்று ஏதும் இல்லை. கணக்காளர் சாந்தாமணி மட்டுமே பெண் உறுப்பினர்களிடம் அதட்டலாக பேசிக் கொண்டிருந்தார். உறுப்பினர்களின் சந்தேகங்கள் குறித்து அவரிடம் பேசினோம்.

 

”சார்… இந்த சங்கத்தில் 2687 பேர் உறுப்பினர்களாக இருக்கினறனர். அவர்களில் 1100 பேர் ஆக்டிவ் மெம்பர்கள். முதலில் போனஸ் பிரச்னைக்கு பதில் சொல்லி விடுகிறேன்.சங்கம் லாபத்தில் இயங்கினால் மட்டுமே போனஸ் வழங்க முடியும். ஊழியர்கள் சம்பளம், அலுவலக பராமரிப்பு செலவினங்களுக்காக சங்க நிதியில் இருந்து ஆண்டுக்கு 15 சதவீதம் வரை செலவிட்டுக் கொள்ளலாம். இந்த செலவைக் குறைத்தாலே லாபம்தானே?

 

அந்த வகையில் 1998-1999ம் ஆண்டில் இந்த சங்கம் லாபத்தில் இருந்தது. அப்போது போனஸ் வழங்கினோம். அதன்பிறகு தொடர்ச்சியாக நட்டத்தில்தான் இருந்தது. பிறகு 2005 முதல் தொடர்ந்து லாபத்தில் இயங்கியதால் போனஸ் வழங்கி வருகிறோம். ஒவ்வொரு உறுப்பினரும் எவ்வளவு துணி தைத்துள்ளனரோ அதைப் பொருத்து போனஸ் தொகை மாறுபடும்.

 

சென்ற ஆண்டில் நான்காவது செட் சீருடைக்கான கூலி பணம் இன்னும் அரசிடம் இருந்து வரவில்லை. அதனால் அந்த கூலி வழங்கப்படாமல் உள்ளது.

அடுத்து, 2012-13ம் ஆண்டில் சீருடை தைத்ததற்கான கூலித்தொகை ஆத்தூர் சங்கத்திற்கு 14 லட்சத்து 49554 ரூபாயும், சேலம் சங்கத்திற்கு 6 லட்சத்து 52763 ரூபாயும் எனமொத்தம் 21 லட்சத்து 2317 ரூபாய் வழங்கப்படாமல் உள்ளது. இங்கு மட்டுமல்ல. தமிழ்நாடு முழுவதும் 98 சங்கங்களுக்கும் அந்த ஆண்டுக்கான கூலித்தொகை இன்னும் கொடுக்கப்படவில்லை.

 

நினைவூட்டல் கடிதம்:

 

இங்குள்ள பெண்கள் ஏழ்மையானவர்கள் என்பதை உணர்ந்ததால்தான் நாங்களும் இதுவரை 30க்கும் மேற்பட்ட முறை அரசுக்கு நினைவூட்டல் கடிதம் எழுதி இருக்கிறோம். தமிழக அரசு, நிதி ஒதுக்கினால்தான் இவர்களுக்கு கூலி நிலுவைத்தொகை வழங்க முடியும்.

சாந்தாமணி

சீருடை தைப்பதற்கான பட்டன், காஜா, லேபிள், போக்குவரத்து செலவு எல்லாமே உறுப்பினர்களின் சொந்த செலவுதான். இதுதான் காலம்காலமாக நடைமுறையில் இருக்கிறது. அதற்கு நாங்கள் ஏதும் செய்ய முடியாது,” என்றார் சாந்தாமணி.

 

உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கூலித்தொகையில் 25% சேமநலநிதி, 3% வளர்ச்சி நிதி, 2% கல்வி நிதி, 9% கட்டட நிதி, 10% டிவைடண்டு நிதி, 1% பொது நிதி என கூட்டுறவு சங்க விதிகளின்படி கணிசமான தொகையும் பிடித்தம் செய்யப்படுகிறது.

 

முக்கிமுக்கித் தைத்தாலும் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் தையல் ஆர்டர்கள் கிடைக்காத நிலையில் அந்த நிதி இந்த நிதி என்ற பெயரில் கணிசமான தொகையை சுரண்டி எடுத்துக்கொள்வதாகவும் குமுறுகின்றனர் பெண்கள்.

 

எல்லாவற்றுக்கும் மேல், ஏழை பெண் தையல் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பல கோடி ரூபாய் கூலித்தொகையை கொடுக்காமல் கமுக்கமாக அமுக்கப்பார்க்கிறது எடப்பாடி அரசு. இப்படி ஒரு பிரச்னை இருப்பதையே கிட்டத்தட்ட மறந்து விட்டது தமிழக அரசு.

 

14 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல்:

 

சேலம் மாவட்டத்தில் இரண்டு கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டுமே 21 லட்சம் ரூபாய் கூலி கொடுபடாமல் உள்ள நிலையில், 98 கூட்டுறவு சங்கங்களிலும் தோராயமாக 15 லட்சம் ரூபாய் கூலி நிலுவை என்று கணக்கிட்டால்கூட 14 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கூலி நிலுவை குறித்து ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்

கடந்த 2012-13 ஆண்டில் தைக்கப்பட்ட துணிகளுக்கான தையல் கூலி இன்னும் வழங்கப்படவில்லை என்பது மேற்படி கூட்டுறவு சங்கம், ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது. ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தணிக்கை நடந்திருக்காதா? நடந்திருந்தால் தணிக்கையில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு இருக்குமே? அதை ஏன் இத்தனை ஆண்டுகளாக நிவர்த்தி செய்யாமல் தமிழக அரசு இருந்து வருகிறது என்ற கேள்விகள் எழும்போதுதான், தையல் கூலியில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம் என்ற பலத்த அய்யமும் எழுகிறது.

 

விவசாயிகளின் மரண ஓலத்தையே காதில் வாங்கிக்கொள்ளாத எடப்பாடிக்கு தையல் கூலி பிரச்னை மட்டும் கேட்டு விடவா போகிறது?

 

– பேனாக்காரன்