Sunday, November 10மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோஹ்லி 9000 ரன்களை கடந்து சாதனை!

இன்று (அக்டோபர் 29, 2017) நடந்து வரும்,  இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸி. அணிக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 29 ஓவர்களில், நியூசிலாந்து அணி  3 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்து இருந்தது. தொடர்ந்து விளையாடி வருகிறது.

கோஹ்லியின் சாதனைகள்:

202வது ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, இன்றைய ஆட்டத்தில் 32வது சதம் அடித்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் அவர் 106 பந்துகளில் மொத்தம் 113 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதில், 8 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.

இன்றைய போட்டியில் அவர் 83 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் ஒருநாள் போட்டிகளில் 9000 ரன்கள் என்ற புதிய மைல்கல் இலக்கை எட்டினார்.

ஏற்கனவே தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஏபி டிவில்லியர்ஸ் 205 இன்னிங்ஸ்களில் 9000 ரன்களை எடுத்து இருந்ததே குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைச் செய்ததாக இருந்தது. இன்றைய போட்டியில், அதாவது 194வது இன்னிங்ஸில் விளையாடிய விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.

உலகளவில் 9000 ரன்களைக் கடந்த 19வது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். இந்திய அளவில் ஏற்கனவே முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், டோனி ஆகியோரும் 9000 ரன்களைக் கடந்துள்ளனர். இவர்களில் வரிசையில் 6வது வீரராக கோஹ்லி இணைந்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் ஒரே ஆண்டில் அவர் 2000 ரன்களைக் குவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டிலும் அவர் ஒரு நாள் போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்திருந்தார். இதற்குமுன் ஒரு கேப்டனாக அஸ்திரேலியா அணி வீரர் ரிக்கி பாண்டிங் ஒரே ஆண்டில் 1424 ரன்கள் குவித்து இருந்தார். அந்த சாதனையையும் கோஹ்லி தகர்த்துள்ளார். ஏற்கனவே சச்சின் டெண்டுகர் 1996, 1997, 1998 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக 2000 ரன்களைக் குவித்து இருந்தார்.