விபத்தில் சிக்கிய தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் உயிரிழந்தபோது மனிதம் செத்துவிட்டதாக கேரள மக்கள் மீது விமர்சனம் எழுந்த நிலையில், அதே கேரள மக்கள் இன்னொரு தமிழரின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூ.11 லட்சம் வசூலித்துக் கொடுத்து மனிதத்தை மீட்டெடுத்துள்ளனர்.
நெகிழ்ச்சியான நிகழ்வின் பின்னணி இதுதான்…
மதுரையைச் சேர்ந்தவர் ஜெயன். இவருடைய மனைவி மாரியம்மாள். குடும்பத்துடன் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் சிங்காவனம் என்ற கிராமத்தில் வசிக்கிறார். அவர் கேரளாவில் குடியேறி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஜெயன், இஸ்திரி (அயனிங்) கடை வைத்திருக்கிறார்.
சிங்காவனம் மற்றும் பல்லம் கிராம மக்கள் தங்கள் உடைகளை ஜெயனிடம் கொடுத்துதான் இஸ்திரி செய்து வருகின்றனர். பெரும்பாலும் ஜெயனே, வீடு வீடாகச் சென்று துணிகளை பெற்றுக்கொண்டு வந்து இஸ்திரி செய்து தருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அவர் அந்த ஊர் மக்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருந்து வருகிறார்.
கடந்த 7 ஆண்டுகளாக அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்து வருகிறது. டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஒருகட்டத்தில், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் உயிர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.
இந்த தகவல் அவர்களுக்கு பேரிடியாய் இருந்தது. மாரியம்மாள் தனது சிறுநீரகத்தை தானமாக தர முன்வந்தார். மருத்துவ பரிசோதனையிலும் அதற்கான சாத்தியக்கூறுகளை உறுதி செய்தனர். உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு இருப்பதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டிய அவர்கள், அதற்கான செலவு 10 லட்ச ரூபாய் ஆகும் என்றதால் அதிர்ச்சி அடைந்தனர்.
உற்றார் உறவினர்கள் இல்லாத ஊரில், பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் யாரிடம் 10 லட்ச ரூபாய் கேட்பது? நாளுக்கு நாள் அவர்களுக்குள் குழப்பமும், விரக்தியும் அதிகரிக்கவே, சரிவர இஸ்திரி கடையையும் நடத்த முடியாமல் இருந்து வந்தார்.
அக்கம்பக்கத்தினர் என்ன ஏது என்று விசாரித்தபோது, ஜெயனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், அவரின் பொருளாதாரச் சூழ்நிலை குறித்தும் தெரிய வந்தது.
தகவல் அறிந்த சிங்காவனம், பல்லம் கிராம மக்கள் கொஞ்சமும் தாமதிக்கவில்லை. இந்த இரு கிராமங்களில் உள்ள 5 வார்டுகளைச் சேர்ந்த சுமார் 2500 குடும்பத்தினர் தங்களால் முடிந்த நிதியைக் கொண்டு, அவருக்கு உதவுவது என தீர்மானித்தனர்.
முடிவெடுக்கதான் தாமதம் ஆகும். முடிவெடுத்துவிட்டால் செயல்படுத்துவதில் கேரளாக்காரர்கள் வல்லவர்கள். அது, ஜெயன் விஷயத்திலும் நிரூபணம் ஆனது.
அடுத்த ஐந்தே மணி நேரத்தில் 11 லட்ச ரூபாய் வசூலித்துக் கொடுத்தனர். இது ஜெயனுக்கு ஆகும் மருத்துவச் செலவைக் காட்டிலும் சற்று அதிகம். இன்னும் தேவையென்றாலும் சொல்லுங்கள். உதவத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லி நெஞ்சை நெகிழச் செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜெயன் கூறுகையில், ”சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் நான் இறந்து விடுவேன் என்று பயந்தேன். ஆனால், இங்குள்ள மக்கள் என் மீது இந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்,” என்று உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார்.
கேரள மக்கள் சாதி, இனம், மதம் கடந்து மனிதநேயத்திற்காக ஒன்றுகூடி நெகிழ வைத்துள்ளனர். குறைந்தபட்சம் 50 ரூபாயும், அதிகபட்சமாக 2500 ரூபாயும் நன்கொடை அளித்துள்ளனர். பல கூலித்தொழிலாளர்கள் தங்களின் ஒரு நாள் கூலியை நன்கொடையாக அளித்துள்ளனர். வரும் நவம்பர் மாதம் ஜெயனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும் எனத் தெரிகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் விபத்தில் சிக்கினார். அவருக்கு சிகிச்சை அளிக்க சில கேரள மருத்துவமனைகள் மறுத்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது, கேரளாவில் மனிதாபிமானம் செத்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், சாதாரண கூலித்தொழிலாளியான தமிழர் ஒருவரின் சிகிச்சைக்காக நிதியுதவி செய்திருப்பது அவர்களின் மனிதநேயத்தைக் காட்டுகிறது.