Tuesday, November 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஜோதிகாவின் ‘தேவரடியாள்’ தடை செய்யப்பட்ட சொல்லா?

பாலா இயக்கத்தில் வெளியாக உள்ள ‘நாச்சியார்’ படத்தில் ஜோதிகா பேசும் ஒரு சொல், ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வசனத்தை ‘மியூட்’ செய்ய வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘பரதேசி’, ‘அவன் இவன்’, ‘தாரை தப்பட்டை’ என்று தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் இயக்குநர் பாலா அடுத்து ஜோதிகாவை முதன்மை பாத்திரமாக வைத்து, ‘நாச்சியார்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமாரும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா – பாலாவின் வழக்கமான கூட்டணி இதிலும் தொடர்கிறது.

நாச்சியார் படத்தில் ஜோதிகா, போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசரை, நடிகர் சூர்யா நேற்று முன்தினம் (நவம்பர் 15, 2017) வெளியிட்டார். ரசிகர்களிடம் பெரிய அளவில் இந்த டீசர் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரம், டீசரின் இறுதியில் ஜோதிகா பேசும் ஒரு வசனம்தான் இப்போது பெரும் விமர்சனப் பொருளாகி இருக்கிறது.

போலீஸ் அதிகாரியான ஜோதிகா, ஓர் இளைஞரை கன்னத்தில் ‘பளார்’ என அறைகிறார். அவரை அடித்துவிட்டு, ‘தேவடியா பயலுகளா’ என்ற வசனத்தைச் சொல்வதுடன் அந்த டீசர் முடிகிறது. முறைப்பும், விறைப்புமாக நடித்திருக்கிறார். பரபரப்பைக் கூட்டுவதற்காக சினிமாக்காரர்கள் செய்யும் மாயாஜாலங்களில் இதுவும் ஒன்றுதான்.

இதற்கு முன்பே, பல படங்களில் கதாநாயகர்கள் அல்லது வில்லன் பாத்திரங்கள் இப்படிப்பட்ட கொச்சையான அல்லது கெட்ட வார்த்தைகளை தாராளமாகவே பயன்படுத்தி இருக்கிறார்கள். சில படங்களில் இதுபோன்ற வார்த்தைகளை, தணிக்கைத் துறை அனுமதித்துள்ளது. சில படங்களில் ஆபாச வார்த்தைகள் பேசும்போது சைலன்ட் செய்யப்பட்டு விடுவதும் உண்டு.

எனினும், உதட்டசைவுகள் மூலம் அது என்ன மாதிரியான சொல் என்பதை பார்வையாளர்கள் எளிதில் யூகித்து விட முடியும். அப்படியே வசனத்தை ஒலிக்கச் செய்வதைக் காட்டிலும் இவ்வாறு மியூட் செய்வதும் ஒருவிதத்தில் வரவேற்கக் கூடியதுதான்.

சினிமா வசனம், காட்சிளுக்கு எதிர்ப்பு கிளம்பும் போதெல்லாம், யதார்த்தத்தில் இல்லாததையா நாங்கள் படம் பிடிக்கிறோம் அல்லது வசனமாக வைக்கிறோம்? என்று கம்பு சுழற்றும் திரைக்கலைஞர்களும் இப்போது அதிகரித்துவிட்டனர்.

ஆபாச வசனம் அல்லது பொது அரங்கத்தில் சகஜமாக பேச முடியாத ஒரு சொல் அல்லது செய்கை இடம்பெறும் காட்சியைப் பார்க்கும் ஒரு குழந்தை, பெற்றோரிடம் அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் அதை நாகரீகமாக விளக்கிச் சொல்லும் பக்குவம் நம் பெற்றோர்களிடம் இருக்கிறதா? அத்தகைய சூழ்நிலையை நாம் எப்படி கடந்து போவோம் என்பதையும் கவனிக்க வேண்டியதாகிறது.

தமிழில் ஆபாசமாகத் தெரியும் பல வார்த்தைகள் அல்லது இரட்டை அர்த்த வசனங்கள், ஆங்கிலத்தில் பேசும்போது நம் ரசிகர்கள் அதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. எத்தனையோ தமிழ்ப்படங்களில் அல்லது தமிழில் மொழிமாற்றம் பெறும் தெலுங்கு படங்களில் ‘பாஸ்டடு’ என்ற வசனம் சகட்டுமேனிக்கு இடம்பெற்றுள்ளன.

அண்மைக்காலமாக தமிழ்ப்படங்களில் பயன்படுத்தப்படும் ‘ங்கொய்யால’, ‘கொய்யா’, ‘வெண்ணெய்’, ‘வென்று’ (உபயம்: வடிவேலு) போன்ற சொற்களை நம் வீடுகளில் சிறுவர்கள்கூட தாராளமாக பயன்படுத்துவதைக் காண முடிகிறது. இந்த சொற்களுக்கு என்ன அர்த்தம் என்பதை வடிவேலுதான் விளக்க வேண்டும்.

தென்மாவட்டங்களில், அம்மா அல்லது மூதாட்டிகளை ‘ஆத்தா’ என்றழைப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. தனித்தன்மை உடைய இந்த சொல், இன்றைய தமிழ்ப்படங்களில் ஆத்தாவுக்கு முன்பாக ‘ங்கோ’ என்ற முன்னொட்டுடன் சொல்லப்படும் காட்சிகள் இடம் பெறுகின்றன.

இந்த சொல்லை முழுமையாகக்கூட சொல்லத் தேவையில்லை. ‘த்தா..’ என்றாலே அது திட்டக்கூடிய சொல் அல்லது தவறான சொல் என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு சமூகத்தின் சிந்தையில் இன்றைக்கு விதைக்கப்பட்டுவிட்டது.

இப்படி ஒரு தகாத வார்த்தையை நேரடியாக சொல்வது ஒரு ஸ்டைல். ‘சிங்கம்’ படத்தில் நடிகர் விவேக், ‘புலியோட வாலே இவ்வளவு பெருசா இருக்கே. அப்போ அதோட…’ என்று சொல்லி, அதன்பின் ஒரு சிறு இடைவெளி விடுவதன் மூலம் பார்வையாளனுக்கு தான் சொல்ல விழையும் தகாத வார்த்தையை சொல்லும் போக்கு புத்திசாலித்தனமானது. ஆனால், நாகரீகமற்றது. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடிகர் சந்தானம், ‘என்ன அந்த ஒத்த வார்த்தைய சொல்ல வச்சிடாதீங்க என்று சொல்லிவிட்டு, த்தா….’ என்பார்.

ஒரு வாதத்திற்காக கேட்கிறேன். ‘த்தா’ சரியென்று வாதிடுவோர் அவரவர் வீட்டில் அம்மாவை அப்படித்தான் அழைப்பார்களா?

தமிழ்ச்சமூகத்தில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ள வேண்டுமானால்கூட அங்கே ஒரு பெண்தான் இழிவுபடுத்தப்படுகிறாள் என்பதை எல்லோருமே எளிமையாக கடந்து விடுகிறோம். அல்லது, அதெல்லாம் குற்றமே இல்லை என்பதாக நாம் பழக்கப்படுத்தப்பட்டு விட்டோம்.

பெண்களின் அவயங்கள் அல்லது அவளது நடத்தைதான் பேசுபொருளாகிறது. எப்போதும் சந்தேகத்திற்கு உட்படுத்தப்படுகிறது. இப்படிச் சொல்வதால், நாம் ஒன்றும் ஜோதிகாவுக்கோ, பாலாவுக்கோ எதிரி அல்ல. ஆண்கள் பேசும்போது எழாத கண்டனம் ஒரு பெண் பாத்திரம் பேசும்போது மட்டும் எழுவது ஏன்? என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

ஒரு சினிமா பாத்திரம், அதன் சூழல் உணர்ந்துதான் கட்டமைக்கப்படுகிறது. இயக்குநர் பாலாவும் நாச்சியார் பாத்திரம் ஊடாக அதைத்தான் செய்திருக்கிறார். அதனால், இந்த வசனத்திற்காகவே நாம் ஜோதிகாவை வெறுக்க வேண்டியதில்லை / தூற்ற வேண்டியதும் இல்லை. நாம் சுட்டுவது அந்த படைப்பை மட்டுமே. அந்த சொற்பயன்பாட்டை மட்டுமே.

60களின் தமிழ் சினிமாக்கள், காதலர்களின் நெருக்கத்தை உணர்த்திய பாங்கே தனி அழகுதான். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சிகளின்போது இரண்டு ரோஜா மலர்கள் மோதிக்கொள்வது போலவும், பாலியல் வன்முறைக் காட்சிகளின்போது மான் மீது புலி பாய்வது போலவும் குறியீடுகள் மூலம் விளக்கப்படும். இப்படி காட்சிப்படுத்துவதன் மூலம், அந்த படைப்பாளிகளுக்கு கற்பனை வறட்சி என்று புரிந்து கொள்ளல் ஆகாது.

குறியீடுகளின் வழியாக, படிமங்களின் ஊடாக கண்ணியத்தைக் கட்டிக்காத்த தமிழ் சினிமா படைப்பாளிகள்தான் இன்றைக்கு யதார்த்தம் என்ற பெயரில் படுக்கையறைக் காட்சிகளில்கூட தாராளவாதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

அண்மையில் வெளியான ‘கடுகு’, ‘நிசப்தம்’ போன்ற படங்களில் பாலியல் வல்லுறவுக் காட்சிகள் மிக நேர்த்தியாக, நாகரீகமாக சொல்லப்பட்டு இருக்கும். பாலியல் வக்கிரத்தை இப்படியும் ரசிகர்களுக்கு விளங்க வைக்க முடியும் என்பதற்கு அண்மைய ரெஃபரன்ஸாக இந்த இரு படங்களை சொல்லலாம்.

சரி. ஜோதிகா பாத்திரம் சொல்லும் ‘தேவடியா’ என்ற சொல் அத்தனை ஒன்றும் தவறான சொல் அல்லதான். ஆனால், அது பயன்படுத்தப்படும் காலவெளியில், தவறான கற்பிதத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதால்தான் அதை நாம் கடிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

கோயில்களில் இறைவனுக்காக ஊழியம் செய்வதற்காகவே பணிக்கப்படும் பெண்களை ‘தேவரடியார்கள்’ என்பார்கள். கோயில்களில் பாட்டுப்பாடுவதும், உழவாரப் பணிகளைச் செய்வதும்தான் தேவரடியார்களின் பணி.

11ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன், கோயில்களில் பாட்டுப்பாடவும், நாட்டியம் ஆடவும் கணிகையர்களை நியமித்த வரலாற்றுச் செய்திகளும் உண்டு. சிந்து சமவெளி நாகரீகத்திலும்கூட நடனமாடும் பெண்கள் இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

இந்த தேவரடியார் என்ற சொல், பின்னாளில் ‘தேவரடியாள்-தேவடியாள்-தேவடியா’ ஆக மருவி, சுருங்கி விட்டது. இறைவனுக்காக பணிக்கப்பட்ட இந்தப் பெண்கள், காலப்போக்கில் ஊர் பெரிய மனிதர்களை மகிழ்விக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். வங்கி வைப்புகளைப்போல் மைனர்களும், செல்வந்தர்களும் ‘வைப்புகளை’ வைத்துக் கொள்வதைக்கூட கவுரவமாகக் கருதும் போக்கும் இருந்தது.

தேவரடியார் (தேவடியா) என்ற சொல் இன்றைய காலக்கட்டத்தில் ஒழுக்கம் தவறிய பெண்ணைச் சுட்டுவதற்கான சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் தேவரடியார்குப்பம் என்று ஒரு கிராமம் உண்டு. அந்த ஊரின் பெயர் காலப்போக்கில், ‘தேவடியாகுப்பம்’ ஆக மருவி விட்டது. அதனால் அந்த ஊர் மக்கள், தாங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதைக்கூட வெளிப்படையாக சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவெனில், தேவரடியாள்களிடம் செல்லும் ஆண்மகனும் அதே சொல்லால் அவளைத் திட்டுவதுதான்.

திரைப்படங்களில், யதார்த்தம் என்ற பெயரில் அருவருப்பானவற்றை அப்பட்டமாக காட்சிப்படுத்த வேண்டியதில்லை. இலைமறை காயாகச் சொன்னாலே தமிழ்ச்சமூகம் புரிந்து கொள்ளும். மக்களின் வாழ்வியலின் ஓர் அங்கமாக சினிமாவும் இரண்டறக் கலந்துவிட்டிருக்கும் ஒரு சமூகத்தில் படைப்பாளிகளுக்கு சமூக பொறுப்புணர்வு அவசியம்தானே?

தமிழ் இலக்கியங்களில் ஆண்பால், பெண்பாலைச் சுட்ட ‘அர்’ விகுதியுடன் விளிப்பது கிடையாது. ‘அன்’ விகுதியிட்டே அழைத்திருக்கிறார்கள். அதற்காக, நாம் நம் நாட்டில் அரியணையில் இருப்பவர்களை, அவன் வெளிநாடு சென்றானா?, அவள் நல்லாட்சி செய்தாளா? என்று சொல்வது நாகரீகம் ஆகாதே!

தணிக்கை சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படத்தில் பகிரங்கமாக தேவடியா போன்ற அநாகரீகமான சொல்லைப் பயன்படுத்தும்போது, அது பொதுவெளிக்கான சொல்லாக மாறி விடுகிறது.

எனில், அதை நம் வீடுகளில் சகஜமாக நாமும் நம் குழந்தைகளும் பேசுவதை அனுமதிக்க முடியுமா? பள்ளி பாடத்திட்டத்தில் பதிவேற்றம் செய்யலாமா?

மனித வக்கிரங்களின் ஊற்றுக்கண்களாக திரைப்படங்கள் மாறி விடக்கூடாது என்பதுதான் நம் நோக்கம். ஆயிரம் கொலைகளைச் செய்துதான் அஹிம்சையை உணர்த்த வேண்டுமா என்ன?.

– அகராதிக்காரன்.