Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே! செய்வீர்களா?

ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைப்பு முடிந்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் பேச்சு செயல்வடிவம் பெறுமா? என்பதில் தொண்டர்களுக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். அதன்பிறகு, ஒன்றரை கோடி தொண்டர்கள் பலமிக்க அதிமுகவை கைப்பற்ற ‘சசிகலா அன்டு கோ’ கடும் முஸ்தீபுகளில் இறங்கியது. ஜெயலலிதா சிறைக்கு சென்றபோதெல்லாம் தற்காலிக முதல்வராக ருசி கண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அந்த அரியணையை நிரந்தரமாக்கிக் கொள்ள உள்ளூர ஆசை இருந்து கொண்டே இருந்தது. இதை மோப்பம் பிடித்துவிட்ட மன்னார்குடி தரப்பு, அவர் வாயாலேயே சசிகலாவை முதல்வர் பதவியேற்க அழைக்கும்படி ஆளுநரிடம் சொல்ல வைத்தது.

ஆனால், ஆசை யாரை விட்டு வைத்தது?. சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி கும்பலுடன் மோத முடியாமல், விரக்தியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று ஜெயலலிதாவின் ஆன்மாவுடன் ஆழ்நிலை தியானத்தில் பேசினார். அதாவது கடந்த பிப்ரவரி 7ம் தேதி முதல் ஓபிஎஸ், சசிகலா தரப்புக்கு எதிராக தீவிரமாக கம்பு சுழற்றி வருகிறார். ஊழல் வழக்கில் சிறை செல்வதற்கு முன், ‘உத்தரவுகளை தப்பாமல் செய்யும் விசுவாசி’ என்ற நம்பிக்கையை உருவாக்கி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துவிட்டுப் போனார் சசிகலா.

எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருக்கும் நாற்காலி, ஜெயலலிதா எனும் சிங்கம் அமர்ந்திருந்த அரியாசனமாயிற்றே. அவரிடமிருந்த செருக்கில் பாதியளவாவது எடப்பாடி பழனிசாமிக்கு இருக்க வேண்டாமா? ஆனால், அப்படியெல்லாம் கர்ஜிக்காமல் ஓபிஎஸ், திமுக தரப்பினரின் எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாமல் டெல்லி பிக்பாஸிடம் சரணடைந்தார். ஓபிஎஸ் ஒரு படி மேலே சென்று, சாஷ்டாங்கமாய் அடிபணிந்தார்.

இப்போது நாட்டில் நடப்பது, ‘பாஜக ஆட்சி, பாஜக பினாமி ஆட்சி, பாஜக கூட்டணி ஆட்சி, கம்யூனிஸ்டுகள் ஆட்சி’ என்று என்று இணையவாசிகள் கேலி செய்யும் அளவுக்கு, தமிழகத்தின் ஆட்சியாளர்கள் டெல்லி தலைமைக்கு மண்டியிட்டுக் கிடக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி அந்தஸ்தில் மட்டுமல்ல; அதிமுக நிர்வாக செயல்பாட்டில் சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் ஆதிக்கம் எந்தளவுக்கு இருந்தது என்பதை ஓபிஎஸ், இபிஎஸ் என எல்லோரும் நன்கு அறிவர். அதனால்தான் அந்த குடும்பத்தை மீண்டும் கட்சிக்குள் அதிகாரம் செலுத்தவிடக்கூடாது என்பதில் அதிமுகவினரைக் காட்டிலும் பாஜகவின் உள்ளக்கிடக்கை. இதை நாம் முன்பே, ‘முடிவுக்கு வருகிறது மன்னார்குடி ராஜ்ஜியம்’ என்ற கட்டுரையிலும் பதிவிட்டிருக்கிறோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதுமே இருதுருவ அரசியல்தான். அதைத்தான் இப்போதும் பாஜக விரும்புகிறது. ஒன்று, அதிமுகவை உள்ளடக்கிய பாஜக; இன்னொன்று திமுக. ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு ஒருவேளை திமுகவுக்கு எதிராக வரும்பட்சத்தில், அதுவே அடுத்து வரவுள்ள மக்களவை, சட்டப்பேரவை தேர்தலுக்கு பிரதான ஆயுதமாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளும். மாறாக தீர்ப்பு வரும்பட்சத்தில், அடுத்தது திமுகதான் ஆட்சிக்கு வரும் என்பதையும் பாஜக உள்ளிட்ட வட்டாரங்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும்.

இபிஎஸ் உடன் மோதல் ஏற்பட்ட காலங்களில் ஓபிஎஸ் தரப்பு வெளிப்பார்வைக்கு முன்வைத்த முக்கிய கோரிக்கைள் இரண்டு. ஒன்று, சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து முற்றாக அப்புறப்படுத்த வேண்டும்; இன்னொன்று, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்பது. அவரா சொன்னாரா? சொல்ல வைக்கப்பட்டாரா? என்ற ஆராய்ச்சி தேவை இல்லை. ஆனால், ஓபிஎஸ் உள்ளிட்ட ஏழெட்டு பேருக்காக அதையும் செய்யத் துணிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஏனெனில் பிளவுபட்ட நிலையில் ஒரு கட்சியை சுவீகரித்துக் கொள்வதைக் காட்டிலும் கொத்தாக அள்ளிக்கொள்வதுதானே புத்திசாலித்தனம் என்று பாஜக கருதியது.

சசிகலாவை நீக்கும் நடைமுறைகள் ஒவ்வொரு படிநிலையாக நகர்ந்தது. கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி திடீரென்று தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அன்றைய தினமே ஊடகங்கள் முன்னிலையில், ”ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையம், அரசு உடைமையாக்கப்படும்,” என இரண்டு அறிவிப்புகளை அதிரடியாக வெளியிட்டார்.

இந்த அறிவிப்புக்கு சில நாள்கள் முன்னதாகத்தான் அதாவது ஆகஸ்ட் 14ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து விட்டு வந்தார். (தமிழக நலத்திட்டங்களுக்காகத்தான் அவர் சந்தித்துவிட்டு வந்ததாக நீங்கள் கருதினால் நாங்கள் பொறுப்பு அல்ல).

ஆனாலும், சசிகலா குறித்த அறிவிப்பு இல்லாததால், இதில் ஏதும் சூழ்ச்சி இருக்குமோ என்றெண்ணிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, இணைப்பு முயற்சிகளில் சற்று பின்வாங்கியது. அதையடுத்து கடந்த ஆகஸ்ட் 21ம் தேதியன்று ஆளுநர் வித்யாசாகர் முன்னிலையில், ஓபிஎஸ் – இபிஎஸ் ஒரே அணியாக இணைந்தனர். இணைப்புக்கு பலனாக ஓபிஎஸ் துணை முதல்வர் ஆக்கப்பட்டதும், அவருடைய அணியைச் சேர்ந்த க.பாண்டியராஜன், அமைச்சர் ஆக்கப்பட்டதும் ஊர் அறிந்தது.

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைதான் வேண்டும் என்று கூவிய கே.பி.முனுசாமி, முதல்வர் மாவட்டத்திலேயே எதிர்ப்புக்குரல் எழுப்பியதால் செம்மலை ஆகியோருக்கு ‘கல்தா’ கொடுக்கப்பட்டது. இணைப்புக்கு சில நாள்கள் முன்னதாக, ‘எடப்பாடி பழனிசாமி ஆட்சி, ஓர் ஊழல் ஆட்சி. அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம்,’ என்று முழங்கியதை இணைப்புக்குப் பின்னர் வசதியாக மறந்து போனார்கள்.

இந்நிலையில்தான், செப். 12ம் தேதியன்று நடந்த அதிமுக பொதுக்குழுவில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியும், தினகரனின் நியமனங்கள் செல்லாது என்றும் தீர்மானம் கொண்டு வந்தனர்.ஓபிஎஸ் தரப்பின் அனைத்து கோரிக்கைகளும் இப்போதைக்கு நிறைவு பெற்றுவிட்டன.

ஆனால், ஒன்றரை கோடி தொண்டர்களின் மனதிலும் சில கேள்விகள் அப்படியேதான் உயிர்ப்புடன் இருக்கின்றன. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றாரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதை செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அப்படி ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு, அப்போது ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு, அதன்மூலம் சசிகலா தரப்பு மீது எந்த குற்றமும் இல்லை என்பது ஊர்ஜிதம் ஆனால் தங்களின் எதிர்காலம் என்னாவது என்ற அச்சமும் எடப்பாடி, ஓபிஎஸ் தரப்புக்கு இருக்கலாம் என்று கருத்தும் நிலவுகிறது.

அதனால்தான் தினகரன் தரப்பும் அதே கோரிக்கையை தைரியமாக முன்வைத்துள்ளனர். அதற்கு சில மாதங்கள் முன்பு, திவாகரன் தரப்பினர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் உள்ளன என்றும் தெரிவித்து இருந்தனர்.

தங்கள் மீது குற்றமிருந்தால் இத்தனை தைரியமாக மன்னார்குடி தரப்பிடமிருந்து சத்தம் எழாது என்பதையும் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு உணர்ந்திருக்கிறது. தேர்தல் வரை தள்ளிப்போடுவோம். அப்படியே ஆணையம் அமைத்தாலும், இதுவரை எத்தனை விசாரணை கமிஷன்களில் முடிவுகள் வந்திருக்கின்றன என்ற கேள்விகளும் அவர்களுக்குள் கேட்டு வருகின்றனர். அதேநேரம், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருந்தால் அதில் பிரதமர், ஆளுநர், எய்ம்ஸ் மருத்துவர்கள் எல்லோருக்கும்தானே பங்கிருக்கிறது? குட்டு உடைந்துபோகுமெனில், விசாரணை ஆணையம் அமைப்பார்களா?

பொதுவாக ஆட்சிகள் மாறும்போதுதான் காட்சிகள் மாறும். ஆனால், ஒரே கட்சியின் ஆட்சியில் பல்வேறு காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அகிரா குரோசோவா சினிமாவைக் காட்டிலும் டிவிஸ்ட்டுக்கு மேல் டிவிஸ்ட்டுகள். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?

இப்போது ஜெயலலிதா பாணியில் நாமும் கேட்கிறோம்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று சொன்னீர்களே! செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

– அகராதிக்காரன்.