குப்பைகளை அள்ளிச் செல்வதற்காக கொள்முதல் செய்யப்பட்ட பேட்டரி வண்டிகளிலும் பல லட்சங்களை ஓசையின்றி வாரிச்சுருட்டி இருக்கிறது சேலம் மாநகராட்சி.
சேலத்தை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்துவதற்காக கடந்த 2016ம் ஆண்டில் மத்திய அரசு முதல்கட்டமாக 111 கோடி ரூபாய் வழங்கியது. ஆனால், இந்த நிதியை செலவிடாமல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை அடை காத்து வந்தது மாநகராட்சி. மத்திய அரசு ரிவிட் அடித்த பிறகே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதற்கான கன்சல்டன்சியை நியமித்தது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிப்பதற்காக பேட்டரிகளால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை கொள்முதல் செய்தது சேலம் மாநகராட்சி. பெரிய பெரிய இரும்பு கலன்களில் உள்ள குப்பைகளை தூக்கி லாரிகளில் கொட்ட ரொம்பவே சிரமப்பட்டு வந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள் வரப்பிரசாதம்தான். என்றாலும், அந்த வாகனங்களை கொள்முதல் செய்ததில்தான் மாபெரும் ஊழலை ஓசையின்றி அரங்கேற்றி இருக்கிறது சேலம் மாநகராட்சி.
சேலம் மாநகராட்சியில் மொத்தம் 60 கோட்டங்கள் அடங்கி இருக்கின்றன. தினமும் காலையில் தெருக்கள்தோறும் பேட்டரி வாகனங்களில் செல்லும் துப்புரவு தொழிலாளர்கள், வீடுகளில் சேர்ந்திருக்கும் குப்பைகளை தரம் பிரித்து சேகரித்துக் கொள்வார்கள். கடந்த 2018ம் ஆண்டு செப். 8ம் தேதியன்று, பேட்டரி வாகன பயன்பாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து துவக்கி வைத்தார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மொத்தம் 179 பேட்டரி வாகனங்களை சேலம் மாநகராட்சி வாங்கி இருக்கிறது. இந்த வாகனங்களின் விலை தலா 1.80 லட்சம் ரூபாய். சேலத்தைச் சேர்ந்த அருண் இந்தியன் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் 3.22 கோடி ரூபாய்க்கு இந்த வாகனங்களை சப்ளை செய்திருக்கிறது.
இந்நிலையில், சேலம் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் கிளைத்தலைவர் தாதை சிவராமன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், பேட்டரி வாகனங்களின் கொள்முதல் விலை, சப்ளை செய்த நிறுவனம் உள்ளிட்ட வினாக்களை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் எழுப்பி இருந்தார். அதற்கு மாநகராட்சி நிர்வாகம் அளித்த பதிலில், பேட்டரி வாகனங்களின் விலையை குறிப்பிட்டுள்ளதுடன், அந்த வாகனங்கள் சேலம் காந்தி சாலையில் உள்ள அருண் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதாக பதில் அளித்திருந்தது.
அதையடுத்து, காந்தி சாலையில் மேலே சொல்லப்பட்ட நிறுவனத்தை நாம் தேடினோம். அப்படி ஒரு நிறுவனம் இல்லை என்பதை பலமுறை உறுதிப்படுத்தினோம். அருண் மோட்டார்ஸ் பெயரில் ஒரு நிறுவனம், நியூ அருண் மோட்டார்ஸ் பெயரில் ஒரு நிறுவனம் மட்டுமே சேலத்தில் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களுக்கும் பேட்டரி வாகனங்களுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பதை விசாரித்து அறிந்து கொண்டோம். வேண்டுமென்றே தவறான தகவலை மாநகராட்சி பொது தகவல் அலுவலர் கொடுத்திருப்பது தெரிய வந்தது.
நம்முடைய கள ஆய்வில், பேட்டரி வாகனங்களை சப்ளை செய்த நிறுவனத்தின் பெயர், அருண் மோட்டார்ஸ் அல்ல; அது, அருண் இந்தியன் மோட்டார்ஸ் என்பதை கண்டறிந்தோம். பேட்டரி வாகனங்களிலும் அந்த பெயரைக் குறிக்கும் வகையில் ‘ஏஐஎம்’ (எய்ம்) என்று எழுதப்பட்டிருந்ததும் ஊர்ஜிதம் செய்தது.
இந்த நிறுவனத்திற்கு பேட்டரி வாகனங்கள் ஆர்டர்கள் கொடுக்கப்பட வேண்டியதன் கட்டாயம் குறித்து விசாரித்ததில் பல பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. அருண் இந்தியன் மோட்டார்ஸ் நிறுவன அதிபர் அருண் நல்லதம்பி. அதிமுகவைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.பி., காமராஜியின் மைத்துநர்தான் அருண் நல்லதம்பி. சேலம் மாவட்ட செஸ் அசோசியேஷன் சங்க செயலாளர், ரிட்ஸ் ஹோட்டல் உரிமையாளர், ரிதம் குரூப்ஸ் என பல அமைப்புகளிலும், தொழில்களையும் கையில் வைத்திருக்கிறார்.
முன்னாள் எம்.பி., காமராஜியின் உறவினர் என்ற ஒரு விசிட்டிங் கார்டு போதுமே. அதை வைத்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சியின் மற்றொரு அதிகார மையமான மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் என ஆளுந்தரப்பில் உயர்மட்ட அளவில் ரொம்பவே நெருக்கத்தை வளர்த்து வைத்திருக்கிறார் அருண் நல்லதம்பி.
கடந்த நான்கு ஆண்டுக்கு முன் நடந்த இவருடைய திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து வாழ்த்தி விட்டுச் சென்றிருக்கிறார். அப்போதைய ஆளுநர் ரோசய்யா நேரில் வராவிட்டாலும் வாழ்த்துக்கடிதம் கொடுத்திருக்கிறார் என்பதில் இருந்தே அருண் நல்லதம்பியின் செல்வாக்கை புரிந்து கொள்ள முடியும். இந்த செல்வாக்குதான் அருணுக்கு பேட்டரி வாகன கொள்முதல் ஒப்பந்தத்தை சேலம் மாநகராட்சியிடம் இருந்து பெற்றுத் தந்திருக்கிறது. அதற்காகவே தொடங்கப்பட்டதுதான், ‘அருண் இந்தியன் மோட்டார்ஸ்’ நிறுவனம்.
அருண் சப்ளை செய்த வாகனங்களில் தலா 12 வோல்ட் வீதம் மொத்தம் 5 பேட்டரிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றின் மொத்த திறன் 60 வோல்ட். இந்த வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்த ஒரே ஆண்டிற்குள் பேட்டரிகளும், மோட்டார்களும் செயலிழந்து, காயலான் கடைக்குப் போடும் நிலைக்கு வந்துவிட்டன. சேலம் மாநகராட்சியின் கீழ்த்தளத்தில் அலுவலக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் 60க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதடைந்து கிடப்பில் உள்ளன. இரண்டு மெக்கானிக்குகள் பேட்டரி மற்றும் இதர பழுதுகளை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாகனங்கள் தாராபுரத்தைச் சேர்ந்த, ‘பிரியம் இண்டஸ்ட்ரீஸ் அண்டு இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் தயாரித்து உள்ளது. அந்த நிறுவனத்திடம் இருந்து நேரடியாக வாங்கிய அருண், ஒரு வாகனத்திற்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் வைத்து சேலம் மாநகராட்சிக்கு சப்ளை செய்துள்ளார். உண்மையில், உற்பத்தியாளரிடம் நேரடியாக கொள்முதல் செய்திருந்தாலும்கூட இதைவிட குறைந்த விலைக்கு வாங்கியிருக்க முடியும். ஆனால் அப்படி செய்யாமல், அரசியல் புள்ளிகள் கொள்ளை லாபம் பெற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய வழிமுறையைக் கையாண்டிருக்கிறார் சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ்.
அருண் இந்தியன் மோட்டார்ஸ் நிறுவனம் கூடுதல் விலைக்கு 179 வாகனங்களை சப்ளை செய்த வகையில் மட்டும் சேலம் மாநகராட்சிக்கு 53.70 லட்சம் ரூபாய் வரை கண்ணுக்கு தெரிந்தே இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, அருண் இந்தியன் மோட்டார்ஸ், பலன் அடைந்திருக்கிறது எனலாம். இதே நிறுவனம், ஈரோடு மாநகராட்சி, திருச்செங்கோடு, நாமக்கல், பவானி ஆகிய நகராட்சிகளுக்கும் காயலான் கடை தரத்திலான பேட்டரி வாகனங்களை சப்ளை செய்திருக்கிறது.
ஆர்டிஐ தகவல் மூலம் பேட்டரி வாகன ஊழல் குறித்து ‘புதிய அகராதி’யின் கவனத்திற்குக் கொண்டு வந்த பாஜகவின் தாதை சிவராமன் நம்மிடம் பேசினார்.
”தூய்மை இந்தியா
திட்டத்தில் மட்டுமே
அருண் இந்தியன் மோட்டார்ஸ்
என்ற நிறுவனத்திடம்
இருந்து 179 பேட்டரி
வாகனங்கள் வாங்கப்பட்டு
உள்ளது. இது தவிர,
ஸ்மார்ட் சிட்டி, கார்ப்பரேட்
நிறுவனங்களின்
சமூகப்பொறுப்பு நிதியின்
மூலமும் சேலம்
மாநகராட்சி நிர்வாகம்
பேட்டரி வாகனங்களை
வாங்கி இருக்கிறது.
இந்த வாகனங்களை
தயாரித்த பிரியம்
இண்டஸ்ட்ரீஸ்
நிறுவன உரிமையாளர்
சீனிவாசன் என்பவரிடம்
பண்ணை உபயோகத்திற்கு
இதேபோல் பேட்டரி வாகனம்
வேண்டும் என்றும்,
விலை விவரம் குறித்தும்
விசாரித்தேன். அதற்கு அவர்,
‘சேலம் மாநகராட்சிக்கு
சப்ளை செய்யப்பட்ட
வண்டிகளைக் காட்டிலும்,
தனி நபர்களுக்கு தரமான,
ஒரே பேட்டரி பொருத்தப்பட்ட
வாகனங்களை 1.20 லட்சம்
முதல் 1.50 லட்சம் ரூபாய்
வரையிலான விலையில்
வழங்க முடியும்.
சேலம் மாநகராட்சிக்கு
வழங்கப்பட்ட வண்டிகளின்
பேட்டரிகளுக்கு ஓராண்டுதான்
உத்தரவாதம் கொடுத்திருக்கிறோம்.
அதற்குப்பிறகு அந்த வண்டிகள்
அனைத்தும் குப்பைக்குப்
போய்விடும்,’ என்று சொன்னார்.
பேட்டரி வண்டியை
1.20 லட்சத்திற்குக்
கொடுத்தாலும் அதிலும்
விற்பனையாளருக்கு
லாபம் கிடைக்கும் என்றால்,
மாநகராட்சிக்கு சப்ளை
செய்யப்பட்ட வண்டிகளின்
உண்மையான சந்தை
விலைதான் என்ன என்பதிலும்
கேள்வி எழுகிறது.
முதல்வரின் சொந்த
மாவட்டமான சேலம்
மாநகராட்சியில் பேட்டரி
வாகனங்கள் கொள்முதல்
செய்ததில் முறையான
டெண்டர் விடப்படவில்லை.
அப்படியே டெண்டர்
அறிவிப்பு வெளியிட்டிருந்தால்,
டெண்டரில் கலந்து கொண்ட
நிறுவனங்கள் பெயர்களையும்,
விலைப்புள்ளி விவரங்களையும்
வெளியிட வேண்டும்.
தரமற்ற வண்டிகளை
வாங்கியதன் மூலம் ஆளுங்கட்சி
பிரமுகர்களும்,
மாநகராட்சி அதிகாரிகளும்
கூட்டுக்கொள்ளை அடித்துள்ளனர்.
பேட்டரி வாகனங்கள்
கொள்முதல் செய்தது
தொடர்பான ஆவணங்களை
முறையாக தணிக்கை
செய்ய வேண்டும்.
அருண் இந்தியன் மோட்டார்ஸ், பிரியம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் இதுவரை தமிழகம் முழுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு சப்ளை செய்துள்ள அனைத்து பேட்டரி வண்டிகளின் தரத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்,” என்றார் தாதை சிவராமன்.
இது தொடர்பாக,
அருண் இந்தியன்
மோட்டார்ஸ் நிறுவன
அதிபர் அருணிடம்
விளக்கம் பெற, அவருடைய
செல்போன் எண்ணுக்கு
தொடர்ந்து பத்து நாள்களாக
முயற்சித்தோம். ஆனாலும்
அவர் செல்போனை எடுக்கவில்லை.
அவருக்கு நெருக்கமான
வட்டாரத்தில் விசாரித்தபோது,
அருண் பல்வேறு தொழில்கள்,
அமைப்புகளில் இருப்பதால்
எப்போதும் பிஸியாகவே இருப்பார்.
அவரிடம் வேலை செய்யும்
ஊழியர்கள் கம்பெனியின்
செல்போன் நம்பரில் இருந்து
பேசினாலும் எடுக்க மாட்டார்.
வாட்ஸ்அப்பில் தகவல்
அனுப்பினால் மட்டுமே
அதைப் பார்த்துவிட்டு,
விருப்பப்பட்டால் தொடர்பு
கொண்டு பேசுவார் என்ற
தகவலும் கிடைத்தது.
இதையடுத்து நாம் சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸை செப். 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை தொடர்ச்சியாக அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றும் அவரும் செல்போனை எடுக்கவில்லை. பேட்டரி வாகனம் தொடர்பாக பேச வேண்டும் என்று அவருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினோம். அதைப் பார்த்த பிறகும் ஏனோ அவர் நம்மிடம் தொடர்பு கொள்ளவில்லை.
‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்திலும் கூட அப்படித்தான். அந்தப் படத்தில், அலிபாபாவும் சரி; நாற்பது திருடர்களும் சரி; பொதுவெளியில் யாரிடமும் பேச மாட்டார்கள்.
– பேனாக்காரன்