மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட சர்க்கரையில் போலி இருப்புக் கணக்கு மூலம் 19 லட்சம் ரூபாய் சுருட்டப்பட்டு உள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில்,
சேலம் கூட்டுறவு சர்க்கரை
ஆலை இயங்கி வருகிறது.
நிரந்தர தொழிலாளர்கள்,
அலுவலக ஊழியர்கள் மற்றும்
தற்காலிக தொழிலாளர்கள் என
மொத்தம் 450 பேர் பணியாற்றுகின்றனர்.
நடப்பு ஆண்டுக்கான
கரும்பு அரவைப் பணிகள்,
கடந்த ஆண்டு நவம்பரில்
தொடங்கியது. ஒரு லட்சம் டன்
கரும்பு அரவைக்கு இலக்கு
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தினசரி 2500 டன் கரும்பு
அரவைக்கு எடுத்துக்
கொள்ளப்படுகிறது.
இந்த ஆலையில்
பணியாற்றி வரும் அனைத்துப்பிரிவு
தொழிலாளர்களுக்கும் மாதம்தோறும்
10 கிலோ லெவி சர்க்கரை
தலா 33 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்பட்டு வருகிறது.
வெளிச்சந்தையை விட
இங்கு கிலோவுக்கு 15 ரூபாய்
வரை குறைவு. ஆதனால்
தொழிலாளர்கள் இங்கு
சர்க்கரை வாங்கிச் செல்வதில்
அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இவ்வாறு சலுகை விலையில்
விற்பனை செய்யப்படும்
சர்க்கரையில் பெருமளவு
ஊழல் நடந்துள்ளது தற்போது
அம்பலம் ஆகியுள்ளது.
இது தொடர்பாக, சர்க்கரை ஆலை வட்டாரத்தில் விசாரித்தோம்.
”சேலம் கூட்டுறவு சர்க்கரை
ஆலையின் நிர்வாக இயக்குநராக
மல்லிகா என்பவர் கடந்த
நான்கு ஆண்டுக்கு முன்பு
பொறுப்பேற்றார். இது,
மாவட்ட வருவாய் அலுவலர்
அந்தஸ்திலான பணியிடம்.
ஆலையின் கணக்குப் பிரிவு
எழுத்தராக பணியாற்றி வந்த
ராஜேஷ்குமார், நிர்வாக இயக்குநரின்
தனி உதவியாளராக நியமிக்கப்பட்டார்.

ஆலையில் பணியாற்றி வரும்
அலுவலர்கள், சிப்பந்திகள்,
தொழிலாளர்கள் ஆகியோருக்கு
மாதம் 10 கிலோ ‘லெவி’ சர்க்கரை,
கிலோ 33 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்பட்டு வருவது
நடைமுறையில் உள்ளது.
சர்க்கரை விற்பனை பொறுப்பையும்
ராஜேஷ்குமாரே கவனித்து வந்தார்.
மாதத்தில் ஒரு வாரம் மட்டுமே
இவ்வாறு சலுகை விலையில்
சர்க்கரை விற்பனை செய்யப்படும்.
சர்க்கரை விற்பனை பணத்தை, மறுநாள் காலை 10.30 மணிக்குள், அலுவலக கணக்குப் பிரிவில் செலுத்தி விட வேண்டும். காலப்போக்கில், குறித்த நேரத்தில் பணத்தைச் செலுத்தாமல் ராஜேஷ்குமார் காலம் கடத்தி வந்தார்.

நிர்வாக இயக்குநர், அலுவல் சார்ந்த கூட்டங்களுக்காக சென்னைக்குச் செல்லும்போதும், உள்ளூரில் கரும்பு விவசாயிகளைச் சந்திக்கச் செல்லும்போதும் அதற்கான போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுக்கான தொகையை ராஜேஷ்குமாரே நேரடியாக கையில் இருந்து செலவழித்துள்ளார். இந்த செலவுகள் திரும்பப் பெறக்கூடியது என்றாலும், கணக்கில் ‘அட்ஜஸ்ட்’ செய்யப்படாமல் இருந்துள்ளது.
நிர்வாக இயக்குநரின் தனிப்பட்ட தேவைக்கான பணத்தையும் இவரே கொடுத்துள்ளார். இவை எல்லாமே அவர் சர்க்கரை விற்பனை பணத்தில் இருந்துதான் செலவு செய்திருக்கிறார்.
இந்நிலையில், இந்த ஆலைக்கு அண்மையில் இடமாறுதலில் வந்த அலுவலக மேலாளர் சீனிவாசன் என்பவர்தான், சர்க்கரை விற்பனை தொகையில் கையாடல் நடந்திருப்பதை கண்டுபிடித்தார்.
உதாரணமாக, ஒரு லட்சம் ரூபாய்க்கு சர்க்கரை விற்பனை நடந்திருக்கிறது என்றால் அலுவலக கணக்கில் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனதாக வரவு வைத்திருப்பார்.

சந்தேகப்பட்டு ராஜேஷ்குமாரிடம் விசாரித்தால், அவை சர்க்கரை மூட்டைகளாக கிடங்கில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், இதே ஆலையில் இயங்கி வரும் கூட்டுறவு பண்டகசாலைக்கு விற்பனை செய்ததாகவும் சொல்லி ஒப்பேற்றி வந்துள்ளார். தணிக்கை ஆய்வில் முதல்கட்டமாக, 19 லட்சம் ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது,” என்கிறார்கள் சர்க்கரை ஆலை பணியாளர்கள்.
மற்றொரு தரப்பினரோ,
”அலுவலக பணி நேரத்தில் கூட
நிர்வாக இயக்குநர் மல்லிகாவின்
வீட்டு வேலைகளைச் செய்து
கொடுக்கும் அளவுக்கு ராஜேஷ்குமார்,
மேலிடத்துடன் நெருக்கமாக
இருந்தார். சலுகை விலை
சர்க்கரையில் முறைகேடு
நடந்துள்ளது குறித்து ஊழியர்கள்
தரப்பில் நிர்வாக இயக்குநரிடம்
ஏற்கனவே புகார் அளித்து இருந்தோம்.
ஆனாலும், எங்கள் புகாரை
அவர் ஒரு பொருட்டாக
கருதவில்லை.
ராஜேஷ்குமார் தன் வீட்டு
வேலைகளைச் செய்யும்
எடுபிடி போல் இருந்ததால்
அவர் மீதான புகாரை
கண்டுகொள்ளவில்லை.
இவ்வாறு முறைகேடு செய்த
பணத்தைதான் தனக்கும்,
தன் வீட்டிற்கும் ராஜேஷ்குமார்
செலவழித்திருக்கிறார் என்பதும்
நிர்வாக இயக்குநருக்கு
முன்பே தெரியும்.
எனினும் தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்ற ஊழியர்கள் அதற்கான பொறுப்பேற்க வேண்டியது வரும். பலர் ஓய்வு பெறுவதிலும், பதவி உயர்வு பெறுவதிலும் சிக்கல் ஏற்படும் என அலுவலக மேலாளர் சீனிவாசன் கறார் காட்டியதால் வேறு வழியின்றி ராஜேஷ்குமார் மீது விசாரணை பாய்ந்துள்ளது.
இந்த விசாரணையில் ராஜேஷ்குமார், தான் முறைகேடு செய்ததாக ஒப்புக்கொண்டு கைப்பட எழுதிக் கொடுத்துள்ளார். தன்னுடைய தவறை மறைப்பதற்காக அவர் ஆலையில் 10 பேருக்கு பணம் கொடுத்ததாகவும் சொல்கிறார். ஆனால் யார் யார் என்று பெயர் சொல்லவில்லை.
முதல்கட்டமாக அவரிடம் இருந்து ஜன. 2ம் தேதி, 3 லட்சம் ரூபாய் ஆலை தரப்பில் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ஜன. 4ம் தேதி ராஜேஷ்குமார் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் மேலும் 5 லட்சம் ரூபாய் அலுவலகத்தில் செலுத்தியதாகச் சொல்லப்படுகிறது. முறைகேடு செய்த மொத்தப் பணமும் அவரிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,” என்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, நிர்வாக இயக்குநர் மல்லிகா திடீரென்று அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலராக இடமாறுதல் செய்யப்பட்டு, ஜன. 10ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். நிர்வாக ரீதியாக மல்லிகா மீது பல புகார்கள் சென்றதாலும், ஒரே இடத்தில் மூன்று ஆண்டுக்கு மேல் பணியாற்றிவிட்ட காரணத்தாலும்தான் அவர் இடமாறுதல் செய்யப்பட்டதாக ஒரு தரப்பு சொல்கிறது.
இதையடுத்து, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குநர் பணிகளை, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குநர் யோகவிஷ்ணுவுக்கு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, விவசாயிகள் முன்னேற்றக் கழகம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கக் கோரியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின்
மாநில பொதுச்செயலாளர்
பாலசுப்ரமணியன் நம்மிடம்,
”கரும்பு அரவை மற்றும்
சர்க்கரை உற்பத்தியில்
நாட்டிலேயே இரண்டாவது
பெரிய ஆலையாக இருந்த
இந்த ஆலை, அதிகாரிகள்
அலட்சியத்தாலும் நிர்வாகச்
சீர்கேடுகளாலும் படிப்படியாக
நலிவடைந்து வருகிறது.
சர்க்கரை விற்பனையில் ஊழல்
செய்ததாக பணியாளர் ராஜேஷ்குமார்
பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் வேறு யாருக்கெல்லாம்
தொடர்பு உள்ளது? உண்மையில்,
எந்தளவுக்கு முறைகேடு நடந்தது?
என்பது குறித்து விசாரிக்க சிறப்புக்குழு
அமைக்க வேண்டும் என புதிய
நிர்வாக இயக்குநரிடம் வலியுறுத்தி
உள்ளோம்,” என்றார்.
இந்த முறைகேடு குறித்து விரிவான விசாரணை அளிக்கும்படி ஆலை நிர்வாக இயக்குநருக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.
இதே போன்ற முறைகேடுகள், மற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதால், விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்கிறார்கள் கரும்பு விவசாயிகள்.
- பேனாக்காரன்