வல்லரசு கனவை முன்னெடுத்துச் செல்வதாக பிரதமர் நரேந்திர மோடி கர்ஜனை செய்தாலும், மனித மூலதனக் குறியீட்டில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கி இருப்பது உலக பொருளாதார மன்றத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் மனித வளத்தைப் பயன்படுத்தும் விதம், மனிதர்களின் உற்பத்திறன் குறித்து உலகப் பொருளாதார மன்றம் (WORLD ECONOMIC FORUM) என்ற அமைப்பு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது. அந்த அமைப்பு, உலகம் முழுவதும் 130 நாடுகளில் உள்ள மனித மூலதன பயன்பாட்டை ஆய்வு செய்து நேற்று (செப். 13) அறிக்கை (GLOBAL HUMAN CAPITAL REPORT-2017) வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில், இந்தியாவுக்கு 103-வது இடமே கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
அதென்ன மனித மூலதனம்?:
உலகப் பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வ தாக்கத்தையும், மதிப்புக் கூட்டும் வல்லமையையும் மக்களுக்கு அளிக்கும் அறிவும், திறமையுமே மனித மூலதனம் என்று அந்த அமைப்பு வரையறுக்கிறது. எளிமையாகச் சொல்வதென்றால், மக்களுக்குள்ள அறிவும், திறமையுமே மனித மூலதனம் எனலாம். தர வரிசைப் பட்டியலில், இலங்கை, நேபாளம் மற்றும் சில பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகள்கூட இந்தியாவைக் காட்டிலும் நல்ல நிலையில் உள்ளன. அதாவது நம் நாட்டைவிட மேலான நிலையில் இருக்கின்றன.
கல்வியும், வேலையும்:
130 கோடிக்கும் மேல் மனிதவளம் நிறைந்த நாடு, இந்தியா. கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். இளைஞர்கள் சக்தி நிறைந்த நாடாக இருப்பதால்தான் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், பிரதமர் மோடி ஆகியோர் 2020க்குள் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்றனர். ஆனால், உலக மனித மூலதனக் குறியீட்டின் முடிவுகள் கவலை அளிக்கும் விதமாகவே இருக்கின்றன.
மனித மூலதனத்தை ஒரு நாடு எப்படி வளர்த்தெடுக்கிறது என்பதே அந்த நாட்டின் நீண்டகால வெற்றியைத் தீர்மானிக்கும். முறை சார்ந்த கல்வி மட்டுமே மனித மூலதனத்தைத் தீர்மானிப்பதில்லை. அறிவையும், திறமையையும் உள்ளடக்கிய இந்த மூலதனம், பயன்படுத்துவதன் வாயிலாக வளரக்கூடியது என்றும், பயன்படுத்தாமல் கிடப்பதன் மூலம் தேயக்கூடியது என்றும் இந்த மனித மூலதனக் குறியீட்டு அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அமைப்பு, திறன், வளர்ச்சி, வேலை, நுண்ணறிவு ஆகிய நான்கு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தியது. இந்த நான்கு காரணிகளிலும் ஒரு நாடு எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறதோ அதற்கேற்ப குறியீட்டுப் புள்ளிகள் வழங்கப்பட்டன. அதிகபட்சப் புள்ளி, 100. ஒவ்வொரு நாடும் பெற்ற புள்ளிகளுக்கு ஏற்ப தரப்பட்டியல் உருவாக்கப்பட்டது.
ஒரு நாடு, தமது மக்களுக்கு எவ்வளவு நல்ல கல்வியையும், திறன்களையும் அளித்து, அதன்மூலம் தரமான வேலைவாய்ப்பையும், வாழ்க்கைச் சூழலையும் அளித்துள்ளதன் அடிப்படையில் இப்பட்டியலில் நல்ல தரவரிசையைப் பெற்றுள்ளன..
இந்தப் பட்டியலில் 77.12 புள்ளிகளுடன் நார்வே முதலிடத்திலும், 35.48 புள்ளிகளுடன் ஏமன் கடைசி இடத்திலும் உள்ளன.
கல்வி மற்றும் பொருளாதாரத்தில் சிறந்த நார்வே, பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய சிறிய ஐரோப்பிய முதல் இடங்களைப் பிடித்துள்ளன. வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு, நான்காம் இடமே கிடைத்துள்ளது. பிராந்திய அளவிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவை சிறப்பான இடத்தில் உள்ளன. ஒட்டுமொத்த அளவில் ஆப்பிரிக்க நாடுகளும், தெற்கு ஆசிய நாடுகளும் பின்தங்கி உள்ளன.
இந்தியாவின் நிலை:
ஆசிய கண்டத்தில் இந்தியாவுடன் மல்லுக்கு நிற்கும் சீனா 67 புள்ளிகளுடன் 34-வது இடத்தில் இருக்கிறது. மலேசியாவுக்கு 33-வது இடம். வியட்நாம், இந்தோனேஷியா நாடுகள் முறையே 64, 65வது இடங்களில் உள்ளன. நமது அண்டை நாடான இலங்கை, 61.19 புள்ளிகளுடன் 70-வது இடம் வகிக்கிறது. சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளும் உகாண்டா, ஜமைக்கா, மியான்மர், கம்போடியா, நமீபியா போன்ற நாடுகளும் இந்தியாவைவிட தரவரிசையில் உயர்ந்த இடத்தில் உள்ளன. 55.29 புள்ளிகளுடன் இந்தியா 103-வது இடத்தில் உள்ளது.
பங்களாதேஷ் 51.75 புள்ளிகளுடன் 111-வது இடத்திலும், 46.34 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 125-வது இடத்திலும் உள்ளன.
ஆசிய நாடுகளில் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகள் மட்டுமே முதல் 20 இடங்களுக்குள் உள்ளன. இந்தப்பட்டியலில் முதலிடங்களில் உள்ள நாடுகள் தமது மக்களின் கல்வி வளர்ச்சிக்கு நீண்டகாலமாக அதிக முக்கியத்துவம் அளிப்பவையாகவும், தமது மக்கள் தொகையில் பெரும்பகுதியை திறன்சார்ந்த வேலைகளில் ஈடுபடுத்துபவையாகவும் உள்ளன என்று குறிக்கிறது இந்த அறிக்கை.
ஆக்கப்பூர்வ முதலீடு:
கல்வியின் மூலமாகவும், வேலைவாய்ப்பின் மூலமாகவும் திறமையை வளர்ப்பதற்கு செய்யப்படும் முதலீடு என்பது மனித மூலதனத்தை மேம்படுத்துகிறது என்பதே இந்த அறிக்கையின் மையக்கருத்து. உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு மட்டுமல்ல, அரசியல், சமூக, குடிமையியல் நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும் மனித மூலதனம் முக்கியமானது என்கிறது இந்த அறிக்கை. இணைப்பு.