Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஆசிரியர்களுக்கு குரல் கொடுக்கும் கமல்!

ஆசிரியர்கள் பணிக்கு வராமல், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாட்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படாது எனில், ரிசார்ட்டில் தங்கியுள்ள குதிரைபேர எம்எல்ஏக்களுக்கு மட்டும் சம்பளம் கொடுக்கலாமா? என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக உள்கட்சி பூசல்களால் தமிழக மக்கள் நலன் பாதிக்கப்படுவது குறித்தும், ஆளுங்கட்சியின் ஊழல்கள் குறித்தும் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது, நல்லதொரு மாற்றம் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.

‘டுவிட்டர் அரசியல்வாதி’ என்று ஆளும் தரப்பும், பாஜகவும் கமல்ஹாசனை கிண்டல் அடித்தாலும், ‘டுவிட்டரும் போராட்ட களம்தான்’ என்று சளைக்காமல் பதிலடி கொடுத்தார். சமகால அரசியல் நகர்வுகள், சமூக பிரச்னைகள் குறித்து அவர் சமூகவலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருவது, அவருடைய ரசிகரகளைக் கடந்தும் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக சொன்னதில் இருந்தே தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமெடுத்துள்ளது.

இப்படி சளைக்காமல் ஆளும் தரப்பை விமர்சித்து வரும் கமல்ஹாசன், உயர்நீதிமன்றத்தையும் தனது பாணியில் கிண்டல் செய்து கருத்துகளை வெளியிட்டுள்ளார். அத்துடன் ஆளுங்கட்சியையும் டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

இரு நாட்களுக்கு முன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், ரூ.40 ஆயிரம், 50 ஆயிரம் சம்பளம் பெற்றுக்கொண்டு ஆசிரியர்கள் தொழிலாளர் வர்க்கத்தினர்போல் போராடலாமா?. ஆசிரியர்கள் ஒன்றும் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். எதிர்காலத்தில் நீதிமன்றத்தை நாட முடியாத அளவுக்கு ஆசிரியர்களுக்கு எதிராக உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித்து இருந்தார். மேலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், அரசு தரப்பு ஆகியோரிடம் இருந்து வசூலித்து மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்து இருந்தார்.

அவருடைய கருத்துக்கு அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கடும் அதிருப்தியையும், கண்டனங்களையும் தெரிவித்து இருந்தனர். நீதிபதிகள், எம்எல்ஏக்கள், முதல்வர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு, ஓய்வூதியம் வழங்கப்படுகிறதே அதை ஏன் நீதிமன்றம் கேள்வி எழுப்பவில்லை என்று எதிர்த்தாக்குதல் நடத்தினர்.

ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கில் நேற்று (செப். 14) நீதிமன்றத்தில் பதில் அளித்த தமிழக அரசு, ”ஆசிரியர்கள் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலத்திற்கு சம்பளம் வழங்க முடியாது,” என்று தெரிவித்து இருந்தது. அதை உயர்நீதிமன்றமும் வரவேற்று இருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகளை நடிகர் கமல்ஹாசன் தனது பாணியில் விமர்சனம் செய்து, டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

”நோ ஒர்க் நோ பே என்பதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானா?. ரிசார்ட்டில் தங்கிக்கொண்டு குதிரைபேரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்ததாதா?,” என்று கமல்ஹாசன் பகடி செய்துள்ளார்.

மற்றொரு பதிவில், ”மேன்மைமிகு நீதிமன்றம், ஆசிரியர்கள் போராட்டத்தை எச்சரித்துள்ளது. மக்கள் பணிக்கு வராத எம்எல்ஏக்களுக்கும் இதேபோல் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று தயவாய்க் கேட்கிறேன்,” என்றும் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.