Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் ஆணவக்கொலை: யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள்! மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!!

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என்று மதுரை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை (மார்ச் 5) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. யுவராஜின் தம்பி தங்கதுரை உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த
வெங்கடாசலம் – சித்ரா தம்பதியின்
மகன் கோகுல்ராஜ் (23).
திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர்
கல்லூரியில் பி.இ., படித்திருந்தார்.
கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதியன்று
காலையில் வீட்டில் இருந்து கல்லூரி பேருந்தில்
ஏறிச்சென்றவர் அன்றிரவு
வீடு திரும்பவில்லை.

 

இரவில் பல இடங்களிலும்,
நண்பர்கள் வீடுகளிலும் தேடிப்பார்த்துள்ளனர்.
கோகுல்ராஜை பற்றிய தகவல் இல்லை.
அவருடைய செல்போனும் அணைத்து
வைக்கப்பட்டிருந்ததால் தாயாருக்கு
சந்தேகம் வலுத்தது.

 

மறுநாள் காலையில் கோகுல்ராஜின்
நண்பர் கார்த்திக்கிடம் விசாரித்தபோது,
சுவாதியும் கோகுல்ராஜூம் ஒன்றாக
சென்றதாக சொல்லி இருக்கிறார்.
அவர் மூலமாக சுவாதியின் செல்போன்
எண்ணைப் பெற்று அவரிடம் பேசியபோதுதான்,
கோகுல்ராஜை ஒரு கும்பல்
கடத்திச்சென்றது தெரிய வந்தது.

 

இதுகுறித்து சுவாதியையும்
அழைத்துக் கொண்டு கோகுல்ராஜின்
தாயாரும், உறவினர்களும் திருச்செங்கோடு
காவல் நிலையத்தில் புகார் அளிக்கச்
சென்றனர். அன்று மாலையில்,
கிழக்கு தொட்டிப்பாளையம் என்ற
இடத்தில் ரயில் தண்டவாளத்தில்
கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட
நிலையில் இறந்து கிடப்பதாக தகவல்
கிடைக்கவே சித்ரா அதிர்ந்து போனார்.
ரயில் தண்டவாளத்தில் சடலம்
தலைகுப்புற கிடந்தது.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி. இவர், கோகுல்ராஜூன் ஒன்றாக படித்து வந்தவர். வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம் நெருங்கிப் பழகி வந்தனர்.

 

அவர்கள் இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் ஒன்றாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 7 பேர், சுவாதியையும் கோகுல்ராஜையும் மிரட்டியுள்ளனர்.

 

சுவாதியிடம் இருந்து அவருடைய செல்போனை பறித்துக்கொண்ட அந்த கும்பல், எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டனர். அதேநேரம், கோகுல்ராஜை வலுக்கட்டாயமாக தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். யுவராஜ் சென்ற காரில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்று எழுதப்பட்டு இருந்தது.

 

இதையெல்லாமே சுவாதிதான் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இந்த தகவல்களின் அடிப்படையில் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர் காவல்துறையினர்.

 

யுவராஜ் தவிர்த்த மற்றவர்களை எளிதில் கைது செய்துவிட்டாலும், அவரை மட்டும் தூக்குவதில் ஆரம்பத்தில் காவல்துறையின் ரொம்பவே சிரமப்பட்டனர். ஆனால் யுவராஜோ, ஊடகங்களுக்கு வீடியோ, ஆடியோ மூலம் பேட்டி கொடுத்து, காவல்துறை கண்களில் விரலை விட்டு ஆட்டினார். பின்னர் அவரே அப்போதைய திருச்செங்கோடு காவல்துறையினர் முன்னிலையில் ஆஜராகினார்.

இது ஒருபுறம் இருக்க,
ஆரம்பத்தில் இந்த வழக்கை
விசாரித்து வந்த திருச்செங்கோடு
டிஎஸ்பி விஷ்ணுபிரியா திடீரென்று
தனது கேம்ப் அலுவலகத்திலேயே
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போதைய நாமக்கல் எஸ்பி கொடுத்த
அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை
செய்து கொண்டதாக சர்ச்சைகள் கிளம்பின.

 

இதையடுத்து
இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு
மாற்றப்பட்டது. பிடிபட்டவர்களிடம்
விசாரணை நடத்தியதில், பட்டியல் சாதியைச்
சேர்ந்த கோகுல்ராஜ், தாங்கள் சார்ந்த
வெள்ளாள கவுண்டர் சமூக பெண்ணை
காதலித்தது பிடிக்காததால்
அவரை தீர்த்துக் கட்டினோம் என்று
வாக்குமூலம் அளித்து இருந்தனர்.

 

சம்பவத்தன்று கோகுல்ராஜை கடத்திச்சென்று சங்ககிரி அருகே உள்ள ஒருக்காமலையில் இருந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்ய முயன்றுள்ளனர்.

 

அதன்பிறகு திட்டத்தை மாற்றிய
அவர்கள் கோகுல்ராஜை மிரட்டி,
காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்து
கொள்வதாக தற்கொலை வாக்குமூலம்
ஒன்றை செல்போன் வீடியோல் பதிவு
செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் அவரை
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு
அழைத்துச் சென்று ஒரு துணியால்
கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளனர்.

 

அவர் இறந்து விட்டாரா என்பதில்
சந்தேகம் அடைந்த அவர்கள் கத்தியால்
கழுத்தை ஆடு அறுப்பது போல் அறுத்துள்ளனர்.
பின்னர் சடலத்தை கிழக்கு தொட்டிப்பாளையம்
அருகே ரயில் தண்டவாளத்தில்
போட்டுவிட்டு தப்பிச்சென்று
விட்டது தெரிய வந்தது.

 

இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோர் மீது
725 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டது. 74 சாட்சியங்கள் குறியீடு
செய்யப்பட்டு இருந்தன.

 

வழக்கில் சாட்சி விசாரணை,
நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்
நீதிபதி இளவழகன் முன்னிலையில்
30.8.2018ம் தேதி முதல் தொடங்கியது.

 

கைது செய்யப்பட்டவர்களில்
சந்திரசேகரும், ஜோதிமணியும்
கணவன், மனைவி ஆவார்கள்.
குடும்பத் தகராறில் சந்திரசேகர்,
அவருடைய மனைவியை சுட்டுக்
கொன்றுவிட்டார். அதேபோல்,
வழக்கில் கைது செய்யப்பட்ட
அமுதரசு என்பவர் பிணையில்
சென்றிருந்தபோது தலைமறைவாகிவிட்டார்.
அதனால் யுவராஜ் உள்ளிட்ட 15 பேர் மட்டுமே
தொடர்ந்து விசாரணைக்கு
ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

ஆரம்பத்தில் இந்த வழக்கில் கோகுல்ராஜ் தரப்பில் சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி ஆஜராகி வந்தார். யுவராஜ் தரப்பில் மதுரையைச் சேர்ந்த ஜிகே என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ ஆஜாரானார்.

 

வழக்கு விசாரணையில் திருப்தி இல்லாததால், கோகுல்ராஜ் தரப்பில் மூத்த வழக்கறிஞரான பவானியைச் சேர்ந்த மோகனை ஆஜராகக் கோரி அவருடைய தாயார் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து ப.பா.மோகனை அரசுத்தரப்பு வழக்கறிஞராக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அவர் வந்த பிறகுதான், பிறழ் சாட்சியம் அளித்த சுவாதியை மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். பிறழ் சாட்சியம் அளித்த குற்றத்திற்காக அவர் மீது தனியாக வழக்கும் தொடரப்பட்டது.

 

அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருந்து 23.6.2015ம் தேதியன்று பதிவான சிசிடிவி கேமரா, டிவிஆர்., செல்போன்கள் ஆகியவற்றை வெறும் மெட்டீரியல் ஆப்ஜெக்ட் ஆக மட்டுமே பதிவு செய்திருந்த நிலையில், அவற்றை ஆவண சாட்சியங்களாக குறியீடு செய்ய வேண்டும் என்று வாதாடி, அதன்படி குறியீடும் செய்ய வைத்தார். ப.பா.மோகன் வருகைக்குப் பிறகு இப்படியான திருப்பு முனைகளும் நடந்தன.

இதற்கிடையே, அரசுத்தரப்பு சாட்சிகள், யுவராஜ் தரப்பினரால் மிரட்டப்படலாம் என்பதால் வழக்கின் விசாரணையை சேலம் அல்லது ஈரோடு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி ப.பா.மோகன் தரப்பில் கோரப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றம், மதுரை மாவட்ட எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டது.

 

இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள்
சேர்க்கப்பட்டு இருந்தனர். நாமக்கல்
நீதிமன்றத்தில் 70 சாட்சிகளிடம் விசாரணை
முடிந்திருந்த நிலையில், மதுரை
சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
அங்கும் தொடர்ந்து சாட்சிகளிடம்
விசாரணை நடந்தது.

 

இருதரப்பிலும் விசாரணை,
குறுக்கு விசாரணைகள் முடிந்ததை அடுத்து,
மார்ச் 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று
மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார்
அறிவித்தார். அதன்படி, சனிக்கிழமை
(மார்ச் 5) இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தார்.

 

முதல் குற்றவாளியான யுவராஜ்,
கார் ஓட்டுநர் அருண், குமார், சதீஸ்குமார்,
ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகர், பிரபு,
கிரி என்கிற கிரிதர் ஆகிய 10 பேரும்
குற்றவாளிகள் என நீதிபதி சம்பத்குமார்
தீர்ப்பு அளித்துள்ளார். இவர்கள் மீது
குற்றமுறு சதி, கொலை, ஆள்கடத்தல்,
வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகள்
நிரூபணம் ஆகியுள்ளன என்று
தெரிவித்துள்ளார்.

 

மேலும், யுவராஜின் தம்பி தங்கதுரை
மற்றும் சங்கர், அருள் செந்தில், செல்வகுமார்,
சுரேஷ் ஆகிய 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள்
நிரூபிக்கப்படாததால் அவர்களை
விடுதலை செய்வதாகவும்
நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

 

குற்றவாளிகளுக்கு மார்ச் 8ம் தேதி
தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும்
என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

குற்றமுறு சதி, கொலை, ஆள்கடத்தல்,
வன்கொடுமை குற்றங்களின் கீழ் குற்றங்கள்
சந்தேகத்திற்கு இடமின்றி
நிரூபிக்கப்பட்டுள்ளதால்,
10 பேருக்கும் இரட்டை ஆயுள்
அல்லது மரண தண்டனையே
கிடைத்தாலும் வியப்பதற்கில்லை.

 

இதுகுறித்து அரசுத்தரப்பு வழக்கறிஞர்
ப.பா.மோகன் கூறுகையில்,
”கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில்
அரசுத்தரப்பில் முக்கிய சாட்சியாக
சேர்க்கப்பட்டிருந்த சுவாதி,
சிஆர்பிசி பிரிவு 164ன் கீழ்
மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில்
தானும் கோகுல்ராஜூம் அர்த்தநாரீஸ்வரர்
கோயிலுக்குச் சென்றோம் என்றும்,
சிறைச்சாலையில் நடந்த அடையாள
அணிவகுப்பில் யுவராஜின் கார் ஓட்டுநர்
அருண் என்பவரை நேரில் பார்த்து
அடையாளம் காட்டியதாகவும்
வாக்குமூலம் அளித்திருந்தார்.

 

அப்படிப்பட்ட சுவாதியே,
திடீரென்று பிறழ் சாட்சியம்
அளித்து விட்டார். அர்த்தநாரீஸ்ரவர் கோயிலில்
இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவில்,
கோகுல்ராஜூன் தான் சென்றதையே
நீதிமன்ற விசாரணையின்போது அடியோடு
மறுத்துவிட்டார். ஆனாலும், இந்த வழக்கில்
சூழ்நிலை ஆதாரங்கள் அனைத்தும் யுவராஜ்
தரப்புக்கு எதிராக இருந்தது.
மேலும், அர்த்தநாரீஸ்வரர் கோயிலில்
கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளை
விஞ்ஞான ரீதியிலும் ஆய்வுக்கு உட்படுத்தி,
கோகுல்ராஜூடன் சென்றது சுவாதிதான்
என்பதை உறுதிப்படுத்தினோம்.

அதனால்தான் இந்த வழக்கில்
வெற்றி பெற முடிந்தது. யுவராஜ் உள்ளிட்ட
பத்து பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம்
அறிவித்து இருக்கிறது. தண்டனை விவரங்கள்
மார்ச் 8ம் தேதி அறிவிக்கப்படும்.
விடுதலை செய்யப்பட்ட 5 பேரை எதிர்த்து
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து,
அவர்களுக்கும் தண்டனை
வாங்கித் தரப்படும்,” என்றார்.

 

சேலம் சந்தியூர் பார்த்திபன்
வழக்கறிஞரும் உடன் இருந்தார்.

 

– பேனாக்காரன்