தவெக கட்சியையும், இந்த அரசையும் ‘ரீல்ஸ் கட்சி’, ‘ரீல்ஸ் அரசாங்கம்’ என விமர்சனங்கள் கிளம்பி வரும் நிலையில், ‘ரீல்ஸ் புகழ்’ அமைச்சர் கீர்த்தனா, சட்டப்பேரவையில் குறிப்பிட்டுப் பேசிய ஒரு தகவல், பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் ஆக. 25ஆம் தேதி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானியக்கோரிக்கைகள் தொடர்பாக அத்துறை அமைச்சர் கீர்த்தனா, அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர் தனது பேச்சை நிறைவு செய்வதற்கு முன்னதாக ஒரு தகவலைக் கூறினார். அதாவது…
”சின்னபிள்ளைன்ற மதுரை மாவட்டத்தில் ஒருத்தவங்க இருந்தாங்க. அவங்க வந்து ஓரிங்… ஹைட்ரோகுளோரிக் சிஸ்டத்த வந்து ஆயில் லீக் ஆகாம இருக்கறதுக்கு அந்த ஒரு இத வந்து கண்டுபிடிச்சாங்க. எம்எஸ்எம்இ&இல் இருக்கற… ஒரு எஸ்.ஹெச்.ஜி.யில் மதுரையில் இருக்கற ஒரு பெண்மணி அதை பண்ணிட்டு இருந்தாங்க. அப்பவே வந்து வாஜ்பாய் அவர்கள் அவங்க வீட்டுல போய் அவங்களுடைய காலில் விழுந்து கும்பிட்டு இருந்தாங்க,” என்று கூறினார் அமைச்சர் கீர்த்தனா.
இதற்கும், தற்குறி அரசின் அமைச்சர்கள் வழக்கம்போல் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். கீர்த்தனாவின் பேச்சில் இருந்த உண்மைத் தன்மை குறித்து அவையில் இருந்த பாஜக எம்எல்ஏ கூட எதுவும் பேசாமல் இருந்தார். ஒருவேளை, அவருக்கும் மதுரை சின்னபிள்ளை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம். அல்லது, நடப்பது பாஜகவின் ‘பிராக்ஸி’ அரசாங்கம்தானே என்று கருதி, விஜய் போல கம்முனு இருந்திருக்கலாம்.
கீர்த்தனாவின் பேச்சில் இருக்கும் பச்சைப்பொய் என்ன? என்பதை பின்னர் பார்ப்போம். முதலில் யார் அந்த மதுரை சின்னபிள்ளை என்பதை தெரிஞ்சுக்கலாம் வாங்க…

மதுரை மாவட்டம் அழகர்கோயில் பில்லுச்சேரி கிராமம்தான் மூதாட்டி சின்னபிள்ளையின் சொந்த ஊர். மதுரையில் பிரபல தொண்டு நிறுவனமான ‘தான் பவுண்டேஷன்’ மேற்பார்வையில் இயங்கி வரும் ‘களஞ்சியம்’ என்ற மகளிர் சுய உதவிக்குழுவில் தீவிரமாக இயங்கி வந்தார், சின்னபிள்ளை. கிராமப்புற பெண்களிடம் சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை கந்து வட்டிக் கொடுமையில் இருந்தும், வறுமையின் பிடியில் இருந்தும் மீட்டெடுத்திருக்கிறார்.
களஞ்சியம் அமைப்பில் உள்ள ஒவ்வொரு குழுவின் தலைவிகளின் பணியும் இதுதான். மூதாட்டி சின்னபிள்ளை சிறப்பாக அந்தப் பணிகளைச் செய்ததால் கவனிக்கத்தக்க நபராகத் திகழ்ந்தார்.
சேலத்தில் இயங்கி வரும் களஞ்சியம் அமைப்புடன் எனக்கு நேரடி தொடர்பு உண்டு. அந்த நிறுவனத்தால் வறுமையில் இருந்து மீண்ட பெண்களின் வெற்றிக் கதைகளைத் தொகுத்து 4 நூல்கள் எழுதியிருக்கிறேன். கடைசியாக மதுரை சின்னபிள்ளை அம்மாவை கடந்த 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நேரில் சந்தித்து இருக்கிறேன்.
ஏதோ ஒரு சிறு கிராமத்தில் பிறந்து, படிப்பு வாசனையே இல்லாத ஒரு பெண், கிராமப்புற பெண்களிடம் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, சுயதொழில் முனைவோராக உருவாக்கிய அளப்பரிய சேவையைக் கேள்விப்பட்டு நெகிழ்ந்து போனார் அப்போதைய பிரதமர் வாஜ்பாய். 2001ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த விழாவில் சின்னபிள்ளைக்கு ‘ஸ்திரீ ஷக்தி புரஸ்கார்’ விருது வழங்கி கவுரவித்தார் வாஜ்பாய்.
அதே மேடையில், சின்னபிள்ளையின் காலில் விழுந்து வணங்கினார். தன்னை விட வயதில் குறைந்த பெண்ணின் காலில் பிரதமரே விழுந்து வணங்கிய சம்பவம் அப்போது தலைப்புச் செய்திகளானது. கடந்த 2019ஆம் ஆண்டில் சின்னபிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்த மதுரை சின்னபிள்ளை அம்மாவைதான், ஜி.டி.நாயுடு ரேஞ்சுக்கு ‘ஓரிங்’ கண்டுபிடித்தார்… ஹைட்ரோகுளோரிக் சிஸ்டத்தை கண்டுபிடித்தார்… வாஜ்பாய் அவருடைய வீட்டிற்கே சென்றார்… எலான் மஸ்குடன் ஒப்பந்தம் போட்டார்… என்றெல்லாம் சட்டப்பேரவையில் பேசுகிறோம் என்பதையே மறந்துவிட்டு, வழக்கம்போல் கலர் கலராக ரீல்களை விட்டிருக்கிறார் நம்ம கீர்த்து.
‘உனக்கு என்னப்பா… பைத்தியம். என்ன வேணும்னாலும் பேசுவ…’ என்று மீம்ஸ் கிரியேட்டர்களும் அவரை சமூக ஊடகங்களில் வெளுவெளுவென வெளுத்து வருகின்றனர். ஒரு மனுஷன் பொய் பேசலாம். அதுக்காக ஏக்கர் கணக்குலயா பேசறது…
‘அதுல பார்த்தீங்கண்ணா…’ என்று வி.கே.ராமசாமி போல ஆரம்பித்துச் சொல்ல வேண்டுமானால், ஹைட்ராலிக் சிஸ்டத்தில் எண்ணெய்க் கசிவைத் தடுப்பதற்காக ‘ஓரிங்’ என்ற உபகரணம் பயன்படுத்தப்படும். இந்த ‘ஓரிங்’ உபகரணம் சின்னபிள்ளை பிறப்பதற்கு முன்பு இருந்தே பயன்பாட்டில் இருக்கிறது. கீர்த்துவுக்கு ஹைட்ராலிக் சிஸ்டமும் தெரியவில்லை; ஹைட்ரோகுளோரிக் சிஸ்டமும் தெரியவில்லை. ஹைட்ராலிக் என்பதை ஹைட்ரோகுளோரிக் என்றுதான் பேரவையில் குறிப்பிட்டார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டி சின்னபிள்ளைக்கு வசிப்பதற்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என்ற தகவலை அறிந்து, கடந்த 2024இல், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்குக் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கிக் கொடுத்தார். தற்குறி அரசு, அதை வெற்றி வீடு திட்டமாக ஸ்டிக்கர் ஒட்டியது வேறு கதை.
பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன், அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்ட சம்பவத்தின் உண்மையான பின்னணி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

எக்ஸ் தளத்தில் ஒருவர், ‘இதற்குத்தான் படித்துப் பார்த்து புரிந்து கொண்டு பேச வேண்டும். வாய்க்கு வந்ததை எல்லாம் உளறக்கூடாது,’ என்று விருதை மகளை லேசாக வறுத்தெடுத்திருக்கிறார்.
மற்றொருவர், ‘இந்தப் பெண் ஏதேதோ உளறுகிறார். தமிழும் முழுமையாகத் தெரியவில்லை. ஆங்கிலமும் சரியாகப் பேசுவதில்லை. மோசமான ஜென் ஸீ தலைமுறையைச் சேர்ந்த பெண். இவருக்கு, ஹைட்ராலிக் மற்றும் ஹைட்ரோகுளோரிக் ஆகிய இரண்டிற்கும் வேறுபாடு தெரியவில்லை. தொழில்துறை, சிறு, குறு தொழில்துறையும், மகளிர் சுய உதவிக்குழுக்களும் எப்படி சேர்ந்து பணியாற்றி தொழில்வளத்தைப் பெருக்க முடியும்? இதெல்லாம் விஜயின் ஐடியா. கடவுள்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்,’ என்று பதிவிட்டுள்ளார்.
கீர்த்தனா மட்டுமின்றி, பல அமைச்சர்களும் தவறான தரவுகளுடன் சட்டப்பேரவையில் பேசுவதைக் காண முடிகிறது. துணிச்சலாக பொய் பேசுகின்றனர். அவற்றை உடனுக்குடன் திமுக, அதிமுக கட்சி எம்எல்ஏக்கள் சுட்டிக்காட்டிய பிறகு மன்னிப்புக் கோருவதையும் தற்குறி அரசின் அமைச்சர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
- பேனாக்காரன்
