Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

துணை வேந்தர் கணபதி மீது குவியும் புகார்கள்; கட்டப்பஞ்சாயத்து ரவுடிபோல் மிரட்டியது அம்பலம்!

பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்ததாக 20 பேர் புதிதாக லஞ்ச ஒழிப்புப்பிரிவில் புகார்கள் அளித்துள்ளனர். மேலும், உதவி பேராசிரியர் சுரேஷை கட்டப்பஞ்சாயத்து ரவுடிபோல் பணம் கேட்டு கடுமையாக மிரட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை பாரதியார் பல்கலை துணை வேந்தராக பணியாற்றி வந்த கணபதியை, கடந்த 3ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரை பணி நியமனம் செய்வதற்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.

இதையடுத்து, அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கணபதிக்கு தரகு வேலை பார்த்ததாக பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். மற்றொரு பேராசிரியர் மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

கணபதி, தர்மராஜ் ஆகியோர் ஜாமின் கேட்டு கோவை மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் மனு மீது கடந்த 6ம் தேதி விசாரணை நடந்தபோது, 8ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் அவர்களின் மனு விசாரணைக்கு வந்தது.

”பாரதியார் பல்கலையில் பணி நியமனங்களில் ஏராளமாக முறைகேடுகள் நடந்துள்ளதால், அதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதனால் இவர்களை இப்போதைக்கு ஜாமினில் விடுவிக்கக் கூடாது,” என கோவை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறை தரப்பில் கடுமையாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கணபதி மற்றும் தர்மராஜ் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்து நீதிபதி ஜான் மினோ உத்தரவிட்டார்.

கைதுக்கு காரணகர்த்தாவான சுரேஷ், கடந்த 2016ம் ஆண்டு வேதியியல் துறை உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அப்போதே அவரிடம் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு ரூ.40 லட்சம் பேரம் பேசப்பட்டுள்ளது. பிறகு துணை வேந்தர் கணபதியை, சுரேஷ் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் பணி நியனம் செய்யப்படும் என்று பேரத்தை முடித்துள்ளனர்.

ஆனால், உதவி பேராசிரியர் பணிக்கான நேர்முகத்தேர்வில் சுரேஷ் ‘மெரிட்’ அடிப்படையிலேயே வெற்றி பெற்றதால், பேசியபடி பணத்தைக் கொடுக்காமல் சாக்குபோக்கு சொல்லி வந்துள்ளார். அப்போது துணை வேந்தர், ”என்னதான் நேர்முகத்தேர்வு முடிந்தாலும், உன்னுடைய இடத்தில் பணம் கொடுத்த வேறு நபரை நியமிப்பதற்கான அதிகாரம் என்னிடம் இருக்கிறது. அதனால் சொன்னபடி பணத்தைக் கொடுத்துவிடுங்கள்,” என்று மிரட்டியுள்ளார்.

இதனால் வேறு வழியின்றி சுரேஷ் அப்போது ஒப்புக்கொண்டு, கால அவகாசம் கேட்டார். அதன்பிறகும் அவர் லஞ்சம் தராமல் காலம் கடத்தியபோது, மீண்டும் துணைவேந்தர் கணபதி அவரை அழைத்துப் பேசினாராம். அப்போது சுரேஷ், ”என்னிடம் இப்போது அவ்வளவு பெரிய தொகை இல்லை. விவசாய நிலம் மட்டுமே இருக்கிறது,” என்று கூறியிருக்கிறார்.

அதற்கு துணை வேந்தர் கணபதி, ”உன்னிடம் இருக்கும் நிலத்தை விற்றாவது பணத்தைக் கொடுத்துவிடு. நானும் பலருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் நீயே பணியை ராஜிநாமா செய்துவிட்டு ஓடிவிடும் நிலைக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்போம்,” என்றும் உளவியல் ரீதியாக மிரட்டியுள்ளார்.

அதன்பிறகே உதவிப்பேராசிரியர் சுரேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையை அணுகியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. துணைவேந்தர் தன்னை எப்படியெல்லாம் மிரட்டினார் என்பது குறித்து சுரேஷ் காவல்துறையில் எழுத்து மூலமாக மேற்கண்ட தகவல்களை புகாராக அளித்துள்ளார்.

கணபதி, பாரதியார் பல்கலையில் துணை வேந்தராக பொறுப்பு ஏற்றதில் இருந்து, பல்கலை மற்றும் உறுப்புக்கல்லூரிகளில் 82 பணி நியமனங்களுக்கு உத்தரவிட்டிருப்பது தெரியவந்துள்ளது. எல்லா பணி நியமனங்களிலும் 30 லட்சம் முதல் 45 லட்சம் ரூபாய் வரை பணம் கைமாறியிருக்கலாம் என்றும், இதன்மூலமாக சுமார் 30 கோடி ரூபாய் வரை லஞ்சம் புழங்கியிருக்கலாம் என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணையை நடத்தி வருகிறது.

இப்போது, கணபதி மீது மேலும் 20 பேர் புதிதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார்கள் அளித்துள்ளனர். இன்னும் சில நாள்களில், புகார்தாரர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

கல்வியாளராக இருக்க வேண்டிய துணைவேந்தர் ஒருவரே கட்டப்பஞ்சாயத்து ரவுடிபோல பணம் கேட்டு மிரட்டியிருப்பது உயர்கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.