Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

3-வது ஒருநாள்: சுழல் பந்து வீச்சுக்கு இரையானது தென்னாப்பிரிக்கா; இந்தியா ஹாட்ரிக் வெற்றி

கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்கா உடனான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், விராட் கோலியின் அசத்தலான சதம் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்கள் தாக்குதலால் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் நேற்று (பிப்ரவரி 7, 2018) நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார்.

ஆறு போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளதால், இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை.

அதேசமயம், தென்னாப்பிரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விக்கெட் கீப்பராக ஹெய்ன்ரிச் கிளாசீன் என்பவரும், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள லுங்கி நிகிடியும் முதல் முறையாக தென்னாப்பிரிக்க ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இப்போட்டியிலும், இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா சொதப்பினார். 6 பந்துகளை சந்தித்த ரோஹித், ரன் ஏதும் எடுக்காமல் ரபாடா பந்தில் இன்சைட் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரோஹித் ஷர்மா பெவிலியன் திரும்பியதை அடுத்து, ஷிகர் தவானுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார்.

இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அரை சதம் கடந்தனர்.

ஷிகர் தவான் 63 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், 12 பவுண்டரிகள் அடங்கும். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்து, நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. 2000-2001ம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த இணை எடுத்ததுதான் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

விராட் கோலியுடன், அஜின்க்யா ரஹானே ஜோடி சேர்ந்தார். ரஹானே 11 ரன்களில் ஆட்டமிழந்து, ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா (14 ரன்), விக்கெட் கீப்பர் தோனி (10 ரன்), கேதர் ஜாதவ் (1 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

ஒரு முனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் விராட் கோலி. அவர் 119 பந்துகளில் தனது 34வது சதத்தை அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார்.

கடைசிக்கட்டத்தில் புவனேஷ்வர்குமார் (16 ரன்) ஓரளவு கைகொடுக்க, இந்திய அணியின் ஸ்கோர் 300 ரன்களைக் கடந்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது.

கேப்டன் விராட் கோலி 160 ரன்களுடனும் (159 பந்து, 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), புவனேஸ்வர்குமார் 16 ரன்களுடனும் (1 பவுண்டரி) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் டுமினி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹஷிம் ஆம்லா 1 ரன்னில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். பும்ராவின் துல்லிய வேகத்தில் அவர் பெவிலியன் திரும்பினார்.

இந்த தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வரும் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் கூட்டணி இந்தப் போட்டியிலும் சுழல் மாயாஜாலங்களை நிகழ்த்திக் காட்டினர்.

சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து நடையைக் கட்டினர். அதிகபட்சமாக டுமினி 51 ரன்களும், கேப்டன் மார்க்ராம் 32 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, தோல்வி அடைந்தது.

இதன்மூலம் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை அபாரமாக வீழ்த்தியது. இந்திய தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

6 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வென்று ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.