கண்ணு போச்சு; மாரடைப்பு வந்துச்சு; தீர்வுதான் கிடைக்கல!
அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு கண்ணில் பார்வை பறிபோயும், மாரடைப்பில் பாதி உயிரை இழந்தும் தவித்து வருகிறார் ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர் ஒருவர். வெறும் 1500 பென்ஷனுக்காக ஆண்டுக்கணக்கில் முதியவரை அலைக்கழிக்கும் அவலம் சேலத்தில் நடந்து வருகிறது.
ஊழல் செல்லரித்துப்போன அரசு அதிகாரிகளால், நொந்து நூலான சாதாரண சத்துணவு ஊழியரின் கதை இது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நிர்வாகச் சீர்கேடுக்கு இச்சம்பவம் ஒரு சான்று.
சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (61). பனமரத்துப்பட்டி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். சக ஊழியர் இல்லங்களில் நடக்கும் திருமணம் போன்ற விசேஷங்களில் சத்துணவு ஊழியர்கள் கூட்டாக சேர்ந்து நிதி திரட்டி, பரிசுப் பொருட்கள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
தம்மநாயக்கன்பட்டி வட்டார சத்துணவு ஊழியர் அமிர்தவள்ளியின் மகன் திருமணத்திற்காக, சத்துணவு அமைப்பாளர்கள் எல்லே ரும் சேர்ந்து ரூ.3950 நிதி திரட்டினர். இந்த பணத்தை, அன்பழகன் என்ற அமைப்பாளர் வசூலித்து, அதை ஜெகநாதன் என்ற சத்துணவு அமைப்பாளரிடம் கொடுத்து வைத்திருந்தார்.
பனமரத்துப்பட்டி ஒன்றிய சத்துணவுத் திட்ட மேலாளர் முத்துசாமிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக சத்துணவு ஊழியர்கள் எல்லோரும் சேர்ந்து 10.8.2010ம் தேதியன்று பணம் வசூலிக்க இருப்பதாகவும், அன்றைய தினம் பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தால் கையும் களவுமாக பிடித்து விடலாம் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முன்கூட்டியே புகார் ஒன்று சென்றிருந்தது. அதேபோல் அன்றைய தினம் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஜெகநாதனை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்த ரூ.3950 பறிமுதல் செய்யப்பட்டது.
அலுவலகத்திற்குள் இருந்த கணேசன், வெளியே வந்து நடந்த சம்பவங்கள் பற்றி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் விசாரித்தார். என்ன காரணத்திற்காக பணம் வசூலிக்கப்பட்டது என்பதையும் விளக்கினார். ஆனால், பூனையை புலி என்று சொல்லியே பழக்கப்பட்ட போலீசார் ஏற்பார்களா? முத்துசாமிக்கு லஞ்சம் கொடுக்கத்தான் பணம் வசூலிக்கப்பட்டதாக எழுதி, அங்கிருந்த சில சத்துணவு ஊழியர்களிடம் கையெழுத்தும் பெற்றுக் கொண்டனர்.
இதற்கிடையே முத்துசாமி, ‘கணேசன் இங்கிருந்தால் குட்டையைக் குழப்பி விடுவார். அதனால் அவரை இடமாற்றம் செய்து விடுவது நல்லது,’ என்று அப்போதைய பிடிஓ செட்டிகவுண்டருக்கு அழுத்தம் கொடுக்கிறார். யாருடைய அ-ழுத்தமோ தெரியாது. அடுத்த சில நாள்களில் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் இருந்து மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்கு கணேசன் மாறுதல் செய்யப்பட்டார். மூன்று பேருந்து மாறி செல்ல வேண்டியிருப்பதால், சேலம் அருகில் மாறுதல் வழங்கும்படி கணேசன் பலமுறை கெஞ்சியும் சத்துணவுத்திட்டத்துறை கண்டுகொள்ளவில்லை.
பின்னர் அவர், அப்போது அதிமுக எம்பியாக இருந்த செம்மலையின் கவனத்திற்கு இப்பிரச்னையை கணேசன் கொண்டு சென்றார். அவருடைய பரிந்துரையின்பேரில் மகுடஞ்சாவடியில் இருந்து சேலம் அழகாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டார் கணேசன்.
இந்நிலையில் அன்பழகன் (அதாங்க, பணம் வசூலித்தாரே ஒருவர். அவரேதான்) கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெறும் நேரம் வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறையில் அவர் மீதான புகார் நிலுவையில் இருக்கும்போது ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டுமே. விழித்துக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை, சத்துணவுத்திட்ட துறைக்கு கடிதம் எழுத, ஓய்வு பெறுவதற்கு ஓரிரு நாள் முன்னதாக அதாவது, 27.6.2014ம் தேதி அன்பழகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருடன் கணேசன், ஜெகநாதன் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அரசு ஊழியர் மீது குற்றச்சாட்டு குறிப்பாணை வந்த பிறகே, சஸ்பெண்ட் செய்யப்படுவது மரபு. ஆனால் கணேசன் விவகாரத்தில் எல்லாமே உல்டா. அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதும், குறிப்பாணை கொடுக்கப்படுவதும் ஒரே நாளில்தான். சத்துணவு மையங்களில் ஏற்படும் குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மேலாளர் முத்துசாமிக்கு மாமூல் என்ற பெயரில் பணம் வசூலித்தது, சத்துணவுத்திட்டத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தது, மாவட்ட நிர்வாகத்தின் நற்பெயருக்கு குந்தகம் விளைவித்தது என மூன்று குற்றச்சாட்டுகள் கணேசன் மீது சொல்லப்பட்டது. 7 நாட்களுக்குள் விளக்கமும் கோரப்பட்டது.
இதையடுத்து கணேசனிடம் விசாரணை நடந்தது. 35க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதில், பின்வருமாறு ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. அதில், ”கணேசன், பணம் வசூல் செய்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை; சத்துணவுத் திட்டத்திற்கு எவ்வித களங்கத்தையும் ஏற்படுத்தவில்லை; பறிமுதல் செய்யப்பட்ட தொகை கையூட்டு கொடுப்பதற்காக வசூலிக்கப்படவில்லை. அவர் மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகவில்லை,” என்று சொல்லப்பட்டு உள்ளது.
இப்படி ஒரு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் கணேசனின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படவில்லை. இரண்டு மகள்கள், ஒரு மகன், சொற்ப ஊதியம் (அதுவும் இப்போது இல்லை), வாடகை வீடு என்று கஷ்ட ஜீவனம் நடத்தி வரும் கணேசனுக்கு, அதிகாரிகளின் அலட்சியம் பேரிடியாய் இருந்தது. அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் நிலையும் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். கணேசன் விவகாரத்தில் நான்கு வார காலத்திற்குள் உரிய நடவடி க்கை எடுக்கும்படி கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத பிரதமர் உள்ள நாட்டில், உயர்நீதிமன்ற உத்தரவை ஆட்சியர் மட்டும் மதித்து விடுவாரா என்ன?
ஒருவழியாக, 2016, ஜூன் 15ம் தேதியன்று கணேசனை அழைத்து சத்துணவுத்துறை விசாரித்தது. அவரிடம் 24.4.2016ம் தேதியன்றே விசாரணை நடத்தப்பட்டதாக கையெழுத்தும் பெற்றுக்கொண்டனர். இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு பாயுமே என்ற முன்ஜாக்கிரதைதான். அப்போது அவர்கள் விசாரணை நடத்தியதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில், அதற்கு அடுத்த மாதம் அவர் பணி ஓய்வு பெற உள்ளார்.
அதன்பிறகு, 30.9.2016ம் தேதி மாலை 4 மணியளவில், அதாவது கணேசன் ஓய்வு பெறும் நாளில், அவரை நங்கவள்ளி ஒன்றியத்தில் உள்ள ஒரு பள்ளியைக் குறிப்பிட்டு, அந்தப்பள்ளியில் பணியில் சேர்ந்து, உடனடியாக விடுவிப்பு உத்தரவு பெற்று வருமாறும் தகவல் சொல்லப்படுகிறது. இந்த தகவல், மாவட்ட சத்துணவுத்துறையில் தற்காலிக ஊழியர் ராஜேஷ் என்பவர் மூலம் செல்போன் வாயிலாக கணேசனுக்குச் சொல்லப்பட்டது. அப்போது கணேசன், இருதய நோய் நிபுணர் பாரதிதாசனிடம் உடல்நல பரிசோதனைக்காக சென்றிருந்தார்.
”சத்துணவு அமைப்பாளர் பணி நேரம் மதியம் 2 மணியுடன் முடிந்து விடும். சேலத்தில் இருந்து நங்கவள்ளிக்கு செல்வதற்கே 2 மணி நேரம் ஆகும். அதுமட்டுமில்லாமல், அழகாபுரம் பள்ளியில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாதபோது, எப்படி அங்கு பணியில் சேர முடியும்?. பென்ஷனுக்காக ஒவ்வொரு மாதமும் நங்கவள்ளிக்கு ஓடிக்கொண்டிருக்க முடியுமா? எனக்கு உதவி செய்கிறீர்களா அல்லது உபத்திரம் செய்கிறீர்களா?,” என்று கேட்டுவிட்டு, அந்த பணி ஏற்பு உத்தரவை ஏற்க மறுத்துவிட்டார், கணேசன்.
அதற்கு அடுத்த நாள் (அக்டோபர் 1, 2016), தாதகாப்பட்டி விஏஓ, நங்கவள்ளி ஒன்றிய கிளர்க் மோகன் ஆகியோர் கணேசன் வீட்டிற்கு வந்து செல்போனில் வீட்டின் முகப்பை புகைப்படம் எடுத்தனர். மேலும், பணி நியமன உத்தரவை ஏற்கவில்லை என்று அவரிடம் ஒப்புதல் கடிதமும் எழுதி பெற்றுச்சென்றனர். அதனடிப்படையில் கணேசனை, ஓய்வு பெற அனுமதிக்க இயலாத நிலை உள்ளதால், அவருடைய தற்காலிக பணிநீக்கம் தொடர்வதாக (முன்னாள்) மாவட்ட ஆட்சியர் சம்பத் உத்தரவிட்டார்.
இதன்பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், குற்றச்சாட்டு நிரூபணமாகாத போதும் 27 மாதங்கள் (27.6.2014 முதல் 30.9.2016 வரை) பணி வழங்காமல் இழுத்தடித்ததால், அந்த காலக்கட்டத்திற்கு உரிய ஊதியம் வழங்கக்கோரியும், ஓய்வுக்கால பலன்களை வழங்கக்கோரியும் கணேசன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதன் மீது உரிய தீர்வு காணும்படி, கடந்த ஜனவரி மாதம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக மக்கள் குறைதீர்க்கும் முகாமிலும் அவர் கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம், சேலம் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பொது சேமநல நிதி ரூ.60 ஆயிரம், சிறப்பு நிதி ரூ.15 ஆயிரம் கிடைக்கும் என்று கணேசனுக்கு தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது. பென்ஷன் சுமார் ரூ.1500 கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர். அதன்பின், இரண்டு மாதம் கடந்த நிலையில் இன்னும் அவருக்கு தீர்வுதான் கிடைத்தபாடில்லை.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 50க்கும் மேற்பட்ட முறை நடையாய் நடந்துவிட்டார். இப்போது அவருக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோய்விட்டது. ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ள நிலையில், க டும் மன உளைச்சலில் ஆளாகி இருக்கிறார் கணேசன்.
நமது கேள்விகள் இவைதான்…
1) உயர்நீதிமன்றம் நான்கு வார காலத்திற்குள் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஜனவரியில் உத்தரவிட்டும், அந்த உத்தரவை 6 மாத காலம் கிடப்பில் போட்டது ஏன்?
2) கணேசன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று தெரிந்தும் அவரை மீள பணியமர்த்தம் செய்யாதது ஏன்?
3) குற்றமே செய்யாமல் தண்டிக்கப்பட்ட 27 மாதத்திற்குமான ஊதியம் ஏன் வழங்கப்படவில்லை?
4) தொடர்ந்து 45 நாட்களுக்கு மேலாக சஸ்பெண்டில் உள்ள அரசு ஊழியருக்கு வழங்கப்பட வேண்டிய பிழைப்பூதியம் (அரை சம்பளம்) மறுக்கப்பட்டது ஏன்?
5) லஞ்ச ஒழிப்புத்துறை புகாரில் கூறப்பட்ட மேலாளர் முத்துசாமி மட்டும் அவர் ஓய்வு பெறும் நாள் வரை சஸ்பெண்ட் செய்யப்பட £மல் இருந்தது ஏன்?
மக்களை நோக்கியே நிர்வாகம் செயல்படும் என்று கூறும் புதிய ஆட்சியராவது இவர் போன்றவர்களுக்கு தீர்வு அளிப்பாரா?
– இளையராஜா.எஸ்
தொடர்புக்கு: selaya80@gmail.com
Mobile: 9840961947