Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பெண்ணுக்கு பாதுகாப்பான தேசமா இந்தியா?

இந்திய உயர்நீதிமன்றங்களில் மட்டும் 137458 பாலியல் வல்லுறவு வழக்குகள் இன்னும் விசாரணை நிலையிலேயே இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் விசாரணைகளால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்காமல் போகக்கூடும். இதன் தீவிரம் தெரியாமல் இந்திய நீதிமன்றங்களும், அரசும் பரிபாலனம் நடத்துவது, இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது.

தேரா சச்சா சவுதா ஆசிரம பெண் சீடர்கள் இருவரை, அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம்சிங் பாலியல் வல்லுறவு செய்ததாக 2002ல் புகார் பதிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்தே தண்டனை கிடைத்திருக்கிறது. தாமதமான நீதி என்றாலும், பசுத்தோல் போர்த்திய சாமியார்களுக்கு சரியான சவுக்கடியாகத்தான் இந்த தண்டனை அமைந்திருக்கிறது. 20 ஆண்டுகள் சிறை, நிச்சயம் கடுமையான தண்டனைதான்.

ஆனால், தாமதிக்கப்பட்ட நீதி -ம றுக்கப்பட்ட நீதி என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது. அசராம் பாபு. அவரும் ஒரு (ஆ)சாமியார். 16 வயது சிறுமியை வல்லுறவு செய்ததாக வழக்கு. பல ஆண்டுகளாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. விசாரணையை தீவிரப்படுத்துங்கள் என்று இப்போதுதான் உச்சநீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது.

புதுடில்லியில், இளம்பெண் நிர்பயா (23), கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகே, நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அதிகரிக்கப்பட்டன. அந்த ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 32 மகிளா விரைவு நீதிமன்றங்கள்கூட கிடைத்தன. நிர்பயா சம்பவம் நடந்தது, 2012, டிசம்பர்.

அந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு விட்டாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவே இல்லை. அந்த தண்டனை, சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 2013ம் ஆண்டு, மும்பையில் செயல்படாத ஒரு ஆலையில் பெண் புகைப்படக் கலைஞரை 5 பேர் கும்பலும் பாலியல் வல்லுறவு செய்த நிகழ்வும் நாட்டையே உலுக்கியது.

2014&ல், உத்தரபிரதேசத்தில் 14, 15 வயதுடைய சகோதரிகளை இரண்டு போலீஸ்காரர்கள் உள்பட 5 பேர் கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தனர். தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கா என்ன? சிவகங்கையில் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளியதாக தந்தை, சகோதரன், அத்தை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கட்டாய கருக்கலைப்பு செய்ததாக ஒரு மருத்துவர்கூட வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவ்வளவு ஏன், அண்மையில் கேரளாவில் பாவனா மீதான பாலியல் தாக்குதல் நிகழ்வு நாடே அறியும். ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சரிபாதி பெண்களைக் கொண்ட ஒரு தேசத்தில், அவர்கள் மீது பாலியல் வன்முறை நடத்தும் துணிச்சல் எதிர் பாலினத்தவருக்கு எப்படி, எங்கிருந்து வந்தது? பெண்ணுடல் மீது சக ஆண் நடத்தும் எந்தவித செயல்பாட்டுக்கும் அவளிடம் எப்போதும் அனுமதி கேட்பதே இல்லை. அவள் ஒரு பண்டம்; அவ்வளவுதானோ? அதைத்தானே நம் அப்பாக்கள், அண்ணன்கள், தம்பிகள் காலங்காலமாக நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். எனில், இந்த மண் பெண்களுக்கானது இல்லையா? ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதாக கருதிக்கொள்ளலாமா?

பெண்கள் மீதான குற்றங்கள் குறித்த புள்ளி விவரங்களை பார்க்கையில், நாம் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் 278886 பாலியல் வல்லுறவு புகார்கள், நாடு முழுவதும் பதிவாகி உள்ளன. இவை தவிர, பெண்கள் மீதான இதர குற்றங்களும் உள்ளன. 6 வயது சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதலும் பரவலாக அரங்கேறிக்கொண்டுதானே இருக்கிறது.

பாலியல் வல்லுறவு என்று நாம் நாகரீகமாக சொல்கிறோம். தினத்தந்தி பாணியில் சொல்ல வேண்டுமானால், அவை கதற கதற நடந்த கற்பழிப்புகள். பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நான்கில் ஒரு வழக்குதான் முடிவுக்கு வருவதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு. வாய்தாக்கள், மருத்துவ பரிசோதனை, தடயவியல் பரிசோதனை, பணம், அரசியல் தலையீடு போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்ட பெண், நீதி கிடைப்பதற்குள் சமூகத்தின் பார்வைகளாலும், குத்தல் பேச்சுகளாலும் பலமுறை நித்தமும் வல்லுறவு செய்யப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறாள்.

பாவனா மீதான பாலியல் தாக்குதலின்போது கருத்து தெரிவித்த, நடிகை மீரா ஜாஸ்மின், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் ஆண்களின் ஆணுறுப்பை அறுத்தெறிய வேண்டும் என்றார். மரண தண்டனை உச்சபட்ச தண்டனைதான். என்றாலும், அரபு நாடுகளில் மக்கள் முன்னிலையில் குற்றவாளிகளுக்கு கொடூரமாக தண்டனை விதிக்கப்படுகிறது. அதேபோன்ற நடைமுறை சில காலத்திற்கு இந்தியாவிலும் அமல்படுத்தினால் என்ன?

இந்தியாவில் பெண்களும் வாழ வேண்டும்.

– இளையராஜா.எஸ்
தொடர்புக்கு: selaya80@gmail.com