சேலம் பெரியார் பல்கலையில் பேராசிரியர்கள் இருவர் செருப்பால் அடித்துக்கொண்ட விவகாரம் குறித்து, குறிப்பிட்ட பேராசிரியர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயற்பியல் துறை
சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறையில் குமாரதாஸ் என்பவர் முதலில் ரீடர் பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேர்ந்த சில மாதங்கள் கழித்து, அன்பரசன் என்பவரும் அதே துறையில் ரீடர் பணியில் நியமிக்கப்பட்டார்.
ஆனால் அன்பரசன் ஏற்கனவே அரசுக்கல்லூரியில் பணியாற்றிய முன்அனுபவம் இருந்ததால், அவருக்கு முதலில் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த சில மாதங்களில் குமாரதாசும் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.
பதவி உயர்வில் சர்ச்சை
இந்நிலையில், இயற்பியல் துறைத்தலைவராக இருந்த கிருஷ்ணகுமார், பெரியார் பல்கலை டீன் பணியில் நியமிக்கப்பட்டார். அதையடுத்து துறைத்தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்ற சர்ச்சை எழுந்தபோது, குமாரதாசுக்கு துறைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.
முதலில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற தனக்குத்தான் துறைத்தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று அன்பரசன் பல்கலை நிர்வாகத்திடம் முறையிட்டார். ஆனால் நிர்வாகம் கண்டுகொள்ளாததால் அதிருப்தி அடைந்த அன்பரசன், மாநில எஸ்சி, எஸ்டி ஆணையத்திற்கு ஒரு புகார் மனு அனுப்பினார்.
எஸ்சி, எஸ்டி ஆணையம் நோட்டீஸ்
அந்த புகார் மனுவில், ‘முதலில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற தன்னை விட்டுவிட்டு, தனக்குப் பிறகு பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற குமாரதாசுக்கு இயற்பியல் துறைத்தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் தன்னை புறக்கணித்துள்ளனர்,’ என்று குற்றச்சாட்டு கூறியிருந்தார்.
ஸ்டேஷன் சீனியாரிட்டி
இந்த புகார் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி எஸ்சி, எஸ்டி ஆணையம், பல்கலைக்கு நோட்டீஸ் அளித்தது. இதற்கிடையே, அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதனின் பதவிக்காலம் முடிந்தது. அதையடுத்து, புதிய துணைவேந்தராக பொறுப்பேற்ற குழந்தைவேல், ‘நிலைய பதிவுமூப்பு (ஸ்டேஷன் சீனியாரிட்டி) அடிப்படையில்தான் குமாரதாசுக்கு துறைத்தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது,’ என்று எஸ்சி, எஸ்டி ஆணையத்திற்கு விளக்கம் அளித்தார்.
இதனால் குமாரதாசுக்கும், அன்பரசனுக்கும் பனிப்போர் மூண்டது. அதிருப்தியின் உச்சத்தில் இருந்த அன்பரசன், வருகை பதிவேட்டில் தினமும் கையெழுத்திடும்போதும் அவர் எப்போது பேராசிரியராக பதவி உயர்வு பெற்றாரோ அந்தத் தேதியையும் குறிப்பிட்டு கையெழுத்திட்டு வந்தார். இதை கவனித்த குமாரதாஸ், இனிமேல் இப்படியெல்லாம் கையெழுத்திடக்கூடாது என்று கண்டித்தார்.
செருப்பால் அடித்துக்கொண்டனர்
இதனால் துறை அலுவலகத்திற்குள்ளேயே இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அன்பரசனும், குமாரதாசும் ஒருவரையொருவர் செருப்பால் அடித்துக்கொண்டனர்.
இந்த சம்பவத்தில், குமாரதாஸ் காயம் அடைந்ததாகக்கூறி பேராசிரியர்கள் பெரியசாமி, தங்கவேல் ஆகியோர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உதவி பேராசிரியர் வைத்தியநாதன் அன்பரசனை, கருப்பூர் அருகே உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
நெஞ்சு வலி
இதில் வேடிக்கை என்னவென்றால், செருப்பால் அடித்ததில் தனக்கு நெஞ்சு வலி வந்துவிட்டதாகக் கூறிய குமாரதாஸ், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறி, பெங்களூரில் உள்ள நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனையில் போய் சேர்ந்து கொண்டார்.
பதவி உயர்வில் சர்ச்சை, செருப்படி, பலத்த காயம், நெஞ்சு வலி என சினிமாவை விஞ்சும் காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேற, பேராசிரியர்களுக்குள் ஏற்பட்ட மோதல் குறித்து விசாரிக்க பல்கலை பேராசிரியர்கள் நான்கு பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
ஒப்புக்கு ஓர் அறிக்கை
அந்தக்குழுவின் நடவடிக்கை அதைவிட வேடிக்கையானது. மோதிக்கொண்ட இரு பேராசிரியர்களிடமும் விசாரிக்காமல், துப்புரவு தொழிலாளி, பிஹெச்.டி., மாணவர்கள் என மிகச்சிலரிடம் பெயரளவுக்கு விசாரணை நடத்திவிட்டு ஒப்புக்கு ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது.
பணிஇடைநீக்கம்
அந்த அறிக்கையை துணை வேந்தர் குழந்தைவேல் எப்படித்தான் புரிந்து கொண்டாரோ தெரியவில்லை, பேராசிரியர் அன்பரசனை மட்டும் பணிஇடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
துணை வேந்தர் குழந்தைவேல், எதையும் சட்டப்படி செய்ய வேண்டும் (!) என்பதில் கறார் காட்டுபவர் என்பதால், இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி நல்லதம்பி தலைமையில் ஒரு நபர் குழுவையும் அமைத்தார்.
அந்தக்குழு, இதுவரை இரண்டு கட்டங்களாக விசாரணை நடத்தியுள்ளது. வரும் 26.11.2018ம் தேதியன்று நடைபெற உள்ள அடுத்தக்கட்ட விசாரணைக்கு ஆஜராகும்படி அன்பரசனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அன்பரசன், பல்கலையில் நடந்த மோதல் சம்பவம் குறித்து, தனது தரப்பு அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், அதுவரை விசாரணைக்கு இடைக்காலத் தடையும், தனக்கு வழங்கப்பட்ட சார்ஜ் மெமோ மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இடைக்காலத் தடை
இந்த மனுவை வெள்ளிக்கிழமையன்று (23.11.2018) விசாரித்த உயர்நீதிமன்றம், வரும் 26.11.2018ம் தேதியன்று அன்பரசனிடம் நடக்க உள்ள விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மறு உத்தரவு வரும்வரை அவருக்கு வழங்கப்பட்ட சார்ஜ் மெமோ மீது யாதொரு நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளது.
– செங்கழுநீர்