Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலத்தில் வன்னியர்களை ஒடுக்கும் எடப்பாடி!; ‘சர்கார்’ வேட்பாளர் தாக்கு!!

 

சர்கார் படத்தில் தேனி தொகுதி சுயேட்சை வேட்பாளராக நடித்துள்ள வேங்கை அய்யனார், சேலம் மாவட்டத்தில் வன்னியர்களை ஒடுக்கும் வேலைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

 

உதவிய வரலட்சுமி:

 

சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்டு, தொடர்ந்து நான்கு முறை தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளில் வகித்திருப்பவர் வேங்கை அய்யனார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த வேங்காம்பட்டி பூவாயம்மன் கோயில் திருவிழாவிற்கு நடிகை வரலட்சுமி சரத்குமாரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து வந்தார்.

வேங்கை அய்யனார்

அப்போது ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் வரலட்சுமியின் பரிந்துரையின்பேரில், அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் நடிக்க இயக்குநர் முருகதாஸிடம் வாய்ப்புப் பெற்றுத்தந்தார். அந்தப்படத்தில், 210 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களை விஜய் களமிறக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

 

வீரவன்னியர் பேரவை:

அதில், தேனி தொகுதிக்கு சுயேட்சை வேட்பாளராக விவசாயி அய்யனார் போட்டியிடுவதாக அறிவிப்பார் விஜய். அந்தக்காட்சியில் வேட்பாளராக நடித்தவர் வேங்கை அய்யனார். சேலத்தில் சர்கார் படப்பிடிப்புக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார். வீரவன்னியர் பேரவை மாநில பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.

 

சர்கார் படத்துக்கு எதிராக ஆளும் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நம்மிடம் பேசியதிலிருந்து…

 

கண்டிக்கிறோம்…:

 

”சர்கார் படத்தை ஒரு கலை படைப்பாக பார்க்க அதிமுக அரசு தவறிவிட்டது. தணிக்கை சான்றிதழ் பெற்று, வெளியிடப்பட்ட சர்கார் படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருப்பதாகச் சொல்லி, அந்தப்படத்தின் பேனர்கள், போஸ்டர்களை கிழித்து மூன்றாம்தரமாக ஆளுங்கட்சியினர் நடந்து கொண்டது அந்தப்படத்தில் நடித்த ஒரு கலைஞராக மட்டுமின்றி, வீரவன்னியர் பேரவை சார்பிலும் கண்டிக்கிறோம்.

 

விஜய் படத்தின் பேனர்களைக் கிழித்து, அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு அதிமுக வந்துவிட்டது.

 

நாடகம் போடுகிறார் முதல்வர் எடப்பாடி:
சர்கார் படத்தில் விவசாயியாக…

வன்னியர் சமூக வாக்குகளை குறிவைத்து, வன்னியர் அறக்கட்டளை சொத்துகளை மீட்பதாக நாடகம் போடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வன்னிய சமூகத்திற்காக உண்மையிலேயே பாடுபட்டது வன்னிய அடிகளார்தான்.

 

பாமக நிறுவனர் ராமதாஸ், வீரவன்னியர் பேரவைத் தலைவர் ஜெகத்ரட்சகன் ஆகியோரும் வன்னியர் சமூகத்தினரின் நலனுக்காக பெரிதும் உழைத்திருக்கிறார்கள். இந்த இரு தலைவர்களையுமே ராமசாமி படையாச்சியார் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்வர் அழைக்கவில்லை.

 

சேலம் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் பெரியார் பல்கலைக்கழகம் முதல் காவல்துறை வரை அனைத்து துறைகளிலும் முக்கிய பொறுப்புகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்ந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தினரின் ஆதிக்கம்தான் நிலவுகிறது.

 

முற்றிலும் புறக்கணிப்பு:

 

இந்த மாவட்டத்தில் வன்னியர் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. அவர்களை ஒடுக்கும் வேலைகளில் முதல்வரும், ஆளும்கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர்.

 

அரசின் ஒப்பந்தப்பணிகள் எல்லாமே முதல்வர் சார்ந்த சமூகத்தினருக்குதான் ஒதுக்கப்படுகின்றன. தகுதியிருந்தும் வன்னியர் சமூக ஒப்பந்ததாரர்களுக்கு எந்த வித பணிகளும் வழங்கப்படுவது இல்லை.

 

எடப்பாடி தொகுதியில் வன்னியர் ஓட்டுகளே அதிகளவில் உள்ளன. குறைந்தபட்சம் அந்த தொகுதியையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வன்னியர் அறக்கட்டளை சொத்துகளை மீட்போம் என்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அதையெல்லாம் வன்னியர் சமூகத்தினர் கொஞ்சமும் நம்ப மாட்டார்கள்,” என்றார் வேங்கை அய்யனார்.

 

சர்கார் படத்தில் நடித்தது பற்றியும் பேசினார்.

 

”எங்கள் சொந்த கிராமத்தில் நடக்கும் கோயில் பண்டிகைகளின்போது சினிமா, டிவி பிரபலங்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நடந்த கோயில் விழாவின்போது நடிகை வரலட்சுமி சரத்குமாரை அழைத்து வந்து விழாவை நடத்தினோம்.

 

முருகதாஸிடம் சிபாரிசு

அப்போதுமுதல் அவருடன் நட்பு தொடர்கிறது. ரொம்பவே உதவும் குணம் உடையவர் வரலட்சுமி. சர்கார் படத்தின் கதையில், சுயேட்சை வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட வைக்கும் காட்சிகள் குறித்து கேள்விப்பட்டதுமே, அந்தக் காட்சியில் என்னை நடிக்க வைக்கலாம் என்று அவர்தான் இயக்குநர் முருகதாஸிடம் சிபாரிசு செய்தார். அவருடைய உதவியாளர் ஆதிலிங்கமும் இந்த வாய்ப்பு கிடைக்க உதவியாக இருந்தார்.

 

சேலத்தில் சர்கார் படத்தின் படப்பிடிப்புகள் மூன்று நாள்கள் நடந்தன. அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து கொ டுத்தேன். விளை நிலங்களில் மக்கள் வேலை செய்வது போன்ற காட்சிகளை சேலத்தில் எடுத்தார்கள்.

 

அந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்கூட நடிகர் விஜய்யின் அருகிலேயே அமரக்கூடிய வாய்ப்பு கிடைத்ததோடு, அவருடைய பாராட்டையும் பெற்றது மறக்க முடியாததாக அமைந்தது,” என்றார்.

 

வேங்கை அய்யனாரை தொடர்பு கொள்ள : 9894851925

 

– பேனாக்காரன்.