பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலையில் அகலாத மர்ம முடிச்சுகளையும், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல்கள் குறித்தும், பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது.
பட்டமளிப்பு விழா
சேலம் பெரியார் பல்கலையில் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 27, 2018) நடக்கிறது. பல்கலை வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
அதேநேரம், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல் புகார்கள் மீதும் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பேராசிரியர்கள் மத்தியில் எழாமல் இல்லை.
இது தொடர்பாக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் ஒருவரும், பல்கலை தரப்பில் பேராசிரியர்கள் சிலரும் விரிவாக நம்மிடம் பேசினார்கள்.
அங்கமுத்து தற்கொலை
பெரியார் பல்கலையில் முன்பு பதிவாளராக இருந்த அங்கமுத்து, கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியன்று, பெருந்துறையில் உள்ள தனது வீட்டில் விஷ மாத்திரைகளைத் தின்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அவர் உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம், அவர்தான் இந்தப் பல்கலைக்கு துணை வேந்தராக இருந்திருப்பார். அப்போது அதற்கான முகாந்திரம் அதிகமாக இருந்தது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அங்கமுத்துவின் திடீர் தற்கொலை, எல்லோரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. அந்த சம்பவம் நடந்து ஓரிரு நாள்கள் கழித்து, அவருடைய வீட்டில் இருந்து அங்கமுத்து எழுதியதாக ஏழு பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
35 லட்சம் ரூபாய் லஞ்சம்
அப்போது பெரியார் பல்கலையில் துணை வேந்தராக சுவாமிநாதன், தனது பணிக்காலத்தில் 136 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியுள்ளார். ஒவ்வொரு பணி நியமனத்திற்கும் 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, தகுதியில்லாத பலரையும் உதவி / இணை / பேராசிரியர்களாக நியமித்தார்.
இந்த ஊழலில் அங்கமுத்துவுக்கும் கணிசமான தொடர்பு உண்டு. அவரே பணி நியமனங்களுக்காக பத்து கோடி ரூபாய் வரை சுவாமிநாதனுக்காக வசூலித்துக் கொடுத்ததாக தற்கொலை கடிதத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் 2015ம் ஆண்டு பதிவாளர் பதவி முடிந்து வெளியேறிய பிறகு, அவருக்கும் சுவாமிநாதனுக்கும் பல விஷயங்களில் ஏழாம் பொருத்தமாகிப் போனது. அதன்பிறகு சுவாமிநாதனே நேரடி டீலிங்குகள் மூலம் 15 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளார்.
தற்கொலைக்கு ஏழு பேரும் காரணம்
சுவாமிநாதன், இப்போதும் டீன் பதவியில் இருக்கும் இயற்பியல் துறை பேராசிரியர் கிருஷ்ணகுமார், அங்கமுத்துவுக்குப் பிறகு பதிவாளராக பணியாற்றிய மணிவண்ணன் மற்றும் அலுவலக ஊழியர்கள் நெல்சன், குழந்தைவேல், ராஜமாணிக்கம், ஸ்ரீதர் ஆகிய ஏழு பேரும்தான் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பேராசிரியர் கிருஷ்ணகுமாரை ‘மூளை’ என்றும் சுட்டியுள்ளார்.
கையெழுத்து ஊர்ஜிதம்
பெருந்துறை போலீசாரிடம் இருந்த இந்த வழக்கு, சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுவிட்டது. அங்கமுத்து எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தில் உள்ளது, அவருடைய கையெழுத்துதான் என்று சென்னை தடயவியல் ஆய்வகமும் ஊர்ஜிதம் செய்துள்ளது.
மர்மம் விளங்கவில்லை
இவ்வளவுக்குப் பிறகும், இன்னும் பேராசிரியர் கிருஷ்ணகுமார் மற்றும் அலுவலக ஊழியர்கள் மீது துறை ரீதியான விசாரணையை பல்கலை நிர்வாகம் நடத்தாததன் மர்மம் மட்டும் விளங்கவில்லை. இதற்கிடையே, பதிவாளர் மணிவண்ணனும் பதிவாளர் பதவியை நிறைவு செய்து, வெளியேறிவிட்டார்.
நேர்மையான கல்வியாளராக காட்டிக்கொள்ளும் இப்போதைய துணைவேந்தர் குழந்தைவேல், புகார்களுக்கு ஆளானவர்களுக்கு துணை போவதும் குற்றம் என்பதை புரிந்தும் புரியாமலும் இருக்கிறார்.
தற்கொலை செய்து கொண்ட அங்கமுத்து ஒன்றும் புனிதமானவர் அல்ல. உயிருடன் இருந்திருந்தால் அவர் மீதும் அத்தனை ஊழல் புகார்களும் பாய்ந்திருக்கும். ஆனால், அங்கமுத்துவின் தற்கொலைக்கு பின்னணியில் உள்ள குற்றவாளிகளை பல்கலை நிர்வாகம் ஏன் தப்பிக்க விட வேண்டும்? என்பதுதான் கேள்வி.
விதிகளை மீறி பதவி உயர்வு
அண்மையில் பெரியார் பல்கலையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த லட்சுமி மனோகரி, சூரியவதனா, திருமூர்த்தி, சாரதி, சுப்ரமணியபாரதி உள்பட 22 உதவி / இணை / பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
அவர்களில் பலர், பணியில் சேர்ந்தபோது பிஹெச்.டி., ஆய்வை நிறைவு செய்திருக்கவில்லை. ஆனால், விதிகளை மீறி அவர்களுக்கு முனைவர் பட்டத்திற்குரிய ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு முன்கூட்டியே பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
தணிக்கை அறிக்கையில் ஆட்சேபனை
அவ்வளவு ஏன், இப்போது பதிவாளர் பொறுப்பில் இருக்கும் பேராசிரியர் தங்கவேல் மீதும் கல்வித்தகுதி குறித்து தணிக்கை அறிக்கையில் ஆட்சேபனை கூறப்பட்டுள்ளது. அவருக்கு பல்கலையில் மிகப்பெரிய அந்தஸ்து வழங்கப்பட்டதன் பின்னணியில் சாதி நலனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
சமீபத்தில் மேட்டூர் உறுப்புக்கல்லூரியில் தற்காலிகமாக பணியாற்றி வந்த ஆசிரியர் பலர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் உரிய கல்வித்தகுதி இல்லாதவர்கள். இப்படி பலவற்றிலும் பல்கலை மற்றும் யுஜிசி விதிகள் மீறப்பட்டுள்ளன.
விரிவான விசாரணை
ஆகையால் வெறுமனே விருந்தினராக மட்டும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொண்டுவிட்டு சென்று விடாமல், இந்தப் புகார்கள் குறித்தெல்லாம் விரிவான விசாரணை நடத்தவும் வேண்டும் என்கிறார்கள் பெரியார் பல்கலை பேராசிரியர்கள்.
பட்டங்களை கொடுத்துவிட்டு ஆளுநர் பறந்து விடுவாரா? அல்லது சாட்டையைச் சுழற்றப்போகிறாரா?
– பேனாக்காரன்.