Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சாமானியர்கள் மீது மற்றுமொரு வெடிகுண்டு வீச்சு!; என்னங்க சார் உங்க சட்டம்…?

பாஜக தலைமையிலான மத்திய அரசை எதிர்ப்பவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அக்கட்சிக்கு முட்டுக்கொடுப்போர் கருப்பு பணம், ஊழலை ஒழிக்க வந்த ஒரே கட்சி என்ற ஒரே நிலைப்பாட்டையே முன்வைப்பர்.

நாம் சொல்ல விழைவது, பாஜக ஒருபோதும் சாமான்ய மக்களுக்கான அரசு அல்ல; அது, 100 சதவீதம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது என்பதைத்தான்.

அதற்கு இன்னுமொரு உதாரணம்தான், ‘நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்பீடு மசோதா-2017’ (Financial Resolution and Deposit Insurance Bill – 2017). ஆங்கிலத்தில் சுருக்கமாக, எப்ஆர்டிஐ (FRDI).

அப்படி என்ன சொல்கிறது எப்ஆர்டிஐ மசோதா? சொல்கிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் இந்த மசோதா மக்களவையில் சமர்ப்பி க்கப்பட்டது. விரைவில் இந்த மசோதா சட்ட வடிவம் பெறக்கூடும்.

வாராக்கடன் காரணமாக வங்கிகள் திவால் ஆனால், நஷ்டத்தை சமாளிக்க வங்கியில் உள்ள மக்களின் சேமிப்புத்தொகையை கபளீகரம் செய்து கொள்ளலாம். அதற்காக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியதில்லை என்கிறது எப்ஆர்டிஐ மசோதா.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால், அதானி, அம்பானி, மல்லையாக்கள் போன்ற ‘ஏழைகளுக்கு’ கடன் கொடுத்ததால் நொடித்துப்போன வங்கிகளை குப்பன், சுப்பன் போன்ற பெரும் செல்வந்தர்கள் தங்கள் சேமிப்பு பணத்தை கொடுத்து வங்கியை நட்டத்தில் காப்பாற்றுவதுதான் இந்த மசோதாவின் நோக்கம்.

இன்றைய நிலையில் நாடு முழுவதும் வங்கிகளுக்கு கிட்டத்தட்ட 11 லட்சம் கோடி வாராக்கடன் இருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகள் கண்களில் நீர் வழிந்தால், அருண் ஜேட்லி, பிரதமர் மோடி ஆகியோர் கண்களில் உதிரமே பெருக்கெடுக்கும் அல்லவா. அதனால் என்ன செய்தார்கள் என்றால், வாராக்கடனால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு முதல்கட்டமாக 2.11 லட்சம் கோடிகளை வழங்கி விட்டனர்.

ஆனால் இது மட்டும் போதாதே. வாராக்கடன் இழப்பு ரொம்ப அதிகம். சொச்ச பணத்துக்கு எங்கே போவது? யோசித்தார் அருண் ஜேட்லி. எப்ஆர்டிஐ மசோதாவில் சொல்லப்பட்டதை நடைமுறைப்படுத்திக் கொள்ளச் சொல்லிவிட்டார். அதாங்க, வாடிக்கையாளர்களின் சேமிப்பு பணத்தில் இருந்து எடுத்து சரிக்கட்டிக் கொள்ளுங்கள் என்று சமிக்ஞை கொடுத்துவிட்டார்.

வாடிக்கையாளரின் பணத்தை அவர்களின் அனுமதியின்றி எடுத்துக்கொண்டால் அதற்குப் பேர் என்னவென்பது உங்களுக்குத் தெரியும்தானே?. உங்கள் யூகம் சரிதான். அதைத்தான் செய்யச்சொல்கிறது மோடி தலைமையிலான மக்கள் நல அரசு.

எப்ஆர்டிஐ மசோதாவினுள் இன்னொரு சூட்சுமமும் ஒளிந்திருக்கிறது. இந்தியாவில், 1960களில் பல வங்கிகள் திவால் ஆன நேரம். அப்போது, வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கூட்டுத்தாபன சட்டம்-1961 (Deposit Insurance Credit Guarantee Corporation Act – 1961) கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, ஒரு வங்கி திவாலானால், சம்பந்தப்பட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு எதுவும் இல்லை என்று கையை விரிக்காமல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. (இந்த தொகைகூட 1993ல் தான் நிர்ணயிக்கப்பட்டது).

ஆனால், புதிய எப்ஆர்டிஐ மசோதாவில் அந்த குறைந்தபட்ச கருணைக்குக்கூட இடமில்லை. அப்படியே வாரிச்சுருட்டிக்கலாம்.

நான் புரியாமல்தான் கேட்கிறேன். வங்கிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள 11 லட்சம் கோடி வாராக்கடன் என்பதே நாட்டின் மிகப்பெரும் தொழில் அதிபர்களுக்கு தொழில் தொடங்குவதற்குக் கொடுக்கப்பட்டதுதான். அந்த தொழில்கள் எல்லாம் என்னாச்சு? இதையெல்லாம் சிபிஐ விசாரிக்காதா என்ன?

 

– அகராதிக்காரன்.