Wednesday, May 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திமுகவுக்கு வைகோ ஆதரவு; கதற விடும் மீம் கிரியேட்டர்கள்!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மதிமுக தலைவர் வைகோ சொன்னாலும் சொன்னார், திமுக கூடாரத்தில் இருந்தே பலர் வைகோ ஆதரவை கிண்டலடித்து மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர். ஆதரவை விலக்கிக் கொள்ளச்சொல்லும்படியும் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகளுடன் டிடிவி தினகரனும் சுயேட்சையாக களம் இறங்குகிறார்.

இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருது கணேஷூக்கு ஏற்கனவே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பாக மதிமுகவும் திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் வைகோ திடீரென்று அறிவித்தார்.

திமுக தரப்பில் இருந்து ஆதரவு கோரி தூது அனுப்பப்பட்டதா அல்லது அவரே தன்னிச்சையாக கட்சியின் ஆதரவை தெரிவித்தாரா என்பது குறித்து பொதுவெளியில் கூறப்படவில்லை. ஆனாலும், கோவை விமான நிலையத்தில் ஏதேச்சையாக நடந்த சந்திப்பில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. எனினும், வைகோவின் தார்மீக ஆதரவுக்கு மு.க.ஸ்டாலின் உடனடியாக நன்றி தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுக, திமுகவை நெருங்கிச் செல்கிறது. அடுத்தடுத்து வரவுள்ள மக்களவை மற்றும் தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவு தொடரும் என்றும் வைகோ அறிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக வைகோவின் அரசியல் செயல்பாடுகள் பொதுவெளியில் தொடர்ந்து கேலிக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. 2011 சட்டப்பேரவை தேர்தலை புறக்கணித்தது முதல் கடந்த தேர்தலின்போது மக்கள்நலக் கூட்டணியை கட்டமைத்தது வரை எல்லாமே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.

ஒரு வகையில் இணையதளவாசிகளின் கருத்துகளை ஒட்டுமொத்த மக்களின் கருத்தாகக்கூட கருதிக்கொள்ளலாம். இது, எல்லா நேரத்திலும் ஒத்துப்போகுமா எனத் தெரியாது. ஆனால், பல நேரங்களில் இணையதளவாசிகளின் கருத்துகள் பொய்த்துப்போவதில்லை. அவர்களும் மக்கள் மனநிலையைத்தானே பிரதிபலிக்கிறார்கள்!

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரையிலும்கூட திமுக மீதான வைகோவின் நிலைப்பாடு இப்படித்தான் இருந்தது: ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு திமுக துணை போனதை அம்பலப்படுத்தவே சிறைக்குப் போகிறேன் என்று சொல்லி ‘நானும் ஜெயிலுக்குப் போறேன்’ என்று வடிவேலு பாணியில் ஜல்லியடித்தார். ஜாமீன்கூட வேண்டாம் என்று மறுத்துவிட்ட வைகோ, இன்று அதே திமுகவுடன் கூட்டணி வைக்க துடிக்கிறார்.

திராவிட இயக்கத்தை அழிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாடம் புகட்டவே திமுகவுக்கு ஆதரவு என்றும் வைகோ சொல்லி இருக்கிறார். எனில், இத்தனை ஆண்டுகலாக ஈழத்தமிழர் இனப்படுகொலை பெயரில் திமுகவைவிட்டு ஒதுங்கி நின்றது ஏன் என்பது வைகோ மட்டும் அறிந்த ரகசியம்.

ஒருவேளை, மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு எம்பி சீட் பெற்று விடலாம். தேர்தலில் தோற்றாலும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியையாவது பெற்று விடலாம் என்பதாக இருக்குமோ என்னவோ.

வைகோ சாயும் பக்கமெல்லாம் சரிவுகளே ஏற்பட்டு இருக்கின்றன என்பதே அண்மைக்கால வரலாறு. அதில் அறிவியல்பூர்வமான உண்மைகள் இல்லை என்றாலும், திராவிட கட்சியினரும் சென்டிமென்ட் பார்ப்பதில் விதிவிலக்குகள் அல்லவே. அந்த வகையில் வைகோவின் ஆதரவு, திமுகவை சரித்து விடுமோ என்றும் அஞ்சுகின்றனர்.

”அறிவாளிகள் மற்றவர்களின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள். ஆனால் முட்டாள்களால் தங்கள் சொந்த அனுபவங்களில் இருந்து கூட கற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் பழமொழியைச் சொன்னேன்,” என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மு.க.ஸ்டாலினை மறைமுகமாக தனக்கே உரிய நையாண்டித்தனத்துடன் சொல்லி கருத்து வெளியிட்டு இருந்தார்.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை என்பது உண்மைதான். ஆனால், எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர கொள்கையும் இல்லை; தன்மானமும் இல்லை என்பதைன் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளை பொருத்தவரை மக்கள் என்பவர்கள் வெறும் வாக்காளர்கள் மட்டுமே.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றியோ தோல்வியோ உண்மையில் திமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி விடாது. ஆனால், 2019ல் நடைபெறும் மக்களவை தேர்தலில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைய இந்த இடைத்தேர்தல் ஒரு நல்ல துவக்கம்.

– பேனாக்காரன்.