Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மத்திய அமைச்சரவையில் அதிமுக?

ஆபரேஷன் தமிழ்நாட்டின் அடுத்த நகர்வாக, அதிமுகவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் படலம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது அதிமுகவை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கால் பதிப்பதுதான் பாஜகவின் ஆகப்பெரிய சாதனையாக இருக்க முடியும். இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளின் கோட்டையாகப் பார்க்கப்படும் கேரளாவில்கூட பரவலாக காவி நிறம் தென்படத் தொடங்கிவிட்டது. கர்நாடகாவிலோ காங்கிரஸ் அல்லது பாஜக என்ற இரு துருவ அரசியல் இருந்து வருகிறது. ஆந்திராவில் காலூன்ற வசதியாக, அந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டுவிட்டது.

தென்னிந்தியாவில் பாஜகவினர் நுழைய முடியாத எஃகு கோட்டை என்றால் இன்னமும் அது, தமிழ்நாடு மட்டும்தான்.

இப்போது தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி குழப்பங்களை சாதகமாக்கிக் கொண்டு, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது பாஜக. எதிர்காலத்தில் அரசியல் பங்காளியாகவும், மிகச்சிறந்த அடிமையாகவும் இருக்க திமுகவை விட அதிமுகவே சிறந்த ‘ஆப்ஷன்’ ஆக பாஜக கருதுகிறது.

2019ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை சந்திக்க அதிமுக முதுகில் சவாரி செய்யவும், தேர்தல் செலவுகளை அந்த கட்சியின் தலையில் ஏற்றிவிடவும் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகிய இரு துருவங்களையும் இணைப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்த பிறகுதான், இரு அணிகளும் சமீபத்தில் இணைந்தன.

இதெல்லாம் எதிர்பார்த்தபடி முடிந்ததால்தான், தினகரனுக்கு ஆதரவாக 21 எம்எல்ஏக்கள் திரண்டு சென்று புகார் அளித்தபோதும், ”அதெல்லாம் உள்கட்சி விவகாரம்பா. இதுல நான் என்ன செய்ய முடியும்?” தமிழக ஆளுநரால் (பொ) அசட்டையாக சொல்ல முடிகிறது. இதற்கிடையே ஏற்பட்டுள்ள கால அவகாசத்தில் பாஜக, இன்னொரு முக்கிய காரியத்தையும் செய்யத் துணிந்துள்ளது. அது, பீஹாரில் பின்பற்றப்பட்ட யுக்திதான்.

அதாவது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் அதிமுகவை இணைப்பதே. அதிமுகவை தன் பிடிக்குள்ளேயே வைத்துக் கொள்ள ஏதுவாக ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்பி என இரண்டு பேருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

இப்போதைக்கு ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி மைத்ரேயனுக்கு கேபினட் அந்தஸ்திலான அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்தவரும், தற்போதைய துணை சபாநாயகருமான தம்பிதுரைக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்றும் தெரிகிறது.

ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் நேற்று டில்லியில் ராஜ்நாத் சிங்கை சந்தித்தபோது உள்கட்சி விவகாரங்களுடன் தேஜகூ-ல் அதிமுகவை இணைப்பது குறித்தும், யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்தும் பேசப்பட்டுள்ளது. விரைவில் நடைபெறும் மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது அதிமுகவைச் சேர்ந்த இருவருக்கும் அமைச்சர் பதவி வழங்குவது குறித்த அறிவிப்பும் வரலாம் என்று தெரிகிறது.