Thursday, June 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

விஜய்யின் இருவேறு முகம்; ஆளுநர் உரையில் அம்பலம்!

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வியாழக்கிழமை (ஜூன் 18) தொடங்கியது. கடந்த திமுக ஆட்சியின்போது ஆளுநருக்கும், அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்த நிலையில், இன்று அத்தகைய மோதல் போக்கு இல்லாமல் சுமூகமாக அவை நடந்தது.

ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் வாசித்த உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:

  • தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை ஏற்கப்படாது. இரு மொழி கொள்கையே தொடரும்.
  • தமிழகத்திற்கான உரிய நிதிப்பகிர்வை பெறுவது ஒன்றிய அரசிடம் உறுதி செய்யப்படும். நிதிப்பகிர்வில் உள்ள பாரபட்ச நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிடப்படும்.
  • வருவாய் வரவுகளில் உள்ள இழப்புகள், அரசுச் செலவினங்களில் ஏற்படும் இழப்புகளையும் சரி செய்த பிறகு, மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும்.
  • தேசிய கல்விக்கொள்கை 2020ஐ இந்த அரசு கடுமையாக எதிர்க்கும். மும்மொழிக் கொள்கையை கடைப்பிடித்தால்தான் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 3458 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
  • கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • 69 சதவீத இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும். தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற கிளை தொடங்கவும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதுவும் புதிது அல்ல…:

41 பக்கங்கள் கொண்ட ஆளுநர் உரையில் 57 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில், 90 சதவீத அம்சங்கள் முந்தைய திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் கூறப்பட்ட விவரங்களே இருந்தன.

ஆறுகள், ஏரிகளில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்துச் செல்வது, இட ஒதுக்கீடு, இரு மொழிக் கொள்கை, தமிழ் வழக்காடு மொழி, உச்சநீதிமன்றக் கிளை, வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்ட கொள்கை விளக்கங்கள் முந்தைய திராவிட இயக்க ஆட்சிகளிலும் கூறப்பட்டவைதான்.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் ஒன்றிய அரசு தமிழகத்திற்கான நிதி ஒதுக்காவிட்டாலும், அதனால் ஏற்படும் இழப்பை தமிழக அரசே சரிக்கட்டும் என்று முந்தைய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் துணிச்சலாக அறிவித்தார். ஆனால் இன்றைய ஆளுநர் உரையில் தொடக்கம் முதலே மென்மையான போக்கு காணப்பட்டது.

பத்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமை ஏற்றி வைத்துள்ளதாக திமுக அரசை விமர்சிக்கும்போது மட்டும் கடுமை காட்டும் தவெக அரசு, ஒன்றிய பாஜக அரசை விமர்சிக்கும்போது மட்டும் சாமரம் வீசுவதுபோல் இருந்தது. முதல்வர் விஜய்யின் இருவேறு முகங்களை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது ஆளுநர் உரை.

காவிரி நீரை பெறுவது முதல் மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் வரை பலவற்றுக்கும் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்ற அளவில் மென்மையாக அணுகியிருந்தது தவெக அரசு.

கச்சத் தீவை மீட்போம் என்ற விவரம் மட்டும் ஏனோ இந்த உரையில் இடம்பெறவில்லை. அதையும் சொல்லி இருந்தால் முந்தைய அரசின் உரையை நகலெடுத்தது போல் இருந்திருக்கும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கே உரிமை இருக்கிறது. ஆனால் ஏனோ தவெக அரசு இதற்கும் ஒன்றிய அரசை வலியுறுத்தும் எனக் கூறி இருந்தது. அதேநேரம், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு தமிழகத்தில் சமூகநீதி என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியிருப்பது சற்று ஆறுதலான சங்கதி.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய், தாய்மாமன் சீர் உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகள் இப்போதைக்கு நிறைவேற்றப்படாது என்பதை மறைமுகமாகச் சொல்லி இருக்கிறார் முதல்வர் விஜய்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையின் பெரும்பாலான அம்சங்கள் ஆளுநர் உரையில் இருந்தது.

சட்டமன்றத்தில் தமிழக மரபுப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுமா அல்லது முந்தைய காலங்கள் போல முதலில் தேசிய கீதத்தை வாசிக்கச் சொல்லி ஆளுநர் முரண்டு பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இன்று சட்டமன்ற அவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்பட்டது. அதன்பிறகு உடனடியாக தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

வழக்கமாக ஆளுநர் உரை முடிந்த பிறகுதான் தேசிய கீதம் இசைக்கப்படும். ஆனால் இன்று தமிழ்த்தாய் வாழ்த்தும், அதைத் தொடர்ந்து நாட்டுப்பண்ணும் இசைக்கப்பட்டதும் சற்று முரணாக இருந்தது. அதேநேரம், முதன்முதலாக இரண்டு முறை நாட்டுப்பண் இசைக்கப்பட்டதும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.

பாஜக அரசு தொடர்ந்து தமிழக நலனுக்கு விரோதமானப் போக்கில் ஈடுபட்டு வந்ததால், காலங்காலமாக ‘மத்திய அரசு’ என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், முந்தைய திமுக அரசு, ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிடத் தொடங்கியது. முழு ஆட்சிக்காலமும் ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வந்ததது திமுக. இது அப்போது பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில், ஆளுநர் வாசித்த உரையில் அனைத்து இடங்களிலும் ஒன்றிய அரசு என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இந்தமுறை எந்தவித சலசலப்பும் ஏற்படவில்லை. மூடர் கூடம், மந்தைக் கூட்டம் போல் செயல்படும் காட்சி ஊடகங்களும் இதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒன்று… காட்சி ஊடகங்கள் முந்தைய திமுக அரசுக்கு முட்டுக் கொடுத்திருக்க வேண்டும்; அல்லது, இப்போது தவெக அரசும், பாஜக அரசும் திரை மறைவில் இணக்கமான ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும்.

முதல்வர் விஜய் வழக்கம்போல் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்தவர்போல தனது இருக்கையில் சோர்வாக அமர்ந்து இருந்தார்.

கருப்பு பட்டையுடன் திமுக:

சட்டமன்றத்திற்கு திமுகவினர், கருப்புப் பட்டை அணிந்து வந்திருந்தனர். சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கத் தவறியதைக் கண்டித்தும் கருப்புப் பட்டை அணிந்து வந்திருந்தனர்.

”வாயைத் திறங்க வாயைத் திறங்க… தமிழக முதல்வரே வாயைத் திறங்க”, ”கெட்டுப்போச்சு கெட்டுப்போச்சு… சட்டம் ஒழுங்கு கெட்டுப்போச்சு…” என்று சட்டமன்ற வாயில் முன்பு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கையில் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சியின்போது கூறப்பட்ட விவரங்களே இப்போதைய ஆளுநர் உரையில் இருப்பதாகவும், இது ஒரு ‘காப்பி பேஸ்ட்’ அறிக்கை என்றும், தவெக அரசு ஒரு ஸ்டிக்கர் அரசு என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

முதல்வர் விஜய் போல அல்லாமல் ஊடகங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் அளித்தார் உதயநிதி. இவற்றுக்கெல்லாம் நடிகர் விஜய் தனது அட்மின் ஜெகதீஸ் மூலம் வீட்டிற்குச் சென்று ட்விட்டரில் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கலாம். அல்லது, நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜூனாவிடம் இருந்து அறிக்கை வரலாம்.

வரும் நாள்களில், ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது திமுக எம்எல்ஏக்கள் தீவிரமாக களமாடுவார்கள் எனத்தெரிகிறது.

  • பேனாக்காரன்

Leave a Reply