Thursday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

பட்டுவாடா பணத்தில் ‘கட்டிங்’; எடப்பாடியில் திமுக அப்செட்!

எடப்பாடி தொகுதியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக, திமுக மேலிடம் வழங்கிய பணத்தில் கை வைத்த மேற்கு மா.செ., கணிசமான தொகையை, மேட்டூர் தொகுதிக்கு மடைமாற்றம் செய்ததாக பரபரப்பு புகார்கள் கிளம்பியுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (ஏப். 23) நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவினாலும் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளிடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

முக்கிய கட்சிகள் கடந்த இரு நாள்களாக வாக்காளர்களுக்கு கரன்சி பாசனத்தில் கவனம் செலுத்தி வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் அமைச்சர் ராஜேந்திரன் போட்டியிடும் சேலம் வடக்கு, அம்மாபேட்டை லோகநாதன் களமிறங்கியுள்ள சேலம் தெற்கு, கொளத்தூர் மிதுன் சக்கரவர்த்தி களம் காணும் மேட்டூர் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும் ஆளுங்கட்சியான திமுக தரப்பில் வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

சங்ககிரி, ஏற்காடு (தனி), கெங்கவல்லி (தனி) ஆகிய தொகுதிகளில் தலா 1500 ரூபாயும், வீரபா£ண்டியில் 1000 ரூபாயும் திமுகவினர் பட்டுவாடா செய்துள்ளனர். அதிமுக கூட்டணி, அனைத்துத் தொகுதிகளிலும் 1000 ரூபாய் விநியோகம் செய்துள்ளது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் அதிமுக, திமுக தரப்பில் இந்தமுறை தாராளமாக பணப்பட்டுவாடா இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திமுக சார்பில் போட்டியிடும் காசி தரப்பில் 80 சதவீத வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் மட்டுமே பட்டுவாடா செய்யப்பட்டது.

எடப்பாடி தொகுதி வாக்காளர்களுக்காக திமுக மேலிடம் 2 லட்சம் பேருக்கு தலா 1000 ரூபாய் வீதம் 20 கோடி ரூபாய் மாவட்டத் தலைமைக்கு கொடுத்து அனுப்பியுள்ளது. இத்தொகையில், சேலம் மேற்கு மா.செ.வான டி.எம்.செல்வகணபதி, 50 சதவீதத்தை மேட்டூர் தொகுதிக்குக் கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடியில் திமுக வேட்பாளர் கடும் அதிருப்தியில் உள்ளார்.

இதன் பின்னணி குறித்து திமுகவின் மூத்த உடன்பிறப்புகளிடம் விசாரித்தோம்.

”எடப்பாடி தொகுதியில் களமிறங்கியுள்ள திமுக வேட்பாளர் காசி, ஜலகண்டாபுரம் பேரூர் தலைவராக இருக்கிறார். ‘ஊருக்கு ஊரார்’ என்ற திட்டத்தைத் தொடங்கி, சொந்தப்பணத்தில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்துக் பேரூராட்சி முழுவதும் குடிநீர் வசதி செய்து கொடுத்தார். இதன்மூலம் மக்களிடம் பெரிய அளவில் செல்வாக்கு பெற்றுள்ளார். மூன்று முறை தலைவராக இருந்தும்கூட எந்த ஒரு புகாருக்கும் ஆளாகாதவர்.

காசி, மறைந்த வீரபாண்டியாரின் தீவிர ஆதரவாளர் என்பதால், மேற்கு மா.செ. டி.எம்.செல்வகணபதி ஆரம்பத்தில் இருந்தே இவரை ஒதுக்கி வைத்திருந்தார். நங்கவள்ளி ரவிச்சந்திரன், மேட்டூர் மாஜி எம்எல்ஏ கோபால், மாஜி வார்டு கவுன்சிலர் அப்துல் சலாம், கொங்கணாபுரம் ‘வளர் அன் கோ’ சுப்ரமணி, மாஜி இளைஞரணி அருணாச்சலம், தாரமங்கலம் அம்மாசி உள்ளிட்ட வீரபாண்டியாரின் முக்கிய தளபதிகளை செல்வகணபதி ஒதுக்கி விட்டார்.

எடப்பாடியில் அவருடைய ஆதரவாளரான சம்பத்துக்கு மீண்டும் சீட் பெற்றுத்தர செல்வகணபதி தீவிரமாக மெனக்கெட்டார். ஆனால், செந்தில்பாலாஜி மூலமாக எடப்பாடி தொகுதியில் காசி களமிறக்கப்பட்டார். சங்ககிரியில் போட்டியிடும் இளைஞரணி மணிகண்டனும் மா.செ.யை பைபாஸ் செய்துதான் சீட் பெற்றார். இதனால் செல்வகணபதி ரொம்பவே அப்செட்.

மேட்டூர் தொகுதியில் போட்டியிடும் மிதுன்சக்கரவத்தி மட்டுமே டி.எம்.எஸ். பரிந்துரைப்படி சீட் பெற்றவர். மிதுன்சக்கரவர்த்தி, ஒருவகையில் அவருக்கு நெருக்கமான உறவுக்காரர் என்கிறார்கள். எடப்பாடி, சங்ககிரியில் தான் பரிந்துரைத்த நபர்களுக்கு சீட் கொடுக்காததால் இத்தொகுதிகளில் அவர் நேரடியாக பரப்புரை மேற்கொள்ளவே இல்லை. முழுக்க முழுக்க மேட்டூரில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

இந்த நிலையில், எடப்பாடி தொகுதியில் 80 சதவீத வாக்காளர்களுக்கு தலா 1000 ரூபாய் வீதம் பட்டுவாடா செய்ய, அறிவாலயத்தில் இருந்து 20 கோடி ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், 10 கோடி ரூபாயை மேட்டூர் தொகுதிக்காக மடைமாற்றம் செய்துவிட்டார் டிஎம்எஸ். மிதுன் சக்கரவர்த்தியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதால் அத்தொகுதியில் 2000 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

அதுவும் அதிமுக, பாமக ஆதரவு வாக்காளர்கள் போக மற்ற வாக்காளர்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது. இதனால் தொகுதியில் 50 சதவீத வாக்காளர்களுக்கு மேல் ‘ப’ வைட்டமின் போய்ச்சேரவில்லை.

ஆளுங்கட்சித் தரப்பில் என்னதான் செலவழித்தாலும் சொந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவது கடினம். வேட்பாளர் காசியும் கொ.வெ.கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் எடப்பாடிக்கு எதிரான கவுண்டர் வாக்குகள், பாமக வாக்குகள் காசிக்குக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்தமுறை எடப்பாடி தேர்தல் களம் கடுமையாகவே இருந்தது. இபிஎஸ் வெற்றி பெற்றாலும், குறைந்த வித்தியாசத்தில்தான் வெற்றிபெற முடியும்.

இந்தப் பின்னணியில் ‘ப’ வைட்டமின் சப்ளை முக்கியத்துவம் பெறுகிறது. இப்போது அதற்கும் வேட்டு வைத்துவிட்டார் செல்வகணபதி,” என புலம்புகிறார்கள் மூத்த உடன்பிறப்புகள்.

இதுபற்றி, எடப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் காசியிடம் விளக்கம்பெற செல்போனில் தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை.

அவர் தரப்பில் திமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ”தொகுதி முழுக்க, தீவிரமாக பரப்புரை செய்துள்ளோம். பணப்பட்டுவாடாவை கடந்து காசிக்கு வெற்றிவாய்ப்பு நன்றாகவே இருக்கிறது. கட்சி மேலிடம் கொடுத்த பணம், முழுமையாக வேட்பாளரிடம் வந்து சேரவில்லை என்பது உண்மைதான். இதுகுறித்து செந்தில்பாலாஜி மூலமாக மாப்பிள்ளை சாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது,” என்றனர்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்தறிய டி.எம்.செல்வகணபதியை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் வழக்கம்போல் அழைப்பை ஏற்கவில்லை.

கரன்சி பாசனத்தில் கட்டிங் போட்ட விவகாரம், மேட்டூர் வேட்பாளருக்காகவா? அல்லது எடப்பாடியை மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வதற்காகவா? என்ற சந்தேகமும் தொகுதி முழுவதும் பரவிக்கிடக்கிறது.

  • பேனாக்காரன்

Leave a Reply