
திமுக கூட்டணியை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஆளுங்கட்சி கவனம் செலுத்தி வருகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அறிவாலயத்திடம் டிக்கெட் கேட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதையடுத்து, விருப்ப மனு அளித்தவர்களிடம் தொகுதிவாரியாக நேர்காணல் நடந்து வருகிறது.
திமுக நேர்காணல் எப்படி நடக்கிறது என்பது குறித்து அறிவாலயம் வட்டாரத்தில் ஒரு விசிட் அடித்தோம்.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு, கட்சி நிர்வாகிகள் கூட்டம், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தொடர்பான விளம்பர ஷூட்டிங் என பல்வேறு ‘டைட்’ ஷெட்யூல்களுக்கு இடையிலும், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படு சுறுசுறுப்பாக இயங்கி வருவதாகச் சிலாகிக்கிறார்கள் உ.பி.க்கள்.
காலை, மாலை இரு வேளைகளிலும் நேர்காணல் நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கே.என்.நேரு, துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு நேர்காணல் நடத்துகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட எத்தனை பேர் சீட் கேட்டிருக்கிறார்களோ, அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் ஒன்றாக அமர வைத்து நேர்காணல் செய்கின்றனர்.
”பல பேர் சீட் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறீர்கள். ஆனால் ஒருத்தருக்குதான் வாய்ப்பு வழங்க முடியும். கழகம் யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ அவரை எல்லோரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றி பெறச் செய்வது உங்கள் பொறுப்பு. வெற்றிக்கனியை அறிவாலயத்தில் சமர்ப்பிக்க வேண்டும்,” என்பதை நேர்காணலுக்கு வரும் கட்சிக்காரர்களிடம் முதல்வரே ‘பளிச்’சென்று சொல்லி விடுவதாகச் சொல்கிறார்கள் மூத்த உ.பி.க்கள்.
விருப்ப மனு சமர்ப்பித்த ஒவ்வொருவரின் பெயரையும் முதல்வரே படித்து அழைப்பதைப் பார்த்துப் புளகாங்கிதம் அடையும் உடன்பிறப்புகளையும் காண முடிந்தது.
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் விண்ணப்பிக்க விருப்பம் தெரிவித்து இருந்தாலும், ஏதாவது ஒரு தொகுதிக்கான நேர்காணலுக்கு மட்டுமே அழைக்கப்படுகின்றனர். மற்ற தொகுதிக்கான நேர்காணல் நடக்கும்போது சம்பந்தப்பட்டவர் வருகை புரிந்ததாக மறக்காமல் குறித்துக் கொள்கின்றனர்.
சர்ச்சைக்குரிய அமைச்சர்கள், மா.செ.க்கள் நேர்காணலுக்குச் செல்லும்போது அவர்களிடமும், அவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதியில் போட்டியிட விரும்பும் மற்றவர்களிடமும் தொகுதியில் வெற்றி நிலவரம் எப்படி இருக்கிறது? எந்தெந்த சமூகத்தினருக்கு வாக்கு வங்கி இருக்கிறது? என்றெல்லாம் கூடுதலாக சில கேள்விகளை முதல்வர் கேட்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, சீட் கிடைக்கிறதோ இல்லையோ… நேர்காணலுக்குச் சென்றவர்கள் உற்சாகமாக அறிவாலயத்தில் இருந்து வெளியே வர, சுற்றுலாத்துறை அமைச்சரும், சேலம் மத்திய மா.செ.வுமான ராஜேந்திரனோ ரொம்பவே அப்செட் என்கிறார்கள் கழக நிர்வாகிகள்.
சட்டென்று மாறிய வானிலைக்கான காரணங்கள் குறித்துத மூத்த உ.பி.க்களிடம் விசாரித்தோம்.
”தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்த கட்சி நிர்வாகிகளிடம் அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 20ம் தேதி நேர்காணல் நடந்தது. சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட ‘சிட்டிங்’ அமைச்சரான ராஜேந்திரன் இந்தமுறையும் அதே தொகுதியில் சீட் கேட்டு விருப்ப மனு அளித்து இருந்தார்.
அவருக்கு போட்டியாக யாரும் விருப்ப மனு அளிக்க மாட்டார்கள் என கருதப்பட்ட நிலையில், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கவுன்சிலர் தெய்வலிங்கம், வழக்கறிஞர் பிரிவு மயில்வேல், சிறுபான்மைப் பிரிவு பாபு உள்ளிட்ட 5 பேரும் விருப்ப மனு சமர்ப்பித்து இருந்தனர்.
நேர்காணல் நடக்கும் அறைக்குச் சென்ற 6 பேரும் முதல் வரிசையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். ராஜேந்திரன் அமர்ந்து இருந்த இருக்கைக்கு ஒரு இருக்கை இடம் விட்டு மேயர் அமர, அவரைத் தொடர்ந்து மற்ற நிர்வாகிகளும் அமர்ந்து கொண்டனர்.
ஓரிருக்கை இடைவெளியே தொகுதியின் மோசமான நிலவரத்தைச் சொல்லாமல் சொல்வதுபோல் இருப்பதாக முதல்வர் உள்ளிட்டோர் புரிந்து கொண்டனர்.
எல்லோரிடமும் சொல்வது போல் முதல்வர் மு.க.ஸ்டாலின், ”கட்சித் தலைமை தேர்வு செய்யும் வேட்பாளரை ஒற்றுமையாக இருந்து பாடுபட்டு வெற்றி பெறச்செய்ய வேண்டும்,” என்று கூறி இருக்கிறார். அடுத்து என்ன நினைத்தாரோ அவர், திடீரென்று மேயரைப் பார்த்து, ‘என்ன மேயர்… தொகுதி நிலவரம் எப்படி இருக்கு? சொல்லுங்க மேயர்,’ என்று கேட்டிருக்கிறார்.
மேயரோ எடுத்த எடுப்பிலேயே, ‘அமைச்சரால் நீக்கப்பட்டவர்கள், ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை எல்லாம் உடனடியாக கட்சிக்குள் சேர்க்க வேண்டும். அவர்களையும் அரவணைத்து ஒற்றுமையாக வேலை செய்தால் பெரிய வெற்றி பெறலாம்,’ என்று தேங்காய் உடைத்ததுபோல் ‘பளிச்’சென்று சொல்லி விட்டார்.
மேயர் இப்படிச் சொல்வார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத அமைச்சர் ராஜேந்திரனின் முகம் கருத்துப் போனது.
அடுத்து கவுன்சிலர் தெய்வலிங்கத்தின் பக்கம் பார்வை திரும்ப அவரோ, ’50 ஆண்டுகளாக கழகத்திலும், 30 ஆண்டுகளாக கவுன்சில் பதவியிலும்…’ என வரலாறு சொல்ல ஆரம்பித்தார். உடனே குறுக்கிட்ட கே.என்.நேரு, ‘அட.. அந்த வரலாறு எல்லாம் தெரியுமப்பா… தொகுதி நிலவரத்தச் சொல்லுங்க,’ என கொக்கிப் போட்டார்.
தெய்வலிங்கம் தொடர்ந்து பேசுகையில், ‘வடக்குத் தொகுதி ரொம்ப வீக் ஆகத்தான் இருக்கு. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கணும்,’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி பாபு கூறுகையில், ‘கட்சியில் பல பேர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும்கூட நீக்கப்பட்டுள்ளனர். உழைக்கும் நிர்வாகிகளுக்கு துளி கூட மரியாதை இல்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்காவிட்டால் வெற்றி பெறுவது கஷ்டம் தலைவரே…,’ என்று கூறினாராம். வழக்கறிஞர் மயில்வே, மேயர் சொல்வதுதான் உண்மை. அவருடைய கருத்துதான் என்னுடைய கருத்தும் என்று வழிமொழிந்தாராம்.
இவர்கள் அடுக்கடுக்காக புகார்களை அள்ளி வீசுவதைப் பார்த்த அமைச்சர் அதிர்ந்து போனார்.
அமைச்சரிடம் மு.க.ஸ்டாலின் கருத்து கேட்டபோது, ‘குட்கா வியாபாரிகளுடன் மாநகர செயலாளர் ஜெயக்குமார் தொடர்பில் இருந்தார். அதனால் அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். சக்கரை சரவணன் கட்சிக்கு எதிராக டி.வி.சேனலுக்கு பேட்டி கொடுத்தார். குபேந்திரன் அதிமுகவுக்குப் போவதாக பேசிக்கொண்டு இருந்தார் அதனால் அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது,’ என்று தனது வழக்கமான ஸ்கிரிப்டையே சொல்லி இருக்கிறார்.
அவருக்கு பக்கபலமாக ஆர்.எஸ்.பாரதி, ‘ஆமாமா… குட்கா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக ஐ.எஸ். ரிப்போர்ட் வந்தது உண்மைதான்,’ எனச் சொல்லவும் முதல்வர் கடுப்பாகி இருக்கிறார்.
‘என்ன பாரதி… நீங்க ஏன் சப்போர்ட் பண்றீங்க? தொகுதி நிலவரம் சரியில்லை என்பதுதான் ஐ.எஸ். ரிப்போர்ட். அதை முதலில் தெரிஞ்சுக்கோங்க,’ என லேசாக தாளித்து இருக்கிறார்.
மொத்தத்தில் இந்த நேர்காணல், அமைச்சர் ராஜேந்திரனுக்கு பெரிய அளவில் மனக்கசப்பை ஏற்படுத்தி விட்டதாகச் சொல்கிறார்கள். நேர்காணல் அறையில் இருந்து அவர் சக கட்சிக்காரர்களுடன் செல்லாமல் தனி வழியில் கோபத்துடன் வெளியேறிவிட்டார்,” என்கிறார்கள் கழக உ.பி.க்கள்.
இதுகுறித்து சேலம் மாநகர திமுக மாநகர முன்னாள் செயலாளர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ”குட்கா விவகாரத்தில் எனக்கு எதிராக அமைச்சர் ராஜேந்திரன் திட்டமிட்டு பொய்யான புகாரைச் சொல்லி வருகிறார். ஒரு பொய்யை தொடர்ந்து சொல்வதால் அது உண்மையாகி விடாது,” என்றார்.
சேலம் மத்திய மாவட்டத்தில் கழக மூத்த நிர்வாகிகள் பலரும் அமைச்சர் ராஜேந்திரன் மீது அதிருப்தியில் உள்ள நிலையில், 2016, 2021 தேர்தல்களில் தொடர்ச்சியாக கைகொடுத்த சேலம் வடக்கு தொகுதியில், இந்த முறை கரையேறுவது கடினம்தான் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
- பேனாக்காரன்
