Tuesday, March 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

ஏப்ரல் 23ல் தமிழக சட்டமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல் 30ம் தேதி தொடக்கம்

தமிழகத்தில், வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஞானேஷ்குமார், மார்ச் 15ம் தேதி மாலையில் வெளியிட்டார். தமிழகத்தில் நடப்பு சட்டமன்றத்தின் ஆயுள் காலம் மே 10ம் தேதியும், புதுச்சேரி சட்டமன்றத்தின் ஆயுள் ஜூன் 15ம் தேதியும் முடிவுக்கு வருகின்றன.

இதையடுத்து இரு மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பையும் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது.

வேட்புமனுக்களை ஏப். 6ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 7ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப்பெற ஏப். 9ம் தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

மார்ச் 16ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24ம் தேதி நடக்கிறது. அவற்றைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 26ம் தேதி ஆகும்.

தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் ஒரே நாளில், அதாவது மே 4ம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இந்த தேர்தலில் வாக்காளர்கள் மகிழ்ச்சியுடன் வாக்களிப்பதை உறுதி செய்ய வாக்குச்சாவடிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் உறுதி செய்யப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ள மேலும் சில தகவல்கள்…

சராசரியாக 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் தமிழகத்தில் மொத்தம் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, அறிவிப்புப் பலகை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இத்தகையவர்கள் வாக்குச்சாவடிக்கு வரும்பட்சத்தில் அவர்களுக்காக தரை தளத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்படும். சாய்வு தளம், சக்கர நாற்காலிகள் வசதிகள் செய்யப்படும். சக்கர நாற்காலிகளைத் தள்ளிச் செல்ல தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படத்துடன், பெரிய எழுத்துகளில் பெயர் பொறிக்கப்படும்.

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் செல்போன்களை சேமித்து வைக்க இட வசதி செய்யப்படும். தெளிவான விவரங்கள் அடங்கிய வாக்காளர் தகவல் சீட்டு.

வாக்குப்பதிவுப் பணிகள் அனைத்தும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உடனடியாக நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் திமுக, அதிமுக தரப்பில் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு முடிவுக்கு வரவில்லை. தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியான பிறகு தமிழக தேர்தல் களம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply