Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மானுஷி சில்லார்!; “உலகத்தில் அதியுயர்ந்தது அம்மா ஸ்தானம்தான்”

உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் மகுடம் சூடினார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு மீண்டும் உலகி அழகி பட்டம் கிடைத்திருக்கிறது.

மகுடம் சூடினார்:

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள சான்யா சிட்டியில் உலக அழகி பட்டத்திற்கான இறுதிக்கட்ட தேர்வு இன்று (நவம்பர் 18, 2017) நடந்தது. 188 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இறுதிக்கட்டத்தில் 5 நாடுகளின் அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மானுஷி சில்லார்

இந்தப் போட்டியில் அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை பெற்ற இந்தியாவின் மானுஷி சில்லார், உலக அழகி பட்டத்தை வென்றார். முன்னாள் உலக அழகியான போர்ட்டோ ரிகோ நாட்டைச் சேர்ந்த ஸ்டெஃபானி டெல் வாலி, அவருக்கு உலக அழகிக்கான கிரீடத்தைச் சூட்டினார்.

வாழ்க்கைக் குறிப்பு:

தற்போது 20 வயதான மானுஷி சில்லார், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். தாய், நீலம் சில்லார். மருத்துவர். தனியார் மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசிரியர். தந்தை, மித்ர பாசு சில்லார். டிஆர்டிஓ-ல் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

5.9 அடி உயரமுள்ள மானுஷி சில்லாரும், தாயைப் போலவே மருத்துவர்தான். செயின்ட் தாமஸ் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்துள்ளார்.

மிஸ் இந்தியா:

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே விளம்பர மாடல் ஆகவும் பணியாற்றி வந்தார். ஏற்கனவே ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தையும் வென்றுள்ளார். அந்தப் போட்டியில் வெற்ற பெற்ற நம்பிக்கையில்தான் உலக அழகிப் போட்டியிலும் கலந்து கொண்டார்.

முன்னெப்போதையும் விட இந்த முறை 188 நாடுகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டாலும், தன்னம்பிக்கையுடன் பங்கேற்று, உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இந்திய அழகிகள்:

ஏற்கனவே உலக அழகி பட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் வென்றிருக்கிறார்கள். முதன்முதலில் ரீட்டா ஃபரியா (1966) உலக அழகி பட்டம் வென்றார். அதன்பிறகு இந்த பட்டத்தை வெல்ல 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

ரீட்டா ஃபரியா

நம் எல்லோருக்கும் ரொம்பவே பரிச்சயமான அய்ஸ்வர்யா ராய் 1994ம் ஆண்டு உலக அழகியாக மகுடம் சூடினார். உலக அழகி பட்டம் வெல்லக்கூடியவர்கள் அதே வேகத்தில் சினிமா துறைக்குள் நுழைந்து விடுவார்கள்.

அந்த எதிர்பார்ப்பை அய்ஸ்வர்யா ராயும் பூர்த்தி செய்தார். இன்று வரை அவர் சினிமா துறையில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

அய்ஸ்வர்யா ராய்

தொடரும் மகுடம்:

அய்ஸ்வர்யா ராய்க்குப் பிறகு, உலக அழகிப் போட்டி என்றாலே இந்தியா மீது ஓர் எதிர்பார்ப்பு நிலவும். 1997ம் ஆண்டில் நட ந்த போட்டியில் இந்தியாவின் டயானா ஹைடன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டயானா ஹைடன்

அதன்பின் 1999ம் ஆண்டில் யுக்தா முகி, உலக அழகி பட்டத்தை வென்றார். இவரும் பாலிவுட், கோலிவுட் சினிமாக்களில் நடித்தார். ஆனாலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

யுக்தா முகி

யாரும் எதிர்பாராத வேளையில் அதற்கு அடுத்த ஆண்டும் (2000) இந்தியாவிற்கே உலக அழகி பட்டம் கிடைத்தது. பிரியங்கா சோப்ரா உலக அழகி மகுடம் சூடினார். இப்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக பிரியங்கா சோப்ரா வலம் வருகிறார்.

இதையடுத்து பிரியங்கா சோப்ராவிற்குப் பிறகு 17 ஆண்டுகள் கழித்து, இப்போது மானுஷி சில்லார் உலக அழகியாக வெற்றி பெற்றுள்ளார். இந்தப் பட்டத்தை வெல்லும் 6வது இந்திய அழகி, மானுஷி சில்லார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா சோப்ரா

தாய்மையே மேலானது:

உலக அழகி போட்டிகளில் கலந்து கொள்வோரிடம் வெறும் உடல் அழகை மட்டுமே வைத்து முடிவுகளை அறிவிப்பதில்லை. கடைசி சுற்றில் அவர்களின் அறிவுத்திறனும் சோதிக்கப்படும்.

கடைசி சுற்றில் ஐந்து நாடுகளின் அழகிகளும் களத்தில் இருந்தனர். அப்போது மானுஷி சில்லாரிடம் போட்டி நடுவர்கள் ஒரு கேள்வி எழுப்பினர். ”உலகத்திலேயே அதிக ஊதியம் பெறக்கூடிய வேலை எது? ஏன்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

தாயாருடன் மானுஷி சில்லார்.

உடனடியாக மானுஷியிடம் இருந்து பதில் வந்தது. அப்போது அவர், ”உலகத்திலேயே உயர்வான வேலை எது என்றால், அம்மாவாக இருப்பதுதான். தாயாக இருப்பதுதான் அதியுயர்ந்த பதவி. தாய்க்குத்தான் அதிக ஊதியம் கொடுக்க வேண்டும். ஆனால் பணமாக அல்ல. அன்பும் மரியாதையுமாக வழங்க வேண்டும். அப்படித்தான் வழங்கிக் கொண்டிருக்கிறோம். எனக்கு என் அம்மாதான் எப்போதும் உத்வேகம் அளிக்கக் கூடியவர்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பெற்றோர், உறவினர்களுடன் மானுஷி சில்லார்.

இந்த பதிலால் மானுஷி சில்லார், ஒட்டுமொத்த விழா அரங்கத்தையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார். அதன்பிறகே, அவர் உலக அழகி பட்டத்தை வென்றார்.

மாதவிலக்கு விழிப்புணர்வு:

மானுஷி சில்லார் விளம்பர மாடல், மருத்துவர், உலக அழகி மட்டுமல்ல. சமூக சேவையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பெண்களின் மாதவிலக்கு பிரச்னை குறித்து ஏற்கனவே கிராமம் கிராமமாகச் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திருக்கிறார்.

மாதவிலக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தில்…

மாதவிலக்கு காலங்களில் உடல்நலத்தை பேணுவது குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சேவையை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார். இதற்காக ‘புராஜக்ட் சக்தி’ என்ற திட்டத்தையும் அவர் செயல்படுத்தி வருகிறார். மானுஷி, இரக்கமுள்ள மனுஷியும் கூட என்பதை அவருடைய வார்த்தைகள் உணர்த்தியது.